உச்சநீதிமன்றத்தின் ஆலோசனை, ஆளுநரின் தன்னிச்சை அதிகாரத்தின் நோக்கத்தை விரிவுபடுத்தியுள்ளது. மேலும், அதை நீதிமன்ற விசாரணைக்கு அப்பாற்பட்டதாகவும் ஆக்கியுள்ளது.
“ஆனால், அரசியிடம் (Queen) அப்படிப்பட்ட வீட்டோ (தடை) அதிகாரம் இல்லை. இரு அவைகளும் ஒருமனதாக ஒரு சட்டத்தை அவருக்கு அனுப்பினால், அவர் தன் மரணம் தொடர்பான ஆவணத்தில்கூட கையெழுத்திட வேண்டும். அவருக்குச் சட்டமியற்றும் அதிகாரம் இருப்பதாகக் கூறுவது கடந்த காலத்தின் கற்பனையான விஷயம் ஆகும் (The English Constitution, Walter Bagehot, 1865).”
அரசியலமைப்பின் பிரிவு 143-ன் கீழ் குடியரசுத் தலைவர் எழுப்பிய 14 கேள்விகளில் 11 கேள்விகளுக்கு இந்திய உச்சநீதிமன்றம் பதிலளித்துள்ளது. இந்தக் கேள்விகள் முக்கியமாக, அரசியலமைப்பின் பிரிவு 200-ல் விளக்கப்பட்டுள்ளபடி, மாநில சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களைக் கையாளும்போது ஒரு மாநில ஆளுநரின் பங்கு என்னவாக இருக்க வேண்டும் என்பது பற்றியதாக உள்ளது.
ஆளுநர்கள் எவ்வாறு நியமிக்கப்படுகிறார்கள் மற்றும் அவர்கள் தங்கள் விருப்புரிமை அதிகாரங்களை எவ்வாறு பயன்படுத்துகிறார்கள் என்பது அரசியல் தலைவர்கள் மற்றும் அரசியலமைப்பு நிபுணர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. 75 ஆண்டுகளுக்குப் பிறகு, ஆளுநர் பொறுப்புகளை நிறைவேற்றுவது எவ்வாறு மோதல்களுக்கும் வழக்குகளுக்கும் வழிவகுத்தது என்பதை பகுப்பாய்வு செய்ய வேண்டிய நேரம் இது என்று கருதப்படுகிறது.
கவனிக்க வேண்டிய புள்ளிகள்
தமிழ்நாடு வழக்கில் மற்றும் அதைத் தொடர்ந்து வந்த குடியரசுத் தலைவர் பரிந்துரையில் நீதிமன்றத்தின்முன் வந்த இரண்டு முக்கிய அரசியலமைப்பு கேள்விகள் எழுப்பப்பட்டன. முதலாவதாக, ஒரு மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்கும்போது, ஒப்புதலை நிறுத்தி வைக்கும்போது மற்றும் குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்காக ஒரு மசோதாவை ஒதுக்கி வைக்கும்போது ஆளுநருக்கு தன்னிச்சையான அதிகாரம் இருக்கிறதா என்பது பற்றியதாக உள்ளது. இரண்டாவதாக, சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட ஒரு மசோதாவின் மீது ஆளுநர் அல்லது குடியரசுத் தலைவர் எவ்வளவு காலக்கெடுவுக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பற்றியும் இருந்தன.
நீதிமன்றத்தின் கருத்தின்படி, ஒரு மசோதா முன்வைக்கப்படும்போது ஆளுநருக்குக் கிடைக்கும் மூன்று செயல்பாடுகளில் தன்னுடைய விருப்பப்படி முடிவெடுக்கும் அதிகாரம் உள்ளது, மேலும் அதற்கென்று காலக்கெடு எதுவும் நிர்ணயிக்கப்பட முடியாது. இருப்பினும், நீண்டகாலமாக, விளக்கமளிக்கப்படாமல் மற்றும் வெளிப்படையான செயலின்மை நிகழ்வுகளில், நீதிமன்றத்திற்கு வரையறுக்கப்பட்ட நீதித்துறை மறுபரிசீலனை செய்யும் அதிகாரம் உள்ளது.
ஒரு மசோதா நிறுத்தி வைக்கப்பட்டு சட்டமன்றத்திற்கு அனுப்பப்பட்டால், அது மீண்டும் சமர்ப்பிக்கப்படுகிறபோது, ஆளுநர் விரைவில் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்பதையும் இங்குக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
இந்திய அரசாங்கச் சட்டம், 1935-ல், மசோதாக்களை அங்கீகரிக்கவோ, நிராகரிக்கவோ அல்லது திருப்பி அனுப்பவோ கவர்னர்-ஜெனரல் மற்றும் ஆளுநருக்கு அதிகாரம் இருந்தது. ஆனால், அரசியலமைப்புச் சட்டத்தின் அசல் வரைவுப் பிரிவு 175-ன் படி, ஒரே ஒரு அவை கொண்ட சட்டமன்றத்திற்கு ஒரு மசோதாவைச் செய்தியுடன் திருப்பி அனுப்பும் இந்த அதிகாரம் ஆளுநருக்கும் வழங்கப்பட்டிருந்தது. ஆனால், அரசியலமைப்பு நிர்ணய சபையில் நடந்த விவாதங்களுக்குப் பிறகு, ஆளுநருக்கு இந்த ‘தன்னிச்சையான அதிகாரத்தை’ வழங்கும் வார்த்தைகளும், ‘ஒரே அவை’ என்ற குறிப்பும் நீக்கப்பட்டன என்றும் கூறப்படுகிறது.
1985-ஆம் ஆண்டில் அரசமைப்பில் பத்தாவது அட்டவணை சேர்க்கப்படுவதற்கு முன்னர், மசோதாக்கள் அமைச்சரவையின் ஆதரவின்றி நிறைவேற்றப்படுவதற்கு ஒரு இயல்பான சாத்தியக்கூறு இருந்தது என்று நீதிமன்றம் கருதியது. கட்சித் தாவல் தடுப்புச் சட்டத்திற்குப் பிறகு, கட்சி உறுப்பினர்கள் கட்சியின் கொறடாவுக்கு (party whip) எதிராகச் செயல்பட முடியாது என்பதையும் நீதிமன்றம் மறைமுகமாகக் குறிப்பிடுகிறது.
எனவே, மசோதாவை மறுபரிசீலனைக்குத் திருப்பி அனுப்புவதற்கோ அல்லது குடியரசுத் தலைவருக்கு அனுப்புவதற்கோ அமைச்சரவை ஆளுநருக்கு அறிவுரை வழங்குவது என்பது சாத்தியமற்றது என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இருப்பினும், இந்தக் கருத்து, A மற்றும் B ஆகிய இரண்டு கட்சிகளைக் கொண்ட கூட்டணி அரசாங்கம் சட்டமன்றத்தில் ஒரு மசோதாவை நிறைவேற்றும் சூழ்நிலையைக் கருத்தில் கொள்வதில்லை.
மசோதா ஒப்புதலுக்கு அனுப்பப்படும்போது, ஒரு அரசியல் மாற்றம் ஏற்பட்டு, கட்சி B கட்சி C கட்சியுடன் கூட்டணி அமைக்கிறது. அவர்களின் புதிய ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, கட்சி B மசோதாவை முன்மொழிய வேண்டாம் என்று முடிவு செய்கிறது. எனவே, புதிய அரசாங்கம் இயற்கையாகவே ஆளுநருக்கு மசோதாவை சட்டமன்றத்திற்கு திருப்பி அனுப்புமாறு அறிவுறுத்த வாய்ப்புள்ளது. இதே போன்ற சூழ்நிலைகளை அரசியலமைப்பு ஆலோசகர் பி.என். ராவ் முன்னர் குறிப்பிட்டிருந்தார். இவை அனைத்தும் பிரிவு 200-ன் கீழ் எந்த மறைக்கப்பட்ட விருப்புரிமை அதிகாரத்தையும் கொண்டிருக்கவில்லை என்பதை தெளிவாகக் காட்டுகிறது என்கின்றனர்.
உதவி மற்றும் ஆலோசனை குறித்து
அரசியலமைப்பின் சட்டப்பிரிவு 200-ன் கீழ் ஆளுநருக்கு சில உள்ளார்ந்த விருப்புரிமை இருக்க வேண்டும் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இல்லையெனில், அரசியலமைப்பிற்கு முரணான ஆலோசனையை அமைச்சரவை வழங்கினாலும், ஆளுநர் அதைப் பின்பற்ற வேண்டிய கட்டாயம் ஏற்படும் என்று கூறியுள்ளது.
இங்கே மூன்று கேள்விகள் எழுகின்றன. முதலில், அமைச்சரவை உறுப்பினர்கள் அரசியலமைப்பிற்குக் கட்டுப்பட்டு இருப்பதாகப் பிரமாணம் செய்யும் நிலையில், அவர்கள் ஏன் அத்தகைய ஆலோசனையை வழங்குவார்கள்? இரண்டாவதாக, அரசியலமைப்புக்கு முரணான அத்தகைய ஆலோசனை ஆளுநருக்கு வழங்கப்பட்டால், ஆளுநருக்கு அமைச்சரவையின் உதவியும் ஆலோசனையும் தேவையில்லாத பிரிவு 356-ன் கீழ், ஒன்றிய அரசுக்கு ஒரு அறிக்கையை அனுப்புவதிலிருந்து அவர்/அவள் தடுக்கப்படுகிறாரா? மூன்றாவதாக, அத்தகைய ஆலோசனை மத்திய அமைச்சரவையால் வழங்கப்பட்டால், குடியரசுத் தலைவருக்கு ஏதேனும் தன்னிச்சையான அதிகாரம் உள்ளதா?
சர்க்காரியா ஆணையத்தின் அறிக்கை, பிரிவு 200-ன் இரண்டாவது நிபந்தனையின் கீழ் மட்டுமே ஆளுநருக்கு விருப்புரிமை உள்ளது என்றும், அது மிகவும் குறைந்த அளவு தான் என்றும் கூறியது. இதற்கு மாறாக, தற்போதைய ஆலோசனை ஆளுநரின் தன்னிச்சையான அதிகாரத்தின் எல்லைகளை விரிவுபடுத்தியுள்ளது. மேலும், அதனை நீதிமன்ற ஆய்வுக்கு உட்படுத்த முடியாததாகவும் ஆக்கியுள்ளது. ஒப்புதல் அளித்தல், நிறுத்தி வைத்தல் மற்றும் செய்திகளை அனுப்புதல் (தனியாக நிறுத்தி வைத்தல் இருக்க முடியாது என்று ஆலோசனை கூறுகிறது) ஆகிய அதிகாரங்கள் விருப்புரிமையின் கீழ் வருபவையாகவும், நீதிமன்ற மறுஆய்வுக்கு உட்படாத ஒன்றாகவும் இருக்கும்பட்சத்தில், அதன் விளைவு மாநிலங்கள் ஆளுநரின் நிர்வாகத்தின் ஒரு வடிவமாக உருவாகிவிடும் என்று எச்சரிக்கின்றனர்.
ஆளுநர் மத்திய அரசு ஊழியர் அல்ல என்பதையும் ஹர்கோவிந் பாண்ட் எதிர். ரகுகுல திலக், 1979 (Hargovind Pant vs Raghukul Tilak, 1979) வழக்கில் நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது. இருப்பினும், சர்க்காரியா, வெங்கடாசலய்யா மற்றும் பூஞ்சி ஆணையங்கள் பரிந்துரைத்த, ஆளுநர்களை நியமிப்பதற்கான வழிமுறைகள் எதையும் ஒன்றிய அரசு தீவிரமாக கவனத்தில் கொள்ளவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது.
சொராப்ஜியின் கவனிப்பு
1985-ஆம் ஆண்டில், சாலி சொராப்ஜி (Soli Sorabjee) ஓய்வுபெற்ற அரசியல்வாதிகளுக்கு அல்லது அதிக அரசியல் அதிகாரத்தைத் தேடுபவர்களுக்கு ஆளுநர் பதவிகளை வழங்கும் நடைமுறை வளர்ந்து வருவதை வன்மையாகக் கண்டித்தார். இதனால், மத்தியிலும் மாநிலங்களிலும் வெவ்வேறு கட்சிகள் ஆட்சி செய்யும் போது மோதல்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது என்றும் கூறினார். ஆளுநர்கள் எவ்வாறு நியமிக்கப்பட வேண்டும் என்று மத்திய-மாநில உறவுகள்
குறித்து மூன்று ஆணையங்கள் (Centre-State relations commissions) அளித்த பயனுள்ள பரிந்துரைகளை, இப்போது ஆளுநர்களைக் குறை கூறுபவர்கள் அன்று புறக்கணித்தார்கள் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம் என்றும் சுட்டிக்காட்டுகிறார்.
ஆளுநர்களால் ஏற்படும் மசோதா மீதான நீண்ட காலதாமதங்கள் குறித்து மாநிலங்கள் நீதிமன்றத்தில் முறையிட்டபோது, மசோதாக்கள் குறித்து முடிவெடுப்பதற்கான நிலையான காலக்கெடுவை நிர்ணயிக்கும் நடவடிக்கை குறித்த யோசனை எழுந்தது. முன்னாள் கர்நாடக முதலமைச்சர் ராமகிருஷ்ண ஹெக்டே, பல்வேறு ஆளுநர்களால் அனுப்பப்பட்ட 74 மசோதாக்களுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளிக்கவில்லை என்று சுட்டிக்காட்டினார். சில மசோதாக்கள் ஏழு, ஆறு, ஐந்து அல்லது மூன்று ஆண்டுகளாகக் காத்திருந்தன என்றும் கூறினார். மேலும், 58 மசோதாக்கள் ஒரு வருடமாக நிலுவையில் இருந்தன. மேலும், கர்நாடகத்தை ஆறு ஆண்டுகள் காத்திருக்க வைத்த பிறகு, அதன் 1983-ஆம் ஆண்டின் கல்வி மசோதா இன்னும் "பரிசீலனையில் உள்ளது" என்று உள்துறை அமைச்சகம் இறுதியாக மாநிலத்திற்குத் தெரிவித்ததாகவும் அவர் குறிப்பிட்டார். (Mainstream, June 8, 1991).
மூன்று ஆணையங்களும் தெளிவான காலக்கெடுவை நிர்ணயிக்கப் பரிந்துரைத்தன. யூனியன் மற்றும் மாநிலங்களுக்கு இடையே சுமூகமான ஒத்துழைப்பு முக்கியத்துவம் வாய்ந்த ஒரு அமைப்பில், ஒருமித்த கருத்தை எட்டி, சட்டப்பிரிவு 200-ஐ திருத்தி காலக்கெடுவை ஏன் சேர்க்கக்கூடாது? என்று வலியுறுத்தப்படுகிறது. இன்று ஆளும் கட்சியாக இருப்பவர் நாளைக்கு எதிர்க்கட்சியாக இருக்கலாம், மற்றும் அதற்கு நேர்மாறாகவும் இருக்கலாம் என்றும் கூறுகின்றனர்.
தமிழ்நாட்டு வழக்கில் இருந்த முந்தைய நிலைப்பாட்டை நீதிபதிகளின் ஆலோசனை முடிவு தற்போது மாற்றியமைத்துள்ளது. இந்தத் தீர்ப்பு சட்டபூர்வமாக ஆலோசனையுடன் ஒன்றிணைக்கப்படாவிட்டாலும், இந்த ஆலோசனைக்கு வலுவான வாதத்திறன் மதிப்பு உள்ளது என்கின்றனர். அரசியலமைப்புச் சட்டத்தின் 200-வது பிரிவின் கீழ், ஆளுநர்கள் தங்கள் சொந்த விருப்ப அதிகாரங்களை தெளிவான காலக்கெடுக்கள் இல்லாமல் பயன்படுத்த அனுமதித்தால் நிலைமை மாறுமா? என்பது மட்டுமே இப்போதைய முக்கியக் கேள்வி என்கின்றனர்.
ஆர். மோகன், இந்திய வருவாய் பணித்துறையின் முன்னாள் அதிகாரி.
Original Article: The amplitude of gubernatorial discretion