2025ஆம் ஆண்டு 131வது அரசியலமைப்பு திருத்தம் மசோதா சண்டிகரின் நிலையை எவ்வாறு மாற்றும்? அது பஞ்சாப் மற்றும் ஹரியானாவின் கூட்டுத் தலைநகராக இருப்பது ஏன்? பஞ்சாப் ஏன் அதற்கு மட்டுமே உரிமை கோருகிறது?
2025ஆம் ஆண்டு 131வது அரசியலமைப்பு திருத்தம் மசோதா வரிசை: பொதுமக்களின் போராட்டங்களுக்குப் பிறகு, உள்துறை அமைச்சகம் நவம்பர் 23-ஆம் தேதியன்று சண்டிகரின் அங்கீகாரத்தை மாற்றுவதற்கானஎந்த மசோதாவும் அடுத்தமாதம் நடைபெறும் நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரில் அறிமுகப்படுத்தப்படாது என்று அறிவித்தது.
முன்னதாக, மக்களவை மற்றும் மாநிலங்களவையின் ஒரு செய்திக்குறிப்பில், ஒன்றிய அரசு வரவிருக்கும் கூட்டத்தொடரில் 2025ஆம் ஆண்டு 131வது அரசியலமைப்பு திருத்த மசோதாவை அறிமுகப்படுத்தும் என்றும், சண்டிகரை அரசியலமைப்பின் 240-வது பிரிவின் கீழ் சேர்க்கும் என்றும் கூறப்பட்டிருந்தது. இது ஆம் ஆத்மி கட்சியும் காங்கிரஸும் சண்டிகர் மீதான பஞ்சாபின் உரிமையை "பலவீனப்படுத்த" முயற்சிப்பதாக ஒன்றிய அரசை குற்றம் சாட்ட வழிவகுத்தது.
சண்டிகரின் தற்போதைய நிலை என்ன, அதில் முன்மொழியப்பட்ட மாற்றத்தால் பஞ்சாப் ஏன் பஞ்சாப் கடும் அதிருப்தி அடைந்தது? சண்டிகரின் தனித்துவமான வரலாறு என்ன?
முன்மொழியப்பட்ட மாற்றம் என்ன?
சண்டிகர் ஒரு யூனியன் பிரதேசமாகும். ஆனால், பஞ்சாப் மற்றும் ஹரியானா போன்ற இரு மாநிலங்களின் தலைநகராகவும் உள்ளது. பஞ்சாப் ஆளுநர் தற்போது சண்டிகர் யூனியன் பிரதேசத்தின் நிர்வாகியாக கூடுதல் பொறுப்பை வகிக்கிறார்.
சண்டிகர் அரசியலமைப்பின் 240-வது பிரிவின் கீழ் வந்தால், மற்ற யூனியன் பிரதேசங்களில் உள்ள துணைநிலை ஆளுநர் (Lieutenant Governor) போலவே, யூனியன் பிரதேசத்திற்கு ஒரு தன்னிச்சையான நிர்வாகியை நியமிக்க வழி வகுக்கும்.
அரசியலமைப்பின் பிரிவு 240, சில யூனியன் பிரதேசங்களுக்கு விதிமுறைகளை உருவாக்கும் அதிகாரத்தை நமது நாட்டின் குடியரசுத்தலைவருக்கு வழங்குகிறது. அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள்; லட்சத்தீவுகள்; தாத்ரா மற்றும் நாகர் ஹவேலி மற்றும் டாமன் மற்றும் டையூ மற்றும் புதுச்சேரி ஆகிய யூனியன் பிரதேசங்களின் சட்டமன்றம் கலைக்கப்படும்போது அல்லது இடைநிறுத்தப்படும்போது, "அமைதி, முன்னேற்றம் மற்றும் நல்ல ஆட்சிக்காக குடியரசுத் தலைவர் விதிமுறைகளை உருவாக்கலாம் என்று கூறுகிறது.
அவ்வாறு இயற்றப்படும் எந்தவொரு ஒழுங்குமுறையும், நாடாளுமன்றத்தால் இயற்றப்பட்ட எந்தவொரு சட்டத்தையும் அல்லது யூனியன் பிரதேசத்திற்குப் பொருந்தக்கூடிய வேறு எந்தச் சட்டத்தையும் ரத்து செய்யலாம் அல்லது திருத்தலாம். மேலும், குடியரசுத்தலைவரால் ஒரு சட்டம் அறிவிக்கப்படும்போது, அந்தப் பிரதேசத்திற்குப் பொருந்தும் நாடாளுமன்றச் சட்டத்தின் அதே சக்தியையும் விளைவையும் கொண்டிருக்கும் என்று சட்டம் கூறுகிறது.
சண்டிகர் இந்தச் சட்டத்தின் கீழ் வந்தால், அது இப்போது இருப்பது போல் பஞ்சாப் ஆளுநரின் கட்டுப்பாட்டில் இருக்காது.
ஒன்றிய அரசு இப்போது என்ன சொல்லியிருக்கிறது?
X-தளத்தில் ஒரு பதிவில், உள்துறை அமைச்சகம், சண்டிகர் யூனியன் பிரதேசத்திற்கான ஒன்றிய அரசின் சட்டம் இயற்றும் செயல்முறையை எளிமைப்படுத்தும் திட்டம் இன்னும் மத்திய அரசின் பரிசீலனையில் உள்ளது என்றும் இந்த திட்டம் குறித்து இறுதி முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை என்றும் இந்த திட்டம் எந்த வகையிலும் சண்டிகரின் ஆட்சி அல்லது நிர்வாக அமைப்பை மாற்ற முயற்சிக்கவில்லை என்றும் சண்டிகருக்கும் பஞ்சாப் அல்லது ஹரியானா மாநிலங்களுக்கும் இடையிலான பாரம்பரிய சட்டங்களை மாற்றுவதையும் நோக்கமாகக் கொண்டிருக்கவில்லை என்றும் கூறியது.
சண்டிகரின் நலன்களைக் கருத்தில் கொண்டு, அனைவரிடமும் கலந்து ஆலோசனை செய்தபிறகே ஒரு முடிவு எடுக்கப்படும் என்று உள்துறை அமைச்சகம் கூறியது.
இந்த விவகாரத்தில் எந்தக் கவலையும் தேவையில்லை என்றும் வரவிருக்கும் நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரில் இது தொடர்பான எந்த மசோதாவையும் அறிமுகப்படுத்தும் எண்ணம் ஒன்றிய அரசுக்கு இல்லை என்று அந்தப் பதிவில் கூறப்பட்டுள்ளது.
சண்டிகரின் அங்கீகார மாற்றத்தை பஞ்சாப் ஏன் எதிர்க்கிறது?
சுதந்திரத்திற்குப் பிறகு கட்டப்பட்ட திட்டமிட்ட நகரமான சண்டிகர், பஞ்சாபிற்கு ஒரு தனித்துவமான முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது. பிரிவினைக்குப் பிறகு பாகிஸ்தானுக்குச் சென்ற ஒன்றுபட்ட பஞ்சாபின் தலைநகரான லாகூருக்கு மாற்றாக இந்த நகரம் கட்டப்பட்டது.
பிரிவினைக்குப் பிறகு, சிம்லா இந்திய பஞ்சாபின் தற்காலிக தலைநகராக மாற்றப்பட்டது. ஆனால், அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேரு, மாநிலத்தின் தலைநகராக ஒரு நவீன நகரத்தைக் கற்பனை செய்தார் - இது சண்டிகர் என்ற யோசனைக்கு வழிவகுத்தது. மார்ச் 1948-ல், திட்டமிடப்பட்ட நகரத்தை நிர்மாணிப்பதற்காக ஒன்றிய மற்றும் மாநில அரசு இமயமலையின் அடிவாரத்திற்கு அடுத்த இடத்தைத் தேர்ந்தெடுத்தன. கட்டுமானத்திற்காக காரரில் (Kharar) 22 கிராமங்கள் கையகப்படுத்தப்பட்டன.
நகரத்திற்கான விரிவான திட்ட அறிக்கையை நவீனத்துவ கட்டிடக்கலையின் முன்னோடிகளில் ஒருவராகக் கருதப்படும் Le Corbusier உருவாக்கினார். "அழகின் நகரம்" (City of Beauty) செப்டம்பர் 21, 1953 அன்று அதிகாரப்பூர்வமாக பஞ்சாபின் தலைநகராக மாறியது. பின்னர், குடியரசுத்தலைவர் ராஜேந்திர பிரசாத் புதிய தலைநகரை சிறிது நேரத்திலேயே, அதே ஆண்டு அக்டோபர் 7-ஆம் தேதி திறந்து வைத்தார்.
1966ஆம் ஆண்டு பஞ்சாப் மறுசீரமைப்புச் சட்டத்தின் (Punjab Reorganisation Act) கீழ், இந்தி பேசும், இந்து பெரும்பான்மை மாநிலமான ஹரியானா பிரிக்கப்பட்டபோது, பஞ்சாப் மற்றொரு பிரிவினையை எதிர்கொண்டது.
இரு மாநிலங்களின் எல்லையில் அமைந்திருந்த சண்டிகர், அவர்களின் பொதுவான தலைநகராக மாறியது. சொத்துக்கள் 60:40 விகிதத்தில் பிரிக்கப்பட்டன. அதற்கு யூனியன் பிரதேச அங்கீகாரமும் வழங்கப்பட்டது. இது நகரத்தை ஒன்றிய அரசின் நேரடிக் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டு வந்தது.
அந்த நேரத்தில், அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி ஹரியானாவிற்கு சொந்த தலைநகரம் கிடைக்கும் என்று அறிவித்திருந்தார். சண்டிகரை இரண்டு பகுதிகளாகப் பிரிக்க ஒரு சுருக்கமான திட்டம்கூட இருந்தது. இருந்த போதிலும் அந்த யோசனை நிராகரிக்கப்பட்டது.
ஜனவரி 29, 1970 அன்று, சண்டிகரின் தலைநகர் திட்டப் பகுதி முழுவதுமாக பஞ்சாபிற்குச் செல்ல வேண்டும் என்று ஒன்றிய அரசு அறிவித்தது. பஞ்சாபி சுபா இயக்கத்தின் தலைவரான பதே சிங் (Fateh Singh), சண்டிகரை பஞ்சாபிற்கு மாற்றாவிட்டால் தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டியபோது, அன்றைய அரசாங்கத்திற்கு இந்த அறிவிப்பை வெளியிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
ஆனால், பஞ்சாபின் தலைமை செயலகத்தில் அலுவலகங்களை நடத்துவதற்கு ஹரியானாவிற்கு தற்காலிக இடமும், பஞ்சாபின் விதான் சௌபாவில் இடமும் வழங்கப்பட்டது. சொந்த தலைநகரை உருவாக்கும் வரை சண்டிகரில் உள்ள அலுவலகம் மற்றும் குடியிருப்பு விடுதியை ஐந்து ஆண்டுகளுக்குப் பயன்படுத்துமாறு மாநிலத்திற்கு கூறப்பட்டது. புதிய தலைநகரைக் கட்டுவதற்காக ஹரியானாவிற்கு ரூ.10 கோடி மானியமும், அதற்குச் சமமான தொகையை கடனாக ஒன்றிய அரசு வழங்கியது.
ஆனால், ஹரியானா பிரிக்கப்பட்டு ஏறக்குறைய 60 ஆண்டுகள் கடந்துவிட்டன. மேலும், சண்டிகர் கூட்டுத் தலைநகராக இருப்பது பஞ்சாபின் அதிருப்திக்கு மிகவும் காரணமாக அமைந்தது. ஏனெனில், பஞ்சாப் நீண்ட காலமாக சண்டிகர் நகரம் முழுவதையும் தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர விரும்புவதாக தெரிவித்தது.
சனிக்கிழமை (நவம்பர் 22) பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் "சதி வெற்றி பெற நாங்கள் அனுமதிக்க மாட்டோம். பஞ்சாப் கிராமங்களை வேரோடு பிடுங்கி கட்டப்பட்ட சண்டிகர், பஞ்சாபிற்கு மட்டுமே சொந்தமானது. எங்கள் உரிமையை நாங்கள் நழுவ விடமாட்டோம். தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்போம் என்றக் கூற்றை மீண்டும் வலியுறுத்தினார்.
Original Article: Constitution (131st Amendment) Bill 2025 row: Chandigarh’s unique status, and why Punjab opposes proposed change, in 3 points.