Showing posts with label nuclear energy. Show all posts
Showing posts with label nuclear energy. Show all posts

யுரேனியமும் இந்தியாவின் அணுசக்தி எதிர்காலமும்: உள்நாட்டுச் சுரங்கம் ஏன் முக்கியத்துவம் பெறுகிறது? -ரோஷ்னி யாதவ்

இந்தியாவின் அணுசக்தி இலக்குகளுக்கு யுரேனியம் ஏன் மிக முக்கியமானது? உள்நாட்டிலேயே யுரேனியம் வளங்கள் இருந்தும், இந்தியா ஏன் இன்னும் இறக்குமதியைச் சார்ந்து இருக்கிறது? யுரேனியத்திலிருந்து தோரியத்திற்கு மாறுவதற்கு இந்தியா எவ்வாறு திட்டங்களை வகுத்துள்ளது மற்றும் இது குறித்த நாடாளுமன்றக்குழுவின் முக்கியப்பரிந்துரைகள் என்ன? இது குறித்து நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும் இங்கே.


தற்போதைய செய்தி :


மத்திய அரசு சுரங்க மேம்பாட்டாளர் மற்றும் இயக்கும் முகமை (Mine Developer-cum-Operator (MDO)) நிறுவனங்களின் யுரேனியம் சுரங்கப்பணிகளில் பங்கேற்பதை உறுதி செய்வதற்கான கொள்கை வழிகாட்டுதலை உருவாக்க வேண்டும் என்று நாடாளுமன்றக் குழு பரிந்துரைத்துள்ளது. இந்தியாவின் உள்நாட்டு யுரேனியம் உற்பத்தி, எதிர்காலத்தில் நாட்டிலேயே உருவாக்கப்படும் அழுத்தப்பட்ட கனநீர் அணு உலைகளின் (pressurised heavy water reactors (PHWRs)) எரிபொருள் தேவையைப் பூர்த்தி செய்ய போதுமானதாக இருக்காது என்ற கவலைகளுக்கு மத்தியில் இந்தப் பரிந்துரை முன்வைக்கப்பட்டுள்ளது. இந்தச் சூழலில், யுரேனியம், அதன் முக்கியத்துவம் மற்றும் நாடாளுமன்றக்குழுவின் முக்கியப்பரிந்துரைகள் குறித்து தெரிந்து கொள்வோம்.


முக்கிய அம்சங்கள்:


1. அணுசக்திக்கு முக்கிய எரிபொருளாக விளங்கும் யுரேனியம், மிகவும் நம்பகமான மற்றும் குறைந்த கார்பன் வெளியேற்றத்தைக் கொண்ட ஆற்றல் மூலங்களில் ஒன்றாகும். யுரேனியம் உலகம் முழுவதும் உள்ள பெரும்பாலான அணு உலைகளில் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது.


2. யுரேனியம் என்பது இயற்கையில் கிடைக்கும் ஒரு கதிரியக்கத் தனிமம் (radioactive element) ஆகும். யுரேனியத்தில் யுரேனியம்-234 , யுரேனியம்-235 (U-235) மற்றும் யுரேனியம்-238 ஆகிய மூன்று இயற்கையான ஐசோடோப்புகள் உள்ளன. அணு ஆற்றலை உருவாக்குவது U-235 அணுக்களின் பிளவு (fission) ஆகும். ஆனால், இயற்கையான யுரேனியத்தில் 0.72 சதவீதம் மட்டுமே U-235 உள்ளது. பெரும்பாலான அணு உலைகளுக்கு அவற்றின் எரிபொருளில்  ஐசோடோப்பின் அதிக அளவு தேவைப்படுகிறது.


3. எனவே, இயற்கையாக கிடைக்கும் யுரேனியம் மின் ஆற்றல் உற்பத்திக்குப் பயன்படுத்தப்படுவதற்கு முன்பு, “செறிவூட்டல்” (Enrichment) எனப்படும் ஒரு செயல்முறைக்கு உட்படுத்தப்படுகிறது. இந்த செயல்முறை U-235 அளவை அதிகரிக்கிறது. பெரும்பாலான அணு உலைகளில் திறன்மிக்க தொடர் அணுக்கருப் பிளவு வினை (chain reaction) தொடர்ந்து நடைபெறுவதற்கு இது முக்கியமானதாகும். செறிவூட்டல் தொழில்நுட்பங்களின் மூன்று முக்கிய வகைகள் உள்ளன: அவை வாயு பரவல், வாயு மையவிலக்கு மற்றும் லேசர் செறிவூட்டல் ஆகும்.


4. குறைந்த செறிவுள்ள யுரேனியம் (பொதுவாக 20 சதவீதத்திற்கும் குறைவான U-235) வணிக அணு உலைகளில் ஆற்றலை உற்பத்தி செய்ய அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. இருப்பினும், அதிக செறிவுள்ள யுரேனியம் பாதுகாப்புத் துறையிலும் அணு ஆயுதங்களிலும் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது.


5. உலகளவில் யுரேனியம் சமமாகப் பரவியிருக்கவில்லை. அதன் இருப்புகள் சில குறிப்பிட்ட பகுதிகளில் அதிகமாகக் குவிந்துள்ளன. தற்போதைய மதிப்பீடுகளின்படி, உலக அளவில் உள்ள யுரேனியத்தின் மொத்த இருப்பு 59,25,700 டன் ஆகும். இதில் அதிகபட்சமாக ஆஸ்திரேலியாவில் 16,71,200 டன் யுரேனியம் உள்ளது. இது உலகின் மொத்த யுரேனிய இருப்பில் 28% ஆகும். அடுத்தடுத்த இடங்களில் கஜகஸ்தான் (8,13,900 டன்), கனடா (5,82,000 டன்), நமீபியா (4,97,900 டன்) மற்றும் ரஷ்யா (4,76,600 டன்) போன்ற  நாடுகள் உள்ளன.


6. 2024-ஆம் ஆண்டில், சுரங்கங்களில் இருந்து எடுக்கபட்ட அதிக அளவிலான யுரேனியத்தை உற்பத்தி செய்த நாடாக கஜகஸ்தான் (உலக விநியோகத்தில் 39 சதவீதம்) கொண்டு இருந்தது. அதைத் தொடர்ந்து கனடா (24 சதவீதம்) மற்றும் நமீபியா (12 சதவீதம்) ஆகிய நாடுகள் இருந்தன. அதைத் தொடர்ந்து கனடா (24%) மற்றும் நமீபியா (12%) போன்ற நாடுகள் உள்ளன. இந்த மூன்று நாடுகளும் இணைந்து, உலகின் மொத்த யுரேனியம் உற்பத்தியில் நான்கில் மூன்று பங்கு பங்களிக்கின்றன.


இந்தியாவின் அணுசக்தித் திட்டத்தில் யுரேனியத்தின் முக்கியத்துவம் என்ன?



1. இந்தியாவின் உள்நாட்டுத் தயாரிப்பான அழுத்தப்பட்ட கனநீர் உலைகள் இயற்கையான யுரேனியத்தைப் பயன்படுத்துகின்றன. இவற்றிற்கான எரிபொருள் தேவைகள், அரசுக்குச் சொந்தமான 'யுரேனியம் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட்' (Uranium Corporation of India Ltd (UCIL)) சுரங்கங்களிலிருந்து கிடைக்கும் உள்நாட்டு உற்பத்தி மற்றும் இறக்குமதி ஆகியவற்றின் கலவை மூலம் தற்போது பூர்த்தி செய்யப்படுகின்றன.


2. தாராபூர் அணுமின் நிலையம் மற்றும் கூடங்குளம் அணுமின் நிலையம் ஆகிய இரண்டு 'லேசான நீர் அணு உலை' (light water reactor (LWR)) வகைகளில் பயன்படுத்தப்படும் செறிவூட்டப்பட்ட யுரேனியம் முழுமையாக இறக்குமதி செய்யப்படுகிறது.


இந்தியா எவ்வாறு யுரேனியத்திலிருந்து தோரியத்திற்கு மாறுகிறது?

1. இந்தியாவின் அணுசக்தித் திட்டம் மூன்று கட்டங்களைக் கொண்டுள்ளது. முதல் கட்டத்தில், இந்தியா யுரேனியத்தை எரிபொருளாகக் கொண்ட அழுத்தப்பட்ட கனநீர் அணு உலைகளை (Pressurised Heavy Water Reactors (PHWRs)) பயன்படுத்துகிறது. இருப்பினும், தோரியத்துடன் ஒப்பிடும்போது இந்தியாவிடம் யுரேனியத்தின் இருப்பு மிகவும் குறைவாக உள்ளது. எனவே, அடுத்தடுத்த  நிலைகளில் புளூட்டோனியம் மற்றும் தோரியத்தைப் பயன்படுத்துவதற்கு மாறும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.


2. இரண்டாம் கட்டத்தில், இந்தியா முன்மாதிரி ழுத்தப்பட்ட கனநீர் அணு உலைக்கு (PFBR) எரிபொருளாக புளூட்டோனியம் அடிப்படையிலான கலப்பு ஆக்சைடைப் பயன்படுத்தும். மேலும், அழுத்தப்பட்ட கனநீர் அணு உலைகளின் பயன்படுத்தப்பட்ட எரிபொருளையும் அது பயன்படுத்திக்கொள்ளும்.


3. மூன்றாவது கட்டத்தில், யுரேனியத்தை உற்பத்தி செய்ய தோரியத்தைப் பயன்படுத்தும் தோரியம் அடிப்படையிலான மேம்பட்ட கனநீர் அணு உலைகளை (Advanced Heavy Water Reactors (AHWR)) இது பயன்படுத்த முற்படுகிறது. இந்தக்கட்டம் தன்னிறைவை அடைவதில் கவனம் செலுத்துகிறது.


உங்களுக்குத் தெரியுமா?


இந்தியா தனது சிவில் அணுமின் உற்பத்தித் திறனை, தற்போதுள்ள 8.7 ஜிகாவாட்-மின்சாரம் அளவிலிருந்து 2047-ஆம் ஆண்டுக்குள் 100 GWe-ஆக அதிகரிக்க இலக்கு கொண்டுள்ளது.


நாடாளுமன்றக் குழுவின் முக்கியப் பரிந்துரைகள் யாவை?


1. யுரேனியம் சுரங்கத்தொழிலில், சுரங்க மேம்பாட்டாளர் மற்றும் இயக்கும் முகமை (Mine Developer-cum-Operator (MDO)) பங்கேற்பதை உறுதிசெய்யும் வகையில், மத்திய அரசு ஒரு கொள்கை செயல்திட்டத்தை வகுக்க வேண்டும் என்று நாடாளுமன்றக்குழு பரிந்துரை  செய்துள்ளது.


2. மேலும், இந்தத் துறையில் சுரங்க மேம்பாட்டாளர் மற்றும் இயக்கும் முகமைகளின் (MDO) பங்களிப்பு, அணுசக்தித் துறையின் (Department of Atomic Energy (DAE)) கடுமையான மேற்பார்வையின்கீழ் இருக்க வேண்டும் என்றும்   நாடாளுமன்றக்குழு பரிந்துரை  செய்துள்ளது.


குறிப்பாக, சுரங்க மேம்பாட்டாளர் மற்றும் இயக்கும் முகமை (Mine Developer-cum-Operator (MDO)) என்பது சுரங்க உரிமையாளரால், அரசு அல்லது பொதுத்துறை நிறுவனத்தால், ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்படும் முகமையாகும். இது சுரங்கத்தை மேம்படுத்தி, இயக்கி, சுரங்க உரிமையாளரின் சார்பில் சுரங்கப்பணிகளை மேற்கொள்கிறது.

3. இந்தியா தற்போது கஜகஸ்தான், ரஷ்யா, உஸ்பெகிஸ்தான் மற்றும் கனடாவிலிருந்து யுரேனியத்தை இறக்குமதி செய்து வருவதாகவும், உஸ்பெகிஸ்தானுடனான நீண்டகால விநியோக ஒப்பந்தம் 2026-ஆம் ஆண்டு வரை செல்லுபடியாகும் என்றும் நாடாளுமன்றக் குழு குறிப்பிட்டது. உள்நாட்டு யுரேனிய உற்பத்தி விரைவுபடுத்தப்பட்டு, யுரேனியம் விநியோக ஆதாரங்கள் பல்வகைப்படுத்தப்படாவிட்டால், இறக்குமதியை தொடர்ந்து சார்ந்திருக்க வேண்டிய நிலை ஏற்படும் என்றும் குழு தெரிவித்துள்ளது.


4. 2026-ஆம் ஆண்டுக்குப் பிறகும் உஸ்பெகிஸ்தானிடமிருந்து நீண்டகால யுரேனியம் விநியோகத்தைப் பெறுவதற்கான அரசாங்கத்தின் திட்டங்கள் குறித்து புதுப்பிக்கப்பட்ட தகவலை குழு கோரியுள்ளது.


5. மேலும், யுரேனியம் விநியோக ஆதாரங்களைப் பல்வகைப்படுத்தவும், விநியோகத் தடைகள் மற்றும் சந்தை அபாயங்களுக்கு ஏற்படும் பாதிப்பைக்குறைக்கவும், வெளிநாடுகளில் உள்ள யுரேனியம் சொத்துகளில் பங்குகளைப் பெறுவதற்கான யுரேனியம் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் Uranium Corporation of India Ltd (Uranium Corporation of India Ltd) தேசிய அனல் மின் கழகத்தின் (National Thermal Power Corporation Limited  (NTPC)) கூட்டு நிறுவனத்தை விரைவுபடுத்த வேண்டும் என்றும் குழு பரிந்துரைத்துள்ளது.


6. யுரேனியம் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் மற்றும் தேசிய அனல்மின் கழகத்தின் கூட்டு முயற்சிக்கான காலக்கெடு, எதிர்கால எரிபொருள் கொள்முதல் திட்டங்கள் மற்றும் அணுசக்தித் துறையின் (Department of Atomic Energy (DAE)) மேற்பார்வையின்கீழ் உள்நாட்டு யுரேனியம் சுரங்கத்தில் சுரங்க மேம்பாட்டாளர் மற்றும் இயக்கும் முகமைகளின் (MDO) பங்கேற்புக்கான முன்மொழியப்பட்ட கட்டமைப்பு ஆகியவை குறித்து அணுசக்தித் துறையிடம் இருந்து ஒரு விரிவான அறிக்கையை  குழு கேட்டுள்ளது.


7. தற்போதுள்ள சுரங்கங்கள் மற்றும் ஆலைகளை மேம்படுத்தவும், துரம்டிஹ், ஜதுகுடா மற்றும் தும்மலபள்ளி ஆகிய இடங்களில் உள்ள பழைய சுரங்கங்களின் உற்பத்தித் திறனை விரிவுபடுத்தவும், ராஜஸ்தான் மற்றும் ஆந்திரப் பிரதேசத்தில் புதிய சுரங்க மையங்களை அமைக்கும் பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என்றும் குழு பரிந்துரைத்துள்ளது.

8. மேலும், தாதுக்களை ஆய்வு செய்வதற்கான மேம்பட்ட ஆய்வு தொழில்நுட்பங்கள், உணரிகள் (sensors) அடிப்படையிலான தாது பிரித்தெடுப்பு, சுரங்கத் தானியக்கம் மற்றும் மேம்படுத்தப்பட்ட தாது செறிவூட்டல் ஆகியவற்றை அதிக அளவில் பயன்படுத்த வேண்டும் என்றும் குழு வலியுறுத்தியுள்ளது. இதன் மூலம் கிடைக்கும் தாதுவில் உள்ள யுரேனியத்தின் அளவை அதிகரித்து, உற்பத்திச் செலவைக் குறைக்கமுடியும்.


தோரியம் மற்றும் புளூட்டோனியம்

1. யுரேனியத்துடன் சேர்த்து, தோரியம் மற்றும் புளூட்டோனியம் ஆகியவையும் அணுசக்தி தொடர்பான முக்கியப்பொருட்களாகக் கருதப்படுகின்றன. இவை சிவில் அணுமின் உற்பத்தி மற்றும் அணு ஆயுதத்தயாரிப்பு ஆகிய இரண்டு வகையான பயன்பாடுகளைக் கொண்டிருப்பதால், பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த வளங்களாகக் கருதப்படுகின்றன. எனவே, தோரியம் மற்றும் புளூட்டோனியம் குறித்து பார்ப்போம்.


2. தோரியம் என்பது இயற்கையாகக் கிடைக்கும் ஒரு அணுக்கருப் பொருளாகும். மேலும், இது யுரேனியத்தைவிட அதிக அளவில் காணப்படுகிறது. இது இயற்கையாக ஒரே ஒரு ஐசோடோப்பு வடிவத்தில்  232Th காணப்படுகிறது.


3. தோரியம் பிளவுறும் தன்மை (fissile) கொண்டது அல்ல. எனவே, தனியாக அணுக்கருத்தொடர் வினையைத் தொடர்ந்து நடத்த முடியாது. இது “வளர்திறன் கொண்டது” என்றுக் கருதப்படுகிறது. ஒரு நியூட்ரானை உறிஞ்சிய பிறகு, இது யுரேனியம்-233-ஆக மாறுகிறது. U-233 பிளவுறும் தன்மை கொண்டது என்பதால், அணுக்கருப் பிளவு  மூலம் ஆற்றலை உற்பத்தி செய்ய முடியும்.


4. யுரேனியம் மற்றும் தோரியத்துடன் ஒப்பிடுகையில், புளூட்டோனியம் முக்கியமாக அணு உலைகளில் யுரேனியம் 238-லிருந்து நியூட்ரான் பிடிப்பு மூலம் உற்பத்தி செய்யப்படுகிறது. புளூட்டோனியத்தில் Pu-238, Pu-239, Pu-240, Pu-241 மற்றும் Pu-242 ஆகிய ஐந்து "பொதுவான" ஐசோடோப்புகள் உள்ளன. இவை அனைத்தும் "பிளவுறக்கூடியவை" (fissionable) ஆகும்.


5. இருப்பினும், புளூட்டோனியம்-239 அதிக அளவிலான பிளவுபடக்கூடியப் பொருளைக் (fissile material) கொண்டுள்ளது. மேலும், இது அணு உலை எரிபொருட்களிலும் அணு ஆயுதங்களிலும் பயன்படுத்தப்படும் முக்கிய எரிபொருள்களில் ஒன்றாக உள்ளது. மேலும், இயற்கையான கதிரியக்கச்சிதைவின் மூலம் சீரான வெப்பத்தை வெளிப்படுத்துவதால், Pu-238  விண்வெளி திட்டங்களில் பயன்படுத்தப்படுகிறது.

Original Link: https://indianexpress.com/article/upsc-current-affairs/upsc-essentials/knowledge-nugget-uranium-indias-nuclear-programme-upsc-10825911/

Share:

இந்தியாவின் பிரம்மாண்டமான அணுசக்தி கனவுகளுக்குப் பின்னால் உள்ள 'சிறிய மட்டு அணு உலைகள்' (Small Modular Reactors) யாவை? - ரோஷ்னி யாதவ்

சிறிய மட்டு அணு உலைகள் இந்தியாவின் எரிசக்தி கொள்கையின் ஒரு முக்கிய அங்கமாக உருவெடுத்து வருகின்றன. ஆனால், வழக்கமான அணு உலைகளிலிருந்து சிறிய மட்டு அணு உலைகளை வேறுபடுத்துவது எது? சாந்தி சட்டம் ஏன் ஒரு திருப்புமுனை (game-changer) என்று அழைக்கப்படுகிறது? நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய அனைத்தும் இங்கே உள்ளன.


தற்போதைய  செய்தி :


பாரம்பரிய அணு உலைகளுக்குப் பாதுகாப்பான மாற்றாகச் சிறிய மட்டு அணு உலைகள் (SMRs) முன்னிறுத்தப்பட்டு வரும் சூழலிலும், பெரிய அணு உலைகளுக்குப் பொருந்தும் அதே கடுமையான பாதுகாப்பு மற்றும் உரிமம் பெறுதல் விதிமுறைகளையே இதற்கும் அந்த நாட்டின் முதன்மை அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையம் தொடர்ந்து கடைப்பிடிக்கும் என்று 'தி இந்தியன் எக்ஸ்பிரஸ்' செய்தி வெளியிட்டுள்ளது. அணுசக்தித் துறையில் தனியார்துறை பங்கேற்பை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்ட 'இந்தியாவை மாற்றியமைப்பதற்கான அணுசக்தியின் நிலையான பயன்பாடு மற்றும் மேம்பாடு' (Sustainable Harnessing and Advancement of Nuclear Energy for Transforming India (SHANTI)) சட்டம், 2025-ன் கீழ் இதற்கான தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், ஒழுங்குமுறை ஆணையத்தின் இந்த நிலைப்பாடு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.


இந்தச் சூழலில், சிறிய மட்டு அணு உலைகள் மற்றும் சாந்தி சட்டம் பற்றி விரிவாக  தெரிந்து கொள்வோம்.


முக்கிய அம்சங்கள்:


1. இந்தியாவின் அணுசக்தித் திட்டம் இதுவரை உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட 'அழுத்தப்பட்ட கனநீர் உலைகளை' (pressurised heavy water reactors (PHWRs)) அடிப்படையாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. இவை கனநீரை குளிர்விப்பானாகவும் நியூட்ரான் வேகத்தைக் குறைப்பையாகவும் (moderator), இயற்கை யுரேனியத்தை எரிபொருளாகவும் பயன்படுத்துகின்றன. நாட்டின் அணுசக்தி விரிவாக்கத் திட்டங்களில் அழுத்தப்பட்ட கனநீர் உலைகள் தொடர்ந்து முக்கியப் பங்காற்றினாலும், தொழில்துறையில் கார்பன் வெளியேற்றத்தைக் குறைப்பதில் (decarbonisation) உதவக்கூடிய ஒரு நம்பிக்கைக்குரிய தொழில்நுட்பமாக  சிறிய மட்டு அணு உலைகள் பார்க்கப்படுகின்றன.


2. இந்திய அரசு சிறிய மட்டு அணு உலைகள் உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவித்து வருகிறது. இவற்றை அவ்வப்போது 'பாரத் சிறிய மட்டு அணு உலைகள்' என்றும் அழைக்கிறது. இந்தத்துறையில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் ₹20,000 கோடி மதிப்பிலான ஒரு சிறப்புத் திட்டத்தையும் அரசு செயல்படுத்தி வருகிறது.

3. தூய்மையான எரிசக்தி மாற்றத்திற்கான தனது உறுதிப்பாட்டை நிறைவேற்றும் ஒரு வழியாகவும், தொழில்நுட்பம் சார்ந்த வெளியுறவுக் கொள்கை முன்மொழிவாக சிறு அணு உலைகளை இணைத்து அவற்றை முன்வைப்பதன் மூலமாகவும், இந்தியா இந்த சிறு அணு உலைத் துறையில் ஒரு முக்கிய இடத்தைப் பிடிக்க இந்தியா முயற்சித்து வருகிறது.


4. சிறிய மட்டு அணு உலைகள் என்பவை அடிப்படையில், ஓர் அலகுக்கு 30MWe முதல் 300 மெகாவாட் மின்சாரம் வரையிலான மின் உற்பத்தித் திறன் கொண்ட மேம்பட்ட சிறிய அணு உலைகள் ஆகும். தற்போது இந்தியாவிலும் மற்ற இடங்களிலும் நிறுவப்பட்டுள்ள வழக்கமான அணு உலைகள், 500 மெகாவாட் அல்லது அதற்கும் அதிகமான மின்சாரத்தை உற்பத்தி செய்யும் திறனைக் கொண்டுள்ளன.


5. சிறிய மட்டு அணு உலைகள் எளிமையான மற்றும் தொகுதி அளவு வடிவமைப்பைக் கொண்டுள்ளன. இதனால், அவற்றின் கூறுகளை நேரடியாக தளத்தில் கட்டுவதற்குப் பதிலாக தொழிற்சாலைகளில் தயாரித்து பின்னர் ஒன்றுசேர்க்க முடியும். இதன் மூலம் கட்டுமானச் செலவு குறைவதுடன், தேவைக்கேற்ப நெகிழ்வான முறையில் நிறுவவும் முடிவதால், கடந்த சில ஆண்டுகளில் இவை மிகவும்  முக்கியமான  மாற்றாகக் கருதப்படுகின்றன.


6. எஃகு, அலுமினியம் மற்றும் சிமெண்ட் போன்ற அதிக ஆற்றல் தேவைப்படும் துறைகளில் கார்பன் வெளியேற்றத்தைக் குறைப்பதற்கு, சிறிய மட்டு அணு  உலைகள் ஒரு நம்பிக்கைக்குரிய தேர்வாகக் கருதப்படுகின்றன. ஏனெனில், அவை 24 மணி நேரமும் அதிக அளவில், குறைந்த கார்பன் கொண்ட மின்சாரத்தை உற்பத்தி செய்யும் திறன் பெற்றுள்ளன.


7. பல்வேறு வகையான சிறிய மட்டு அணு உலைகள் உருவாக்கப்பட்டு வந்தாலும், தற்போது நான்கு முக்கிய வகைகள் உள்ளன. அவை ஒவ்வொன்றும் அணுப் பிளவு வினையின் அதீத வெப்பத்தைச் சமாளிக்க, லேசான நீர், அதிகமான  வெப்பநிலை கொண்ட வாயு, திரவ உலோகம் மற்றும் உருகிய உப்பு ஆகிய வெவ்வேறு குளிரூட்டிகளைப் பயன்படுத்துகின்றன.


8. இருப்பினும், இவற்றில் மிகவும் பரவலாகப் பயன்படுத்தப்படுவது இலகு நீர் அணு உலைகள் (Light Water Reactors) ஆகும். இவை ரஷ்யா, பிரான்ஸ் மற்றும் அமெரிக்காவில் கட்டப்பட்டு வரும் பாரம்பரிய அணுமின் நிலையங்களைப் போலவே நீரால் குளிர்விக்கப்படுகின்றன. இதனால், மற்ற வகைகளைவிட இலகு நீர் சிறிய மட்டு அணு உலைகளை வடிவமைப்பது மிகவும் எளிதாக உள்ளது.


உங்களுக்குத் தெரியுமா?


வளர்ந்த இந்தியா அணுசக்தித் திட்டத்தின்கீழ், 2047-ஆம் ஆண்டிற்குள் 100 ஜிகாவாட் அணுமின் உற்பத்தித் திறனை அடைய இலக்கு நிர்ணயித்துள்ளது.


சாந்தி சட்டம் (SHANTI Act) என்றால் என்ன?


1. ஷாந்தி சட்டம், டிசம்பர் 21, 2025 அன்று ஜனாதிபதியின் ஒப்புதலைப் பெற்றது, அணு மின் நிலையத்தை அமைப்பதற்கு அல்லது அணு ஆற்றலின் உற்பத்தி, பயன்பாடு மற்றும் அகற்றல் தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான தனியார் துறையின் பங்கேற்பை, மத்திய அரசின் உரிமத்தின் கீழும், நாட்டின் அணு ஒழுங்குமுறை அமைப்பான அணு ஆற்றல் ஒழுங்குமுறை வாரியத்தின் பாதுகாப்பு அங்கீகாரத்தின் கீழும் திறம்பட அனுமதிக்கிறது.


2. சாந்தி சட்டம் என்பது உலகளாவிய அணுசக்தி வர்த்தகத்தின் நெறிமுறைகளுக்கு ஏற்ப ஒரு முயற்சியாகும். இது 1962-ஆம் ஆண்டின் அணுசக்திச் (Atomic Energy Act) சட்டம் மற்றும் 2010-ஆம் ஆண்டின் அணுசக்தி சேதத்திற்கான குடிமைப் பொறுப்புச் (Civil Liability for Nuclear Damage Act) சட்டம் ஆகியவற்றை ஒரே சட்டமாக செயல்படுகிறது.


3. புதிய சட்டத்தின்படி, பொது மற்றும் தனியார் நிறுவனங்கள் அணுமின் நிலையங்களை அமைக்கவும், அணு எரிபொருள், தொழில்நுட்பம், உபகரணங்கள் மற்றும் கனிமங்களின் போக்குவரத்து, சேமிப்பு, இறக்குமதி மற்றும் ஏற்றுமதி தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அனுமதிக்கப்படுகின்றன. இதுவரை, இந்த நடவடிக்கைகள் பொதுத்துறை நிறுவனங்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டிருந்தன.



இந்தியாவின் மூன்றுகட்ட அணுசக்தித் திட்டம் என்பது என்ன?


1. இந்தியாவின் அணுசக்திப் பயணம், சுதந்திரத்திற்குப் பிறகு 1948-ல் அணுசக்தி ஆணையம் (Atomic Energy Commission) அமைக்கப்பட்டதுடன் தொடங்கியது. 1956-ல், மும்பை டிராம்பேயில் உள்ள (Bhabha Atomic Research Centre (BARC)) ஆசியாவின் முதல் ஆராய்ச்சி அணு உலை Apsara செயல்பாட்டுக்கு வந்தது.


2. 1969-ஆம் ஆண்டு, மகாராஷ்டிராவின் தாராப்பூரில் இந்தியாவின் முதல் அணுமின் நிலையம் நிறுவப்பட்டது. ஜப்பானுக்கு அடுத்தபடியாக அணுமின் நிலையத்தை நிறுவிய இரண்டாவது ஆசிய நாடு இந்தியா ஆகும். சீனாவை விட பல ஆண்டுகளுக்கு முன்னரே இந்தியா அணுசக்தி ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் முன்னேற்றம் கண்டது. 1950 மற்றும் 1960-களில் மேற்கத்திய நாடுகளின் உதவியுடன் இந்தியா வலுவான அணு ஆராய்ச்சி தொடர்பான அடித்தளத்தை உருவாக்கியது.


3. எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்வதற்கான அணுசக்தித் துறையின் மூன்று கட்டத் திட்டத்தின் தொலைநோக்குப் பார்வைக்கு இந்தியா, இந்திய அணுசக்தித் திட்டத்தின் தந்தையான டாக்டர் ஹோமி ஜே. பாபா மற்றும் 'வேகப் பெருக்கி அணு  உலைகளின்' (Fast Breeder Reactor (FBR)) முக்கியத்துவத்தை உணர்ந்த டாக்டர் விக்ரம் சாராபாய் ஆகியோருக்குக் கடமைப்பட்டுள்ளது. ஏனெனில்,  இது  போன்ற அணு உலைகள், வளமான ஐசோடோப்புகளை (fertile isotopes) பிளவுபடக்கூடிய பொருளாக (fissile material) பயனுள்ள வகையில் மாற்றுவதன் மூலம்,  இந்த வேகப் பெருக்கி உலைகள் பயன்படுத்தும் அணு எரிபொருளைவிட அதிக அளவு அணு எரிபொருளை உருவாக்குகின்றன. அவை அதிக எரிபொருள் உற்பத்தி செய்யும் திறன் கொண்டவை.


மூன்று கட்ட அணுசக்தி திட்டம்


→ நிலை 1: அழுத்தப்பட்ட கனநீர் அணு உலைகள் (Pressurised Heavy Water Reactors (PHWRs)), மின்சாரத்தை உற்பத்தி செய்ய இயற்கை யுரேனியம் அடிப்படையிலான எரிபொருட்களைப் பயன்படுத்துகின்றன. அதே நேரத்தில், பயன்படுத்தப்பட்ட எரிபொருளை மறுசுழற்சி செய்வதன் மூலம் பிரித்தெடுக்கக்கூடிய பிளவுபடும் புளூட்டோனியத்தையும் (Pu239) உற்பத்தி செய்கின்றன. இது கனநீரை (deuterium oxide) குளிர்விப்பானாகவும் குறைப்படுத்தியாகவும் பயன்படுத்துகிறது. இறக்குமதி செய்யப்பட்ட இலகுநீர் அணு உலைகளின் (Light Water Reactors (LWRs)) கட்டுமானத்தின் மூலம் இந்தத் திட்டம்  வலுப்படுத்தப்பட்டுள்ளது.


→ நிலை 2:  கல்பாக்கத்தில் உள்ளதைப் போன்ற வேகப் பெருக்கி அணு உலைகளை (Fast Breeder Reactors - FBRs) புளூட்டோனியம் அடிப்படையிலான எரிபொருளைப் பயன்படுத்தி அமைப்பது இதில் அடங்கும். இத்தகைய உலைகள் அணுசக்தி உற்பத்தித் திறனை அதிகரிப்பதோடு, வளமான தோரியத்தை (Thorium) பிளவுறும் தன்மை கொண்ட யுரேனியம்-233 (U-233) ஆக மாற்றும் திறனையும் கொண்டுள்ளன. புளூட்டோனியம் இருப்பைத் திறமையாகப் பயன்படுத்துவதற்கு, பயன்படுத்தப்பட்ட எரிபொருளை மறுசுழற்சி செய்வது முக்கியமானதாகும்..


→ நிலை 3: மூன்றாவது கட்டம் ThU233 சுழற்சியை அடிப்படையாகக் கொண்டதாக இருக்கும். நீண்ட கால எரிசக்திப் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், மேம்பட்ட வெப்ப நியூட்ரான் உலைகள் (advanced thermal reactors) மற்றும் அதிவேக உற்பத்தி உலைகளை (fast breeder reactors) உள்ளடக்கிய மின் உற்பத்தித் திட்டத்தின் மூன்றாம் கட்டத்திற்கு, இரண்டாம் கட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் U233-ஐப் பயன்படுத்தலாம். இதற்காக 'மேம்பட்ட கனநீர் உலை' (Advanced Heavy Water Reactor (AHWR)) முன்மொழியப்பட்டுள்ளது. தற்போது, உருகிய உப்பை பயன்படுத்தும் அணு உலைகளின் (Molten Salt Reactors) பயன்பாடும் ஒரு மாற்று வாய்ப்பாகக் கருதப்படுகிறது.


கல்பாக்கம் வேக இனப்பெருக்க அணு உலை நிலைமாறு நிலையை அடைந்தது


1. தமிழ்நாட்டின் கல்பாக்கத்தில் அமைந்துள்ள இந்தியாவின் முதல் உள்நாட்டில் உருவாக்கப்பட்ட வேகப் பெருக்கி அணு உலை (Fast Breeder Reactor (FBR)) முக்கிய  நிலையை அடைந்தது.


2. நிலைமாறுநிலையை அடைதல் அல்லது நிலைமாறுநிலையை எட்டுதல் என்பது, அணு பிளவு (Nuclear Fission) வினை தானாகவே தொடர்ந்து நடைபெறும் நிலையை குறிக்கிறது. இந்த தன்னிறைவு பெற்ற அணுப் பிளவு வினை, பின்னர் 500 மெகாவாட் மின்சார திறன் கொண்ட வேகப் பெருக்கி அணு உலை மூலம் மின்சாரம் உற்பத்தி செய்ய வழிவகுக்கும்.



3. முழு அளவிலான மின் உற்பத்தியைத் தொடங்குவதற்கு முந்தைய ஒரு முக்கிய சாதனை என்ற நிலையை அடைவதாகும். இந்நிலை, அணு உலைக்கருவானது வடிவமைக்கப்பட்டபடியே செயல்படுவதையும், தொடர்ச்சியான வினைகளை நிலைநிறுத்துவதற்குத் தேவையான எண்ணிக்கையிலான நியூட்ரான்களை அணுக்கருப் பிளவு நிகழ்வுகள் (fission event) வெளியிடுவதையும் உறுதிப்படுத்துகிறது. இது இந்தியாவின் அணுசக்தித் திட்டத்தின் மிக முக்கியமான இரண்டாவது கட்டமாகும்.



Share:

அணுமின் நிலையங்களை இயக்குவது என்பது ஒரு 'வாழ்நாள் கடமை' ஆகும் என்பது நிபுணர்கள் கூற்று. -ஜேக்கப் கோஷி

இந்தியாவை உருமாற்றுவதற்கான நிலையான பயன்பாடு மற்றும் அணுசக்தி மேம்பாட்டுச் சட்டம் (சாந்தி சட்டம், 2025), இந்தியாவின் அணுசக்தி உற்பத்தித் திறனை தற்போதுள்ள 8.7 ஜிகாவாட்டிலிருந்து (gigawatts (GW)), 2047-ஆம் ஆண்டிற்குள் 100 ஜிகாவாட்டாக (GW) அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.


இந்தச் சட்டத்தின் மூலம் அணுசக்தித் துறையில் தனியார் நிறுவனங்களை இந்தியா அனுமதிக்கும் நிலையில், அணுசக்திக்கு நீண்டகால அர்ப்பணிப்பும், வலுவான நிதித் திட்டமிடலும் அவசியம் என்று முன்னாள் ஒழுங்குமுறை அதிகாரிகளும் நிபுணர்களும் கூறுகின்றனர். கதிர்வீச்சினால் ஏற்படும் பாதிப்புகளுக்கு இழப்பீடு வழங்குதல், அணுக்கழிவுகளைக் கையாளுதல் மற்றும் அணுமின் நிலையங்களை பாதுகாப்பான முறையில் மூடுதல் போன்ற முக்கியமான பணிகளைச் செய்ய நிதி மேலாண்மை அவசியமாகிறது. 


இந்தியாவின் அணுசக்தித் துறையில் பெரிய மாற்றத்தைக் கொண்டுவருவதற்கான (Sustainable Harnessing and Advancement of Nuclear Energy for Transforming India (SHANTI)) சாந்தி சட்டம் 2025-ஐப் பற்றி அரசாங்கம் மீண்டும் மீண்டும் கூறி வருகிறது. இதன்படி, இந்தியாவின் அணுசக்தி உற்பத்தித் திறனை தற்போதுள்ள 8.7 ஜிகாவாட்டிலிருந்து (GW), 2047-ஆம் ஆண்டிற்குள் 100 ஜிகாவாட்டாக (GW) உயர்த்துவதே இதன் நோக்கமாகும். கடந்த ஐம்பது ஆண்டுகால நடைமுறை போலல்லாமல், தனியார் நிறுவனங்கள் அணுமின் நிலையங்களை இயக்க அனுமதிப்பதன் மூலமும், வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதன் மூலமும் இந்த இலக்கை அடைய அரசு திட்டமிட்டுள்ளது.


சாந்தி மசோதா எதை மாற்றுகிறது? 


2026-ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம் 18-ஆம் தேதியன்று, இந்திய அணுசக்தி ஆணையத்தின் (Atomic Energy Commission (AEC)) உறுப்பினர் ரவி குரோவர் பேசுகையில், "சாந்தி சட்டம்" (SHANTI Act) பொது மற்றும் தனியார் துறைகளில் உள்ள மின் உற்பத்தி நிலைய இயக்குநர்களின் கடமைகளையும் பொறுப்புகளையும் தெளிவாக வரையறுக்கிறது என்று குறிப்பிட்டார். பாதுகாப்பு, பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் கண்காணிப்பு ஆகியவற்றிற்கான முதன்மைப் பொறுப்பு உரிமம் வைத்திருப்பவரிடமே உள்ளது என்றும், இத்துறைக்கு புதிதாக வருபவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்களைச் 'பிரிவு 10' (Section 10) தெளிவாக விளக்குகிறது என்றும் கூறினார். மேலும், விதிமுறைகளில் எந்தவித முறைகேடுகளுக்கும் இடமில்லை என்றும் தெரிவித்துள்ளார். ஒரு ரேடியோ ஐசோடோப்பின் அரை ஆயுட்காலம் (Half-life of a radioisotope) போன்ற அறிவியல் உண்மைகளை ஒருபோதும் மாற்ற முடியாது என்பதையும் சுட்டிக்காட்டினார்.


இந்திய அணுசக்தித் துறையில் புதிதாகப் பங்கேற்க இருக்கும் தனியார் நிறுவனங்களின் சார்பாகப் பேசிய ‘Tata Consulting Engineers Ltd’ நிறுவனத்தின் துணைத் தலைவர் ராஜன் ராகவன், முதலீட்டு முடிவுகள் நான்கு முக்கிய முன்னுரிமைகளின் அடிப்படையில் அமைகின்றன என்று கூறினார்: அவை முறையே பொருத்தமான இடத்தை தேர்வு செய்தல், கட்டுப்படியாகக்கூடிய தொழில்நுட்பம், அரசாங்கத்தின் ஆதரவு மற்றும் மின்கட்டண நடைமுறைத்தன்மை ஆகியவையாகும். சாதாரண அனல்மின் நிலையங்களைப் போலல்லாமல், அணுசக்தி திட்டங்களுக்கு நிலம் மற்றும் நீர் வசதி மட்டுமே போதாது, இன்னும் சில குறிப்பிட்ட தகுதி நெறிமுறைகள் தேவைப்படுகின்றன என்பதையும் சுட்டிக்காட்டினார். மேலும், பல தனியார் நிறுவனங்கள் ஏற்கனவே பல்வேறு மாநிலங்களில் இதற்கான இடங்களைக் கண்டறிந்து, அதற்கான அனுமதிகளைப் பெற முயற்சி செய்து வருவதாகவும் தெரிவித்தார்.


சாந்தி சட்டத்திற்கு எதிரான ஒரு வழக்கு


இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 700 மெகாவாட் (MW) திறன் கொண்ட அழுத்தப்பட்ட கனநீர் உலைகளையே (Pressurised Heavy-Water Reactor (PHWR)), அடுத்த 10 முதல் 12 ஆண்டுகளில் அதிக எண்ணிக்கையில் செயல்படுத்த இந்திய அணுசக்தி கழகம் (Nuclear Power Corporation of India Limited (NPCIL)) திட்டமிட்டுள்ளதாக ராகவன் தெரிவித்தார். இதுவே தற்போதைய சூழலில் மிகவும் பொருத்தமான தேர்வாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார். 220 மெகாவாட் திறன் கொண்ட உலைகள் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டவை என்றாலும், அவை பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பே இறுதி செய்யப்பட்டவை என்றும் குறிபிட்டுள்ளார். தற்போதைய பாதுகாப்பு மற்றும் ஒழுங்குமுறை தரநிலைகளுக்கு ஏற்ப அவற்றை மேம்படுத்த பெரும் மாற்றங்கள் தேவைப்படும். வெளிநாட்டு அணு உலைகள் மிகவும் விலை உயர்ந்தவை என்றும், இந்தியச் சூழலுக்கு ஏற்ப வடிவமைப்பை உறுதிப்படுத்த கட்டுமானத்திற்கு முன்பே சுமார் இரண்டு முதல் மூன்று ஆண்டுகள் வரை காலம் தேவைப்படும் என்றும் எச்சரித்தார். மின்சாரம் என்பது உற்பத்தி மற்றும் உலோகத் தொழில்களுக்கு ஒரு முக்கிய செலவு என்பதால், நிலம் மற்றும் இதர உற்பத்திச் செலவுகளை உள்ளடக்கிய மின்சாரக் கட்டணம் மிக முக்கியமானது என்று அவர் வலியுறுத்தினார். இந்திய அணுசக்தி கழகத்தின் (NPCIL) தற்போதைய மின்சாரக் கட்டணங்கள் நிலக்கரி மின்சாரத்திற்கு இணையானதாகவும், சில சமயங்களில் அதைவிடக் குறைவாகவும் இருப்பதால், சரியான தொழில்நுட்பத்தைத் தேர்வு செய்தால் அணுமின் சக்தி வணிகரீதியாக லாபகரமானதாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.


அணுசக்தி ஒழுங்குமுறை வாரியத்தின் (Atomic Energy Regulatory Board (AERB)) முன்னாள் தலைவர் டி.கே. சுக்லா, இந்த புதிய சட்டத்தைப் பற்றிய தனது கருத்தை விளக்கினார். முன்னதாக, அனைத்து அமைப்புகளும் அணுசக்தி துறையின்கீழ் (Department of Atomic Energy (DAE)) இருந்தபோது, விதிமுறைகள் மற்றும் பாதுகாப்பு மேற்பார்வை ஆகியவை மறைமுகமாகவே இருந்தன. ஆனால், இப்போது கொண்டுவரப்பட்டுள்ள சாந்தி சட்டம் (SHANTI Act), விதிமுறை கட்டுப்பாட்டையும் பாதுகாப்பு மேற்பார்வையையும் தனித்தனியாகப் பிரித்து, ஒரு தெளிவான மற்றும் ஒருங்கிணைந்த சட்டக் கட்டமைப்பை வழங்குகிறது. மேலும், இத்துறையில் தனியார் நிறுவனங்கள் நுழைவதால், முன்பு சாதாரணமாகக் கருதப்பட்ட பிரச்சனைகள் இனி வரும் காலங்களில் தீவிரமானதாக மாறக்கூடும் என்றும் அவர் எச்சரித்தார்.


சுக்லா அவர்கள் ஒரு முக்கியமான கருத்தை வலியுறுத்தினார்: அணுசக்தி செயல்பாடுகளுக்கு நீண்டகால அர்ப்பணிப்பு தேவை. புதிய சட்டத்தின்படி (Atomic Energy Act), உரிமம் பெற்றவர்கள் அந்த அணுமின் நிலையம் இயங்கும் காலம் முழுவதும் அதன் வடிவமைப்பு சார்ந்த தொழில்நுட்ப ஆதரவைத் தொடர்ந்து வழங்க வேண்டும். மற்ற மின் உற்பத்தி நிலையங்களைவிட அணுமின் நிலையங்கள் நீண்டகாலம் செயல்படுவதால் இது மிகவும் அவசியமானது. மேலும், தற்போதைய பாதுகாப்புத் தரங்களைப் பூர்த்தி செய்கின்றனவா என்பதை உறுதிப்படுத்த, ஒவ்வொரு பத்து ஆண்டுகளுக்கும் ஒருமுறை பாதுகாப்பு மதிப்பாய்வை மேற்கொள்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.


முழுமையான வடிவமைப்பு அறிவும் திறனும் இல்லாமல், பாதுகாப்பு மேம்பாடுகளை எவ்வாறு சரியாகச் செய்ய முடியும் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், ஒரு அமைப்பில் செய்யப்படும் மாற்றங்கள் மற்ற அமைப்புகளை மோசமாகப் பாதிக்கும் என்பதையும் சுட்டிக்காட்டினார். தொழில்நுட்பம் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்டாலும் அல்லது வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டாலும், ஒரு ஆலையின் வாழ்நாள் முழுவதும் அதன் அசல் வடிவமைப்பின் தன்மையை சிதைக்காமல் பராமரிப்பது அவசியம் என்று வலியுறுத்தினார். குறிப்பாக, தனியார் நிறுவனங்கள் வெளிநாட்டு அணு உலைகளை இறக்குமதி செய்யும்போது, நீண்டகாலத்திற்குத் தேவையான வடிவமைப்பு ஆதரவை உறுதிசெய்ய வேண்டும் என்றும் எச்சரித்தார்.


அணுசக்தித் துறை விரிவடைய வேண்டுமானால், பொதுமக்களின் நம்பிக்கை மிக அவசியமாகிறது. அதற்கு வலுவான உற்பத்தித் திறனும், பாதுகாப்புச் செயல்பாடுகளும் முக்கியப் பங்காற்றுகின்றன என்றும் சுக்லா கூறினார். மேலும், தற்போதைய சட்டத்தின்படி பாதுகாப்பிற்கான பொறுப்பு முக்கியமாக உரிமம் பெற்றவரிடமே உள்ளது என்றும் உண்மைகளை மறைக்காமல் அல்லது திருத்தாமல் நேர்மையாக அறிக்கை அளிப்பதன் மூலம், சிறிய பிரச்சினைகள்கூட ஃபுகுஷிமா (ஜப்பானில் 2011-ஆம் ஆண்டில் ஏற்பட்ட அணு உலை விபத்து) போன்ற பெரிய பேரழிவுகளாக மாறாமல் தடுக்க உதவும் என்றும் குறிப்பிட்டார்.


தொழில்துறை கொள்கை மற்றும் மேம்பாட்டுத் துறையின் (Department of Industrial Policy and Promotion (DIPP)) முன்னாள் செயலாளர் அஜய் சங்கர், அணுசக்தி பொறியியலில் இந்தியா ஏற்கனவே உலகளவில் முன்னணியில் இருப்பதாகவும், ஆனால், இந்தியா அதை அங்கீகரிக்கவில்லை என்றும் கூறினார். 2002-ஆம் ஆண்டில் அமெரிக்க தூதரக அதிகாரியுடன் நடந்த உரையாடலை நினைவு கூர்ந்த அவர், இந்தியா உலகின் மிக மலிவான அணுமின் நிலையங்களை உருவாக்குவதாகக் குறிப்பிட்டார். இந்தியாவில் ஒரு கிலோவாட்டிற்கு (kW) சுமார் 1,000 முதல் 1,200 டாலர் வரை செலவாகும் நிலையில், பிரான்சில் இது 1,800 டாலராக உள்ளது. கடந்த 30 முதல் 40 ஆண்டுகளாக புதிய அணுமின் நிலையங்களே கட்டப்படாத அமெரிக்காவில் இதன் செலவு இன்னும் அதிகமாக உள்ளது.


சிறிய ரக அணு உலைகளை (Small Modular Reactors (SMRs)) ஒரு "கானல் நீர்" என்று சங்கர் அவர்கள் கடுமையாக விமர்சித்தார். உலகில் 58 வகையான வடிவமைப்புகள் இருந்தாலும், அவை இதுவரை எங்கும் கட்டப்படவில்லை என்றும், அவற்றின் செலவுகள் எவ்வளவு என்பது இன்னும் உறுதியாகத் தெரியவில்லை என்றும் கூறினார். சோதிக்கப்படாத மேலைநாட்டு சிறியரக அணுஉலை தொழில்நுட்பங்களுக்கு இந்தியா ஒரு சோதனை தளமாக மாறிவிடக்கூடாது என்று எச்சரித்தார். இதற்குப் பதிலாக, 1970-களில் பிரான்ஸ் நாடு செய்தது போல, இந்தியாவின் 700 மெகாவாட் (MW) அணுசக்தித் திட்டத்தையே விரிவுபடுத்த வேண்டும் என்றும் அவர் பரிந்துரைத்தார். மேலும், 25 முதல் 30 ஆண்டுகளுக்கு நிலையான வட்டி விகிதத்தில் அரசாங்கத்தின் உத்தரவாதத்துடன் கூடிய நீண்டகாலக் கடன்களைப் பெற வேண்டும் என்றும், 100 ஜிகாவாட் (GW) இலக்கை அடையத் தேவையான இடங்களை முன்னரே கண்டறிய பொது நிதியைப் பயன்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.


Original Link: Operating nuclear plants is ‘lifetime commitment’: Experts.


Share:

அணுசக்தித் துறையில் இந்தியாவின் முக்கிய சாதனை

கடந்த சில ஆண்டுகளில் நிகழ்ந்த பல முன்னேற்றங்களில், இந்தியா இறுதியாகத் தனது அணுசக்தித் துறையை விரைவாக விரிவுபடுத்துவதற்கு தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது என்பதை உணர்த்தும் செய்திகளில் கல்பாக்கத்திலிருந்து வரும் செய்தியும் ஒன்றாகும்.


தமிழ்நாட்டின் கல்பாக்கத்தில் உள்ள முன்மாதிரி வேகப் பெருக்க அணு உலையானது (Fast Breeder Reactor), அணுக்கரு இணைதிறனை அடைந்திருப்பது, இந்தியாவின் அணுசக்திப் பயன்பாட்டில் ஒரு தலைமுறை மாற்றத்தைக் குறிக்கும் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட ஒரு மைல்கல்லாகும். இது, எழுபது ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவின் அணுசக்தித் திட்டத்தை நிறுவியவர்களின் தொலைநோக்குப் பார்வையை நிறைவேற்றுவதற்கான தொடக்கத்தையும் குறிக்கிறது. இந்தியாவின் அணுசக்தித் துறையின் முதுகெலும்பாக விளங்கும் அழுத்தப்பட்ட கனநீர் அணு உலைகளுடன் (Pressurised Heavy Water Reactors) ஒப்பிடுகையில், வேகப் பெருக்க அணு உலைகளை (Fast Breeder Reactor) வடிவமைப்பதும், உருவாக்குவதும், இயக்குவதும் நம்பமுடியாத அளவிற்கு மிகவும் சவாலானவையாக உள்ளது. ஆனால், இந்தத் தொழில்நுட்பச் சாதனையைவிட, இந்தியாவின் மூன்று கட்ட அணுசக்தித் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தின் தொடக்கமானது, வரும் பத்தாண்டுகளில் நாட்டின் எரிசக்தி சுதந்திரத்தையும் இராஜதந்திரத் தன்னாட்சியையும் உறுதிசெய்வதில் ஒரு முக்கியமான முன்னேற்றத்தைக் குறிக்கிறது.


நீண்ட காலமாக சந்தேகத்துடனும், ஒரு பாதுகாப்பு அபாயமாகவும் பார்க்கப்பட்ட அணுசக்தியானது, தற்போது தூய்மையான மற்றும் ஏராளமாகக் கிடைக்கும் எரிசக்தியின் ஒரு முக்கிய ஆதாரமாகக் கருதப்படுகிறது. புதைபடிவ எரிபொருட்களைச் சார்ந்திருப்பதைக் குறைக்கவும், படிப்படியாக அகற்றவும் நிர்பந்திக்கப்படும் உலகில், அதிகரித்து வரும் எரிசக்தி தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு இது இன்றியமையாததாகும். இந்தியாவைப் பொறுத்தவரை, இது இன்னும் மிக முக்கியமானதாகும். ஏனெனில், வெளிப்புறத் தக்கங்களுக்கு நாட்டை எளிதில் பாதிக்கக்கூடியதாக மாற்றும் எரிசக்தி இறக்குமதியைச் சார்ந்திருப்பதை இது விடுவிக்கவோ அல்லது குறைந்தபட்சம் கணிசமாகக் குறைக்கவோ முக்கியத்துவம் பெறுகிறது. இந்தியாவின் அணுசக்தித் துறையும் மற்ற நாடுகளைச் சார்ந்துள்ளது. ஏனெனில், அதன் முக்கிய எரிபொருளான யுரேனியம் நாட்டில் போதுமான அளவில் கிடைப்பதில்லை. ஹோமி பாபா மற்றும் அவரது தலைமுறை இந்திய அணு விஞ்ஞானிகள், மூன்று கட்டப் பாதையை வகுத்தவர்கள் ஆவர். அதன் மூன்றாவது கட்டம், இந்தியாவில் ஏராளமாகக் காணப்படும் தோரியத்தை முக்கிய எரிபொருளாகப் பயன்படுத்துவதாகும்.


இந்த மூன்று கட்டப் பாதையில் பயணிப்பது ஒருபோதும் எளிதாக இருக்கப்போவதில்லை. முதல் சோதனை வேகப் பெருக்க உலை (fast breeder reactor) 2000-களின் முற்பகுதியில்தான் கட்ட முடிந்தது. இந்தப் பயணத்தின்போது பலமுறை, இந்தியா தனது கவனத்தை இழந்துவிட்டது போல் தோன்றியது. கல்பாக்கத்தில் அணு உலையின் நிலைப்புத்தன்மை எட்டப்படுவது, இந்த மாற்றத்தை மீண்டும் வேகப்படுத்தும் என நம்பப்படுகிறது. இந்தியா தனது அணுசக்தித் துறையை விரைவாக விரிவுபடுத்துவதற்காக இறுதியாகத் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது என்பதை கல்பாக்கத்திலிருந்து வரும் செய்திகள் உணர்த்துகின்றன. அணுசக்தி இயக்கத்தை அமைத்தல், சாந்தி (SHANTI) சட்டத்தை இயற்றுதல், சிறிய மட்டு அணு உலைகளின் (Small Modular Reactors (SMR)) வளர்ச்சியை முன்னெடுத்தல் மற்றும் அணுசக்தித் துறையைத் தனியார் பங்கேற்பிற்காகத் திறந்துவிடுதல் ஆகிய பல நடவடிக்கைகள், இந்தப் பாதையில் மேற்கொள்ளப்பட்டுள்ள மிக முக்கியமான நடவடிக்கைகளாகும்.


Original link:

On nuclear energy, an Indian milestone.


Share: