ஒரு வாகனம் சாலையில் அனுமதிக்கப்படுவதற்கு முன்பே பல பாதுகாப்பு விதிமுறைகள் பொருந்தும் என்றாலும், பாரதம் NCAP ஆனது தனித்துவமானது. ஏனெனில், அது 'விபத்துகளை சிறப்பாக கையாளமுடியும் தன்மை'யில் (crashworthiness) கவனம் செலுத்துகிறது. இது அடிப்படையான 'சாலையில் செல்லுதற்குறிய தகுதியின்' (roadworthiness) தேவைகளுக்கு அப்பாற்பட்ட ஒரு நிலையாகும். அது என்ன மதிப்பிடுகிறது? என்பது கீழே குறிப்பிடப்பட்டுள்ளது.
வாகனங்களின் விபத்துக்கான பாதுகாப்பு செயல்திறனை மதிப்பிடுவதற்கான பாரத் புதிய கார் மதிப்பீட்டுத் திட்டம் (Bharat New Car Assessment Program) அல்லது பாரத் NCAP-ன் திருத்தப்பட்ட வரைவை சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் (Ministry of Road Transport and Highways (MoRTH)) வெளியிட்டுள்ளது. இந்தத் திட்டம் முதன்முதலில் அக்டோபர் 2023-ல் செயல்படுத்தப்பட்டது. இது வாகன உற்பத்தியாளர்கள் அல்லது இறக்குமதியாளர்கள் தங்கள் வாகனங்களை மோட்டார்வாகனத் தொழில் தரநிலைகள் (Automotive Industry Standard (AIS))-197-ன் படி சோதித்துப் பார்த்து, வாகனத்தின் விபத்துத் திறனின் அடிப்படையில் நட்சத்திர தரநிலை மதிப்பீட்டைப் பெறுவதற்கான விரிவான நடைமுறையை வகுத்துள்ளது.
2023-ம் ஆண்டின் பாரத் NCAP திட்டமானது, செப்டம்பர் 30, 2027 வரை செல்லுபடியாகும் அதே வேளையில், புதிய வரைவு விபத்துப் பாதுகாப்பு மதிப்பீடுகளின் நோக்கத்தை விரிவுபடுத்துகிறது. இது, புதிய கட்டாய சோதனைகளை அறிமுகப்படுத்துவதுடன், சோதனை வகைகளைப் புதுப்பித்து மதிப்பெண் முறையை திருத்துகிறது. முதல் முறையாக, புதிய வரைவு தரநிலைகள் வாகனங்களை அதன் பாதிக்கப்படக்கூடிய சாலைப்பயனர் பாதுகாப்பு அம்சங்களின் அடிப்படையில் சோதிக்க முன்மொழிகின்றன. சாலை விபத்துகளில் ஏற்படும் மொத்த இறப்புகளில் 20 சதவீதத்திற்கும் அதிகமானோர் பாதசாரிகள், மிகவும் பாதிக்கப்படக்கூடிய சாலை பயனர்களில் ஒருவர் ஆவர்.
பாரத் NCAP என்றால் என்ன?
பாரத் புதிய கார் மதிப்பீட்டுத் திட்டம் (Bharat NCAP), விபத்து சோதனை மற்றும் நிர்ணயிக்கப்பட்ட மதிப்பீட்டு அளவுகோல்களின் அடிப்படையில் வாகனங்களுக்கான பாதுகாப்பு மதிப்பீடுகளை வழங்குகிறது. சிறப்பாகச் செயல்படும் வாகனங்கள் அதிகபட்சமாக ஐந்து நட்சத்திர மதிப்பீட்டைப் பெறுகின்றன. இந்த வழிகாட்டுதல்கள் முக்கியமாக பாரத் NCAP-ன் மதிப்பீட்டை தங்கள் வாகனங்களில் காண்பிக்க விரும்பும் நிறுவனங்களுக்கும், சில்லறை சந்தையில் வாகனங்களின் பாதுகாப்பு அம்சங்களை முன்னிலைப்படுத்துவதற்கான சந்தைப்படுத்தல் பிரச்சாரங்களுக்கும் பொருந்தும்.
ஒரு வாகனம் சாலையில் அனுமதிக்கப்படுவதற்கு முன்பே பல பாதுகாப்புத் தரநிலைகள் பொருந்தும் அதே வேளையில், பாரத் NCAP தனித்துவமானதாக உள்ளது. ஏனெனில், அது அடிப்படையான "சாலைத் தகுதி" தேவைகளுக்கு அப்பாற்பட்ட ஒரு படியான "விபத்து" குறித்து கவனம் செலுத்துகிறது.
உலகின் பல்வேறு பகுதிகளிலும் இதே போன்ற பிற பாதுகாப்புத் தரநிலைகள் இருந்தாலும், புவியியல் ரீதியாக உலகளவில் புதிய கார் மதிப்பீட்டுத் திட்டத்தால் (NCAP) நடத்தப்படும் தரநிலைகளைப் போலவே, பாரத் NCAP ஆனது இந்திய நிலைமைகளுக்கு ஏற்ற பாதுகாப்பு சான்றிதழ்களை வழங்கவும், வாகனப் பாதுகாப்பில் தொழில்நுட்ப முன்னேற்றத்தை எளிதாக்கவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் தன்னார்வத் தன்மை கொண்டது. புனேவில் உள்ள மத்திய சாலைப் போக்குவரத்து நிறுவனம் (Central Institute of Road Transport (CIRT)) பாரத் NCAP மதிப்பீடுகளை வழங்குவதற்கான நியமிக்கப்பட்ட நிறுவனமாகும்.
பாரத் NCAP-2.0-ல் முன்மொழியப்பட்ட மாற்றங்கள் என்ன?
2023-ம் ஆண்டின் பாரத் NCAP-ல், வாகனங்கள் மூன்று முக்கியப் பிரிவுகளின் கீழ் மதிப்பிடப்படுகின்றன. 1) வயது வந்தோர் பயணிகள் பாதுகாப்பு (Adult Occupant Protection (AOP)), 2) குழந்தைப் பயணிகள் பாதுகாப்பு (Child Occupant Protection (COP)) மற்றும் 3) பாதுகாப்பு உதவி தொழில்நுட்பங்கள் (Safety Assist Technologies (SAT)) ஆகும். இவற்றைச் சரிபார்க்க, வாகனத்தின் முன்பக்க தாக்க சோதனைக்கு (frontal impact test) 64 கிமீ/மணி வேகத்திலும், பக்கவாட்டு தாக்க சோதனைக்கு (side impact test) 50 கிமீ/மணி வேகத்திலும், சாய்ந்த பக்கவாட்டு தாக்க சோதனைக்கு (oblique side impact test) 29 கிமீ/மணி வேகத்திலும் வாகனங்களில் சோதனைகள் செய்யப்படுகின்றன. பாதுகாப்பை மதிப்பிடுவதற்காக, கட்டுப்படுத்தப்பட்ட நிலைமைகளின்கீழ், வாகனங்கள் வேண்டுமென்றே இந்த வேகத்தில் விபத்துக்குள்ளாக்கப்படுகின்றன.
2025-ஆம் ஆண்டு வரைவு திட்டமான பாரத் என்சிஏபி 2.0-இல் (Bharat NCAP 2.0), இரு பிரிவுகளின் (verticals) மற்றும் மோதல் சோதனைகளின் (crash tests) எல்லை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.
இப்போது வாகனத்தின் ஒட்டுமொத்த மதிப்பீடு (overall rating) ஐந்து மதிப்பீட்டுப் பகுதிகளால் ஆனதாக இருக்கும். அவை, பாதுகாப்பான ஓட்டுதல் (Safe Driving) – 10%; விபத்தைத் தவிர்த்தல் (Accident Avoidance) – 10%; மோதல் பாதுகாப்பு (Crash Protection) – 55%; பாதிக்கப்படக்கூடிய சாலைப் பயனாளிகளுக்கான பாதுகாப்பு (Vulnerable Road User Protection) – 20%; மோதல்-பிந்தைய பாதுகாப்பு (Post-Crash Safety) – 5%.
அதேபோல, மோதல் பாதுகாப்பு (crash protection) பிரிவின் கீழ் கட்டாயமாக நடத்தப்பட வேண்டிய விபத்து சோதனைகளின் எண்ணிக்கை மூன்றிலிருந்து ஐந்தாக விரிவாக்கப்பட்டுள்ளது:
64 கி.மீ/மணி வேகத்தில் முன்பக்க மோதல் சோதனை (நெகிழ்வான தடுப்புச் சுவருக்கு எதிராக - deformable barrier)
50 கி.மீ/மணி வேகத்தில் பக்கவாட்டு மோதல் சோதனை (நகரும் நெகிழ்வான தடுப்புச் சுவருக்கு எதிராக - mobile deformable barrier)
32 கி.மீ/மணி வேகத்தில் சாய்வான பக்கவாட்டு மோதல் சோதனை (கடினமான தூணுக்கு எதிராக - rigid pole)
50 கி.மீ/மணி வேகத்தில் முன்பக்க மோதல் சோதனை (முழு அகல கடினத் தடுப்புச் சுவருக்கு எதிராக - full width rigid barrier)
50 கி.மீ/மணி வேகத்தில் பின்பக்க மோதல் சோதனை (நகரும் கடினத் தடுப்புச் சுவருக்கு எதிராக - mobile rigid barrier)
இந்த சோதனைகளின்போது, பெரியவர்கள் (ஓட்டுநர், முன்னிருக்கை பயணி, பின் இருக்கை பயணிகள்) மற்றும் குழந்தை பயணிகளுக்கு ஏற்படக்கூடிய காயங்களின் ஆபத்தை மதிப்பீடு செய்ய, மனித உருவப் பொம்மைகள் (Anthropomorphic Test Devices - ATDs) பயன்படுத்தப்படுகின்றன.
பாதிக்கப்படக்கூடிய சாலைப் பயனர்களின் பாதுகாப்பை இது எவ்வாறு உறுதி செய்யும்?
2025 வரைவு மூன்று புதிய மதிப்பீட்டு பகுதிகளை அறிமுகப்படுத்துகிறது. அவை, 2023 ஆவணத்தில் கட்டமைப்பு ரீதியாக உள்ளடக்கப்படவில்லை. இது பாதுகாப்பு உதவி தொழில்நுட்பங்களை (Safety Assist Technologies (SAT)) ஒரு பரந்த தகுதிப் பொருளாக மட்டுமே பயன்படுத்தியது. மேலும், புதிய பகுதிகளில் ஒன்று பாதிக்கப்படக்கூடிய சாலைப் பயனர் பாதுகாப்பு பிரிவானது 20 சதவீத தரநிலையைக் கொண்டுள்ளது.
இந்த மதிப்பீடு கட்டாயத் தாக்க சோதனைகள் மற்றும் பாதிக்கப்படக்கூடிய சாலைப் பயனர்களைப் பாதுகாக்க வடிவமைக்கப்பட்ட தொழில்நுட்பங்களை உள்ளடக்கியது. கட்டாய சோதனைகளில் முன்புற மோதல் தடுப்புக்கு (Bumper) எதிரான பாதசாரி கால்வடிவத் தாக்கங்கள் (Pedestrian Legform Impacts), அதே போல் வயது வந்தோர் தலைவடிவ தாக்கங்கள் (Adult headform impacts) மற்றும் இயந்திர உறை பகுதி (engine hood area) மற்றும் வாகனத்தின் முன்புறக் கண்ணாடிக்கு (windshield) எதிரான குழந்தை தலைவடிவ தாக்கங்கள் (Child headform impacts) ஆகியவை அடங்கும். குழந்தை பாதசாரிகள், வயது வந்தோர் பாதசாரிகள் மற்றும் காரில் இருந்து மோட்டார் சைக்கிள் ஓட்டுபவர் பின்புறம் நகரும் சூழ்நிலைகள் தொடர்பான தன்னியக்க அவசரகால நிறுத்து முறையின் (Autonomous Emergency Braking System (AEBS)) விருப்ப மதிப்பீடுகளும் இதில் அடங்கும்.
தன்னியக்க அவசரகால நிறுத்து முறையின் (AEBS) தன்னாட்சி தொழில்நுட்பங்கள் 100% விபத்துகளைத் தவிர்க்க முடியாமல் போகலாம் என்றும், நிலையான சோதனை நிலைமைகளில் மட்டுமே செயல்திறனுக்காக மதிப்பிடப்படுகின்றன என்றும் ஆவணம் கூறுகிறது.
இதேபோல், மற்றொரு மதிப்பீட்டுப் பகுதியான விபத்து தவிர்ப்பு, ஓட்டுநர் தானாகவே உடனடி விபத்துகளைத் தவிர்க்க உதவும் தொழில்நுட்பங்களில் கவனம் செலுத்துகிறது. நட்சத்திர மதிப்பீட்டுத் திட்டத்திற்குத் தகுதி பெறுவதற்கு மின்னணு நிலைத்தன்மைக் கட்டுப்பாடு (Electronic Stability Control (ESC)) அமைப்பு கட்டாய தொழில்நுட்பமாக இருக்கும். வாகன உற்பத்தியாளர்கள் தானாக முன்வந்து தன்னியக்க அவசரகால நிறுத்து முறையை (AEBS) வழங்கத் தேர்வு செய்யலாம்.
விபத்துக்குப் பிந்தைய பாதுகாப்புப் பிரிவு விபத்துக்குப் பிறகு ஏற்படும் தீங்கைக் குறைப்பதில் கவனம் செலுத்துகிறது. தீ மற்றும் மின் ஆபத்துகளுக்கான ஆற்றல் மேலாண்மை குறித்த கட்டாய சோதனைகள் இதில் அடங்கும். அதாவது, மின்சார அதிர்ச்சிக்கு எதிரான பாதுகாப்பைச் சரிபார்க்கிறது. இதில் பயணியர் வெளியேற்றமும் (Occupant Extrication) அடங்கும். அதாவது, கதவுகள் எவ்வளவு எளிதாகத் திறக்கின்றன மற்றும் இருக்கை-பாதுகாப்பு வார் (seat-belt) கொக்கிகள் எவ்வளவு எளிதாக வெளியேறுகின்றன என்பதைச் சரிபார்க்கிறது.
நட்சத்திர மதிப்பீடும் மாறிவிட்டதா?
ஆம், 2025 ஆவணம் 4-நட்சத்திர மற்றும் 5-நட்சத்திர மதிப்பீடுகளுக்கான தரநிலையின் அளவு முறையே 65 மற்றும் 80 புள்ளிகளாக அதிகரித்துள்ளது. இது 2023-ல் 60 மற்றும் 70 புள்ளிகளிலிருந்து அதிகரித்துள்ளது. 1-நட்சத்திரம், 2-நட்சத்திரம் மற்றும் 3-நட்சத்திரங்களுக்கு, தரநிலைப் புள்ளி முறையே 30, 40 மற்றும் 50 ஆகும்.
இதனுடன், பாரத் NCAP-2.0-ல் 3-நட்சத்திர மற்றும் அதற்கு மேற்பட்ட மதிப்பீடுகளைப் பெறுவதற்கு, ஒரு வாகனம் வயது வந்தோர் பயணி பாதுகாப்பில் (Adult Occupant Protection (AOP)) குறைந்தது 55% மதிப்பெண் பெற வேண்டும். இந்தத் தேவையைப் பூர்த்தி செய்யத் தவறினால் 1-நட்சத்திர தரநிலைக் கொண்ட அபராதம் விதிக்கப்படும். மேலும், 5-நட்சத்திர மதிப்பீடு பெற்ற வாகனம் 'பூஜ்ஜிய' மதிப்பெண்ணில் எந்த ஒரு மதிப்பீட்டையும் கொண்டிருக்க முடியாது. அப்படி நடந்தால், மதிப்பீடு 4 நட்சத்திரங்களாகக் கட்டுப்படுத்தப்படும்.
5 நட்சத்திர மதிப்பீடு பெற்ற வாகனம், வாகனங்களில் உருமாற்றமைப்பு (modifiers) பயன்படுத்தப்படுவதற்கு முன்பு, அந்தந்த விபத்து சோதனைகளில் பயன்படுத்தப்படும் பெரியவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு 'சிவப்பு' வண்ண மண்டலத்தில் எந்த காயத்திற்கும் மதிப்புகளையும் கொண்டிருக்கக்கூடாது என்றும் அது கூறுகிறது.
தற்போதைய நிலவரப்படி, டாடா ஹாரியர், டாடா சஃபாரி, டாடா நெக்ஸான், மஹிந்திரா XUV 3XO, சிட்ரோயன் ஏர்கிராஸ், மாருதி சுசுகி இன்விக்டோ, டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ், ஹூண்டாய் டக்சன் போன்ற பல கார்கள் பாரத் NCAP-லிருந்து 5 நட்சத்திர மதிப்பீட்டைப் பெற்றுள்ளன.
இதற்கான, திருத்தப்பட்ட விதிகள் குறித்த கருத்துகளுக்கான கடைசி தேதி டிசம்பர் 20, 2025 ஆகும்.
Original Article: Bharat NCAP 2.0: How the new rules could impact vehicle and pedestrian safety.