ஆண்டு கல்வி நிலை அறிக்கை (ASER) என்றால் என்ன? -பிரியா குமாரி சுக்லா

 முக்கிய அம்சங்கள் :


1. செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட, ஆண்டு கல்வி நிலை அறிக்கை ((Annual Status of Education Report (ASER))) 2024-ன் படி, 20 ஆண்டுகளுக்கு முன்பு கணக்கெடுப்பு தொடங்கியதில் இருந்து, அரசுப் பள்ளிகளில் சேரும் 3-ம் வகுப்பு படிக்கும் குழந்தைகளுக்கான அடிப்படை வாசிப்பு நிலைகள் (basic reading levels) மிக உயர்ந்த நிலையை எட்டியுள்ளன என்பதைக் காட்டுகிறது.


2. அரசுப் பள்ளிகளில், 3-ம் வகுப்பு படிக்கும் குழந்தைகளில் 23.4% பேர் 2-ம் வகுப்பு பாடப்புத்தகத்தைப் படிக்க முடிகிறது. இது, 2022-ம் ஆண்டில் 16.3% ஆகவும், தொற்றுநோய்க்கு முன்பு 2018-ம் ஆண்டில் 20.9% ஆகவும் இருந்தது.


3. அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் ஒட்டுமொத்த வாசிப்பு நிலைகளும் (Overall reading levels) 2022-ம் ஆண்டில் 20.5%-ல் இருந்து 2024-ம் ஆண்டில் 27.1% ஆக உயர்ந்துள்ளது. இது, தொற்றுநோய்க்கு முந்தைய நிலையை 27.3% ஐ கிட்டத்தட்ட எட்டியுள்ளது.


4. அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் எண்கணித அளவுகள் (Arithmetic levels) மேம்பட்டுள்ளன. 2018-ம் ஆண்டில், 3ஆம் வகுப்பு குழந்தைகளில் 28.2% பேர் குறைந்தபட்சம் கழித்தல் (subtraction) முறையை செய்ய முடிந்தது. இது, 2024-ம் ஆண்டில் 33.7% ஆக உயர்ந்துள்ளது. அதாவது, 2022-ம் ஆண்டில் 25.9% சரிவிலிருந்து தீவிரமான அளவில் மீண்டுள்ளது.


5. ஜம்மு & காஷ்மீர் மற்றும் நாகாலாந்து தவிர, பெரும்பாலான மாநிலங்கள், 3-ம் வகுப்பு மாணவர்களின் கற்றல் நிலைகள் (learning levels) 2022 உடன் ஒப்பிடும்போது மீட்சியைக் (recover) காட்டியுள்ளன என்பதை அறிக்கை எடுத்துக்காட்டுகிறது. அதேநேரத்தில், தொற்றுநோய்க்குப் பிறகு குழந்தைகள் பள்ளிக்குத் திரும்பிய ஆண்டிலும், ஹரியானா, இமாச்சலப் பிரதேசம், உத்தரகண்ட், மகாராஷ்டிரா, ஒடிசா மற்றும் உத்தரபிரதேசம் போன்ற மாநிலங்கள் 2022 உடன் ஒப்பிடும்போது 2024-ம் ஆண்டில் வாசிப்பு அளவுகளில் (reading levels) 10 சதவீத புள்ளிகள் அதிகரிப்பைக் காட்டியுள்ளன.


6. மற்ற மாநிலங்களும் 2018 உடன் ஒப்பிடும்போது குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களைக் காட்டியுள்ளன. பீகாரில், 3-ம் வகுப்பு வாசிப்பு அளவுகள் கிட்டத்தட்ட 8 சதவீத புள்ளிகள் அதிகரித்து, 2024-ம் ஆண்டில் 20.1%-ஐ எட்டியுள்ளன. உத்தரகாண்டில், 3-ம் வகுப்பு வாசிப்பு அளவுகளில் கடுமையான உயர்வு ஏற்பட்டுள்ளது. இது, 2018-ம் ஆண்டில் 24.7% இலிருந்து 2024-ம் ஆண்டில் 35.6% ஆக உயர்ந்துள்ளது. 3-ம் வகுப்பு எண்கணிதத்திலும் பீகார் மாநிலம் முன்னேற்றங்களைக் கண்டது. இந்த சதவீதம் 2018-ம் ஆண்டில் 18%-லிருந்து 2024-ம் ஆண்டில் 28.2% ஆக உயர்ந்துள்ளது.


7. இந்தக் குழு அறிக்கையில், ஆச்சரியப்படத்தக்க வகையில் முன்னணியில் இருப்பது உத்தரபிரதேசத்தின் அரசுப் பள்ளிகள் ஆகும். இந்தப் பள்ளிகளில் வாசிப்பு அளவு 15 சதவீத புள்ளிகள் அதிகரித்துள்ளது. இது, 2018-ம் ஆண்டில், வாசிப்பு அளவு 12.3% ஆக இருந்தது. மேலும், அது 27.9% ஆக உயர்ந்துள்ளது. ஒட்டுமொத்தமாக, அரசு மற்றும் தனியார் பள்ளிகளைக் கருத்தில் கொண்டால், வாசிப்பு அளவு 2018-ம் ஆண்டில் 28.3%-லிருந்து 2024-ம் ஆண்டில் 34.4% ஆக உயர்ந்துள்ளது. மாநிலத்தின் அடிப்படை எண்கணித அளவுகளும் மேம்பட்டுள்ளன. 2018-ம் ஆண்டில், அவை 26.9% ஆக இருந்து, 2024-ம் ஆண்டில், அவை 40.7% ஆக உயர்ந்துள்ளன.


8. அனைத்து வயதினரிடையேயும் கற்றல் நிலைகள் (Learning levels) மேம்பட்டுள்ளன. இருப்பினும், மிகப்பெரிய முன்னேற்றங்கள் தொடக்க வகுப்புகளில் உள்ளன. ஏனெனில், மாநில அரசுகளும் ஒன்றிய கல்வி அமைச்சகமும் ஆரம்பக் கல்வியில் கவனம் செலுத்துகின்றன. அவர்களின் நிபுன் பாரத் மிஷன் (Nipun Bharat Mission) அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண்ணறிவை (foundational literacy and numeracy (FLN)) மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.


9. 2022-ம் ஆண்டில், 5ஆம் வகுப்பு மாணவர்களில் 42.8% பேர் 2ஆம் வகுப்பு பாடப்புத்தகத்தைப் படிக்கத் தெரிந்தனர். இது, 2024-ம் ஆண்டில் 48.7% ஆக அதிகரித்துள்ளது. இருப்பினும், இது 2018-ம் ஆண்டில் பதிவு செய்யப்பட்ட 50.4%-ஐ விட இன்னும் குறைவாகவே உள்ளது.


10. தொற்றுநோய்க்குப் பிறகு இந்தக் குழுவின் கணிதத் திறன்களும் மேம்பட்டுள்ளன. 2022-ம் ஆண்டில், 25.6% பேர் மட்டுமே தேவையான கற்றல் திறன்களைக் கொண்டிருந்தனர். இது, 2024-ம் ஆண்டில் 30.7% ஆக உயர்ந்தது. இது, தொற்றுநோய்க்கு முந்தைய அளவை விட 27.8% அதிகமாகும்.


உங்களுக்குத் தெரியுமா?


1. 2005-ம் ஆண்டு முதல், பிரதம் (Pratham) என்ற அரசு சாரா நிறுவனம் வருடாந்திர கல்வி நிலை அறிக்கையை (கிராமப்புறம்) வெளியிட்டு வருகிறது. இந்த அறிக்கை, பள்ளி குழந்தைகளிடையே அடிப்படை வாசிப்பு மற்றும் எண்கணித நிலைகள் (basic reading and arithmetic levels), பள்ளி வருகை மற்றும் பிற குறிகாட்டிகளை அளவிடுவதற்காக வெளிப்படுத்தியுள்ளது. இந்தத் தரவுகள் பல ஆண்டுகளாக கற்றலில் பரந்த போக்குகளைக் காட்டுகிறது.


2. 2024-ம் ஆண்டு கணக்கெடுப்பு 605 கிராமப்புற மாவட்டங்களில் 17,997 கிராமங்களில் 6,49,491 குழந்தைகளை சென்றடைந்தது. எல்.கே.ஜி, யு.கே.ஜி, அங்கன்வாடி அல்லது பிற நிறுவனங்களில் சேரும் முன் தொடக்க வயது (3 முதல் 5 வயது வரை) குழந்தைகளின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் காட்டியது. வாசிப்பு மற்றும் எண்கணிதத் திறன்களிலும் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் காணப்பட்டன. கோவிட்-19 தொற்றுநோயால் ஏற்பட்ட கற்றல் இழப்புகளுக்குப் பிறகு இது ஒரு நேர்மறையான அறிகுறியாகும். கூடுதலாக, பருவக் குழந்தைகளிடையே (15 மற்றும் 16 வயது) டிஜிட்டல் எழுத்தறிவை அளவிடுவதற்கான முதல் அதிக நேர, ஆண்டு கல்வி நிலை அறிக்கையின் (ASER) கணக்கெடுப்பு இதுவாகும்.


3. 2023-ம் ஆண்டு நடத்தப்பட்ட சிறியளவிலான Beyond Basics கணக்கெடுப்பைத் தொடர்ந்து சமீபத்திய கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இது, 605 கிராமப்புற மாவட்டங்களில் 6,49,491 குழந்தைகளை மதிப்பீடு செய்தது. இது, அடிப்படை வாசிப்பு நிலைகள் (basic reading levels) மற்றும் எண்கணிதத்தில் (arithmetic) கவனம் செலுத்தப்பட்டது. இந்தக் கணக்கெடுப்பு மூன்று வயது பிரிவுகளில் உள்ள குழந்தைகளுக்கு கவனம் செலுத்தியது. அவை, முன்-தொடக்க (வயது 3 முதல் 5 வரை), தொடக்க (வயது 6 முதல் 14 வரை) மற்றும் பருவக் குழந்தைகள் (வயது 15 முதல் 16 வரை) ஆகும்.


4. தனியார் பள்ளிகளில் இருந்து குழந்தைகள் வெளியேறியபோது பெருந்தொற்று காலத்தில் அதிகரித்த அரசுப் பள்ளி சேர்க்கையானது, தொற்றுநோய்க்கு முந்தைய நிலைகளுக்கு கிட்டத்தட்ட மீண்டும் திரும்பியுள்ளதாக அறிக்கை காட்டுகிறது. 2018-ம் ஆண்டில், 6-14 வயதுடையவர்களில் 65.6% பேர் அரசுப் பள்ளிகளில் சேர்ந்தனர். இது, 2022-ம் ஆண்டில் 72.9% ஆக உயர்ந்து, தற்போது 66.8% ஆகக் குறைந்துள்ளது. 6-14 வயதுடையவர்களின் ஒட்டுமொத்த சேர்க்கை விகிதம் 98.1% ஆகும். இது, 2022-ம் ஆண்டில் 98.4% ஆக இருந்தது.


5. தேசிய கல்விக் கொள்கை (National Education Policy (NEP)), 1-ம் வகுப்புக்கு முந்தைய அனைத்து குழந்தைகளுக்கும் ஆரம்பகால குழந்தைப் பருவ பராமரிப்பு மற்றும் கல்வியை வழங்குவதில் கவனம் செலுத்துகிறது. 2024-ம் ஆண்டில், 3 முதல் 5 வயது வரையிலான குழந்தைகளின் பாலர் பள்ளியில் (pre-school) சேரும் சதவீதம் 2018 மற்றும் 2022 உடன் ஒப்பிடும்போது அதிகரித்துள்ளது. 5 வயது குழந்தைகளிடையே மிகப்பெரிய அதிகரிப்பு ஏற்பட்டது. அவர்களின் சேர்க்கை 2018-ம் ஆண்டில் 58.5% -லிருந்து 2024-ம் ஆண்டில் 71.4% ஆக உயர்ந்துள்ளது.


6. முதன்முறையாக, ஆண்டு கல்வி நிலை அறிக்கை (ASER) டிஜிட்டல் கல்வியறிவு பற்றிய ஒரு பகுதியை உள்ளடக்கியது. இந்தப் பிரிவு 14-16 வயதுடையவர்களிடையே ஸ்மார்ட்போன்களை அணுகுதல், சொந்தமாக்குதல் மற்றும் பயன்படுத்துதல் மற்றும் அடிப்படை டிஜிட்டல் திறன்களைப் பற்றியும் ஆய்வு செய்தது. சிறுமிகளைவிட அதிகமாக சிறுவர்கள் ஸ்மார்ட்போனை எவ்வாறு பயன்படுத்துவது என்பது அறிந்திருப்பதாக அறிக்கை கண்டறிந்துள்ளது. 79.4% சிறுமிகளுடன் ஒப்பிடும்போது 85.5% சிறுவர்கள் இதைப் பற்றி அறிந்துள்ளனர்.




Original article:

Share: