இந்தியாவில் காப்பீட்டுத் துறையில் 100% நேரடி வெளிநாட்டு முதலீட்டை (Foreign Direct Investment (FDI)) 'தானியங்கி முறை' மூலம் ஒன்றிய அரசு சனிக்கிழமை அனுமதித்தது. இதன்மூலம் அதிகப்படியான உலகளாவிய முதலீட்டாளர்கள் இந்தியாவில் தொழில் தொடங்க முடியும். மேலும், இந்தியாவில் காப்பீட்டுத் தொழிலை நடத்த இனி இந்தியக் கூட்டு நிறுவனப் பங்குதாரர் கண்டிப்பாக இருக்க வேண்டும் என்ற அவசியமும் நீக்கப்பட்டுள்ளது.
முக்கிய அம்சங்கள்:
— அரசாணை அறிவிப்பின்படி, இந்தியக் காப்பீட்டு நிறுவனங்களில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மற்றும் பங்குச் சந்தை முதலீட்டாளர்கள் மேற்கொள்ளும் மொத்த முதலீடு, அந்த நிறுவனத்தின் செலுத்தப்பட்ட மூலதனத்தில் 100% வரை அனுமதிக்கப்படுகிறது. இது தானியங்கி வழிமுறையின்கீழ் அனுமதிக்கப்பட்டாலும், இந்தியக் காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தின் (Insurance Regulatory and Development Authority of India (IRDAI)) ஒப்புதல் மற்றும் சரிபார்ப்புக்கு உட்பட்டது.
— இருப்பினும், இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்தில் (Life Insurance Corporation of India (LIC)) வெளிநாட்டு முதலீடு 'தானியங்கி வழிமுறை' மூலம் 20% என்ற அளவிலேயே கட்டுப்படுத்தப்படும்; இது மற்ற துறைகளிலிருந்து மாறுபட்டு ஒரு தனித்துவமான விதிமுறையின்கீழ் நிர்வகிக்கப்படும்.
— இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்தில் (LIC) மேற்கொள்ளப்படும் வெளிநாட்டு முதலீடுகள், ஆயுள் காப்பீட்டுக் கழகச் சட்டம் 1956-ன்படி (Life Insurance Corporation Act, 1956) அமைந்திருக்க வேண்டும் என்று இந்த அறிவிப்பு கூறுகிறது. மேலும், இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகச் சட்டத்தின் பிரிவு 43-ன்கீழ் குறிப்பிடப்பட்டுள்ள காப்பீட்டுச் சட்டம் 1938-ன் தொடர்புடைய விதிகளுக்கும் இந்த முதலீடுகள் உட்பட்டிருக்க வேண்டும் என்பது அவசியமாகும்.
— இந்தக் கொள்கை மாற்றம், 'சப்கா பீமா சப்கா ரக்ஷா' (காப்பீட்டுச் சட்டத் திருத்தம்) சட்டம் 2025-க்கு ஏற்ப, வெளிநாட்டு முதலீட்டு விதிகளைக் கொண்டு வருகிறது. இந்தப் புதிய சட்டத்தின் பெரும்பாலான பகுதிகள் பிப்ரவரி மாதம் 5-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளன. ஆனால், பிரிவு 25 (Section 25) மட்டும் இன்னும் அமல்படுத்தப்படவில்லை.
— ஒழுங்குமுறை மற்றும் உள்நாட்டுக் கட்டுப்பாட்டைப் பராமரிப்பதற்காக, வெளிநாட்டு முதலீடு கொண்ட காப்பீட்டு நிறுவனங்கள் குறைந்தபட்சம் ஒரு இந்தியக் குடியுரிமை பெற்றவரைத் தலைவராக (Chairperson), நிர்வாக இயக்குநராக (Managing Director) அல்லது முதன்மைச் செயல் அதிகாரியாக (CEO) நியமிக்க வேண்டும்.
— வெளிநாட்டு முதலீட்டாளர்களின் பங்குதாரர் உரிமையை (Foreign shareholding) அதிகரிக்கும்போது, அது இந்திய ரிசர்வ் வங்கியின் (Reserve Bank of India (RBI)) அந்நியச் செலாவணி மேலாண்மைச் சட்டத்தின்கீழ் (Foreign Exchange Management Act (FEMA) நிர்ணயிக்கப்பட்ட விலை நிர்ணய விதிகளைப் பின்பற்றியே அமைய வேண்டும்.
— இந்தியா ஏற்கனவே 2020-ஆம் ஆண்டில் காப்பீட்டு இடைத்தரகர் நிறுவனங்களில் 100% நேரடி வெளிநாட்டு முதலீட்டை (FDI) அனுமதித்துள்ளது. மேலும், 2022-ஆம் ஆண்டில் இந்திய ஆயுள் காப்பீடுக் கழக நிறுவனத்தில் 20% நேரடி வெளிநாட்டு முதலீட்டை அனுமதித்தது. இதனைத் தொடர்ந்து, ஓய்வூதியத் துறையிலும் மாற்றங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன. காப்பீட்டுத் துறையைப் போலவே, ஓய்வூதியத் துறையிலும் நேரடி வெளிநாட்டு முதலீட்டு வரம்பு 100%-ஆக உயர்த்தப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
— சமீபத்தில், ஜெர்மனியைச் சேர்ந்த அலியான்ஸ் குழுமம் (Allianz Group), ‘Jio Financial Services’ நிறுவனத்துடன் 50:50 என்ற விகிதத்தில் ஒரு கூட்டு முயற்சியைத் தொடங்கி இந்திய சந்தையில் மீண்டும் நுழைவதாக அறிவித்துள்ளது. இந்த கூட்டணியின் மூலம் பொதுக் காப்பீடு (General Insurance) மற்றும் மருத்துவக் காப்பீடு (Health Insurance) சேவைகளை வழங்கத் திட்டமிட்டுள்ளனர். மேலும், இதே போன்றதொரு கூட்டு ஒப்பந்தத்தின் மூலம் ஆயுள் காப்பீடு துறையிலும் தடம்பதிக்க முடிவு செய்துள்ளனர்.
உங்களுக்குத் தெரியுமா?
— காப்பீட்டுத் துறையில் வெளிநாட்டு நேரடி முதலீட்டு (FDI) வரம்பை 74 சதவீதத்திலிருந்து 100 சதவீதமாக உயர்த்துவதற்கான 'சப்கா பீமா சப்கி ரக்ஷா' (காப்பீட்டுச் சட்டத் திருத்தம்) மசோதா, 2025-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இருப்பினும், இதற்கு முந்தைய 74 சதவீத முதலீட்டு வரம்பைக் கூட நிறுவனங்கள் முழுமையாகப் பயன்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. உதாரணமாக, இந்தியாவில் உள்ள 19 ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களில் நான்கு நிறுவனங்கள் மட்டுமே அந்த 74 சதவீத வரம்பை எட்டியிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
Original article : What are the major features of the Sabka Bima Sabki Raksha (Amendment of Insurance laws) Act?