சுதந்திரம் (Liberty) மற்றும் சமத்துவம் (equality) ஆகியவை நீதிமன்றங்களால் நிலைநாட்டப்படக்கூடியவை மற்றும் சட்டப்படி அமல்படுத்தப்படக்கூடியவை ஆகும். ஆனால், சகோதரத்துவம் (Fraternity) என்பது ஒரு மாறுபட்ட வகையைச் சார்ந்தது. சுதந்திரம் (Liberty) மற்றும் சமத்துவம் (equality) ஆகியவை குடிமக்களின் அடிப்படை உரிமைகளாக இருந்தால், சகோதரத்துவம் என்பது நாட்டின் அடிப்படை உரிமையாகும்.
அரசியலமைப்பின் முகப்புரையில் இடம்பெற்றுள்ள நீதி (justice), சுதந்திரம் (Liberty) மற்றும் சமத்துவம் (equality) மற்றும் சகோதரத்துவம் (Fraternity) ஆகியவற்றை ஒவ்வொரு பள்ளி மாணவனாலும் ஒப்புவிக்க முடியும். இதில் முதல் மூன்று அம்சங்களும் நீதிமன்றங்கள், அரசியல் மற்றும் கல்வியாளர்கள் மத்தியில் விவாதங்களை உருவாக்கியுள்ளன. ஆனால் நான்காவதாக உள்ள சகோதரத்துவம் மிகக் குறைந்த அளவிலேயே கவனத்தைப் பெற்றுள்ளது. இருப்பினும், அரசியலமைப்பு நெறிமுறைகள் அனைத்திலும் சகோதரத்துவம் மிக முக்கியமானதாக இருக்கலாம். ஏனெனில், சட்டத்தின் மூலம் மட்டுமே உருவாக்க முடியாத ஒரே மதிப்பு இந்த சகோதரத்துவம்தான்.
இந்த அலட்சியம் ஆச்சரியமளிக்கிறது. ஏனெனில், அரசியலமைப்பு சகோதரத்துவத்தை ஒரு இரண்டாம் பட்ச விஷயமாகக் கருதவில்லை. நீதி, சுதந்திரம் மற்றும் சமத்துவம் ஆகியவற்றுடன் ஒரே வாக்கியத்தில் இடம்பெற்றுள்ள இது, அவற்றுக்கு இணையான அரசியலமைப்பு முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது. அரசியலமைப்பை உருவாக்கியவர்கள் இதனைத் திட்டமிட்டே அங்கு இடம்பெறச் செய்தனர். கடந்த 75 ஆண்டுகளாக நாம் ஏன் இதனைப் பெருமளவில் புறக்கணித்து வந்துள்ளோம் என்பதும், அந்தப் புறக்கணிப்பு நமக்கு எத்தகைய இழப்பை ஏற்படுத்தியுள்ளது என்பதுமே இப்போதுள்ள கேள்வியாக உள்ளது.
இதற்கான விடை, அரசியலமைப்பு நிர்ணயசபையின் (Constituent Assembly) விவாதங்களின்போது தெளிவாகக் குறிப்பிடப்பட்ட, ஆனால் காலப்போக்கில் அரசியலமைப்பு சார்ந்த விவாதங்களிலிருந்து மறைந்துபோன ஒரு வேறுபாட்டிலிருந்து தொடங்குகிறது. சுதந்திரம் மற்றும் சமத்துவம் ஆகியவை குடிமகனுக்கும் அரசுக்கும் இடையிலான உறவை வரையறுக்கின்றன. சகோதரத்துவம் என்பது குடிமக்களுக்கு இடையிலான உறவை வரையறுக்கிறது. அந்த வேறுபாடே மிக முக்கியமானதாக அமைகிறது. அரசு சுதந்திரத்தையோ அல்லது சமத்துவத்தையோ மீறினால், நீதிமன்றங்கள் தலையிட முடியும். ஆனால், குடிமக்கள் ஒருவரையொருவர் சக குடிமக்களாகக் கருதாத நிலை ஏற்படும்போது என்ன தீர்வு உள்ளது? கருத்து வேறுபாடுகள் விரோதமாகவும், மாறுபட்ட தன்மைகள் சந்தேகமாகவும் மாறும்போது, சகோதரத்துவம் மறையத் தொடங்குகிறது. பி. ஆர். அம்பேத்கர் இதனை மிகத் தெளிவாகப் புரிந்துகொண்டிருந்தார். 1949 நவம்பர் 25 அன்று அரசியலமைப்பு நிர்ணய சபையில் ஆற்றிய தனது இறுதி உரையில் அவர் இவ்வாறு எச்சரித்தார். இதில், "சகோதரத்துவம் இல்லாவிட்டால், சமத்துவமும் சுதந்திரமும் வெறும் ஆழமற்ற வண்ணப்பூச்சுப் பூசப்பட்ட மேலோட்டமான தன்மையையே கொண்டிருக்கும்" (Without fraternity, equality and liberty will be no deeper than coats of paint) என்று குறிப்பிட்டிருந்தார். இந்தியச் சமூகத்தைப் பற்றிய அவரது வெளிப்படையான மதிப்பீட்டிலிருந்தே அந்த எச்சரிக்கை உருவானது. "ஆயிரக்கணக்கான சாதிப் பிரிவுகளாகப் பிளவுபட்ட மக்கள் எவ்வாறு ஒரு நாடாக இருக்க முடியும்?" என்று அவர் கேள்வி எழுப்பினார். 'தேசிய உணர்வு' என்பது இயல்பாகக் கிடைப்பதல்ல, அது ஒரு சாதனை ஆகும். சகோதரத்துவம் என்பது அதற்கான நிபந்தனையாகவும் அதே சமயம் அதற்கான சான்றாகவும் அமைகிறது என்பதை அவர் நமக்கு நினைவூட்டினார். அரசியலமைப்பின் சகோதரத்துவம் சார்ந்த அக்கறை முகப்புரையுடன் முடிந்துவிடவில்லை. பிரிவு 51A(e)-ன் படி, மதம், மொழி மற்றும் பிராந்திய வேறுபாடுகளைக் கடந்து நல்லிணக்கத்தையும் பொதுவான சகோதரத்துவ உணர்வையும் வளர்ப்பது ஒவ்வொரு குடிமகனின் அடிப்படை கடமையாகும்.
எழுபத்தைந்து ஆண்டுகளுக்குப் பிறகும், அரசியலமைப்பு உருவாக்கப்பட்ட காலத்தில் இருந்த கவலைகள் இன்னும் குறையவில்லை. தொழில்நுட்பரீதியாக நாம் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இணைந்திருந்தாலும், சமூகரீதியாக நாம் முன்னெப்போதையும்விட அதிகமாகப் பிளவுபட்டுள்ளோம். பொது விவாதங்கள் உரத்ததாகவும், கடுமையாகவும், மேலும் விரோதப் போக்குடனும் மாறியுள்ளன. அதே நேரத்தில், பரஸ்பர புரிதல் பலவீனமடைந்துள்ளது. அரசியல், மதம் அல்லது இணையம் என எதுவாக இருந்தாலும், வெறுப்புணர்வு சார்ந்த உரையாடல்களால் ஏற்படும் மிகப்பெரிய தீங்கு, அது மற்றவர்களைப் புண்படுத்துவது மட்டுமல்ல. ஜனநாயக அமைப்புகள் புண்படுத்தும் கருத்துக்களைத் தாண்டி நிலைத்திருக்கக்கூடியவை. ஆனால், நம்பிக்கையின் சிதைவுதான் இதில் உள்ள ஆழமான தீங்காகும்.
நம்பிக்கை என்பது ஒரு செயல்படும் சமூகத்தின் கண்ணுக்குப் புலப்படாத உள்கட்டமைப்பு ஆகும். அந்நியர்கள் ஒருவருக்கொருவர் நல்லெண்ணத்துடன் பழக முடியும் என்ற நம்பிக்கையின் அனுமானமாகப்ப் பார்க்கப்படுகிறது. அந்த அனுமானம் சிதைந்துவிடும்போது, எந்தச் சட்டத்தாலும் அதை முழுமையாக மீட்டெடுக்க முடியாது. பொருளாதாரம் நம்பிக்கையைச் சார்ந்திருப்பதுடன், ஜனநாயகமும் நம்பிக்கையைச் சார்ந்தே இருக்கிறது.
சுதந்திரம் (Liberty) மற்றும் சமத்துவம் (equality) ஆகியவற்றை நீதிமன்றத்தின் மூலம் நிலைநாட்டப்படக்கூடிய மற்றும் சட்டப்படி அமல்படுத்தப்படக்கூடிய உரிமைகளாகும். ஆனால், சகோதரத்துவம் என்பது ஒரு மாறுபட்ட வகையைச் சார்ந்தது. சுதந்திரம் மற்றும் சமத்துவம் ஆகியவை குடிமக்களின் அடிப்படை உரிமைகளாக இருந்தால், சகோதரத்துவம் என்பது நாட்டின் அடிப்படை உரிமையாகும். எந்தவொரு நீதிமன்றத்தாலும் பரஸ்பர மரியாதையை உருவாக்க முடியாது, எந்தவொரு சட்டத்தாலும் பொதுவான பிணைப்பு உணர்வை ஏற்படுத்த முடியாது, எந்தவொரு அரசுத் திட்டத்தாலும் நம்பிக்கையைச் சட்டத்தின் மூலம் உருவாக்க முடியாது. இருப்பினும், சகோதரத்துவம் என்பது சட்டம், அரசு மற்றும் நீதிமன்றங்களின் எல்லைக்கு அப்பாற்பட்டது என்றும், இதில் அவை வெறும் செயலற்ற பார்வையாளர்களாக மட்டுமே இருக்கின்றன என்றும் முடிவு செய்வது தவறாகும்.
சமூக நல்லிணக்கத்தைப் பாதுகாப்பதற்காகவே அரசியலமைப்புச் சட்டமும் குற்றவியல் சட்டங்களும் வலுவான கட்டமைப்பைக் கொண்டுள்ளன. சட்டத்தின்முன் அனைவரும் சமம் என்பதை உறுதியளிப்பது பிரிவு 14 ஆகும். பாகுபாட்டிலிருந்து குடிமக்களைப் பாதுகாப்பதோடு, நம்பிக்கை மற்றும் வழிபாட்டுச் சுதந்திரத்தையும் பிரிவுகள் 15 மற்றும் 25 உறுதி செய்கின்றன. நல்லிணக்கத்தையும் பொதுவான சகோதரத்துவத்தையும் மேம்படுத்துவதற்கான கடமையை பிரிவு 51A(e) விதிக்கிறது. குற்றவியல் சட்டங்கள் இதைத் தாண்டி மேலும் பல நடவடிக்கைகளை எடுக்கின்றன. குடிமை அமைதியைப் பேணவும், வகுப்புவாதப் பகையைத் தடுக்கவும் இந்தியத் தண்டனைச் சட்டத்தின் (IPC) பிரிவுகள் 153A, 153B, 295A மற்றும் 505 ஆகியவை இயற்றப்பட்டுள்ளன. அத்துடன் வழிபாட்டுத் தலங்களைப் பாதுகாப்பதற்கான விதிகளும் இதற்காகவே உருவாக்கப்பட்டுள்ளன.
இந்தச் சட்ட ஏற்பாடுகள் சகோதரத்துவத்தை உருவாக்காமல் இருக்கலாம்; ஆனால், அது திட்டமிட்டு அழிக்கப்படுவதைத் தடுப்பதற்காகவே இவை உள்ளன. எனவே, சட்டப்பூர்வமான பாதுகாப்புகள் இல்லாதது இங்குள்ள சவால் அல்ல. மாறாக, அவை சீராக அமல்படுத்தப்படாததே உண்மையான சவாலாகும். மக்கள் ஒருவருக்கொருவர் பாசம் கொள்ளுமாறு நீதிமன்றங்களால் கட்டாயப்படுத்த முடியாது. இருப்பினும், வெறுப்புணர்வு, மிரட்டல் மற்றும் சமமான குடியுரிமை மீதான தாக்குதல்கள் ஆகியவற்றிற்கு எதிராக நீதிமன்றங்களால் நடவடிக்கை எடுக்க முடியும். சட்டத்தால் சகோதரத்துவத்தை உருவாக்க முடியாது, ஆனால் சகோதரத்துவம் அழிக்கப்படுவதைத் தடுக்கவும் வேண்டும்.
சகோதரத்துவத்தைப் புறக்கணித்த கடந்த 75 ஆண்டுகளில் என்ன விளைவுகள் ஏற்பட்டுள்ளன என்று கேட்பது அவசியமானது. அரசின் சொந்தத் தரவுகள் நமக்கு என்ன சொல்கின்றன என்பதைச் சிந்தித்துப் பாருங்கள். நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட தகவல்களின்படி, கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக ஒவ்வொரு ஆண்டும் சுமார் 2 லட்சம் இந்தியர்கள் தங்கள் குடியுரிமையைக் கைவிட்டு வருகின்றனர். கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் இந்த எண்ணிக்கை கிட்டத்தட்ட 9 லட்சத்தை எட்டியுள்ளது. வெளியேறுபவர்களில் பலர் வெற்றிகரமான தொழில்முனைவோர்கள் மற்றும் பல்வேறு துறைகளைச் சார்ந்த நிபுணர்கள் ஆவர். அவர்களின் முடிவுகளுக்குப் பல காரணிகள் இருந்தாலும், இந்த நிகழ்வின் அளவு ஒரு நியாயமான கேள்வியை எழுப்புகிறது. இத்தகைய முடிவுகளில் சமூகச் சூழலும் குடிமை நம்பிக்கையும் எத்தகைய பங்கை வகிக்கின்றன?
நீண்டகால சமூக மோதல்கள், செய்திகளில் அவை இடம்பெறுவது நின்ற பிறகும்கூட, பொருளாதாரச் சேதத்தை ஏற்படுத்துகின்றன என்பதை வரலாறு காட்டுகிறது. இந்தியா இதை ஏற்கனவே அனுபவித்துள்ளது. 1980-களின் மத்தியில், நாட்டின் மிக உயர்ந்த தனிநபர் வருமானம் கொண்ட மிகவும் செழிப்பான மாநிலமாக பஞ்சாப் திகழ்ந்தது. ஆனால், அதைத் தொடர்ந்து ஏற்பட்ட ஒரு பத்தாண்டுகால தீவிரவாதமும் வகுப்புவாத மோதல்களும் அங்குள்ள முதலீட்டுச் சூழலைச் சீர்குலைத்தன. தனிநபர் வருமான வரிசையில் பஞ்சாப் முதலிடத்திலிருந்து பின்தங்கியது. 2014-15 மற்றும் 2022-23 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில், 21 முக்கிய மாநிலங்களில் பொருளாதார வளர்ச்சியில் அது 18-வது இடத்தைப் பிடித்தது. இதனால் ஏற்பட்ட பாதிப்பு பொருளாதாரரீதியானது மட்டுமல்ல, நச்சுத்தன்மை வாய்ந்த சூழல் சீராக பல தலைமுறைகள் தேவைப்படும்.
இதில் உள்ள முரண்பாட்டைப் புறக்கணிப்பது கடினம். இந்தியா உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார சக்தியாகவும், 2047-க்குள் முழுமையாக வளர்ந்த நாடாகவும் (விக்சித் பாரத்) மாற வேண்டும் என்று நாம் பேசுகிறோம். இருப்பினும், இத்தகைய லட்சியங்களைப் பலவீனப்படுத்தும் வகையிலான பதற்றமான சூழல் மற்றும் அவ்வப்போது தொடர்ந்து நிகழும் சட்டவிரோதச் செயல்கள் குறித்து பொது நிறுவனங்கள் போதுமான அக்கறை காட்டாத நிலையே பெரும்பாலும் காணப்படுகிறது. கும்பல் வன்முறை, குறிவைத்து மேற்கொள்ளப்படும் இடிப்பு நடவடிக்கைகள் மற்றும் மதரீதியான பகைமை உணர்வு இயல்பானதாக மாற்றப்படுவது ஆகியவை வெறும் சட்டம்-ஒழுங்குச் சிக்கல்கள் மட்டுமல்ல, அவை சகோதரத்துவ உணர்வின் தோல்விகளாக உள்ளது. இத்தகைய செயல்களுக்குத் தண்டனை வழங்கப்படாதபோது, அது சிறுபான்மையினருக்கு மட்டுமல்லாமல், தங்கள் எதிர்காலத்தைத் திட்டமிடும் ஒவ்வொரு தொழில்முனைவோருக்கும், முதலீட்டாளருக்கும் மற்றும் குடும்பத்திற்கும் ஒரு குறியீடாகப் பார்க்கப்படுகிறது.
பிளவுபடுத்துதல், அதைப் பயன்படுத்துபவர்களுக்குத் தேர்தல் ஆதாயங்களைக் கொண்டு வந்திருக்கலாம். இருப்பினும், ஒரு தேசம் குறுகியகால அரசியல் ஆதாயங்களுக்காகத் தனது பிளவுகளை ஆழப்படுத்திக்கொண்டே இருந்துவிட்டு, பொருளாதார விளைவுகளைத் தவிர்க்க முடியும் என்று எதிர்பார்க்க முடியாது.
சகோதரத்துவம் என்பது முகவுரையில் எழுதப்பட்டு, தேசிய நிகழ்வுகளில் மேற்கோள் காட்டப்படும் ஒரு இலட்சியம் மட்டுமல்ல. அது சுதந்திரமும் சமத்துவமும் நிலைத்திருக்க அனுமதிக்கும் சமூக மூச்சு ஆகும். சகோதரத்துவம் இல்லாமல், எந்தவொரு பொருளாதாரமும், அதன் இலக்குகள் எவ்வளவு லட்சியமானதாக இருந்தாலும், உண்மையாகச் செழிக்க முடியாது. சகோதரத்துவம் இல்லாவிட்டால், சுதந்திரமும் சமத்துவமும் வெறும் வர்ணப் பூச்சுகளைப் போல மேலோட்டமானதாகவே இருக்கும் என்று அம்பேத்கர் எச்சரித்தார். நூற்றாண்டு காலமாக, அந்த வர்ணம் உரிந்து வருவதை நாம் பெரிதாகக் கவனிக்கவில்லை. ஆனால் இப்போது அதில் ஏற்பட்டுள்ள விரிசல்களை நாம் காணத் தொடங்கியுள்ளோம்.
அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கியவர்கள் அந்த நான்கு நெறிமுறைகளையும் (நீதி, சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம்) ஒன்றாக இணைத்ததற்கு ஒரு காரணம் இருந்தது. நாமும் அவ்வாறே செயல்பட வேண்டிய நேரம் இதுவாக இருக்கலாம்.
குரேஷி, இந்தியாவின் முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் 'ஆவணப்படுத்தப்படாத ஓர் அற்புதம்: மாபெரும் இந்தியத் தேர்தலின் உருவாக்கம்' என்ற நூலின் ஆசிரியர் ஆவார்.