இந்தியாவின் சமையல் எரிவாயு (Liquefied Petroleum Gas (LPG)) பயன்பாடு பெரும்பாலும் வீட்டு உபயோகத்தைச் சார்ந்தே இருக்கிறது. இது இறக்குமதியின் மீதான நமது நாட்டின் சார்புநிலையை மேலும் அதிகரிக்கிறது.
இந்தியாவின் சமையல் எரிவாயு (LPG) பிரச்சினை என்பது ஒரு தற்காலிகத் தட்டுப்பாடு அல்ல. இது உற்பத்திக்கும் தேவைக்கும் இடையே அதிகரித்து வரும் மிகப்பெரிய இடைவெளியால் உருவாகிறது. கடந்த ஆண்டு, இந்தியா சுமார் 33.15 மில்லியன் டன் சமையல் எரிவாயுவைப் பயன்படுத்தியது, ஆனால் இதில் சுமார் 40% தேவையை மட்டுமே உள்நாட்டு உற்பத்தியால் பூர்த்தி செய்ய முடிந்தது. மீதமுள்ள 60% தேவைக்காக இறக்குமதி செய்யப்பட்டது. இதன்படி, மொத்தத் தேவையானது உள்நாட்டு உற்பத்தியைப் போல சுமார் 2.5 மடங்காகும், மேலும் இறக்குமதி செய்யப்படுவது உள்நாட்டு உற்பத்தியைப் போல 1.5 மடங்காகும். இது இந்தியா உற்பத்தி செய்யும் அளவிற்கும், அதன் வீட்டு உபயோகத் தேவைகளுக்குத் தேவைப்படும் அளவிற்கும் இடையே உள்ள ஒரு பெரிய இடைவெளியைக் காட்டுகிறது.
இது மிக முக்கியமான விஷயமாகும், ஏனெனில் இந்தியாவில் சமையல் எரிவாயு (LPG) பெரும்பாலும் வீடுகளிலேயே பயன்படுத்தப்படுகிறது, வணிகரீதியான பயன்பாடு 10%-க்கும் குறைவாகவே உள்ளது. எனவே, இறக்குமதி செய்யப்படும் எரிவாயுவில் பெரும்பகுதி நேரடியாக வீடுகளுக்கே செல்கிறது; தொழில்துறைகளைப் போல நுகர்வைக் குறைக்கவோ அல்லது மாற்று எரிபொருளுக்கு மாறவோ வீடுகளால் முடியாது. இது இந்தியாவின் சமையல் எரிவாயு சார்புநிலையை ஒரு சாதாரண இறக்குமதி சிக்கலைவிட தீவிரமானதாக மாற்றுகிறது. தொழில்துறையினரால் பயன்பாட்டைக் குறைக்க முடியும், ஆனால் சாதாரண மக்களால் வீட்டு உபயோகத்தில் அதைச் செய்ய முடியாது.
இனி இது நம்பகமான வழித்தடம் அல்ல
இந்த நெருக்கடி தற்போதைய சிக்கலை மிகத் தெளிவாகக் காட்டியுள்ளது. இந்தியாவின் சமையல் எரிவாயு (LPG) இறக்குமதியில் சுமார் 90% ஹார்முஸ் ஜலசந்தி (Strait of Hormuz) வழியாகவே வருகிறது. வீட்டு உபயோக எரிபொருள் பாதுகாப்பிற்கு இனி இந்த ஒரு பாதையை மட்டுமே எப்போதும் நம்பியிருக்க முடியாது என்பதை இந்தியா இப்போது உணர வேண்டும். தற்போதைய பதற்றங்கள் குறைந்தாலும் கூட, முன்பு இருந்தது போல தடையற்ற மற்றும் சீரான விநியோகம் கிடைக்கும் என்ற நம்பிக்கை அவ்வளவு எளிதில் மீண்டும் வராது. இனிவரும் காலங்களில், நீண்டகாலத் திட்டங்களை வகுக்கும்போது இந்த வழித்தடத்தில் உள்ள ஆபத்துகளும் ஒரு முக்கிய காரணியாகக் கருதப்படும்.
இருப்பினும், இறக்குமதியை மட்டும் வைத்து முழுமையான நிலையைத் தெரிந்துகொள்ள முடியாது. இந்தியாவைவிட ஜப்பான் அதிக அளவில் LPG எரிவாயுவை இறக்குமதி செய்கிறது. சீனா மற்றும் தென் கொரியாவும் பெருமளவில் இறக்குமதி செய்கின்றன. ஒரு நாடு எவ்வளவு இறக்குமதி செய்கிறது என்பது மட்டுமே முக்கியமல்ல; மாறாக, அந்த எரிபொருள் எங்கே பயன்படுத்தப்படுகிறது, வீடுகளுக்கு மாற்று வழிகள் என்னென்ன உள்ளன மற்றும் அந்த நாட்டில் எவ்வளவு சேமிப்பு வசதி உள்ளது என்பதுதான் மிகவும் முக்கியமானது.
ஜப்பானிடமிருந்து இந்தியா கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள்
இந்த அட்டவணை, வெறும் சதவீதக் கணக்குகள் மட்டுமே உண்மையான நிலவரத்தைக் காட்டாது என்பதை விளக்குகிறது. இந்தியாவைவிட ஜப்பான் LPG எரிவாயு இறக்குமதியை அதிகம் நம்பியிருப்பது போலத் தோன்றினாலும், அங்குள்ள வீடுகள் இதனால் பெரிய அளவில் பாதிக்கப்படுவதில்லை. ஏனெனில், சுமார் 40% குடும்பங்கள் மட்டுமே சமையல் எரிவாயுவைப் பயன்படுத்துகின்றன. அங்கு வீட்டுத் தேவைகளுக்கான எரிசக்தியில் சுமார் 55% மின்சாரத்திலிருந்தே கிடைக்கிறது, மேலும் 'City Gas' வசதியும் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. இதுதவிர, ஜப்பான் சுமார் 108.3 நாட்களுக்குத் தேவையான சமையல் எரிவாயுவை இருப்பு வைத்திருக்கிறது. எனவே, அதிக அளவில் இறக்குமதி செய்தாலும், மாற்று வழிகள் மற்றும் சேமிப்பு வசதிகள் மூலம் ஜப்பான் தனது பாதிப்பு அபாயத்தைக் குறைத்துக் கொள்கிறது.
சீனாவும் தென்கொரியாவும் இந்த விஷயத்தில் வேறுபடுகின்றன. சீனாவில், LPG எரிவாயு பெரும்பாலும் பெட்ரோலிய வேதிப் பொருட்களின் தொழிற்சாலைகளிலேயே (Petrochemical industry) பயன்படுத்தப்படுகிறது. ஆனால், தென்கொரியாவில் உள்ள வீடுகள் தங்களின் தேவைகளுக்கு இயற்கை எரிவாயு (Natural gas) மற்றும் மின்சாரத்தையே அதிகம் சார்ந்துள்ளன.
இந்தியா இறக்குமதி செய்யும் சமையல் எரிவாயு (LPG) பெரும்பாலும் வீடுகளில் பயன்படுத்தப்படுவதால், இந்தியா இந்த விஷயத்தில் அதிக பாதிப்புக்குள்ளாகும் நிலையில் உள்ளது. இந்தியா சமையல் எரிவாயுவை இறக்குமதி செய்கிறது என்பது மட்டும் இங்குப் பிரச்சனை இல்லை. ஏனெனில், பல நாடுகளும் இதை இறக்குமதி செய்கின்றன. ஆனால், அது சமையலுக்குப் பயன்படுத்தப்படுவதால், அதை உடனடியாகத் தவிர்க்கவோ அல்லது வேறு எரிபொருளுக்கு மாற்றவோ முடியாது என்பதே உண்மையான சிக்கல் ஆகும்.
இந்தியாவின் எரிவாயு (LPG) சேமிப்பு நிலை குறித்து கூடுதல் தெளிவு தேவைப்படுகிறது. பெட்ரோலிய திட்டமிடல் மற்றும் பகுப்பாய்வு பிரிவின் (Petroleum Planning and Analysis Cell (PPAC)) அறிக்கையின்படி, இறக்குமதி முனையங்கள், சிலிண்டர் நிரப்பும் நிலையங்கள் மற்றும் சுத்திகரிப்பு ஆலைகள் ஆகியவற்றில் சுமார் 15 நாட்களுக்குத் தேவையான எரிவாயு இருப்பு உள்ளது. இருப்பினும், அவசர காலத்திற்காக நிலத்தடியில் சேமித்து வைக்கப்பட்டுள்ள உண்மையான இருப்பு வெறும் 1,40,000 டன்கள் மட்டுமே உள்ளன. இதில் விசாகப்பட்டினத்தில் 60 ஆயிரம் மெட்ரிக் டன்களும் (60 TMT), மங்களூருவில் 80 ஆயிரம் மெட்ரிக் டன்களும் (80 TMT) உள்ளன. இது ஒட்டுமொத்த நாட்டின் ஒரு நாள் தேவைக்கும் சற்று அதிகமானது (சுமார் 1.5 நாட்கள்) மட்டுமே ஆகும். அதாவது, தற்போதைய தேவைக்கான விநியோகம் ஓரளவு இருந்தாலும், இந்தியாவைப் போன்ற ஒரு பெரிய நாட்டிற்கு நீண்டகாலப் பாதுகாப்பிற்கான அவசரக்கால இருப்பு என்பது இன்னும் மிகக்குறைவாகவே உள்ளது.
மேலும் ஒரு முக்கியமான விஷயத்தைக் கவனிக்க வேண்டும். இந்தியா LPG எரிவாயுவை ஒரு சுதந்திரமான மற்றும் திறந்த நிலையில் உள்ள உலக சந்தையில் இருந்து வாங்கவில்லை. ஏற்றுமதிக்குக் கிடைக்கக்கூடிய எரிவாயுவின் அளவு மிகவும் குறைவாகவே உள்ளது. அந்த அளவையும் ஏற்கனவே சில ஆசிய நாடுகள் பெரும்பாலும் ஒப்பந்தம் செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
உண்மையைச் சொல்லப்போனால், ஆசியாவின் நான்கு நாடுகள் மட்டுமே உலகின் ஏற்றுமதி செய்யக்கூடிய LPG எரிவாயுவில் பாதியைக் காட்டிலும் சற்று அதிகமாகப் பயன்படுத்துகின்றன. மீதமுள்ள கையிருப்பும் தாராளமாகக் கிடைப்பதில்லை, ஏனெனில் அது ஏற்கனவே பெட்ரோலிய வேதிப் பொருட்களின் உற்பத்தி, சமையல், வெப்பமூட்டுதல் மற்றும் வாகன எரிபொருள் போன்ற தேவைகளுக்குப் பயன்படுத்தப்படுகிறது. இதன் காரணமாக, வளைகுடா நாடுகளில் இருந்து கிடைக்கும் எரிபொருள் விநியோகத்தில் நீண்டகாலத்திற்கு பாதிப்பு ஏற்பட்டால், உலகளாவிய சந்தையில் அதன் தட்டுப்பாடு மிக வேகமாக அதிகரிக்கும் என்கின்றனர்.
இந்தியா செய்ய வேண்டியது என்ன?
இந்தியா தனக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகளை எப்படிக் குறைக்க முடியும்?
முதலாவதாக, சமையல் எரிவாயுவை (LPG) ஒரே பொதுவான கையிருப்பில் இருந்து பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். தற்போதைய தட்டுப்பாட்டினபோது, புரோப்பேன் (Propane) மற்றும் பியூட்டேன் (Butane) ஆகியவற்றை பெட்ரோலிய வேதிப் பொருட்கள் உற்பத்தி அல்லது எரிபொருள் கலப்பிற்கு பயன்படுத்தாமல், முக்கியமாக சமையல் எரிவாயுவிற்காக மட்டுமே பயன்படுத்துமாறு எண்ணெய் நிறுவனங்களுக்கு இந்தியா ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது. இந்த நடைமுறை தொடர வேண்டும். உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் சமையல் எரிவாயு மற்றும் சுத்திகரிப்பு நிலையங்களில் கிடைக்கும் புரோப்பேன்/பியூட்டேன் ஆகியவற்றை முதலில் வீடுகளின் தேவைக்காக ஒதுக்கீடு செய்யவேண்டும். தொழிற்சாலைகள் தங்களுக்குத் தேவையான எரிவாயுவை தாங்களே இறக்குமதி செய்து கொள்ள வேண்டும். இதன் மூலம், வீட்டு உபயோகத் தேவைகளுக்கும் தொழிற்சாலைத் தேவைகளுக்கும் ஒரே கையிருப்பில் இருந்து மேலாண்மை செய்ய வேண்டிய கட்டாயம் அரசாங்கத்திற்கு ஏற்படாது.
இரண்டாவதாக, இந்தியா தனது சமையல் எரிவாயு (LPG) இருப்பை இன்னும் அதிகப்படுத்த வேண்டும். முதற்கட்டமாக, வீடுகளுக்கு இரண்டு முதல் மூன்று வாரங்களுக்குத் தேவையான சமையல் எரிவாயுவைச் சேமித்து வைப்பது சரியாக இருக்கும். தற்போதைய தேவையின் அடிப்படையில் பார்த்தால், 14 நாட்களுக்கு சுமார் 13 லட்சம் டன்களும், 21 நாட்களுக்கு சுமார் 19 லட்சம் டன்களும் இருப்பு தேவைப்படும். இது இந்தியாவின் தற்போதைய சேமிப்புத் திறனைவிட மிக அதிகம் என்றாலும், எதிர்பாராத நெருக்கடிகளைச் சமாளிக்கத் தேவையான குறைந்தபட்ச அளவாக இருக்கும் என்கின்றனர்.
மூன்றாவதாக, இந்தியா நகர்ப்புறம் மற்றும் புறநகர் பகுதிகளில் மின்சார அடுப்புகளின் பயன்பாட்டை ஊக்குவிக்க ஒரு நீண்டகாலப் பிரச்சாரத்தை முன்னெடுக்க வேண்டும். இது ஒரு குறுகிய கால முயற்சியாக இல்லாமல் தொடர்ச்சியான ஒன்றாக இருக்க வேண்டும். நம்பகமான மின்சார வசதி, சரியான மின் இணைப்புகள் மற்றும் மின்சார அடுப்புகளை (Induction stoves) பயன்படுத்த வாய்ப்புள்ள வீடுகள், சமையல் எரிவாயு (LPG) பயன்பாட்டிலிருந்து மின்சார அடுப்பு பயன்பாட்டிற்கு மாற ஊக்குவிக்கப்பட வேண்டும். இதற்காக, வாடிக்கையாளர்கள் சமையல் எரிவாயு மானியத்தை விட்டுக்கொடுக்கும் "Give it up 2.0" என்ற புதிய முயற்சியை அறிமுகப்படுத்த வேண்டும்.
இதன் நோக்கம் மிகவும் எளிமையானது: சமையல் எரிபொருளுக்காக LPG சிலிண்டர்களை மட்டுமே நம்பியிருக்கும் குடும்பங்களின் எண்ணிக்கையைக் குறைப்பதே ஆகும். மக்கள் அடர்த்தி அதிகம் உள்ள பகுதிகளில் குழாய் மூலம் விநியோகிக்கப்படும் இயற்கை எரிவாயு (Piped Natural Gas (PNG)) திட்டத்தை விரிவுபடுத்த முடியும் என்கின்றனர். ஆனால், மின்சார பயன்பாடு மூலமான சமையல் முறை என்பது இன்னும் பரவலான தீர்வை வழங்குகிறது.
உள்நாட்டு உற்பத்தியைவிடத் தேவை அதிகமாக இருப்பது, இறக்குமதிக்கு ஒரே ஒரு வழித்தடத்தை மட்டுமே அதிகம் சார்ந்திருப்பது மற்றும் வீட்டு உபயோகத் தேவைகளுக்காக மட்டுமே LPG எரிவாயுவை அதிகளவில் பயன்படுத்தப்படுவது ஆகிய அடிப்படைச் சமநிலையின்மையை மாற்றாதவரை, இந்தியாவின் எரிவாயுத் தட்டுப்பாடு நீடிக்கவே செய்யும். இதற்குத் தீர்வு என்பது வெறும் எரிவாயுவை மட்டும் அதிக அளவில் வாங்குவது அல்ல; மாறாக, உள்நாட்டு உற்பத்தியில் வீட்டு உபயோகத் தேவைகளுக்கு முன்னுரிமை அளித்தல், பெட்ரோலிய வேதிப் பொருட்கள் பயன்பாட்டைப் பிரித்தல், சேமிப்பு வசதிகளை அதிகரித்தல் மற்றும் சமையலுக்கு LPG எரிவாயுவை மட்டுமே சார்ந்திருப்பதை படிப்படியாகக் குறைத்தல் போன்ற கொள்கைரீதியான மாற்றங்களே அவசியமாகிறது.
இந்தியாவின் சமையல் எரிவாயு (LPG) தொடர்பான பிரச்சனை என்பது ஒரு தற்காலிகத் தட்டுப்பாடு அல்ல. இது நாட்டின் உற்பத்தி அளவுக்கும், மக்களின் அன்றாட வீட்டு உபயோகத் தேவைக்கும் இடையே நீண்டகாலமாக இருந்து வரும் ஒரு சமநிலையின்மையாகும். அதனால்தான், இந்த விநியோக முறையில் ஒரு முறையான மாற்றத்தைக் கொண்டு வராதவரை, சீரற்ற நிலையில் இருக்கும் சமையல் எரிவாயுவின் தேவை நாட்டின் ஒரு நிரந்தரப் பலவீனமாகவே தொடரும் என்கின்றனர்.
ஸ்ரீகாந்த் மாதவ் வைத்யா, ‘Indian Oil Corporation Ltd’ நிறுவனத்தின் முன்னாள் தலைவரும், ஒரு சிறந்த எரிசக்தி வியூக நிபுணரும் ஆவார்.
Original Link: The strategic vulnerability in India’s LPG supply model.