உலகளாவிய காலநிலை மாற்றக் குறியீடுகள் திட்டம் என்பது என்ன? - பிரியா குமாரி சுக்லா

 முக்கிய அம்சங்கள்:


• 2025-ஆம் ஆண்டில், புவி வெப்பமயமாதலுக்கு மனித நடவடிக்கைகளின் பங்களிப்பு வரலாற்றிலேயே மிக அதிகமாக இருந்திருக்கலாம். இருப்பினும், இயற்கையான காலநிலை மாற்றங்கள் ஆண்டுக்கு ஆண்டு மாறுபடுகின்றன. 2025-ஆம் ஆண்டு ஒரு 'லா நினா' (La Niña) ஆண்டாகும். இந்த நேரத்தில் தென்அமெரிக்காவின் மேற்கு கடற்கரைக்கு அருகிலுள்ள பூமத்திய ரேகை பசிபிக் பெருங்கடல் (Equatorial Pacific Ocean) வழக்கத்தைவிட குளிர்ச்சியாக இருந்தது.        'லா நினா' பொதுவாக பூமிக்கு ஒரு குளிர்ச்சியான விளைவை ஏற்படுத்துவதால், மனிதர்களால் ஏற்படும் வெப்பமயமாதல் மோசமான அளவை எட்டிய போதிலும், 2023 மற்றும் 2024 ஆகிய ஆண்டுகளைவிட 2025-ஆம் ஆண்டு ஏன் சற்று குறைவான வெப்ப அளவு பதிவாகி இருந்தது என்பதை விளக்கக்கூடும்.


• ஜெர்மனியில் தற்போது நடைபெற்றுவரும் காலநிலை மாநாட்டில், 2035-ஆம் ஆண்டிற்குள் ஒட்டுமொத்த உலகளாவிய ஆற்றல் நுகர்வில் (Final energy consumption) மின்சாரத்தின் பங்கு குறைந்தது 35%-ஆக இருப்பதை உறுதிசெய்ய வேண்டும் என்ற உலகளாவிய அர்ப்பணிப்புக்கான ஒரு முன்மொழிவு வைக்கப்பட்டுள்ளது. தற்போது, உலகளாவிய ஆற்றல் பயன்பாட்டில் மின்சாரத்தின் பங்கு சுமார் 20%-ஆக மட்டுமே உள்ளது. நிலக்கரி மற்றும் கச்சா எண்ணெய் போன்ற பெட்ரோலிய எரிபொருட்களிலிருந்து மாறுவதற்கான ஒரு முக்கியமான நடவடிக்கையாகப் பார்க்கப்படுகிறது.


• பசுமை இல்ல வாயுக்களின் அதிக அளவிலான வெளியேற்றத்தின் காரணமாக, மனித நடவடிக்கைகளால் ஏற்படும் புவி வெப்பமயமாதலானது             10 ஆண்டுகளுக்கு சுமார் 0.27°C என்ற வீதத்தில் அதிகரித்து வருவதாக உலகளாவிய காலநிலை மாற்றக் குறியீடுகள் (Indicators of Global Climate Change (IGCC)) ஆய்வு தெரிவித்துள்ளது. மேலும், 2025-ஆம் ஆண்டில் பசுமை இல்ல வாயுக்களின் வெளியேற்றம் 56.8 பில்லியன் டன்களாக உயர்ந்து, வரலாற்றிலேயே மிக உயர்ந்த அளவை எட்டியுள்ளதாக அந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.


• ஜெர்மனியின் பான் (Bonn) நகரில் ஆண்டுதோறும் நடைபெறும், ஆண்டின் இடைக்காலக் காலநிலை பேச்சுவார்த்தையின்போது இந்த உலகளாவிய காலநிலை மாற்றக் குறியீடுகள் (IGCC) ஆய்வு அறிக்கை வெளியிடப்படுகிறது. கடந்த ஆண்டு 2015-ஆம் ஆண்டின் பாரிஸ் ஒப்பந்தத்திலிருந்து (Paris Agreement) அமெரிக்கா விலகியதை அடுத்து, காலநிலை மாற்றத்திற்கான உலகளாவிய நடவடிக்கைகளில் பெரிய பின்னடைவு ஏற்பட்டது. தற்போதைய இந்த விவாதங்கள், அந்த நடவடிக்கைகளை மீண்டும் தீவிரப்படுத்துவதை முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளன. ஏனெனில், பசுமை இல்ல வாயு உமிழ்வை பெருமளவில் குறைக்க வேண்டிய அவசரத் தேவைக்கு ஏற்ப, உலக நாடுகளின் முயற்சிகள் போதுமானதாக இல்லை என்றும் கூறப்படுகிறது.


• உலகளாவிய வெப்பநிலை மிக வேகமாக உயர்ந்து வருவது குறித்து உலகளாவிய காலநிலை மாற்றக் குறியீடுகள் (IGCC) ஆய்வின் முடிவுகள் மற்றொரு எச்சரிக்கையை விடுத்துள்ளன. கடந்த மாதம், உலக வானிலை அமைப்பு (World Meteorological Organization (WMO)) வெளியிட்ட ஆய்வில், 2024-ஆம் ஆண்டைப் போலவே, 2026 மற்றும் 2030-ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் குறைந்தது ஒரு ஆண்டாவது 1.5°C என்ற உலக வெப்பநிலை உயர்வின் வரம்பைத் தாண்டுவதற்கு 91%-வாய்ப்பு உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த ஐந்தாண்டு காலத்தின் சராசரி வெப்பநிலை, 1850-1900 காலகட்டத்தின் அடிப்படை வெப்பநிலையோடு ஒப்பிடும்போது 1.5°C-க்கு மேல் நீடிப்பதற்கு 75% வாய்ப்பு உள்ளதாகவும் இந்த ஆய்வில் மதிப்பிடப்பட்டுள்ளது.


உங்களுக்குத் தெரியுமா?


• உலகளாவிய காலநிலை மாற்றக் குறியீடுகள் (IGCC) திட்டமானது, காலநிலை மாற்றத்திற்கான அரசாங்கங்களுக்கு இடையேயான குழுவின் மதிப்பீடுகளின் அடிப்படையில், முக்கிய காலநிலை குறியீடுகள் குறித்த வருடாந்திரப் புதுப்பிப்புகளை வழங்குகிறது. இத்திட்டம் காலநிலை மாற்றத்தில் மனித நடவடிக்கைகளின் தாக்கம், புவி வெப்பமயமாதல் விகிதம் மற்றும் மீதமுள்ள உமிழ்வு வரம்பு (carbon budget) ஆகியவற்றைத் தொடர்ந்து கண்காணிக்கிறது. இதன் மூலம் பெரிய அறிவியல் அறிக்கைகளுக்கு இடையே ஏற்படும் கால இடைவெளியை நிரப்ப உதவுகிறது.


• முதன்முதலில் 2023-ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட உலகளாவிய காலநிலை மாற்றக் குறியீடுகள் (IGCC) ஆய்வு என்பது, தன்னிச்சையான சர்வதேச காலநிலை விஞ்ஞானிகள் குழுவின் ஒரு கூட்டு முயற்சியாகும். இக்குழுவில், காலநிலை மாற்றம் குறித்த தங்களின் குறிப்பிட்ட கால இடைவெளியிலான அறிக்கைகளுக்காக மிகவும் அதிகாரப்பூர்வமான அமைப்பாகக் கருதப்படும், காலநிலை மாற்றத்திற்கான அரசாங்கங்களுக்கு இடையேயான குழுவில் பங்களித்த பல வல்லுநர்களும் இடம்பெற்றுள்ளனர்.


• உலகளாவிய காலநிலை மாற்றாக குறியீட்டு (IGCC) அமைப்பின் சமீபத்திய ஆய்வின்படி, 1850-1900 காலகட்டத்தின் அடிப்படை வெப்பநிலையுடன் ஒப்பிடும்போது, 2025-ஆம் ஆண்டில் உலகளாவிய சராசரி வெப்பநிலை சுமார் 1.39°C அதிகமாக இருந்தது. இந்த மொத்த வெப்ப உயர்வில், 1.37°C உயர்விற்கு மனிதர்களின் செயல்பாடுகளே, முக்கியமாக பசுமை இல்ல வாயு உமிழ்வுதான் காரணம் என்றும், மீதமுள்ள உயர்வு காலநிலை அமைப்புகளில் ஏற்படும் இயற்கையான மாற்றங்களால் ஏற்பட்டிருக்கலாம் என்றும் அந்த ஆய்வில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


• நிபுணர்களால் மதிப்பாய்வு செய்யப்பட்டு, அனைவருக்கும் இலவசமாகக் கிடைக்கக்கூடிய 'Earth System Science Data' என்ற ஆய்விதழில் வெளியிடப்பட்ட இந்த உலகளாவிய காலநிலை மாற்றக் குறியீட்டு (IGCC) ஆய்வு, உலக வானிலை அமைப்பின் (WMO) முந்தைய கணிப்பை உறுதிப்படுத்துகிறது. இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் உலக வானிலை அமைப்பு (WMO) வெளியிட்ட தகவலில், 2023 மற்றும் 2024 ஆகிய ஆண்டுகளுக்குப் பிறகு, 2025-ஆம் ஆண்டு வரலாற்றிலேயே மூன்றாவது மிக வெப்ப அளவு பதிவான ஆண்டாக இருக்க வாய்ப்புள்ளதாகக் கூறியிருந்தது. மேலும், 2025-ஆம் ஆண்டில் உலகளாவிய சராசரி வெப்பநிலை 1850-1900 காலகட்டத்தைவிட 1.44°C அதிகமாக இருக்கக்கூடும் என்றும் குறிப்பிட்டிருந்தது.



• வரலாற்றிலேயே மிக அதிக வெப்பம் பதிவான ஆண்டான, 2024-ஆம் ஆண்டில், வெப்பநிலை 1850-1900-ஆம் ஆண்டுகளின் சராசரியைவிட சுமார் 1.55°C அதிகமாக இருந்தது. உலகளாவிய காலநிலை மாற்றக் குறியீடுகள் (IGCC) ஆய்வின்படி, இந்த வெப்ப உயர்வில் சுமார் 1.36°C அளவிற்கு மனிதர்களின் செயல்பாடுகளே காரணமாக இருந்துள்ளன. மீதமுள்ள வெப்ப உயர்வு இயற்கை மாற்றங்களால் ஏற்பட்டது. அதேபோல 2023-ஆம் ஆண்டில், உலகளாவிய வெப்பநிலை 1850-1900-ஆம் ஆண்டுகளின் சராசரியைவிட சுமார் 1.45°C அதிகமாக இருந்தது. இதில் மனித செயல்பாடுகளின் பங்களிப்பு சுமார் 1.31°C ஆகும்.


Original article : What is the Indicators of Global Climate Change (IGCC) project? -Priya Kumari Shukla

Share: