இந்தியாவில், குடியரசுத் தலைவரின் மன்னிப்பு வழங்கும் அதிகாரத்தை நீதிமன்றங்கள் ஓரளவுக்கு மட்டுமே ஆய்வு செய்ய முடியும். ஆனால், அமெரிக்காவில், மன்னிப்பு வழங்க அதிபருக்கு முழு அதிகாரம் உள்ளது. ஒவ்வொரு நாட்டின் அரசியலமைப்பு மற்றும் அரசியல் முறைமை இந்த ஜனாதிபதி கருணை அதிகாரங்கள் எவ்வளவு பரந்ததாக அல்லது குறைவாக வரையறுக்கப்பட்டதாக இருக்கின்றன என்பதை எவ்வாறு வடிவமைக்கின்றன?
கேஹர் சிங் vs இந்திய யூனியன் வழக்கில் (1988), உச்சநீதிமன்றம், அரசியல் அமைப்பின் 72-வது பிரிவின் கீழ் குடியரசுத் தலைவருக்கு உள்ள அதிகாரம் என்பது ஒரு நீதித்துறை சார்ந்த விஷயம் என்றும், அதை நீதிமன்றங்கள் மறு ஆய்வு செய்ய முடியும் என்றும் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் குடியரசுத் தலைவரின் மன்னிப்பு அதிகாரம் வரையறுக்கப்பட்ட நீதித்துறை மறுஆய்வுக்கு உட்பட்டது என்பதை இது அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. இந்திய குடியரசுத் தலைவரின் மன்னிப்பு அதிகாரத்தையும் அது அமெரிக்க ஜனாதிபதியின் மன்னிப்பு அதிகாரத்துடன் எவ்வாறு ஒப்பிடுகிறது என்பதையும் ஆராய்வோம்.
இந்தியாவில் குடியரசுத் தலைவரின் மன்னிப்பு அதிகாரம்
இந்தியாவில், மன்னிக்கும் அதிகாரம் காலனித்துவ காலத்தில் இருந்து வந்தது. அப்போது பிரிட்டிஷ் மன்னருக்கோ அல்லது ராணிக்கோ முழுமையான மன்னிப்பு அளிக்கும் அதிகாரம் இருந்தது. இது மன்னரின் கருணை சிறப்புரிமை (royal prerogative of mercy) என்று அழைக்கப்பட்டது. இது ஒரு காலத்தில் வரம்பற்றதாக இருந்தாலும், இப்போது அரசியலமைப்பு விதிகளால் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
1. மன்னர் இப்போது அமைச்சர்களின் ஆலோசனையின் பேரில் செயல்பட வேண்டியுள்ளது.
2. அதிகாரமானது வரையறுக்கப்பட்ட நீதித்துறை ஆய்வுக்கு உட்பட்டது.
இருப்பினும், காலனித்துவ ஆட்சி காலத்தில், பிரிட்டிஷ் இந்தியாவின் கவர்னர் ஜெனரலுக்கு பிரிட்டிஷ் மன்னருக்கு இருந்தது போன்ற அதிகாரங்கள் இருந்தன. அவரால் தண்டனைகளை நிறுத்தி வைக்கவோ, குறைக்கவோ அல்லது மாற்றவோ முடியும். இந்த அதிகாரங்கள் இந்திய அரசாங்கச் சட்டம், 1935-ன் பிரிவு 295(1)-ல் குறிப்பிடப்பட்டிருந்தன.
இந்திய அரசியலமைப்பை உருவாக்கியவர்கள், சில சமயம், நீதிமன்றத்தின் தவறுகளைச் சரிசெய்யும் வகையில், குடியரசுத் தலைவருக்கு மன்னிக்கும் அதிகாரத்தை வழங்கினர். இந்த அதிகாரம் நீதிமன்றங்களிடமிருந்து தன்னிச்சையாகச் செயல்படுகிறது. இது அமெரிக்கக் குடியரசுத் தலைவரின் மன்னிக்கும் அதிகாரத்துடன் எவ்வாறு ஒப்பிடப்படுகிறது?
இந்தியா மற்றும் அமெரிக்காவில் அரசியலமைப்பு விதிகள்
இந்திய அரசியலமைப்புச் சட்டமும் அமெரிக்க அரசியலமைப்பும் அந்தந்த குடியரசுத் தலைவர்களுக்கு மன்னிப்பு வழங்கும் கருணை அதிகாரத்தை வழங்குகின்றன.
இந்தியாவின் நிலை
இந்தியாவில், சட்டப்பிரிவு 72-ஆனது, மத்திய சட்டத்தின் கீழ் குற்றவாளியாகக் காணப்பட்டவர்கள், இராணுவ நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டவர்கள் அல்லது மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களின் தண்டனையை மன்னிக்க குடியரசுத் தலைவருக்கு அதிகாரம் அளிக்கிறது.
சட்டப்பிரிவு 72(1) ஆனது, குற்றத்திற்காக எவருக்கும் விதிக்கப்பட்ட தண்டனையை மன்னிக்கவோ, குறைக்கவோ அல்லது நிறுத்தி வைக்கவோ குடியரசுத் தலைவருக்கு அதிகாரம் அளிக்கிறது. இதன் பொருள், குடியரசுத் தலைவர் பின்வருவனவற்றைச் செய்யலாம்:
மன்னிப்பு - தண்டனை மற்றும் குற்றவாளி என்ற நிலையையும் நீக்குவது.
குறைத்தல் - ஒரு தண்டனையை அதற்குக் குறைவான மற்றொரு தண்டனையாக மாற்றுவது.
தண்டனைக் காலக்குறைவு - ஒரு தண்டனையின் கால அளவைக் குறைப்பது..
தண்டனைத் தற்காலிக குறைப்பு - உடல் ஊனம் போன்ற சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு தண்டனையைக் குறைப்பது.
தண்டனை நிறைவேற்றத் தாமதம் - தண்டனையை நிறைவேற்றுவதைத் தற்காலிகமாகத் தாமதப்படுத்துவது.
மன்னிப்பு அளிக்கும்போது, குடியரசுத் தலைவர் ஒரு நீதிமன்றத்தைப் போலச் செயல்படுவதில்லை, மேலும் வாய்வழி விசாரணை எதுவும் கிடையாது. மன்னிப்பு ஏன் வழங்கப்பட்டது அல்லது மறுக்கப்பட்டது என்று குடியரசுத் தலைவர் விளக்க வேண்டியதில்லை, இருப்பினும் நடைமுறைச் சிக்கல்களுக்காக இந்த செயல்முறையை நீதிமன்றங்களால் ஆய்வு செய்ய முடியும் என்று கூறுகின்றனர்.
உதாரணமாக, 2006-ஆம் ஆண்டில் நடந்த எபுரு சுதாகர் வழக்கில் உச்சநீதிமன்றம், மன்னிக்கும் அதிகாரம் தன்னிச்சையாக இருந்தால், தவறான எண்ணத்துடன் செய்யப்பட்டிருந்தால், அல்லது சட்டத்திற்க்குப் பொருத்தமற்ற வகையில் பயன்படுத்தப்பட்டிருந்தால், அதை நீதிமன்றங்கள் மறுபரிசீலனை செய்யலாம் என்று தீர்ப்பளித்தது.
அமெரிக்க அரசியலமைப்புச் சட்டம், ஜனாதிபதிக்கு மாநில குற்றங்களுக்கோ அல்லது பதவி நீக்க வழக்குகளுக்கோ அல்லாமல், ஒன்றியக் குற்றங்களுக்கு (federal crimes) மட்டுமே மன்னிப்பு வழங்க அனுமதிக்கிறது. அரசியலமைப்பின் இரண்டாம் பிரிவில், பிரிவு 2, ஜனாதிபதிக்கு “ஐக்கிய நாடுகளுக்கு எதிரான குற்றங்களுக்காக, பதவி நீக்க வழக்குகளைத் தவிர, மன்னிப்புகளையும் விடுவிப்புகளையும் வழங்குவதற்கான அதிகாரம் உண்டு” என்றும் கூறுகிறது.
இதன் பொருள், அமெரிக்க ஜனாதிபதியின் மன்னிப்பு அதிகாரம் மத்திய அதிகார வரம்பிற்கு உட்பட்ட விஷயங்களுக்கு மட்டுமே நீட்டிக்கப்பட்டுள்ளது, அதே சமயம் மாநில ஆளுநர்களுக்கு அந்தந்த மாநிலச் சட்டங்களின் கீழ் மட்டுமே அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதனால், இந்திய குடியரசுத் தலைவரைப் போன்று, அமெரிக்க ஜனாதிபதிக்கு மாநிலச் சட்டத்தின்கீழ் உள்ள குற்றங்கள்மீது அதிகாரம் இல்லை என்கின்றனர்.
இருப்பினும், அமெரிக்க அரசியலமைப்பின் இரண்டாம் பிரிவில் (Article II) உள்ள பரந்த மொழியானது, முன்கூட்டியே மன்னிப்பு வழங்குவதற்கு (pre-emptive pardons) வழிவகுக்கும் என்று பொருள் கொள்ளப்படுகிறது. இதன் பொருள் என்னவென்றால், அமெரிக்க ஜனாதிபதி ஒருவர், ஒரு நபர் அதிகாரபூர்வமாக குற்றம் சாட்டப்படுவதற்கு, தண்டிக்கப்படுவதற்கு, அல்லது விசாரிக்கப்படுவதற்கு முன்பேகூட அவருக்கு மன்னிப்பு வழங்க முடியும். உதாரணமாக, முன்னாள் ஜனாதிபதி ஜோ பைடன் தனது பதவிக்காலம் முடிவதற்கு சற்று முன்பு, அவருக்கு அடுத்து வரும் அரசாங்கத்தின் மூலம் ஏற்படக்கூடிய பழிவாங்கலில் இருந்து அவர்களைப் பாதுகாக்க சிலருக்கு முன்கூட்டியே மன்னிப்பு வழங்கினார். இதற்கு மாறாக, இந்தியாவில் இத்தகைய முன்கூட்டிய மன்னிப்புக்கு அரசியலமைப்பு ரீதியான அடிப்படை இல்லை என்று தெரிவிக்கின்றனர்.
தன்னிச்சையான அதிகாரங்கள்
அமெரிக்க ஜனாதிபதியின் மன்னிப்பு வழங்கும் அதிகாரம் இறுதியானது. ஒருமுறை மன்னிப்பு வழங்கப்பட்டால், அதை காங்கிரஸ் சபையால் மறுபரிசீலனை செய்யவோ அல்லது மாற்றவோ முடியாது என்கின்றனர். மேலும் வழக்கமாக, எந்தவொரு பிற்கால ஜனாதிபதியாலும் அதை ரத்து செய்ய முடியாது என்றும் கூறப்படுகிறது.
அரசியலமைப்பு வரம்புகள் என்னவென்றால், ஜனாதிபதி பதவி நீக்க வழக்குகளிலோ அல்லது மாநிலச் சட்டக் குற்றங்களுக்கோ மன்னிக்கும் அதிகாரங்களைப் பயன்படுத்த முடியாது. இதற்கு மாறாக, இந்தியக் குடியரசுத் தலைவர் மன்னிப்பு வழங்கும் போது தனிப்பட்ட விருப்பம் மிகக் குறைவாகவே உள்ளது.
மத்திய அமைச்சரவையின் ஆலோசனையை இந்தியக் குடியரசுத் தலைவர் பின்பற்ற வேண்டும். இது மரு ராம் (1980) மற்றும் தனஞ்சோய் சட்டர்ஜி (1994) வழக்குகளில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், கருணை மனுக்கள் குறித்து முடிவெடுப்பதில் நியாயமற்ற முறையில் அமைச்சரவை தாமதம் செய்யும்பட்சத்தில், குடியரசுத் தலைவர் தமது சொந்த விருப்புரிமையைப் பயன்படுத்தலாம் என்றும் வரையறுக்கப்படுகிறது.
அமைச்சகத்தால் ஏற்படும் நியாயமற்ற தாமதங்கள் சில சமயங்களில் நீதிமன்றங்கள் தலையிட வழிவகுத்துள்ளன. உதாரணமாக, 2022-ஆம் ஆண்டு ஏ.ஜி. பேரறிவாளன் வழக்கில், தமிழக ஆளுநர் கருணை மனு முடிவை தாமதப்படுத்தியதால் உச்சநீதிமன்றம் தலையிட்டு அவரை விடுதலை செய்ய உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.
இந்திய குடியரசுத் தலைவருக்கும் அமெரிக்க ஐக்கிய நாட்டின் அதிபருக்கும் தண்டனை குறைப்பு அதிகாரத்தில் வேறுபாடுகள் உள்ளன. ஏனெனில் இந்தியாவில் பாராளுமன்ற ஆட்சிமுறை (Parliamentary system) உள்ளது, அதேசமயம் அமெரிக்காவில் அதிபர் ஆட்சிமுறை (Presidential system) உள்ளது. இந்த இரு நாடுகளிலும் இந்த அதிகாரங்களை மறுபரிசீலனை செய்வதில் நீதிமன்றங்களின் பங்கும் வேறுபடுகிறது.
நீதித்துறை தலையீடு
இந்தியாவில், குடியரசுத் தலைவரின் அதிகாரத்தை நீதிமன்றங்கள் மறுபரிசீலனை செய்யலாம் என்று கேஹர் சிங் vs இந்திய யூனியன் (1988) வழக்கில், உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. அரசியலமைப்பின் 72-வது பிரிவின்கீழ் உள்ள குடியரசுத் தலைவரின் அதிகாரத்தை நீதித்துறை மறுஆய்வு மூலம் பரிசோதிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இருப்பினும், நடைமுறை நியாயம் பூர்த்தி செய்யப்படாத இடங்களில் தலையிட அதிகாரங்கள் இருந்தபோதிலும், நீதிமன்றங்கள், வழக்குகளின் தகுதிகளை மறுபரிசீலனை செய்ய முடியாது என்பதையும் அது தெளிவுபடுத்தியது. மரு ராம் vs இந்திய ஒன்றியம் (1980) மன்னிப்பு விஷயங்களில் நீதிமன்றத் தலையீட்டுக்கு வரம்புகளை நிர்ணயித்துள்ளது.
அமெரிக்க அதிபரின் மன்னிப்பு வழங்கும் அதிகாரத்தை நீதிமன்றங்கள் மறுஆய்வு செய்ய முடியாது. அமெரிக்க அதிபர்கள் மன்னிப்பு வழங்க முழு அரசியலமைப்பு அதிகாரத்தைக் கொண்டுள்ளனர். மேலும், அதிகாரப் பிரிவினை நீதித்துறையின் தலையீட்டைத் தடுக்கிறது. இருப்பினும், இந்தியாவில், பொறுப்புடைமையை உறுதிப்படுத்த, மன்னிப்பு அதிகாரங்களைப் பயன்படுத்துவதை நீதிமன்றங்கள் இன்னும் மேற்பார்வையிடுகின்றன.
இந்தியக் குடியரசுத் தலைவருக்கு மத்திய சட்டத்திற்கு அப்பாற்பட்ட பரந்த மன்னிப்பு வழங்கும் அதிகாரங்கள் உள்ளன. ஆளுநர்களுக்கும் அரசியலமைப்பின் சட்டப்பிரிவு 161-ன் கீழ் மன்னிப்பு வழங்கும் அதிகாரம் உள்ளது. இது சில சமயங்களில் குடியரசுத் தலைவரின் அதிகாரத்துடன் ஒன்றுடன் ஒன்று சேரும். இருப்பினும், குடியரசுத் தலைவர் ஒரு கருணை மனுவை ஏற்கெனவே நிராகரித்துவிட்டார் என்ற ஒரே காரணத்திற்காக ஆளுநரின் அதிகாரத்தைக் கட்டுப்படுத்த முடியாது என்றும் தெரிவிக்கப்படுகிறது.
ஆளுநர்களின் அதிகாரம் தனித்துவமானது மற்றும் சுதந்திரமானது, மேலும் குடியரசுத் தலைவரின் மன்னிக்கும் அதிகாரம் ஆளுநரின் அதிகாரத்தைவிட மேலானது அல்ல. எனினும், ஆளுநர்களின் அதிகாரத்திற்கு இரண்டு வரம்புகள் உள்ளன. அவை:
1. ஒரு ஆளுநர் மரண தண்டனைகளை மன்னிக்க முடியாது.
2. நீதிமன்றத் தீர்ப்பாயங்களால் விசாரிக்கப்பட்ட வழக்குகளில் ஒரு ஆளுநருக்கு மன்னிக்கும் அதிகாரம் இல்லை.
3. அமெரிக்காவைப் பொறுத்தவரை, ஒரு கூட்டாட்சிக்கும் - மாநில அரசுக்கும் இடையே தெளிவான பிரிவு உள்ளது.
மேலும், இந்தியாவிலும் அமெரிக்காவிலும் தலைவர்கள் மன்னிப்பு வழங்கும் அதிகாரங்களைப் பயன்படுத்துவது ஒவ்வொரு அமைப்பின் அரசியல் தன்மையைக் காட்டுகிறது. அமெரிக்காவில், அதிபரின் கருணை பெரும்பாலும் அரசியல் உள்நோக்கம் கொண்டது என்று விமர்சிக்கப்படுவதும் குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில், குடியரசுத் தலைவர் மற்றும் ஆளுநர்களின் மன்னிக்கும் அதிகாரம் குறைவாகவே பயன்படுத்தப்படுகிறது, மேலும் பொதுவாக பெரிய சர்ச்சைகள் இன்றி இருக்கும். அவர்களின் முடிவுகள் வரையறுக்கப்பட்ட நீதிமன்ற ஆய்வுக்கு உட்பட்டவை. வரையறுக்கப்பட்ட விருப்புரிமை அதிகாரங்களும் மற்றும் தெளிவான அரசியலமைப்புச் சட்டக் கட்டமைப்பும், மன்னிப்பு வழங்கும் அதிகாரத்தைத் தன்னிச்சையாகப் பயன்படுத்துவதற்கான வாய்ப்பைக் குறைக்கின்றன.
சுருக்கமாக, அமெரிக்காவிலும் இந்தியாவிலும் மன்னிப்பு அதிகாரம் செயல்படும் விதத்தில் உள்ள வேறுபாடுகள், அமெரிக்காவில் உள்ள அதிபர் முறை மற்றும் இந்தியாவில் நடைமுறையில் உள்ள நாடாளுமன்ற முறை போன்ற வெவ்வேறு அரசாங்க அமைப்புகளிலிருந்து வருகின்றன.
Original Article: How the pardoning power of the Indian and US Presidents differs