புதிய மொத்த உள்நாட்டு உற்பத்தி கணக்கீட்டு முறையில், மொத்த விற்பனை விலை குறியீட்டின் தாக்கம். -ஆர் கோபாலன் மற்றும் எம்சி சிங்கி

மொத்த விற்பனை விலை குறியீடு (Wholesale Price Index (WPI)), காலாவதியான ஒரு அடிப்படை ஆண்டை பயன்படுத்துவதால், அது பணவீக்கத்தின் உண்மையான அளவைக் குறைத்துக் காட்டுவதோடு பொருளாதார வளர்ச்சி விகிதத்தைக் கணக்கிடும் காரணியையும் பாதிக்கிறது.


2022–23 ஆம் ஆண்டை அடிப்படை ஆண்டாகக் கொண்டு வெளியிடப்பட்டுள்ள புதிய மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) புள்ளிவிவர வரிசையில், பயன்படுத்தப்பட்டுள்ள பணவீக்கக் காரணிகள் (Deflators) துல்லியமானவைதானா என்ற சந்தேகம் எழுகிறது. காலாவதியான மொத்த விற்பனை விலை குறியீட்டை (WPI) அடிப்படையாகக் கொள்வதால் ஏற்படும் பிழைகள், இந்த புதிய புள்ளிவிவர வரிசையிலும் தொடர்வதாகத் தெரிகிறது.


2022–23-ஆம் ஆண்டின் தேசிய கணக்கு புள்ளிவிவரங்கள் (National Accounts Statistics (NAS)) வரிசையானது 'இரட்டை விலைக்குறைப்பு' (Double Deflators) முறையைப் பயன்படுத்துகிறது. ஆனால் 2011–12-ஆம் ஆண்டு வரிசையில் 'ஒற்றை விலைக்குறைப்பு' (Single Deflators) முறையே பயன்படுத்தப்பட்டது. இருப்பினும், சரியான பணவீக்கக் காரணிகளைத் தேர்ந்தெடுப்பதில் உள்ள சிக்கல் இன்னும் நீடிக்கிறது, இதற்கு முக்கியக் காரணம் மொத்த விற்பனை விலை குறியீடு (WPI) ஆகும்.


முந்தைய தொடர்களைப் போலவே, 2022-23 தேசிய கணக்கு புள்ளிவிவரங்கள் (National Accounts Statistics - NAS) வெவ்வேறு பொருட்களின் விலை மாற்றத்தைச் சரிசெய்ய, மொத்த விற்பனை விலை குறியீடு (WPI) மற்றும் நுகர்வோர் விலை குறியீடு (CPI) ஆகிய இரண்டையும் பயன்படுத்துகின்றன. மொத்த மதிப்புக் கூட்டலில் 50 சதவீதத்திற்கும் அதிகமானவற்றிற்கு மொத்த விற்பனை விலை குறியீடு (WPI) பயன்படுத்தப்படுகிறது. இருப்பினும், 2011-12-ஆம் ஆண்டை அடிப்படை ஆண்டாகக் கொண்ட மொத்த விற்பனை விலை குறியீடு (WPI), ஒரு நிலையான பொருட்களின் பட்டியலையும் அடிப்படையையும் கொண்டுள்ளது. இதனால், காலம் செல்லச் செல்ல அது சந்தையின் உண்மையான நிலையைப் பிரதிபலிக்கும் தன்மையை இழக்கிறது.


தொழில்துறை உற்பத்தி குறியீடு (Index of Industrial Production (IIP)) குறித்த பல்வேறு ஆய்வுகள் ஒரு உண்மையை வெளிப்படுத்தியுள்ளன. நிலையான அடிப்படை ஆண்டு (Fixed Base Year) மற்றும் நிலையான பொருட்கள் பட்டியல் (Fixed Basket) கொண்ட இத்தகைய குறியீடுகள் பழையதாகும்போது, அவை உண்மையான வளர்ச்சி விகிதத்தைவிட குறைவான அளவையே காட்டுகின்றன. எனவே, இதுபோன்ற குறியீட்டுத் தொடர்களை ஒவ்வொரு ஐந்து ஆண்டுகளுக்கும் ஒருமுறை மாற்றியமைக்க வேண்டும். மேலும், அந்த மாற்றங்கள் எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு சீக்கிரம் நடைமுறைக்கு வரவேண்டும். ஆனால், மொத்த விற்பனை விலை குறியீடு (WPI) தொடர்பாக இது போன்ற ஆய்வுகள் எதுவும் இல்லை. ஏனெனில், அதன் தன்மைகளை ஒப்பிட்டுப் பார்ப்பதற்கு இணையான மாற்று அளவீடுகள் ஏதும் தற்போது வரை இல்லை என்கின்றனர்.


இருப்பினும், மொத்த விற்பனை விலை குறியீடு (WPI) நாட்டின் பொருளாதார நிலையை எவ்வளவு துல்லியமாகப் பிரதிபலிக்கிறது என்பதை மதிப்பீடு செய்ய இரண்டு முறைகள் பயன்படுத்தப்படுகிறது. முதலாவதாக, பொருளாதாரத்தில் கட்டமைப்பு மாற்றங்கள் தொடங்கிய 2015–16 ஆம் ஆண்டிலிருந்து, மொத்த உள்நாட்டு உற்பத்தி பணவீக்க குறியீட்டு (GDP Deflator) மதிப்பினை, மொத்த விற்பனை விலை குறியீடு (WPI) மற்றும் நுகர்வோர் விலை குறியீடு (CPI) ஆகியவற்றின் துணைப் பிரிவுகளுடன் ஒப்பிடுகின்றனர். (அட்டவணை 1).







மொத்த விற்பனை விலை குறியீட்டு போக்குகள் 


2015-16-ஆம் ஆண்டு முதல் 2020-21-ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில், அனைத்துப் பொருட்களுக்கான மொத்த விற்பனை விலை குறியீடு (WPI) மிதமான அளவிலேயே இருந்தது. பணமதிப்பிழப்பு, சரக்கு மற்றும் சேவை வரி (GST) சீர்திருத்தங்கள் மற்றும் கொரோனா பெருந்தொற்று ஆகியவை நிகழ்ந்த காலப்பகுதியையும் இது உள்ளடக்கியது. அக்காலகட்டத்தில், நாட்டின் பொருளாதார வளர்ச்சியை அளவிடும் மொத்த உள்நாட்டு உற்பத்தி பணவீக்க குறியீடு (GDP Deflator) என்பது, மொத்த விற்பனை விலை குறியீட்டிற்கும் (WPI) நுகர்வோர் விலை குறியீட்டிற்கும் (CPI) இடைப்பட்ட அளவிலேயே இருந்தது.


இருப்பினும், 2017–18-ஆம் ஆண்டில், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி பணவீக்க குறியீடு, மொத்த விற்பனை விலை குறியீடு (WPI) மற்றும் நுகர்வோர் விலை குறியீடு (CPI) ஆகிய இரண்டையும்விட அதிகமாக இருந்தது. ஆனால் 2018–19-ஆம் ஆண்டில், அவ்விரண்டிற்கும் இடைப்பட்ட அளவில் இருந்தது. முற்றுப்பெற்ற பொருட்களின் (Final goods) விலையைவிட, முதன்மைப் பொருட்கள் (Primary goods) மற்றும் இடைநிலை உற்பத்திப் பொருட்களுக்கான (Intermediate products) மொத்த விலை குறியீட்டால் (WPI) இந்த பணவீக்க குறியீடு அதிக தாக்கத்தைப் பெறுவதாகத் தெரிகிறது. இதே போன்ற ஒரு போக்கு புதிய தேசிய கணக்கு புள்ளிவிவரங்கள் (NAS) மற்றும் நுகர்வோர் விலை குறியீடு (CPI) தொடர்களிலும் காணப்படுகிறது. மேலும், முதன்மைப் பொருட்களுடன் ஒப்பிடும்போது, மூலதனப் பொருட்கள் மற்றும் நுகர்வோர் பொருட்களில் பணவீக்கம் கணிசமாகக் குறைவாகக் காட்டப்படுவதற்கான சாத்தியக்கூறுகளும் உள்ளன.


நிலையான உற்பத்தித் திறன் பயன்பாடு, நுகர்வோர் பொருட்களின் ஆயுட்காலம் குறைந்துவிட்டதையும், மக்கள் அவற்றை அடிக்கடி மாற்றுகிறார்கள் என்பதையும் உணர்த்துகிறது. இது உண்மையாக இருக்கும்பட்சத்தில், மொத்த விலை குறியீட்டு எண் (WPI) இனி பொருளாதார நிலையை முழுமையாகப் பிரதிபலிக்கும் ஒரு காரணியாக இருக்க வாய்ப்பில்லை என்கின்றனர்.


தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டுகளுக்கான மொத்த விலை குறியீட்டு (WPI) பணவீக்கம் குறித்த தரவுகள் (அட்டவணை 2) இந்தப் பிரச்சினையைத் தெளிவாக எடுத்துக் காட்டுகின்றன. 2%-க்கும் குறைவான பணவீக்கத்தைக் கொண்ட பொருட்களின் எண்ணிக்கை 2025–26 (ஏப்ரல் முதல் பிப்ரவரி வரை) காலகட்டத்தில் 447-ஆக உயர்ந்துள்ளது. 2015-2021-ஆம் ஆண்டு வரையிலான அமைப்புரீதியான மாற்றங்கள் ஏற்பட்ட காலத்தில், இந்தப் பொருட்களின் பங்களிப்பு சுமார் 63%-ஆக இருந்தது. இது கடந்த இரண்டு ஆண்டுகளைவிட அல்லது 2013-2022-ஆம் ஆண்டு வரையிலான முந்தைய காலத்தைவிட மிக அதிகமாகும். இதே போன்ற ஒரு நிலை 2025-26-ஆம் ஆண்டிலும் காணப்படுகிறது. இதிலிருந்து, கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் பொருட்களின் தொகுப்பு படிப்படியாக அதன் உண்மையான பிரதிநிதித்துவத்தை இழந்து வருவதாகத் தெரிகிறது. போதிய தரவுகள் கிடைக்காதது அல்லது பழைய விலைகளையே மீண்டும் மீண்டும் குறிப்பிடுவது இதற்கான முக்கியக் காரணமாக இருக்கலாம் என்றும் தெரிவிக்கின்றனர்.


பணவீக்கத்தின் இயக்கவியல்


எதிர்மறைப் பணவீக்கத்தைக் காட்டும் பொருட்களின் எண்ணிக்கை அதிகரிப்பதற்குக் காரணம், சில பொருட்கள் குறித்த புள்ளிவிவரங்கள் சேகரிக்கப்படுவது நிறுத்தப்பட்டதுதான் என்கின்றனர். புதிய மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) கணக்கீட்டு முறையில் (2022–23), இந்திய ரிசர்வ் வங்கி (RBI) நிர்ணயித்த இலக்கைவிட அதிக பணவீக்கம் கொண்ட பொருட்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.


இருப்பினும், 2025–26-ஆம் நிதியாண்டின் ஏப்ரல் மாதம் முதல் பிப்ரவரி மாதம் வரையிலான காலத்தில், 526 பொருட்கள் (மொத்த மதிப்பில் 93% பங்கு கொண்டவை) 2% வரை மட்டுமே பணவீக்கத்தைக் கொண்டிருந்தன. அதே சமயம், 277 பொருட்கள் (மொத்த மதிப்பில் 53%-க்கும் அதிகமான பங்கு கொண்டவை) எதிர்மறை பணவீக்கத்தைக் (விலை குறைவு) கொண்டிருந்தன. இதிலிருந்து, தேசிய கணக்கு புள்ளிவிவரங்களுக்கான (NAS) முக்கிய விலைக்குறைப்பு காரணியாக விளங்கும் மொத்த விலை குறியீட்டு எண் (WPI), தற்போதைய பொருளாதார நிலையைத் துல்லியமாகப் பிரதிபலிப்பதில்லை என்பது தெளிவாகிறது.


இதன் விளைவாக, நாட்டின் உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி (Real Gross Domestic Product growth), பணமதிப்பு அடிப்படையிலான மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியைவிட (Nominal GDP growth) சற்றே குறைவாகவே இருந்தது. மேலும், பணவீக்கத்தைக் கணக்கிடும் பணவீக்க குறியீடானது (GDP Deflator), 1 சதவீதத்திற்கும் கீழே குறைந்து ஒரு வரலாற்றுச் சரிவைச் சந்தித்துள்ளதாகக் கூறப்படுகிறது.


புதிய மொத்த விற்பனை விலை குறியீடு (WPI) முறையை விரைவாக அமல்படுத்த வேண்டும். பொருட்கள் மற்றும் பணவீக்கத்தைக் கணக்கிடும் காரணிகளை இன்னும் துல்லியமாகப் பிரதிபலிக்கும் வகையில், இதற்குப் பதிலாக விரிவான உற்பத்தியாளர் விலை குறியீடு (Producer Price Index (PPI)) முறையைக் கொண்டுவர வேண்டும். அதுவரை, புதிய தேசிய கணக்கு புள்ளிவிவரங்கள் (NAS) வரிசையானது நாட்டின் உண்மையான வளர்ச்சியை முழுமையாகப் பிரதிபலிக்காது என்கின்றனர்.


கோபாலன், பொருளாதார விவகாரங்கள் துறையின் முன்னாள் செயலாளர் ஆவார்; மற்றும் சிங்கி, நிதி அமைச்சகத்தின் முன்னாள் மூத்த பொருளாதார ஆலோசகர் ஆவார்.



Original Link: WPI effect on new GDP series.


Share: