'புலிகள் பாதுகாப்புத் திட்டம்' குறித்து... - ரோஷ்னி யாதவ்

 முக்கிய அம்சங்கள்:


— ஜூலை மாதம் 9-ஆம் தேதி நடைபெற்ற வனவிலங்குகளுக்கான தேசிய வாரியத்தின் நிலைக்குழு (Standing Committee of the National Board for Wild Life (SC-NBWL)) கூட்டத்தின் குறிப்புகளில் குறிப்பிட்டுள்ளபடி, ரயில்வே பாதையை விலங்குகள் பாதுகாப்பாகக் கடப்பதற்கான மேம்பாலங்கள் போன்ற வனவிலங்கு பாதுகாப்பு அமைப்புகள், முறையான அறிவியல் ஆய்வுகள் மற்றும் பொறியியல் வடிவமைப்புகளைப் பயன்படுத்தி மதிப்பாய்வு செய்யப்பட்டு இறுதி செய்யப்பட வேண்டும் என்ற நிபந்தனையுடன் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.


— அதிகாரப்பூர்வ ஆவணங்களின்படி, முன்மொழியப்பட்டுள்ள புதிய இரயில்பாதை, சாத்பூரா - மேல்ஃகாட் (Satpura–Melghat) வனப்பகுதியில் உள்ள இரு அறிவிக்கப்பட்ட புலிகள் வழித்தடங்கள் (Tiger corridors) மற்றும் சுற்றுசூழல் உணர்திறன் மண்டலம் (Eco-sensitive zone) வழியாக அமைக்கப்படவுள்ளது. இதில் சாத்பூரா புலிகள் காப்பகம் மத்தியப் பிரதேசத்திலும், மேல்ஃகாட் புலிகள் காப்பகம் மகாராஷ்டிராவிலும் அமைந்துள்ளன.


— புலிகள் வழித்தடங்கள் என்பவை புலிகள், சிறுத்தைகள், தாவர உண்ணி விலங்குகள் மற்றும் கரடிகள் போன்ற வனவிலங்குகள் பாதுகாப்பாக ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குச் செல்ல உதவும் வழித்தடங்களாகும். இவை விலங்குகள் தங்களின் புதிய வாழ்விடங்களுக்கு இடம்பெயர்வதற்கும், வனவிலங்கினங்களின் மரபணுப் பன்முகத்தன்மையை பராமரிப்பதற்கும் பெரிதும் துணைபுரிகின்றன.


— பரிந்துரைக்கப்பட்ட திட்டப்பாதையைப் பார்வையிட்டு ஆய்வு செய்த ஒரு குழு, தேசிய வனவிலங்கு வாரியத்தின் தலைமைக் குழுவிடம் (SC-NBWL) அறிக்கை சமர்ப்பித்துள்ளது. அந்த அறிக்கையில், குறிப்பிட்ட அந்த வனப்பகுதியும் வனவிலங்குப் பாதைகளும் சாத்பூரா - பெஞ்ச் - மேல்ஃகாட் (Satpura-Pench-Melghat) ஆகிய வனப்பகுதிகளை இணைக்கும் அமைப்பிற்கு மிகவும் அத்தியாவசியமானவை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, இத்திட்டத்தினால் தற்போது ஏற்படக்கூடிய மற்றும் எதிர்காலத்தில் வரக்கூடிய பாதிப்புகள் ஆகிய இரண்டையுமே கருத்தில் கொண்டு ஆய்வு செய்யப்பட வேண்டும்.


— மத்திய ரயில்வேயினால் (மும்பை தலைமையகம்) திட்டமிடப்பட்டுள்ள 290 கி.மீ தொலைவுள்ள 'இட்டார்சி-நாக்பூர்' (Itarsi–Nagpur) அதிவேக ரயில் பாதையில், மூன்றாவது மற்றும் நான்காவது இரயில்பாதைகளை அமைக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாகவே ஜூஜார்பூர் (பெதுல் மாவட்டம்) மற்றும் சிச்சோண்டா (நர்மதாபுரம் மாவட்டம்) இடையே உள்ள இந்த 160.6 கி.மீ நீள இரயில்பாதை அமைகிறது. இந்த பாதை அடர்ந்த வனப்பகுதிகள், இரு அதிகாரப்பூர்வ புலிகள் வழித்தடங்கள் மற்றும் சுற்றுச்சூழல் உணர்திறன் பகுதி வழியாக அமையவுள்ளது.


— இந்தத் திட்டத்திற்கு மொத்தம் 206.09 ஹெக்டேர் நிலம் தேவைப்படுகிறது. இதில் 74.69 ஹெக்டேர் வனப்பகுதி நிலமும், 131.4 ஹெக்டேர் வனப்பகுதி அல்லாத நிலமும் அடங்கும். இந்த நிலங்கள் அனைத்தும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட புலிகள் வழித்தடப் பாதைக்குள் அமைந்துள்ளன. 


உங்களுக்குத் தெரியுமா?


— புலிகள் வழித்தடங்கள் என்பவை புலிகளின் வாழ்விடங்களை இணைக்கும் மிக முக்கியமான வனவிலங்குப் பாதைகளாகும். இவை விலங்குகளின் நடமாட்டம், மரபணுப் பரிமாற்றம் மற்றும் நீண்டகால வாழ்வியலை உறுதிசெய்யவும் உதவுகின்றன.


— 1972-ஆம் ஆண்டின் வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் (Wildlife Protection Act (1972)), புலிகள் காப்பகங்கள் அல்லது புலிகள் நடமாட்டப் பாதைகளுக்குள்ளும், அவற்றைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் மேற்கொள்ளப்படும் எந்தவொரு வளர்ச்சித் திட்டமாக இருந்தாலும், அதற்கு தேசிய வனவிலங்கு வாரியத்தின் நிலைக்குழுவிடமிருந்து (SC-NBWL) சட்டப்பூர்வ அனுமதியைப் பெறுவது கட்டாயமாகும்.


— இந்தியாவில் உள்ள புலிகள் காப்பகம் என்பது, புலிகளையும் அவற்றின் இயற்கை வாழ்விடங்களையும் பாதுகாப்பதற்காக புலிகள் பாதுகாப்புத் திட்டத்தின்கீழ் (Project Tiger) உருவாக்கப்பட்ட ஒரு பாதுகாக்கப்பட்ட பகுதியாகும். இக்காப்பகங்கள் புலிகளின் எண்ணிக்கையைப் பாதுகாக்கவும், பல்லுயிர் பெருக்கத்தைப் பேணவும், இயற்கைச் சமநிலையைப் பராமரிக்கவும் பெரிதும் உதவுகின்றன.


புலிகள் பற்றிய முக்கியத் தகவல்கள் 


  • அறிவியல் பெயர் : பாந்தெரா டைகிரிஸ் (Panthera tigris)


  • வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம், 1972-ன்கீழ் உள்ள நிலை: அட்டவணை-I  (மிக உயர்ந்த அளவிலான சட்டப் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது)


  • பன்னாட்டு இயற்கை பாதுகாப்புச் சங்கத்தின் (IUCN) சிவப்புப் பட்டியல் நிலை: அருகிவரும் இனம் / அழியும் அபாயத்தில் உள்ள இனம் (Endangered)


  • அழிந்துவரும் காட்டு விலங்குகள் மற்றும் தாவர இனங்களின் சர்வதேச வர்த்தகம் தொடர்பான ஒப்பந்த நிலை(Convention on International Trade in Endangered Species of Wild Fauna and Flora (CITES)) : இணைப்பு I (Appendix I) (சர்வதேச வர்த்தகத்திற்கு முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது)


  • வாழிடங்கள்: வெப்பமண்டல மழைக்காடுகள், பசுமைமாறாக் காடுகள், மிதவெப்பமண்டலக் காடுகள், சதுப்புநிலக் காடுகள், புல்வெளிகள் மற்றும் சவன்னா புல்வெளிப் பகுதிகள்.


  • இந்தியாவில் புலிகளின் முக்கிய வாழிட நிலப்பரப்புகள்: ஷிவாலிக் - கங்கைச் சமவெளி, மத்திய இந்தியா மற்றும் கிழக்குத் தொடர்ச்சி மலைகள், மேற்குத் தொடர்ச்சி மலைகள், வடகிழக்கு குன்றுகள் மற்றும் பிரம்மபுத்திரா வண்டல் சமவெளிகள், சுந்தரவனப் பகுதி

Original Link : about the ‘Project Tiger’? -Roshni Yadav

Share: