பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் பிரான்ஸ் (France) மற்றும் ஸ்லோவாக்கியா (Slovakia) ஆகிய நாடுகளுக்கு மேற்கொண்ட பயணங்களின்போது, அங்குள்ள உலகத் தலைவர்களுக்கு வழங்கிய பரிசுகளின் பட்டியலில் பல்வேறு வகையான இந்தியக் கலைப் பொருட்கள், கைவினைப் பொருட்கள் மற்றும் பாரம்பரியப் பொருட்கள் இடம்பெற்றிருந்தன. அவற்றில், கலம்காரி மகாபாரத ஓவியம், போச்சம்பள்ளி பட்டுத் துண்டு, லாகடாங் மஞ்சள் மற்றும் தெகுவா (Thekua - ஒருவகை இனிப்புப் பலகாரம்) ஆகியவை இடம்பெற்றிருந்தன.
முக்கிய அம்சங்கள்:
— பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானுக்கு பிரதமர் நரேந்திர மோடி ஒரு 'கலம்காரி மகாபாரத ஓவியத்தை' பரிசாக வழங்கினார். ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த இந்த கைவினைப் பூர்வமான கலம்காரி ஓவியம், இந்தியாவின் செழுமையான கலைப் பாரம்பரியத்தை வெளிப்படுத்துகிறது. இதைச் செய்து முடிக்க ஏறக்குறைய ஆறு மாதங்கள் ஆனதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. மேலும், இந்த ஓவியம் பாரம்பரிய பேனா-வரைதல் (Pen-drawing) நுட்பங்களைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டது என்றும், இது மகாபாரதத்தின் காட்சிகளை சித்தரிக்கிறது என்றும் அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
— அதிபர் மேக்ரானின் மனைவிக்கு, போச்சம்பள்ளி பட்டுத் துண்டை மோடி பரிசளித்தார். போச்சம்பள்ளி பட்டுத் துண்டு என்பது தெலுங்கானாவைச் சேர்ந்த ஒரு கைத்தறி துணியாகும், இது பாரம்பரிய 'இகாத்' (Ikat) சாயம் பூசும் நுட்பத்தைப் பயன்படுத்தி நெய்யப்பட்டது. அதன் சிக்கலான வடிவியல் மற்றும் மலர் வடிவங்கள், நேர்த்தியான கைவினைத்திறன் மற்றும் அழகான வடிவமைப்பிற்குப் பெயர் பெற்ற இந்தத் துண்டு, இந்தியாவின் செழுமையான ஆடைப் பாரம்பரியத்தை வெளிப்படுத்துகிறது என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
— ஸ்லோவாக்கியா நாட்டுப் பிரதமர் ராபர்ட் ஃபிகோவிற்கு பிரதமர் மோடி காஷ்மீரி பட்டு கம்பளம் ஒன்றை பரிசளித்தார், இது காஷ்மீரின் மதிப்புமிக்க மற்றும் புகழ்பெற்ற கைமுடிச்சு (Hand-knotted) கைவினைப் பொருளாகும்.
— பிராடிஸ்லாவாவில் (Bratislava) ஸ்லோவாக்கியா அதிபர் பீட்டர் பெல்லெக்ரினியைச் சந்தித்தபோது, மோடி அவருக்கு பித்தளையிலான 'டோக்ரா மான்' பொம்மைத் தொகுப்பை பரிசாக வழங்கினார். இது இந்தியாவின் பழமையான டோக்ரா உலோக வார்ப்பு (Metal-casting) பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் ஒரு கைவினைப் பொருளாகும். சத்தீஸ்கர், ஒடிசா, ஜார்கண்ட் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் உள்ள பழங்குடி கைவினைஞர்களால் பல நூற்றாண்டுகளாக இந்த கலை வடிவம் பின்பற்றப்பட்டு வருகிறது என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
— ராஜஸ்தானின் பிரதாப்கர் (Pratapgarh) பகுதியின் பாரம்பரிய நகை கைவினைத்திறனைப் பறைசாற்றும் வகையில், கைவினைஞர்களால் உருவாக்கப்பட்ட சட்டைக் கைகளில் பொருத்தப்படும் பிரத்யேக பொத்தான்கள் (Thewa motif cufflinks) என்ற நகைப் பரிசையும் பிரதமர் வழங்கினார். வண்ணக் கண்ணாடிகளின் மீது மிக நுண்ணிய வேலைப்பாடுகள் கொண்ட தங்கத் தகடுகளை உருக்கி இணைத்து, இயற்கையையும் பல்வேறு குறியீடுகளையும் அடிப்படையாகக் கொண்டு இந்த நேர்த்தியான மற்றும் அழகான வடிவமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.
— 'சரஹ சம்ஹிதா' (Charak Samhita), 'சுஸ்ருத சம்ஹிதா' (Susruta Samhita) ஆகிய ஆயுர்வேத நூல்களின் பிரதிகளையும் மற்றும் 'தேகுவா' (Thekua) இனிப்பையும் ஸ்லோவாக்கியா நாட்டு நாடாளுமன்ற சபாநாயகர் ரிச்சர்ட் ராஷ் அவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி பரிசாக வழங்கினார்.
— 'சரஹ சம்ஹிதா' நூல் இந்தியாவின் செழுமையான அறிவியல் மற்றும் அறிவுசார் பாரம்பரியத்தைப் பிரதிபலிக்கும் அதேவேளையில், பீகார் மாநிலத்தின் பாரம்பரிய இனிப்பு பலகாரமான 'தேகுவா', இந்தியாவின் கலாச்சாரப் பாரம்பரியம், பண்டிகைக் கொண்டாட்டம் மற்றும் பிராந்திய சமையல் கலையை உலகிற்குப் பறைசாற்றுகிறது.
— ஆயுர்வேதத்தில், அஸ்வகந்தா (அமுக்கராங்கிழங்கு) என்பது உடலுக்குத் தெம்பையும், மனத்தெளிவையும், நோய் எதிர்ப்புச் சக்தியையும், ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் தரும் ஒரு 'ரசாயன மூலிகையாக' மதிக்கப்படுகிறது. முக்கியமாக இதன் வேர்களில் இருந்து தயாரிக்கப்படும் இந்த மூலிகை, மன அழுத்தத்தைக் குறைக்கும் மற்றும் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் குணங்களுக்காக இன்று நவீன அறிவியலால் பரவலாக ஆய்வு செய்யப்படுகிறது. இதில் ராஜஸ்தானின் 'நாகௌரி அஸ்வகந்தா' (Nagauri Ashwagandha) உள்ளூர் கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை ஆதரிப்பதோடு மட்டுமல்லாமல், பாரம்பரிய ஆயுர்வேத அறிவை நவீன அறிவியல் ஆராய்ச்சி மற்றும் உலகளாவிய ஆரோக்கியப் போக்குகளுடன் எவ்வாறு இணைப்பது என்பதற்கும் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது.
— ஜி7 மாநாட்டின்போது, பிரதமர் நரேந்திர மோடி ராஜஸ்தானின் 'நாகௌரி அஸ்வகந்தா', மேகாலயாவின் 'லகடாங் மஞ்சள்', ஜம்மு காஷ்மீரின் செனாப் பள்ளத்தாக்கில் தயாரிக்கப்படும் 'ராம்பன் தேன்' மற்றும் வாரணாசியின் புகழ்பெற்ற 'பனாரசி பட்டுத் துண்டுகளையும்' உலகத் தலைவர்களுக்குப் பரிசாக வழங்கினார்.
உங்களுக்குத் தெரியுமா?
— உலக வர்த்தக அமைப்பில் (World Trade Organization (WTO)) ஒரு உறுப்பினராக இருக்கும் இந்தியா, 'பொருட்களுக்கான புவிசார் குறியீடு (பதிவு மற்றும் பாதுகாப்பு) சட்டத்தை, 1999' (Geographical Indications Act, 1999) இயற்றியது. இச்சட்டம் செப்டம்பர் மாதம் 15-ஆம் தேதி , 2003-ஆம் ஆண்டு முதல் அமலுக்கு வந்தது.
— புவிசார் குறியீடு (Geographical Indication (GI)) என்பது ஒரு குறிப்பிட்ட பகுதியில் உற்பத்தியாகும் பொருட்களுக்கு வழங்கப்படும் ஒரு தனித்துவமான அங்கீகார அடையாளமாகும். அந்தப் பொருளின் தரம், சிறப்பு குணங்கள் அல்லது அதன் புகழ் ஆகியவை அது விளையும் அல்லது தயாரிக்கப்படும் குறிப்பிட்ட பகுதியைச் சார்ந்தே இருக்கும் என்பதால் இந்த அங்கீகாரம் தரப்படுகிறது. இக்குறியீடு அந்தப் பொருளின் தனித்தன்மையையும், அது உண்மையானது என்பதையும் உறுதிப்படுத்துகிறது. மேலும், இது வாடிக்கையாளர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும், நம்பிக்கையை வளர்க்கவும் உதவுகிறது.
— ஒரு பொருளுக்கு இக்குறியீடு கிடைத்துவிட்டால், வேறு எந்தவொரு நபரோ அல்லது நிறுவனமோ அதே பெயரில் அதுபோன்ற போலிப் பொருட்களை விற்க முடியாது. இந்த அங்கீகாரம் 10 ஆண்டுகளுக்குச் செல்லுபடியாகும். அதன் பிறகு இதனை மீண்டும் புதுப்பித்துக் கொள்ளலாம். புவிசார் குறியீடு பதிவின் மூலம் அந்தப் பொருளுக்குச் சட்டப்பூர்வ பாதுகாப்பு கிடைக்கிறது, மற்றவர்கள் அனுமதியின்றி அதைப் பயன்படுத்துவது தடுக்கப்படுகிறது மற்றும் வெளிநாடுகளுக்கான ஏற்றுமதியும் ஊக்குவிக்கப்படுகிறது.
— இந்தியாவில், வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின்கீழ் இயங்கும் 'தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறை' (Department for Promotion of Industry and Internal Trade (DPIIT)) புவிசார் குறியீடுகளை (GI Tags) வழங்குகிறது. டார்ஜிலிங் தேநீர்தான் (Darjeeling Tea) புவிசார் குறியீட்டைப் பெற்ற முதல் இந்தியத் தயாரிப்பு ஆகும்.
— 1999-ஆம் ஆண்டின் 'பொருட்களின் புவிசார் குறியீடுகள் (பதிவு மற்றும் பாதுகாப்பு) சட்டம்', கைவினைப் பொருட்கள் மற்றும் கைத்தறிப் பொருட்களுக்குப் புவிசார் குறியீடு (GI) வழங்குவதற்கான பதிவை வழங்குகிறது. இச்சட்டத்தின் பிரிவு 2(f)-ன்கீழ் கைவினை மற்றும் கைத்தறிப் பொருட்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. இப்பிரிவின்படி, "பொருட்கள்" என்பது ஏதேனும் ஒரு சாகுபடி செய்யப்பட்ட பொருள், இயற்கை அல்லது உற்பத்தி செய்யப்பட்ட பொருட்கள் அல்லது கைவினை, கைத்தறி அல்லது கைத்தொழில் சார்ந்த பொருட்கள் மற்றும் உணவுப் பொருட்களைக் குறிக்கும்.
Original Link: What is the Geographical Indication (GI)?