இந்தியாவை உருமாற்றுவதற்கான நிலையான பயன்பாடு மற்றும் அணுசக்தி மேம்பாட்டுச் சட்டம் (சாந்தி சட்டம், 2025), இந்தியாவின் அணுசக்தி உற்பத்தித் திறனை தற்போதுள்ள 8.7 ஜிகாவாட்டிலிருந்து (gigawatts (GW)), 2047-ஆம் ஆண்டிற்குள் 100 ஜிகாவாட்டாக (GW) அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்தச் சட்டத்தின் மூலம் அணுசக்தித் துறையில் தனியார் நிறுவனங்களை இந்தியா அனுமதிக்கும் நிலையில், அணுசக்திக்கு நீண்டகால அர்ப்பணிப்பும், வலுவான நிதித் திட்டமிடலும் அவசியம் என்று முன்னாள் ஒழுங்குமுறை அதிகாரிகளும் நிபுணர்களும் கூறுகின்றனர். கதிர்வீச்சினால் ஏற்படும் பாதிப்புகளுக்கு இழப்பீடு வழங்குதல், அணுக்கழிவுகளைக் கையாளுதல் மற்றும் அணுமின் நிலையங்களை பாதுகாப்பான முறையில் மூடுதல் போன்ற முக்கியமான பணிகளைச் செய்ய நிதி மேலாண்மை அவசியமாகிறது.
இந்தியாவின் அணுசக்தித் துறையில் பெரிய மாற்றத்தைக் கொண்டுவருவதற்கான (Sustainable Harnessing and Advancement of Nuclear Energy for Transforming India (SHANTI)) சாந்தி சட்டம் 2025-ஐப் பற்றி அரசாங்கம் மீண்டும் மீண்டும் கூறி வருகிறது. இதன்படி, இந்தியாவின் அணுசக்தி உற்பத்தித் திறனை தற்போதுள்ள 8.7 ஜிகாவாட்டிலிருந்து (GW), 2047-ஆம் ஆண்டிற்குள் 100 ஜிகாவாட்டாக (GW) உயர்த்துவதே இதன் நோக்கமாகும். கடந்த ஐம்பது ஆண்டுகால நடைமுறை போலல்லாமல், தனியார் நிறுவனங்கள் அணுமின் நிலையங்களை இயக்க அனுமதிப்பதன் மூலமும், வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதன் மூலமும் இந்த இலக்கை அடைய அரசு திட்டமிட்டுள்ளது.
சாந்தி மசோதா எதை மாற்றுகிறது?
2026-ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம் 18-ஆம் தேதியன்று, இந்திய அணுசக்தி ஆணையத்தின் (Atomic Energy Commission (AEC)) உறுப்பினர் ரவி குரோவர் பேசுகையில், "சாந்தி சட்டம்" (SHANTI Act) பொது மற்றும் தனியார் துறைகளில் உள்ள மின் உற்பத்தி நிலைய இயக்குநர்களின் கடமைகளையும் பொறுப்புகளையும் தெளிவாக வரையறுக்கிறது என்று குறிப்பிட்டார். பாதுகாப்பு, பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் கண்காணிப்பு ஆகியவற்றிற்கான முதன்மைப் பொறுப்பு உரிமம் வைத்திருப்பவரிடமே உள்ளது என்றும், இத்துறைக்கு புதிதாக வருபவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்களைச் 'பிரிவு 10' (Section 10) தெளிவாக விளக்குகிறது என்றும் கூறினார். மேலும், விதிமுறைகளில் எந்தவித முறைகேடுகளுக்கும் இடமில்லை என்றும் தெரிவித்துள்ளார். ஒரு ரேடியோ ஐசோடோப்பின் அரை ஆயுட்காலம் (Half-life of a radioisotope) போன்ற அறிவியல் உண்மைகளை ஒருபோதும் மாற்ற முடியாது என்பதையும் சுட்டிக்காட்டினார்.
இந்திய அணுசக்தித் துறையில் புதிதாகப் பங்கேற்க இருக்கும் தனியார் நிறுவனங்களின் சார்பாகப் பேசிய ‘Tata Consulting Engineers Ltd’ நிறுவனத்தின் துணைத் தலைவர் ராஜன் ராகவன், முதலீட்டு முடிவுகள் நான்கு முக்கிய முன்னுரிமைகளின் அடிப்படையில் அமைகின்றன என்று கூறினார்: அவை முறையே பொருத்தமான இடத்தை தேர்வு செய்தல், கட்டுப்படியாகக்கூடிய தொழில்நுட்பம், அரசாங்கத்தின் ஆதரவு மற்றும் மின்கட்டண நடைமுறைத்தன்மை ஆகியவையாகும். சாதாரண அனல்மின் நிலையங்களைப் போலல்லாமல், அணுசக்தி திட்டங்களுக்கு நிலம் மற்றும் நீர் வசதி மட்டுமே போதாது, இன்னும் சில குறிப்பிட்ட தகுதி நெறிமுறைகள் தேவைப்படுகின்றன என்பதையும் சுட்டிக்காட்டினார். மேலும், பல தனியார் நிறுவனங்கள் ஏற்கனவே பல்வேறு மாநிலங்களில் இதற்கான இடங்களைக் கண்டறிந்து, அதற்கான அனுமதிகளைப் பெற முயற்சி செய்து வருவதாகவும் தெரிவித்தார்.
சாந்தி சட்டத்திற்கு எதிரான ஒரு வழக்கு
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 700 மெகாவாட் (MW) திறன் கொண்ட அழுத்தப்பட்ட கனநீர் உலைகளையே (Pressurised Heavy-Water Reactor (PHWR)), அடுத்த 10 முதல் 12 ஆண்டுகளில் அதிக எண்ணிக்கையில் செயல்படுத்த இந்திய அணுசக்தி கழகம் (Nuclear Power Corporation of India Limited (NPCIL)) திட்டமிட்டுள்ளதாக ராகவன் தெரிவித்தார். இதுவே தற்போதைய சூழலில் மிகவும் பொருத்தமான தேர்வாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார். 220 மெகாவாட் திறன் கொண்ட உலைகள் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டவை என்றாலும், அவை பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பே இறுதி செய்யப்பட்டவை என்றும் குறிபிட்டுள்ளார். தற்போதைய பாதுகாப்பு மற்றும் ஒழுங்குமுறை தரநிலைகளுக்கு ஏற்ப அவற்றை மேம்படுத்த பெரும் மாற்றங்கள் தேவைப்படும். வெளிநாட்டு அணு உலைகள் மிகவும் விலை உயர்ந்தவை என்றும், இந்தியச் சூழலுக்கு ஏற்ப வடிவமைப்பை உறுதிப்படுத்த கட்டுமானத்திற்கு முன்பே சுமார் இரண்டு முதல் மூன்று ஆண்டுகள் வரை காலம் தேவைப்படும் என்றும் எச்சரித்தார். மின்சாரம் என்பது உற்பத்தி மற்றும் உலோகத் தொழில்களுக்கு ஒரு முக்கிய செலவு என்பதால், நிலம் மற்றும் இதர உற்பத்திச் செலவுகளை உள்ளடக்கிய மின்சாரக் கட்டணம் மிக முக்கியமானது என்று அவர் வலியுறுத்தினார். இந்திய அணுசக்தி கழகத்தின் (NPCIL) தற்போதைய மின்சாரக் கட்டணங்கள் நிலக்கரி மின்சாரத்திற்கு இணையானதாகவும், சில சமயங்களில் அதைவிடக் குறைவாகவும் இருப்பதால், சரியான தொழில்நுட்பத்தைத் தேர்வு செய்தால் அணுமின் சக்தி வணிகரீதியாக லாபகரமானதாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
அணுசக்தி ஒழுங்குமுறை வாரியத்தின் (Atomic Energy Regulatory Board (AERB)) முன்னாள் தலைவர் டி.கே. சுக்லா, இந்த புதிய சட்டத்தைப் பற்றிய தனது கருத்தை விளக்கினார். முன்னதாக, அனைத்து அமைப்புகளும் அணுசக்தி துறையின்கீழ் (Department of Atomic Energy (DAE)) இருந்தபோது, விதிமுறைகள் மற்றும் பாதுகாப்பு மேற்பார்வை ஆகியவை மறைமுகமாகவே இருந்தன. ஆனால், இப்போது கொண்டுவரப்பட்டுள்ள சாந்தி சட்டம் (SHANTI Act), விதிமுறை கட்டுப்பாட்டையும் பாதுகாப்பு மேற்பார்வையையும் தனித்தனியாகப் பிரித்து, ஒரு தெளிவான மற்றும் ஒருங்கிணைந்த சட்டக் கட்டமைப்பை வழங்குகிறது. மேலும், இத்துறையில் தனியார் நிறுவனங்கள் நுழைவதால், முன்பு சாதாரணமாகக் கருதப்பட்ட பிரச்சனைகள் இனி வரும் காலங்களில் தீவிரமானதாக மாறக்கூடும் என்றும் அவர் எச்சரித்தார்.
சுக்லா அவர்கள் ஒரு முக்கியமான கருத்தை வலியுறுத்தினார்: அணுசக்தி செயல்பாடுகளுக்கு நீண்டகால அர்ப்பணிப்பு தேவை. புதிய சட்டத்தின்படி (Atomic Energy Act), உரிமம் பெற்றவர்கள் அந்த அணுமின் நிலையம் இயங்கும் காலம் முழுவதும் அதன் வடிவமைப்பு சார்ந்த தொழில்நுட்ப ஆதரவைத் தொடர்ந்து வழங்க வேண்டும். மற்ற மின் உற்பத்தி நிலையங்களைவிட அணுமின் நிலையங்கள் நீண்டகாலம் செயல்படுவதால் இது மிகவும் அவசியமானது. மேலும், தற்போதைய பாதுகாப்புத் தரங்களைப் பூர்த்தி செய்கின்றனவா என்பதை உறுதிப்படுத்த, ஒவ்வொரு பத்து ஆண்டுகளுக்கும் ஒருமுறை பாதுகாப்பு மதிப்பாய்வை மேற்கொள்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
முழுமையான வடிவமைப்பு அறிவும் திறனும் இல்லாமல், பாதுகாப்பு மேம்பாடுகளை எவ்வாறு சரியாகச் செய்ய முடியும் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், ஒரு அமைப்பில் செய்யப்படும் மாற்றங்கள் மற்ற அமைப்புகளை மோசமாகப் பாதிக்கும் என்பதையும் சுட்டிக்காட்டினார். தொழில்நுட்பம் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்டாலும் அல்லது வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டாலும், ஒரு ஆலையின் வாழ்நாள் முழுவதும் அதன் அசல் வடிவமைப்பின் தன்மையை சிதைக்காமல் பராமரிப்பது அவசியம் என்று வலியுறுத்தினார். குறிப்பாக, தனியார் நிறுவனங்கள் வெளிநாட்டு அணு உலைகளை இறக்குமதி செய்யும்போது, நீண்டகாலத்திற்குத் தேவையான வடிவமைப்பு ஆதரவை உறுதிசெய்ய வேண்டும் என்றும் எச்சரித்தார்.
அணுசக்தித் துறை விரிவடைய வேண்டுமானால், பொதுமக்களின் நம்பிக்கை மிக அவசியமாகிறது. அதற்கு வலுவான உற்பத்தித் திறனும், பாதுகாப்புச் செயல்பாடுகளும் முக்கியப் பங்காற்றுகின்றன என்றும் சுக்லா கூறினார். மேலும், தற்போதைய சட்டத்தின்படி பாதுகாப்பிற்கான பொறுப்பு முக்கியமாக உரிமம் பெற்றவரிடமே உள்ளது என்றும் உண்மைகளை மறைக்காமல் அல்லது திருத்தாமல் நேர்மையாக அறிக்கை அளிப்பதன் மூலம், சிறிய பிரச்சினைகள்கூட ஃபுகுஷிமா (ஜப்பானில் 2011-ஆம் ஆண்டில் ஏற்பட்ட அணு உலை விபத்து) போன்ற பெரிய பேரழிவுகளாக மாறாமல் தடுக்க உதவும் என்றும் குறிப்பிட்டார்.
தொழில்துறை கொள்கை மற்றும் மேம்பாட்டுத் துறையின் (Department of Industrial Policy and Promotion (DIPP)) முன்னாள் செயலாளர் அஜய் சங்கர், அணுசக்தி பொறியியலில் இந்தியா ஏற்கனவே உலகளவில் முன்னணியில் இருப்பதாகவும், ஆனால், இந்தியா அதை அங்கீகரிக்கவில்லை என்றும் கூறினார். 2002-ஆம் ஆண்டில் அமெரிக்க தூதரக அதிகாரியுடன் நடந்த உரையாடலை நினைவு கூர்ந்த அவர், இந்தியா உலகின் மிக மலிவான அணுமின் நிலையங்களை உருவாக்குவதாகக் குறிப்பிட்டார். இந்தியாவில் ஒரு கிலோவாட்டிற்கு (kW) சுமார் 1,000 முதல் 1,200 டாலர் வரை செலவாகும் நிலையில், பிரான்சில் இது 1,800 டாலராக உள்ளது. கடந்த 30 முதல் 40 ஆண்டுகளாக புதிய அணுமின் நிலையங்களே கட்டப்படாத அமெரிக்காவில் இதன் செலவு இன்னும் அதிகமாக உள்ளது.
சிறிய ரக அணு உலைகளை (Small Modular Reactors (SMRs)) ஒரு "கானல் நீர்" என்று சங்கர் அவர்கள் கடுமையாக விமர்சித்தார். உலகில் 58 வகையான வடிவமைப்புகள் இருந்தாலும், அவை இதுவரை எங்கும் கட்டப்படவில்லை என்றும், அவற்றின் செலவுகள் எவ்வளவு என்பது இன்னும் உறுதியாகத் தெரியவில்லை என்றும் கூறினார். சோதிக்கப்படாத மேலைநாட்டு சிறியரக அணுஉலை தொழில்நுட்பங்களுக்கு இந்தியா ஒரு சோதனை தளமாக மாறிவிடக்கூடாது என்று எச்சரித்தார். இதற்குப் பதிலாக, 1970-களில் பிரான்ஸ் நாடு செய்தது போல, இந்தியாவின் 700 மெகாவாட் (MW) அணுசக்தித் திட்டத்தையே விரிவுபடுத்த வேண்டும் என்றும் அவர் பரிந்துரைத்தார். மேலும், 25 முதல் 30 ஆண்டுகளுக்கு நிலையான வட்டி விகிதத்தில் அரசாங்கத்தின் உத்தரவாதத்துடன் கூடிய நீண்டகாலக் கடன்களைப் பெற வேண்டும் என்றும், 100 ஜிகாவாட் (GW) இலக்கை அடையத் தேவையான இடங்களை முன்னரே கண்டறிய பொது நிதியைப் பயன்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
Original Link: Operating nuclear plants is ‘lifetime commitment’: Experts.