பிறந்த முதல் ஆறு மாதங்களுக்குத் தாய்ப்பால் மட்டுமே கொடுக்கப்படும் குழந்தைகளின் விகிதம், NFHS-4-ல் 54.9%-லிருந்து NFHS-5-ல் 63.7%-ஆக உயர்ந்ததுள்ளது. இருப்பினும், NFHS-6-ல் அது மீண்டும் 55.8%-ஆகக் குறைந்தது. இந்த மாற்றம், வெறும் மூன்றாண்டுகளிலேயே நம்மை ஏறக்குறைய ஒரு பத்தாண்டு காலத்திற்கு முந்தைய நிலைக்கு மீண்டும் கொண்டு வந்துள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவில் தாய்மார்களுக்கான சுகாதாரக் குறியீடுகள் (Maternal healthcare indicators) தொடர்ந்து முன்னேற்றம் கண்டுள்ளன. மருத்துவமனைகளில் பிரசவம் செய்துகொள்ளும் பெண்களின் சதவீதம் அதிகரித்தது மட்டுமல்லாமல், பிரசவத்திற்குப் பிறகு இரண்டு நாட்களுக்குள் பரிசோதனை செய்துகொள்ளும் பெண்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இருப்பினும், அறுவை சிகிச்சை (C-section) மூலம் நடைபெறும் பிரசவங்களின் விகிதமும் உயர்ந்துள்ளது. சமீபத்திய தேசிய குடும்ப சுகாதாரக் கணக்கெடுப்பிலும் (NFHS-6, 2023–24) இந்த நிலை தொடர்ந்தது. இதில் மருத்துவமனைகளில் நடைபெறும் பிரசவங்கள் 90.6%-ஐயும், பிரசவத்திற்குப் பிந்தைய பராமரிப்பு 82.8%-ஐயும் எட்டியுள்ளன.
ஆனால், தாய்ப்பால் மட்டுமே கொடுக்கும் விகிதம் இந்தப்பாதையைப் பின்பற்றவில்லை. பிறந்த முதல் ஆறு மாதங்களுக்குத் தாய்ப்பால் மட்டுமே கொடுக்கப்படும் குழந்தைகளின் விகிதம், NFHS-4-ல் 54.9%-லிருந்து NFHS-5-ல் 63.7%-ஆக உயர்ந்தது. ஆனால், NFHS-6-ல் மீண்டும் 55.8%-ஆகக் குறைந்தது. இந்த மாற்றம், வெறும் மூன்றாண்டுகளிலேயே நம்மை ஏறக்குறைய ஒரு பத்தாண்டு காலத்திற்கு முந்தைய நிலைக்கு மீண்டும் கொண்டு வந்துள்ளது.
மருத்துவமனைகளில் நடைபெறும் பிரசவங்களில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்திற்கும், தாய்ப்பால் மட்டுமே கொடுக்கும் விகிதத்தில் ஏற்பட்டுள்ள சரிவுக்கும் இடையே உள்ள வெளிப்படையான முரண்பாட்டை ஆராய மாநில அளவிலான NFHS தரவுகள் பகுப்பாய்வு செய்யப்பட்டன.
கணக்கெடுப்புப் பிழைக்கான வாய்ப்பை நிராகரித்தல்
இதற்கான முதல் சாத்தியமான காரணமாகக் கருதப்பட்டது கணக்கெடுப்பு முறையே ஆகும். பெருந்தொற்று காரணமாக NFHS-5-ன் கணக்கெடுப்புப் பணிகள் பாதிக்கப்பட்டன. முதல் கட்டத்தில் (நிலை-1) உள்ள 22 மாநிலங்களில் கணக்கெடுப்புப் பணிகள் கோவிட்-19 பரவத் தொடங்குவதற்கு முன்பே நிறைவடைந்தன. ஆனால், இரண்டாம் கட்டத்தில் (Phase-II) உள்ள 14 மாநிலங்களில், மார்ச் 2020-ல் அமல்படுத்தப்பட்ட நாடு தழுவிய பொது முடக்கத்தால் (lockdown) கணக்கெடுப்புப் பணிகள் தடைபட்டு, டிசம்பர் மாதத்தில்தான் மீண்டும் தொடங்கியது. கணக்கெடுப்பு நடத்தப்பட்ட விதத்தால் NFHS-5-ல் தாய்ப்பால் ஊட்டும் விகிதம் செயற்கையாக அதிகமாகக் காட்டப்பட்டிருந்தால், அந்த ஒரு காரணமே பிற்காலத்தில் ஏற்பட்ட 'சரிவின்' ஒரு பகுதியை விளக்கியிருக்கக்கூடும்.
இருப்பினும், தரவுகள் இந்தக் கருத்தை உறுதிப்படுத்தவில்லை. NFHS-4 மற்றும் NFHS-5 ஆகிய ஆய்வுகளுக்கு இடைப்பட்ட காலத்தில், பெருந்தொற்றால் பாதிப்புக்குள்ளான இரண்டாம் கட்ட (Phase-II) மாநிலங்களில் தாய்ப்பால் ஊட்டுதல் விகிதம் (சராசரியாக 10.5 சதவீதப் புள்ளிகள்) முதல் கட்ட (Phase-I) மாநிலங்களை (1.6 புள்ளிகள் உயர்வு) விட அதிகமாகவே மேம்பட்டிருந்தது. இது, களப்பணியின் போது ஏற்பட்ட குறைபாடுகளே இதற்குக் காரணம் என்ற வாதம் முன்வைக்கும் கணிப்புக்கு முற்றிலும் முரணானதாகும். இதில் ஏதேனும் குறைபாடுகள் ஏற்பட்டிருந்தால், அவை NFHS-5 ஆய்வுக்குப் பின்னரே நிகழ்ந்தனவே தவிர, அந்த கணக்கெடுப்பின் காரணமாக நிகழவில்லை.
மாநிலங்களில் என்ன நடக்கிறது?
நாடு முழுவதும் ஒரே சீரான சரிவு ஏற்படவில்லை என்பதையும், மாநிலத்திற்கு மாநிலம் இதில் மாறுபாடுகள் உள்ளன என்பதையும் தரவுகள் காட்டுகின்றன.
NFHS-5 முதல் NFHS-6 வரை மிகப்பெரிய மாற்றங்கள் (சதவீதப் புள்ளிகள்)
உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், இராஜஸ்தான் மற்றும் ஹரியானா ஆகிய மாநிலங்களில் மிகப்பெரிய சரிவுகள் ஏற்பட்டன. அந்த மாநிலங்களின் எல்லைகளைத் தாண்டியும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைகிறது. அவை அனைத்தும் சேர்ந்து இந்தியாவில் நிகழும் மொத்தப் பிறப்புகளில் பெரும் பங்கைக் கொண்டுள்ளன. எனவே, இந்த மாநிலங்களில் ஏற்பட்ட சரிவு மட்டுமே தேசிய அளவிலான தாய்ப்பால் கொடுக்கும் விகிதத்தைக் குறைப்பதற்குப் போதுமானதாக இருந்தது.
கிடைக்கப்பெற்ற தரவுகள் ஒரு தெளிவான மற்றும் தற்செயலற்ற (non-random) போக்கை வெளிப்படுத்துகின்றன. NFHS-4 மற்றும் NFHS-5 ஆகிய ஆய்வுக் காலகட்டங்களுக்கு இடையே 'முழுமையான தாய்ப்பால் ஊட்டுதலில்' (exclusive breastfeeding) மிகப்பெரிய முன்னேற்றத்தைப் பதிவு செய்த மாநிலங்கள், NFHS-5 மற்றும் NFHS-6 காலகட்டங்களுக்கு இடையே மிகப்பெரிய சரிவைச் சந்தித்தன. இந்தப் போக்கு, முந்தைய முன்னேற்றங்கள் வலுவானதாகவோ அல்லது நீண்டகாலம் நீடிக்கக்கூடியதாகவோ இருக்கவில்லை என்பதைக் காட்டுகிறது.
ஹரியானா, உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், இராஜஸ்தான் மற்றும் டெல்லி ஆகியவை இந்தப் போக்கை வெளிப்படையாகப் பின்பற்றுகின்றன. முந்தைய முன்னேற்றங்கள் மிகக் கடுமையான சரிவுகளால் பெருமளவில் ஈடுசெய்யப்பட்டுள்ளன. முன்னேற்றங்களுக்கும் சரிவுகளுக்கும் இடையிலான எதிர்மறைத் தொடர்பு, தரவுகள் கிடைக்கப்பெற்ற அனைத்து 31 மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்களிலும் புள்ளிவிவரப்படி குறிப்பிடத்தக்கதாக உள்ளது. இருப்பினும் சில விதிவிலக்குகளும் உள்ளன. உதாரணமாக, கேரளா, புதுச்சேரி மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்கள் இரண்டு காலகட்டங்களிலும் முன்னேற்றம் கண்டன. அதேசமயம், ஆந்திரப் பிரதேசம் மற்றும் ஜம்மு & காஷ்மீர் ஆரம்பத்தில் சரிந்து பின்னர் மீண்டன. சிக்கிம் சரிவிலிருந்து மீண்டு, தேசிய அளவில் மிகப்பெரிய முன்னேற்றம் கண்ட மாநிலமாக மாறியது. தற்போதைய தரவுகள் இந்த விதிவிலக்குகளை விளக்கவில்லை.
அடுத்தகட்ட நடவடிக்கைகள்
கிடைக்கப்பெற்ற தரவுகளைக் கொண்டு நேரடியான 'காரண-காரியத் தொடர்பை' (cause-and-effect relationship) உறுதிப்படுத்த முடியாது. இருப்பினும், இவை மேலும் ஆராயப்பட வேண்டிய காரணிகளைச் சுட்டிக்காட்டுகின்றன. இந்தக் காரணிகளை ஆய்வு செய்வது நாடு முழுவதும் தாய்ப்பால் ஊட்டும் விகிதங்களை மேம்படுத்த உதவும்.
பொது ஊரடங்குகள் நீக்கப்பட்ட பிறகு, சுகாதார சேவைக்கான அணுகல் மீட்டெடுக்கப்பட்ட வேகத்திற்கு ஏற்ப அதற்கான துணை சேவைகள் வழங்கப்படாமல் இருந்திருக்கலாம். செய்தித்தாள் அறிக்கைகளிலிருந்து கிடைக்கும் அனுபவச் சான்றுகள், மருத்துவமனைகள் மீண்டும் திறக்கப்பட்டதையும், பிரசவங்களின் எண்ணிக்கை பெருந்தொற்றுக்கு முந்தைய நிலைக்குத் திரும்பியதையும் காட்டுகின்றன. இருப்பினும், தாய்ப்பால் குறித்த ஆலோசனை, ஆரம்பகால தோல்-தொடர்பு மற்றும் பிரசவத்திற்குப் பிந்தைய தாய்ப்பால் ஆதரவு ஆகியவை குறைவாகவே இருந்திருக்கலாம். இது, பெருந்தொற்றின்போது இந்திய சுகாதார நிலையங்களில் தாய்-குழந்தை பிரிப்பு மற்றும் தாய்ப்பால் ஆதரவிற்கான பணியாளர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டது குறித்த முந்தைய அறிக்கைகளுடன் ஒத்துப்போகிறது.
பொருளாதாரம் மீண்டும் திறக்கப்பட்டதும் மற்றொரு காரணமாக இருக்கலாம். முறைசாரா துறையில் பணிபுரியும் பெண்களும், மகப்பேறு உதவித்தொகை இல்லாதவர்களும், முன்கூட்டியே ஊதியம் பெறும் வேலைக்குத் திரும்ப முடியும். இதன் விளைவாக, பிரத்தியேகமாக தாய்ப்பால் கொடுக்கும் காலம் குறைந்திருக்கலாம்.
NFHS-5 மற்றும் NFHS-6-க்கு இடையில், தேசிய அளவில் அறுவை சிகிச்சை (C-section) பிரசவங்கள் 17.2%-இலிருந்து 27.2%-ஆகப் பெருமளவில் அதிகரித்ததும் ஒரு காரணியாக இருக்கலாம். மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பிய பிறகு வலுவான ஆதரவு வழங்கப்படாத பட்சத்தில், அறுவை சிகிச்சை (C-section) பிரசவங்கள் தாய்ப்பால் கொடுப்பதை ஆரம்பிப்பதில் தாமதத்தை ஏற்படுத்துவதாக முந்தைய ஆய்வுகள் சுட்டிக்காட்டியுள்ளன.
புள்ளிவிவரங்களால் உணர்த்தாத உண்மைகள்
இந்தக் கணக்கெடுப்பு தனிநபர் அளவிலான தரவுகளுக்குப் பதிலாக, மாநில வாரியாகத் தொகுக்கப்பட்டு வெளியிடப்பட்ட குறியீடுகளை அடிப்படையாகக் கொண்டிருப்பதால், இதற்கான காரணங்களில் எது உண்மையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்றோ அல்லது சில மாநிலங்கள் மட்டும் ஏன் இந்த பொதுவான போக்குக்கு மாறாகச் செயல்பட்டன என்றோ உறுதியாகக் கூற முடியவில்லை. இதை தெரிந்துகொள்ள, வரும் மாதங்களில் நடக்கவிருக்கும் கணக்கெடுப்புகளில் தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படும் NFHS-6-ன் தனிநபர் அளவிலான (unit-level) தரவுகள் தேவைப்படும்.
ஆனால், தேசிய சராசரி அளவீடுகளைக் கொண்டு மட்டும் இந்தியாவில் தாய்ப்பால் கொடுக்கும் நடைமுறையை முழுமையாகப் புரிந்துகொள்ள முடியாது என்பதை இந்தப் புள்ளிவிவரங்கள் தெளிவாக உணர்த்துகின்றன. ஒரு நாடு தாய்மார்களை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பிரசவம் பார்ப்பதில் சிறந்து விளங்கலாம். அதே சமயம், அவர்கள் பச்சிளம் குழந்தையுடன் வீடு திரும்பிய பிறகு அவர்களுக்குத் தேவையான ஆதரவை வழங்குவதில் பின்தங்கியிருக்கலாம். இந்தியாவில் உள்ள கணிசமான எண்ணிக்கையிலான தாய்மார்களின் விஷயத்தில் இதுதான் சரியாக நடந்திருப்பதாகத் தெரிகிறது.
சோனாலி மிஸ்ரா ஐஐடி பம்பாயில் முனைவர் பட்ட மாணவர். கரண் பப்பர் எக்ஸ்எல்ஆர்ஐ ஜாம்ஷெட்பூரில் பொருளியல் உதவிப் பேராசிரியர் ஆவர்.
Original Link : Why breastfeeding rates have dropped in India: insights from NFHS-6. -Sonali Mishra, Karan Babbar