முதல் கட்டத்தில், இது புதுச்சேரி மற்றும் லட்சத்தீவு ஆகிய இரண்டு யூனியன் பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்டது. இரண்டாம் கட்டத்தில் கடல்சார் வெளி திட்டம் செயல்படுத்திய நாட்டின் முதல் மாநிலமாக ஒடிசா திகழ்கிறது.
ஒருங்கிணைந்த கடலோர மற்றும் கடல்சார் திட்டமிடலுக்காக, மாநிலத்தில் 'கடல்சார் வெளி திட்டத்தை' (Marine Spatial Plan (MSP)) அறிமுகப்படுத்துவதற்காக, மத்திய புவி அறிவியல் அமைச்சகத்தின்கீழ் செயல்படும் 'தேசிய கடலோர ஆராய்ச்சி மையத்துடன்' (National Centre for Coastal Research (NCCR)) ஒடிசா அரசு சமீபத்தில் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
இந்தியா மற்றும் நார்வே நாடுகளின் கூட்டு முயற்சியுடன், இந்தியாவில் நிலையான கடல்சார் திட்டமிடல் பணிகள் 2019-ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகின்றன. இதன் முதல் கட்டமாக, புதுச்சேரி மற்றும் லட்சத்தீவு ஆகிய இரண்டு யூனியன் பிரதேசங்களில் இந்தப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இரண்டாம் கட்டத்தில், 'கடல்சார் வெளி திட்டமிடல்' (Marine Spatial Plan (MSP)) முறையைச் செயல்படுத்திய நாட்டின் முதல் மாநிலமாக ஒடிசா திகழ்கிறது.
கடல்சார் வெளி திட்டமிடல் (Marine Spatial Planning) என்றால் என்ன?
கடல்சார் வெளி திட்டமிடல் என்பது நீலப் பொருளாதாரத்தை மேம்படுத்துவதையும், காலநிலை மீள்திறனை வலுப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்ட, நிலையான மற்றும் ஒருங்கிணைந்த கடல் மேலாண்மைக்கான ஒரு கருவியாகும். இது ஆற்றல், துறைமுகங்கள் மற்றும் கப்பல் துறைகளை மேம்படுத்துதல், தொழிற்சாலைகளை அமைத்தல் போன்ற பொருளாதார நடவடிக்கைகள், சுற்றுச்சூழல், மீன்வளம், மீன் வளர்ப்பு மற்றும் சுற்றுலா ஆகியவற்றில் கடல் வளங்களை நிலையான முறையில் பயன்படுத்தவும், அதற்கேற்ப கொள்கைகளை வகுக்கவும் உதவுகிறது.
இந்தச் செயல்முறையின் ஒரு பகுதியாக, வல்லுநர்கள் கடற்கரைகளை ஆய்வு செய்து, சூழலியல், பொருளாதாரம் மற்றும் சமூக நோக்கங்களை அடைவதற்காக கடல்சார் பகுதிகளில் மனித நடவடிக்கைகளுக்கான இடங்களைக் குறிப்பிடுகின்றனர். இது, 2019-ல் இரு நாடுகளுக்கும் இடையே கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ் உள்ள இந்திய-நார்வே ஒருங்கிணைந்த கடல்சார் முன்முயற்சியின் ஒரு பகுதியாகும். இது, வளர்ச்சியின் 10 முக்கிய பரிமாணங்களில் ஒன்றாக நீலப் பொருளாதாரத்திற்கு ஒன்றிய அரசு அளிக்கும் முக்கியத்துவத்திற்கு ஏற்ப உள்ளது.
ஒடிசாவின் சூழல்
ஒடிசா 550 கி.மீ.க்கும் அதிகமான ஒரு நீண்ட கடற்கரையைக் கொண்டுள்ளது. மேலும், இந்தக் கடற்கரையானது காயல்கள், சதுப்புநிலக் காடுகள் மற்றும் முகத்துவாரங்களைக் கொண்டு பல்வேறு வழிகளில் வரையறுக்கப்பட்டுள்ளது. ஒடிசாவின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் சித்ரா ஆறுமுகம் அவர்களின் கூற்றுப்படி, புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, ஒடிசாவின் கடற்கரையை ஒட்டியுள்ள அனைத்துப் பெருங்கடலிலும் உள்ள நீரின் கூறுகளை 'தேசிய கடலோர ஆராய்ச்சி மையம்' (National Centre for Coastal Research (NCCR)) ஆய்வு செய்யும்.
"ஆராய்ச்சி மையம் நீருக்கு அடியில் உள்ள தாவரங்களை வரைபடமாக்கும், இது benthic வரைபடம் என்று அழைக்கப்படுகிறது. தேசிய கடலோர ஆராய்ச்சி மையம் நீரின் தன்மை, உப்புத்தன்மை, வெப்பநிலை மற்றும் பிற அம்சங்களை ஆய்வு செய்து, சுற்றுலா நடவடிக்கைகள், மீன்வளம், கடற்புற்கள் மற்றும் கடற்பாசிகள் வளர்ப்பதற்கும், பொருளாதார நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் ஏற்ற பகுதிகள் போன்ற அளவுருக்களைத் தயாரிக்கும்" என்று அவர் கூறினார். இதன் மூலம் மாநில அரசுக்கு தேவையான கொள்கைகளை உருவாக்க முடியும். இந்த முயற்சி, மாநிலத்தின் பல்வேறு கடலோரப் பகுதிகளில் உள்ள பல்வேறு பொருளாதாரத் துறைகள் மற்றும் பங்குதாரர்களின் வளர்ச்சிக்கு உதவும்.
மாநிலத்தின் கடலோர மற்றும் கடல் பகுதிகள் பல்லுயிர் வளமானவை என்றும், வாழ்வாதாரம், பொருளாதார வளர்ச்சி மற்றும் சுற்றுச்சூழல் சமநிலையில் முக்கியப் பங்கு வகிக்கும் ஏராளமான இயற்கை வளங்களை வழங்குகின்றன என்றும் ஒடிசா முதலமைச்சர் மோகன் சரண் மாஜி கூறினார். “அதிகரித்துவரும் வளர்ச்சிப் பணிகள், சுற்றுச்சூழல் பாதிப்புகள் மற்றும் துறைசார்ந்த தேவைகள் காரணமாக, கடல்சார் சூழல் அமைப்பை அறிவியல் பூர்வமாக நிர்வகிக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. 'கடல்சார் வெளி திட்டம்' (Marine Spatial Plan (MSP)) என்பது ட ஒரு சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கையாகும். இது கடல்சார் சூழல் அமைப்புகளின் பாதுகாப்பை உறுதி செய்வதோடு, மீன்வளம், சுற்றுலா, துறைமுகங்கள், கடல்சார் ஆற்றல் மற்றும் பிற துறைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்யவும் உதவும்” என்று ஒடிசா முதலமைச்சர் கூறினார்.
பிற முயற்சிகள்
ஆகஸ்ட் 2025-ல், கடல்சார் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் பொருளாதார மேம்பாட்டிற்காக உயிரித்தொழில்நுட்பப் பயன்பாட்டை ஊக்குவிக்கும் நோக்கில், ஒடிசா அரசு ஒடிசா கடல்சார் உயிரித்தொழில்நுட்ப ஆராய்ச்சி மற்றும் புத்தாக்க வழித்தடத்தை (Odisha Marine Biotechnology Research and Innovation Corridor (OMBRIC)) அறிமுகப்படுத்தியது.
கடல்சார் உயிரித்தொழில்நுட்ப புத்தொழில் நிறுவனங்கள் மற்றும் தொழில் நிறுவனங்களின் வளர்ச்சிக்கு ஆதரவளிப்பதையும், ஆராய்ச்சி, சூழலியல் பாதுகாப்பு, அறிவியல் சுற்றுலா மற்றும் கடலோர மக்களின் வாழ்வாதாரத்திற்கு உதவுவதையும் ஓம்ப்ரிக் நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த முன்னெடுப்பானது கடல்சார் வெளி திட்டமிடல் (Marine Spatial Planning) முன்னெடுப்பை வலுப்படுத்துவதற்கு உதவியாக இருக்கும்" என்று முதலமைச்சர் தெரிவித்தார்.
Original Link: Odisha becomes first state to launch Marine Spatial Plan. Here is what to know.