இந்தியாவின் முதல் 3D சிப் பேக்கேஜிங் ஆலை ஒடிசாவில் தொடங்கப்பட்டது. ஆலை ஏன் முக்கியத்துவம் பெறுகிறது? 3D கண்ணாடி குறைமின்கடத்தி தொழில்நுட்பம் என்றால் என்ன மற்றும் குறைமின்கடத்திகள் ஏன் முக்கியத்துவம் வாய்ந்தவை?
தற்போதைய செய்தி :
இந்தியாவின் வளர்ந்துவரும் குறைமின்கடத்தித்துறையின் இலக்குகளுக்கு ஊக்கமளிக்கும் வகையில், ஒடிசா முதலமைச்சர் மோகன் சரண் மாஜி மற்றும் ஒன்றிய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆகியோர் புவனேஸ்வரில் இந்தியாவின் முதல் மேம்பட்ட 3D சிப் பொதியிடும் ஆலைக்கு அடிக்கல் நாட்டினர். இந்தச் சூழலில், 3D கண்ணாடி குறைமின்கடத்தித் தொழில்நுட்பத்தைப் பற்றி அறிந்துகொள்வோம்.
ஏறத்தாழ அனைத்து மின்னணுச் சாதனங்களிலும் பயன்படும் குறைமின்கடத்திகள் (Semiconductors) தற்போது ‘புதிய எண்ணெய்’ (New Oil) போல முக்கியத்துவம் பெற்று வருவதாலும், அவற்றின் உற்பத்தி மற்றும் விநியோக வலைப்பின் ஒரு பங்கைத் தமதாக்கிக்கொள்ளும் நாடுகள் ஒன்றுடன் ஒன்று போட்டியிட்டு வருவதாலும், குறைமின்கடத்திகள் குறித்தும் அவற்றின் முக்கியத்துவம் குறித்தும் அறிந்துகொள்வது முக்கியமானதாகும்.
முக்கிய அம்சங்கள்:
1. இந்தத்திட்டமானது, அமெரிக்காவைச் சேர்ந்த 3D Glass Solutions Inc நிறுவனத்தால், இந்தியத் துணை நிறுவனமான Heterogeneous Integration Packaging Solutions Pvt Ltd மூலம் செயல்படுத்தப்படுகிறது. இதற்கு Intel உள்ளிட்ட நிறுவனங்கள் நிதியுதவி அளிக்கின்றன. Intel நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி லிப்-பு டான் இந்த விழாவில் காணொளி வாயிலாகக் கலந்துகொண்டார்.
2. கடந்த ஆண்டு இந்திய குறைமின்கடத்தி இயக்கத்தின் (India Semiconductor Mission (ISM)) கீழ் ரூ.1,934 கோடி மதிப்பிலான திட்டத்திற்கு ஒப்புதல் பெற்ற இந்த ஆலை, ஆண்டுக்கு 70,000 கண்ணாடி பேனல்களையும், 5 கோடி ஒருங்கிணைக்கப்பட்ட அலகுகளையும் உற்பத்தி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது என்று முதலமைச்சர் மோகன் சரண் மாஜி கூறினார். மாநிலத்தில் இந்திய குறைமின்கடத்தி இயக்கத்தின் கீழ் ஒப்புதல் பெற்ற இரண்டு ஆலைகளில் இதுவும் ஒன்றாகும் என்றும், 13,000 மேம்பட்ட 3DHI தொகுதிகளையும் பெற்றுள்ளது என்றும் மாஜி குறிப்பிட்டார்.
குறைமின்கடத்திக்கான இந்திய-அமெரிக்க கூட்டாண்மை
2024-ஆம் ஆண்டு செப்டம்பர் 9 அன்று, குறைமின்கடத்தி விநியோகச் சங்கிலி வாய்ப்புகளை ஆராய்வதற்காக இந்தியாவுடன் ஒரு "புதிய கூட்டாண்மையை" அமெரிக்கா அறிவித்தது. இதில், இந்தியாவின் தற்போதைய குறைமின்கடத்திச் சூழலமைப்பு, ஒழுங்குமுறைக் கட்டமைப்பு, பணியாளர்கள் மற்றும் உள்கட்டமைப்புத் தேவைகள் ஆகியவற்றின் "விரிவான மதிப்பீடு" அடங்கும்.
முப்பரிமாண கண்ணாடி குறைமின்கடத்தி தொழில்நுட்பம் (glass semiconductor technology) என்றால் என்ன?
1. 3D கண்ணாடி குறைமின்கடத்தி தொழில்நுட்பம் என்பது, மின் கூறுகளின் உயர் செயல்திறன் கொண்ட முப்பரிமாண ஒருங்கிணைப்பை மேம்படுத்துவதற்காக, முக்கியத்துவம் வாய்ந்த கண்ணாடித் தளங்களைப் பயன்படுத்தும் ஒரு மேம்பட்ட சிப் செயல்முறையாகும்.
2. பாரம்பரிய சிலிக்கானைப் போல் இல்லாமல், கண்ணாடியானது மேம்பட்ட ரேடியோ அதிர்வெண் செயல்திறன், குறைந்த மின் இழப்பு மற்றும் செயலற்ற கூறு ஒருங்கிணைப்பிற்கான மேம்பட்ட வெப்ப நிலைத்தன்மை ஆகியவற்றை வழங்குகிறது. புவனேஸ்வரில் உள்ள ஆலை இந்த சிப்களை ஒருங்கிணைத்து பொதிப்படுத்தும் (package).
குறைமின்கடத்திகள் என்றால் என்ன, அதன் முக்கியத்துவம் என்ன?
1. தற்கால குறைமின்கடத்திகளில் பெரும்பாலானவை ஒருங்கிணைந்த சுற்றுகள் (Integrated Circuits) ஆகும். இவை குறைமின்கடத்தி 'சிப்கள்' என்றும் என்றும் அழைக்கப்படுகின்றன. அடிப்படையில் இவை டிரான்சிஸ்டர்கள், டையோடுகள், மின்தேக்கிகள், மின்தடையங்கள் மற்றும் அவற்றுக்கிடையேயான எண்ணற்ற இணைப்புகளைக் கொண்ட மிகச்சிறிய மின்னணு சுற்றுகளின் தொகுப்பாகும். இவை சிலிக்கான் தகட்டின் மீது அடுக்கப்பட்டிருக்கும்.
2. குறைமின்கடத்திகள், கடத்திகளுக்கும் மின்காப்பான்களுக்கும் இடையில் ஒரு முக்கிய இடத்தைப் பெற்றுள்ளன. தாமிரம் போன்ற கடத்திகள் மின்சாரத்தை எளிதாக கடத்த அனுமதிக்கின்றன. கண்ணாடி போன்ற மின்காப்பான்கள் அதைத் தடுக்கின்றன. ஆனால், குறைமின்கடத்திகள் கட்டுப்படுத்தப்பட்ட கடத்தும்திறனை வெளிப்படுத்துகின்றன.
3. குறைமின்கடத்திகள் அவற்றின் இயல்பு நிலையில் மின்சாரத்தை பலவீனமாகக் கடத்துகின்றன. அவற்றுடன் சில குறிப்பிட்ட பொருட்கள் சேர்க்கப்பட்டு, ஒரு மின்புலம் (electric field) செலுத்தப்படும்போது, மின்னோட்டம் பாயத் தொடங்கலாம். எடுத்துக்காட்டாக, சிலிக்கான் மற்றும் ஜெர்மானியம் போன்ற குறைமின்கடத்திப் பொருட்களுடன் பாஸ்பரஸைச் சேர்ப்பது, எதிர் மின்னோட்டம் பாய்வதற்கு வழிவகுக்கிறது.
4. குறைமின்கடத்திகள் மின்னணு சாதனங்களின் முக்கிய அங்கமாகும். இவை தகவல் தொடர்பு, கணினி, சுகாதாரம், இராணுவம், போக்குவரத்து, தூய்மையான ஆற்றல் போன்ற துறைகளின் முன்னேற்றத்திற்கு உதவுகின்றன. தரவுகளைச் செயலாக்கவும், சேமிக்கவும், அனுப்பவும் மின்னணு சாதனங்களுக்குத் தேவையான முக்கியச் செயல்பாடுகளை வழங்கும் இவை, வடிவமைப்பதற்கும் தயாரிப்பதற்கும் மிகவும் சிக்கலான தயாரிப்புகளாகும்.
விக்ரம் 3201 என்றால் என்ன?
1. ஒன்றிய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், செப்டம்பர் 2 அன்று நடைபெற்ற செமிகான் இந்தியா 2025 நிகழ்ச்சியில், இந்தியாவின் முதல் முழுமையான உள்நாட்டு நுண்செயலியுடன் ஒரு வகை குறைமின்கடத்தி சில்லுவை (chip) பிரதமர் நரேந்திர மோடியிடம் வழங்கினார்.
2. விக்ரம் 3201 என்று அழைக்கப்படும் இந்த சில்லு, இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (Indian Space Research Organisation (ISRO)) குறைமின்கடத்தி ஆய்வகத்தால் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் குறைமின்கடத்தி இயக்கம்
1. இந்திய குறைமின்கடத்தி இயக்கம்: இந்தியாவின் குறைமின்கடத்தி இயக்கம் 2021-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. இது உள்நாட்டு குறைமின்கடத்தித் தொழில்துறையை மேம்படுத்துவதற்காக இந்திய அரசால் மேற்கொள்ளப்பட்ட ஒரு இராஜதந்திர முன்னெடுப்பாகும்.
உள்நாட்டில் குறைமின்கடத்தி வடிவமைப்பு மற்றும் உற்பத்தித் திறன்களை மேம்படுத்துவதும், புத்தாக்கம், வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிப்பதும் இதன் முக்கிய நோக்கமாகும்.
இந்திய குறைமின்கடத்தி இயக்கம், மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (Ministry of Electronics and Information Technology (MeitY)) மற்றும் பிற தொடர்புடைய அரசு அமைப்புகளின் வழிகாட்டுதலின்கீழ் செயல்படுகிறது.
2. செமிகான் இந்தியா (Semicon India Programme) திட்டம்: குறைமின்கடத்திகள், காட்சித் திரை உற்பத்தி மற்றும் வடிவமைப்புச் சூழலமைப்புகளில் முதலீடு செய்யும் நிறுவனங்களுக்கு நிதியுதவி அளிப்பதற்காக, அரசாங்கம் 'செமிகான் இந்தியா' திட்டத்தைத் தொடங்கியுள்ளது. இந்த திட்டம் நாட்டில் குறைமின்கடத்தி மற்றும் காட்சித் திரை உற்பத்திச் சூழலமைப்பை மேம்படுத்த உதவும்.
செமிகான் இந்தியா திட்டத்தின்கீழ் பின்வரும் நான்கு திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன:
(i) இந்தியாவில் குறைமின்கடத்தி உற்பத்தி ஆலைகளை அமைப்பதற்கான திருத்தப்பட்ட திட்டம்.
(ii) இந்தியாவில் காட்சி ஆலைகளை (Display Fabs) அமைப்பதற்கான திருத்தப்பட்ட திட்டம்.
(iii) இந்தியாவில் கூட்டு குறைமின்கடத்திகள் / சிலிக்கான் ஒளியியல் / உணரி உற்பத்தி ஆலை மற்றும் குறைமின்கடத்தி ஒருங்கிணைப்பு, சோதனை, குறியிடல் மற்றும் பொதியிடல் (Assembly, Testing, Marking and Packaging (ATMP)) / வெளி ஒப்பந்த குறைமின்கடத்தி ஒருங்கிணைப்பு மற்றும் சோதனை (Outsourced Semiconductor Assembly and Test (OSAT)) வசதிகளை அமைப்பதற்கான திருத்தப்பட்ட திட்டம்
(iv) செமிகான் இந்தியா எதிர்கால வடிவமைப்பு: வடிவமைப்பு சார்ந்த ஊக்கத்தொகை (Design Linked Incentive (DLI)) திட்டமாகும்.
Original Link: India’s First 3D Chip Packaging Plant — Technology and Semiconductors .