டிஎன்ஏ சான்றுகள் மற்றும் உரிமைகள் குறித்து . . .

 தந்தைவழி உறவை உறுதி செய்வதற்கான டிஎன்ஏ பரிசோதனை (DNA Test), இறுதி முயற்சியாக அனுமதிக்கப்பட்டாலும், அது மற்ற உரிமைகளை மீறக்கூடாது.


குழந்தைகள் 'சட்டவிரோதப் பிறப்பு' (illegitimate) என்ற களங்கத்திலிருந்து குழந்தைகளைப் பாதுகாப்பதற்காக, முந்தைய இந்திய சாட்சியச் சட்டம்-1872 (Indian Evidence Act) மற்றும் பாரதிய சக்ஷ்ய அதினியம்-2023 (Bharatiya Sakshya Adhiniyam) ஆகியவை, தந்தைவழி உறவை உறுதிப்படுத்த விரும்பும் நபர் மீது இந்தப் பொறுப்பு  சுமத்தப்படுவதற்குப் பதிலாக, அதனை மறுக்கும் தரப்பினரின் மீது நிரூபிப்பதற்கான பொறுப்பைச் (burden of proof) சுமத்துகின்றன. இந்திய உச்சநீதிமன்றம், இது தொடர்பாக டிஎன்ஏ சான்றுகளால் எழும் சவால்களை முதன்முதலில் கௌதம் குண்டு-1993 (Goutam Kundu) வழக்கில் பரிசீலித்தது. அதில், டிஎன்ஏ பரிசோதனைகளை ஒரு வழக்கமான நடைமுறையாக உத்தரவிட முடியாது என்றும், வலுவான முகாந்திர வழக்கு நிரூபிக்கப்பட்டுள்ளதா என்பதை நீதிமன்றங்கள் முதலில் மதிப்பிட வேண்டும் என்றும் தீர்ப்பளித்தது. ஸ்ரீ பனார்சி தாஸ்-2005 (Shri Banarsi Dass) வழக்கில் இந்த நிலைப்பாட்டை அது மீண்டும் வலியுறுத்தியது. இவ்விரு வழக்குகளும் தடயவியல் ஆர்வத்தின் மீதான எந்தவொரு நாட்டத்தையும்விட, சட்டப்பூர்வத் தன்மைக்கான பாதுகாப்பை வலுப்படுத்தின. பின்னர், மூத்த அரசியல்வாதியான என்.டி. திவாரி தனது தந்தை என்று ரோஹித் சேகர் தொடுத்த வழக்கில், திவாரி தனது தனியுரிமை மீறப்படுவதாக வலியுறுத்திய போதிலும், டெல்லி உயர்நீதிமன்றமும், உச்சநீதிமன்றமும் அந்தப் பரிசோதனைக்கு உத்தரவிட்டன. நந்தலால் வாசுதேவ் பட்விக்-2014 வழக்கில், நம்பகமான அறிவியல் சான்றுகள் ஒன்று சட்டரீதியான அனுமானத்திற்கு (legal presumption) முரணாக அமையும்போது, ​​நீதியின் நலனை முன்னிறுத்தினால் அறிவியல் சாட்சியமே மேலோங்கும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. தீபன்விதா ராய்-2014 வழக்கில், பரிசோதனையை மறுப்பது பாதகமான முடிவுகளுக்கு வழிவகுக்கும் என்பதை அது ஏற்றுக்கொண்டது. இந்த இரண்டு உத்தரவுகளும் உண்மையான தேவையின் அடிப்படையிலான டிஎன்ஏ பரிசோதனைகளின் சட்டப்பூர்வத் தன்மையையும் உறுதிப்படுத்தின.




பின்னர், கே.எஸ். புட்டஸ்வாமி-2017 வழக்கில், மரபணுத் தரவுகளின் தனியுரிமை உட்பட தனியுரிமைக்கான உரிமையை, அரசியலமைப்பின் பிரிவு 21-ன் கீழ் ஒரு அடிப்படை உரிமையாக உச்சநீதிமன்றம் அங்கீகரித்தது. இது, தந்தைவழி உறவு தொடர்பான முந்தைய தீர்ப்புகளில் கருத்தில் கொள்ளத் தேவையில்லாத ஒரு புதிய கட்டுப்பாட்டை அறிமுகப்படுத்தியது. இதில், நீதிமன்றம் பின்வரும் மூன்று அம்சங்களைக் கொண்ட ஒரு மூன்று-நிலை பரிசோதனையை (threefold test) வகுத்தது. அவை,


  •  சட்டப்பூர்வத்தன்மை, (legality),  நியாயமான நோக்கங்கள் (legitimate aims) மற்றும்  விகிதாச்சாரம் (proportionality).


இந்த பரிசோதனை, அபர்ணா அஜிங்க்யா ஃபிரோடியா-2023 வழக்கில் பயன்படுத்தப்பட்டது. அந்த வழக்கில், டிஎன்ஏ பரிசோதனைகள் அவசியமாகவும் விகிதாச்சாரத்திற்கு உட்பட்டதாகவும் இருக்கும்போது மட்டுமே உத்தரவிடப்பட வேண்டும் என்றும், மற்ற ஆதாரங்களின் அடிப்படையில் ஒரு சர்ச்சையைத் தீர்க்க முடிந்தால் அவ்வாறு செய்யக்கூடாது என்றும் குறிப்பிட்டது. இவான் ரத்தினம்-2025 வழக்கில், தனியுரிமையும் அறிவும் முழுமையானவை அல்ல என்றும், நீதித்துறையானது களங்கம் மற்றும் அவசியம் ஆகியவற்றுக்கு இடையேயும் சமரசம் செய்துகொள்ள வேண்டும் என்றும் நீதிமன்றம் கூறியது. 'CP vs AP (2026)' வழக்கின் தீர்ப்பானது, தந்தை யார் என்பது குறித்த சர்ச்சையை ஏற்கனவே உள்ள ஆவணங்களைக் கொண்டு தீர்க்க முடியாது என்றும், அதற்கு அறிவியல்பூர்வமான உறுதிப்படுத்தல் தேவை என்றும் கருதி, டிஎன்ஏ பரிசோதனைக்கு விசாரணை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை உறுதி செய்தது. இதன் மூலம் அத்தீர்ப்பு மேற்கூறிய அனைத்து வாதங்களையும் ஒருங்கிணைத்தது. எனவே, 'புட்டாஸ்வாமி' (Puttaswamy) தீர்ப்புக்குப் பிந்தைய காலகட்டத்தில், அரசியலமைப்புச் சட்டமானது தனிநபரின் உடல் சார்ந்த தன்னாட்சியைப் (bodily autonomy) பாதுகாப்பதோடு, கட்டாய மரபணுத் தகவல் வெளிப்பாட்டையும் கட்டுப்படுத்துகிறது. இருப்பினும், தந்தை யார் என்பது குறித்த விவகாரமே நேரடியாகச் சர்ச்சைக்குரியதாக இருக்கும்போதும், அந்தச் சிக்கலைத் தீர்க்க வேறு எந்தச் சான்றுகளும் இல்லாதபோதும், மற்றும் அப்பரிசோதனை நீதியை நிலைநாட்ட உதவும்போதும் நீதிமன்றங்கள் டிஎன்ஏ பரிசோதனைக்கு உத்தரவிட முடியும். ஆக, டிஎன்ஏ பரிசோதனையை ஒரு 'இறுதித் தேர்வாக' (last resort) அமைப்பதன் மூலம், அறிவியல் பிழையற்றதாக இருக்கலாம் என்றாலும், ஒரு நபரின் உரிமைகளை மதிக்கும்போது மட்டுமே உண்மையை அறியும் முயற்சியானது நியாயமானதாக அமையும் என்பதை நீதிமன்றங்கள் உறுதி செய்ய வேண்டும்.


Original Link: ​Just truths: On DNA evidence and rights


Share: