2027-ஆம் ஆண்டு முதல் அமலுக்கு வரவுள்ள புதிய கட்டமைப்பின்படி, RBI-யின் டிஜிட்டல் மோசடி இழப்பீட்டு விதிகள், மோசடியான மின்னணு பரிவர்த்தனைகளால் பாதிக்கப்பட்ட தகுதியுள்ள வாடிக்கையாளர்களுக்கு, அவர்கள் இழந்த தொகையில் ஒரு பகுதியை இழப்பீடாக (Partial Reimbursement) பெற அனுமதிக்கும்.
டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை மோசடியால் பாதிக்கப்பட்டவர்கள் சற்று ஆறுதல் அடையாளம். ரிசர்வ் வங்கியின் திருத்தப்பட்ட இழப்பீட்டு நடைமுறையின் கீழ், 50,000 ரூபாய் வரையிலான டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை மோசடிகளால் பாதிக்கப்பட்டவர்கள், இழந்த பணத்தில் பெரும்பகுதியைத் திரும்பப் பெற முடியும்.
புதன்கிழமை அன்று மத்திய வங்கியால் அறிவிக்கப்பட்டு, 2027-ஆம் ஆண்டு ஜனவரி 1 முதல் அமலுக்கு வரும் இந்த புதிய அமைப்பு, இதுபோன்ற சூழ்நிலைகளில் வாடிக்கையாளர்களின் பொறுப்பைக் கட்டுப்படுத்தவும் அவர்களைப் பாதுகாக்கவும் எடுக்கப்படும் மற்றொரு நடவடிக்கையாகும்.
வங்கி மோசடிகள், குறிப்பாக டிஜிட்டல் பரிவர்த்தனை தொடர்பான மோசடிகள், ரிசர்வ் வங்கிக்கு வளர்ந்துவரும் கவலையாக மாறியுள்ள சூழலில், மோசடித் தொகையில் கணிசமான பெரும்பகுதியை ஈடுசெய்வதாக ரிசர்வ் வங்கி புதியதொரு கட்டமைப்பை முன்மொழிந்துள்ளது. 2025-26-ஆம் ஆண்டு நிதியாண்டில், பதிவான மோசடிச் சம்பவங்களின் எண்ணிக்கை பாதியாகக் குறைந்து 10,114-ஆக இருந்தபோதிலும், அதில் சம்பந்தப்பட்ட பணத்தின் மதிப்பு 46% அதிகரித்து ரூ.48,021 கோடியாக அதிகாரித்துள்ளது.
என்ன மாற்றம் ஏற்பட்டுள்ளது?
புதிய இழப்பீட்டு வழிகாட்டுதல்களை நுகர்வோருக்கு மிகவும் சாதகமானதாக மாற்ற மத்திய வங்கி முயற்சி செய்து வருகிறது. புதிய கட்டமைப்பின் கீழ் வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகையில் பெரும்பகுதியை ரிசர்வ் வங்கி வழங்கும்.
புதிய வழிமுறையின் கீழ், பாதிக்கப்பட்டவர்கள் தங்களது இழப்புகளில் 85 சதவீதம் வரை, அதாவது ரூ. 25,000 வரை இழப்பீடு தொகைத் பெறத் தகுதியுடையவர்கள் ஆவர். இதன் மூலம், இதுபோன்ற மோசடிகளால் அவர்கள் சந்திக்கும் பாதிப்பு குறைகிறது. மோசடியான மின்னணு வங்கிப் பரிவர்த்தனை (electronic banking transaction (EBT)) காரணமாக ரூ. 50,000 வரையிலான மொத்த இழப்பு குறித்து புகார் அளிக்கும் ஒரு உண்மையான பாதிக்கப்பட்ட நபருக்கு, அவரது வாழ்நாளில் ஒருமுறை, நிகர இழப்புத் தொகையில் 85 சதவீதம் அல்லது ரூ. 25,000, இதில் எது குறைவோ அது இழப்பீடாக வழங்கப்படும் என்று ரிசர்வ் வங்கியின் புதிய கட்டமைப்பு கூறுகிறது.
மோசடியான மின்னணுப் பணப் பரிமாற்றம் (EBT) மூலம் ரூ.29,412-க்கும் குறைவான இழப்பு ஏற்பட்டதாகப் புகார் அளித்தால், வாடிக்கையாளர் அந்தத் தொகையில் 85%-ஐ இழப்பீடாகப் பெறுவார். பாதிக்கப்பட்டவர்கள், மோசடி குறித்து 5 நாட்களுக்குள் புகார் அளித்தால் மட்டுமே இந்த இழப்பீட்டைப் பெறத் தகுதியுடையவர்களாக இருப்பார்கள். மேலும், பாதிக்கப்பட்ட நபரின் வங்கியின் கொள்கையில் குறிப்பிடப்பட்டுள்ள உள்நாட்டு நடைமுறைகளின்படி ஏற்பட்ட இழப்பு உறுதி செய்யப்பட வேண்டும்
இழப்பீட்டை யார் செலுத்துகிறார்கள்?
வங்கியின் கவனக்குறைவால் ஏற்படும் எந்தவொரு மோசடிக்கும் பாதிக்கப்பட்ட நபருக்கு சமந்தப்பட்ட வங்கியே முழு இழப்பீட்டையும் வழங்க வேண்டும் என்று மத்திய வங்கி கூறுகிறது. இதில், மின்னணுப் பணப் பரிமாற்ற பரிவர்த்தனைகளுக்குப் தேவையான பாதுகாப்புகளை உறுதி செய்யத் தவறுதல், ரூ. 500-க்கு மேற்பட்ட மின்னணுப் பணப் பரிமாற்ற பரிவர்த்தனைகளுக்குக் கட்டாய அறிவிப்புகளை அனுப்பத் தவறுதல், வாடிக்கையாளர் புகார்களுக்கு 24 மணி நேரமும் செயல்படும் வழிமுறைகளை வழங்கமால் இருத்தல், கணினிச் செயலிழப்புகள், பாதுகாப்பு மீறல்கள் மற்றும் வாடிக்கையாளர் புகார்கள் மீது உரிய கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்கத் தவறுதல் போன்றவை கவனக்குறைவாகக் கருதப்படுகின்றன.
உள்நாட்டு மோசடி மின்னணுப் பணப் பரிமாற்றங்களுக்கு 45 நாட்களுக்குள்ளும், எல்லை தாண்டிய மோசடி மின்னணுப் பணப் பரிமாற்றங்களுக்கு 60 நாட்களுக்கு உள்ளும், மோசடி நடைபெற்றது தொடர்பான வாடிக்கையாளர் புகார்களை வங்கிகள் தீர்க்க வேண்டும் என இந்தக் கட்டமைப்பு தேவையான வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது.
ரூ.29,412-க்கும் குறைவான மதிப்புள்ள மோசடி நிகழ்வுகளில், வாடிக்கையாளருக்கு இழப்பீடாக இழக்கப்பட்ட தொகையில் 85% வழங்கப்படும்போது, அந்தத்தொகையில் 65%-ஐ ரிசர்வ் வங்கியும், 10%-ஐ பாதிக்கப்பட்ட நபரின் வங்கியே ஏற்கும். உள்நாட்டு மின்னணுப் பணப் பரிமாற்ற மோசடிகளைப் பொறுத்தவரை, மீதமுள்ள 10%-ஐ மோசடி செய்யப்பட்ட பணம் சென்றடைந்த வங்கி ஏற்கும். எல்லை தாண்டிய மின்னணுப் பணப் பரிமாற்ற மோசடிகளைப் பொறுத்தவரை, பாதிக்கப்பட்டவரின் வங்கியின் பங்களிப்பு 20%-ஆக உயரும்.
ரூ. 29,412 முதல் ரூ. 50,000 வரையிலான தொகைகள் சம்பந்தப்பட்ட மோசடிப் புகார்களில், பாதிக்கப்பட்டவருக்கு ரூ. 25,000 இழப்பீடு வழங்கப்படும். இதில், ரிசர்வ் வங்கி ரூ. 19,118 (76.5%) வரை வழங்கும். அதேசமயம், உள்நாட்டு மின்னணு பணப் பரிமாற்ற (EBT) மோசடிகளின் விவகாரத்தில், பாதிக்கப்பட்டவரின் வங்கியும் பயனாளியின் வங்கியும் தலா ரூ.2,941 (12%) வழங்கும். எல்லை தாண்டிய வழக்குகளின் விவகாரத்தில், பாதிக்கப்பட்டவரின் வங்கி இழப்பீட்டுத் தொகைக்காக ரூ. 5,882 வழங்கும்.
ஒன்றுக்கு மேற்பட்ட பயனாளி வங்கிகள் இருந்தால், ஒவ்வொரு வங்கியும் ஏற்க வேண்டிய இழப்பீடானது, அந்தந்த வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்ட தொகையின் விகிதாச்சார அளவுக்கு ஏற்ப இருக்கும் என்று கட்டமைப்பு தெளிவுபடுத்தியது.
எனவே, மோசடியால் ஏற்பட்ட இழப்பு ரூ.40,000 ஆகவும், மோசடியிலிருந்து மீட்கப்பட்ட தொகை ரூ. 15,000-ஆகவும் இருந்தால், பாதிக்கப்பட்டவர் ரூ. 21,250 (85%) இழப்பீடு பெறத் தகுதியுடையவர் ஆவார். இதில், இந்திய ரிசர்வ் வங்கி ரூ.16,250-ம், பாதிக்கப்பட்டவரின் மற்றும் பயனாளி வங்கிகள் தலா ரூ.2,500 வரை வழங்கும். இழந்த தொகையில் எந்தப் பகுதியும் மீட்டெடுக்கப்படாத பட்சத்தில், பாதிக்கப்பட்டவருக்கு ரூ.25,000 இழப்பீடு வழங்கப்படும். மேலும், இதில் தொடர்புடைய தரப்பினர் மேலே குறிப்பிட்டுள்ள விகிதத்தில் தங்கள் பங்களிப்பை வழங்குவார்கள்.
பாதிக்கப்பட்டவர்கள் எவ்வாறு இழப்பீடு கோரலாம்?
மோசடித் தொகை கழிக்கப்பட்டவுடன், பாதிக்கப்பட்டவர்கள் இந்த மோசடியை சம்பந்தப்பட்ட வங்கிக்கும், தேசிய இணையக் குற்றப் புகார் இணையதளம் அல்லது தேசிய இணையக் குற்ற உதவி எண்ணுக்கும் புகாரளிக்க வேண்டும். ஒரு வாடிக்கையாளரிடமிருந்து ஏதேனும் மோசடியான மின்னணு வங்கிப் பரிவர்த்தனை குறித்த புகார் பெறப்பட்டால், வங்கி உடனடியாக நடவடிக்கை எடுத்து, வாடிக்கையாளருக்குத் தெரிவிப்பதோடு, அவரது கணக்கில் அங்கீகரிக்கப்படாத பரிவர்த்தனைகள் நடைபெறாமல் தடுக்க வேண்டும். மேலும், 'தேசிய இணையவழி குற்றப் புகார் இணையதளம்' (National Cyber Crime Reporting Portal) அல்லது 'தேசிய இணையவழி குற்ற உதவி எண்' (1930) ஆகியவற்றில் விரைவாக புகார் அளிக்குமாறும் வங்கி அந்த வாடிக்கையாளருக்கு அறிவுறுத்த வேண்டும்" என்று மத்திய வங்கியின் புதிய வழிகாட்டுதல் தெரிவிக்கிறது.
இழப்பீடு பெறுவதற்குத் தகுதி பெற, வாடிக்கையாளர் மோசடி நடந்த 5 நாட்களுக்குள் வங்கிக்கு நடந்ததை பற்றி புகாரளிக்க வேண்டும். புகாரைப் பதிவு செய்த பிறகு, தங்கள் தரப்பில் ஏற்பட்ட குறைபாட்டின் காரணமாக மோசடி நிகழவில்லை என்பதை நிரூபிப்பது வங்கியின் பொறுப்பாகும்.
மோசடி விசாரணைக்குக் காலம் தேவைப்பட்டாலும், பெரும்பாலான வழக்குகளில் 45 நாட்களுக்குள் தீர்வு காணப்படும். பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர் எந்தவிதமான வட்டி இழப்பையோ கூடுதல் கட்டணங்களையோ சந்திக்காமல் இருக்க, மீட்டெடுக்கப்படும் மோசடித் தொகையை வங்கியானது வாடிக்கையாளரின் கணக்கில் வரவு வைக்கும் போது, அந்தத் தொகையின் மதிப்பு முதலில் மீட்கப்பட்ட தேதியிலிருந்தே கணக்கிடப்படுவதை பாதிக்கப்பட்டவரின் வங்கி உறுதிசெய்ய வேண்டும். இதன் காரணமாக, பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர் வட்டி இழப்பைச் சந்திக்காமல் இருப்பதோடு, கூடுதல் கட்டணங்களையும் ஏற்கவேண்டிய சூழல் ஏற்படாது.
கடன் அட்டைகள் மூலமான மோசடி வரவுப் பரிமாற்றங்கள் விவகாரத்தில், புகார் அளிக்கப்பட்ட 5 நாட்களுக்குள் பாதிக்கப்பட்டவரின் வங்கி, அதற்கு இணையான தொகையை அவருக்கு வழங்க வேண்டும். வாடிக்கையாளர் அந்தத் தொகையைப் பயன்படுத்த அனுமதிக்கப்பட மாட்டார் என்றாலும், அவர் கூடுதல் வட்டி/கட்டணத்தை ஏற்க வேண்டியதில்லை என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.