50 ஆண்டுகளுக்கு மேல் கடந்த நிலையில், அவசரநிலைக்கு வழிவகுத்த, இந்திராகாந்திக்கு எதிரான அலகாபாத் உயர்நீதிமன்றத் தீர்ப்பை நினைவுகூர்தல். -நிகிதா மோத்தா

 ஜூன் 12 அன்று காலை, அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் 15-வது அறையில், நீதிபதி ஜக்மோகன் லால் சின்ஹா ​​பிரதமர் இந்திரா காந்தியின் தேர்தல் வெற்றியை செல்லாது என்று அறிவித்தார். இந்தத் தீர்ப்பு பல்வேறு அரசியல் நிகழ்வுகளுக்கு முக்கிய புள்ளியாக அமைந்தது. அதன் தொடர்ச்சியாக ஏற்பட்ட அரசியல் நெருக்கடியின் காரணமாக, ஜூன் 25  இரவு அவசரநிலையை  இந்திரா காந்தி அறிவித்தார்.


1975-ஆம் ஆண்டு ஜூன் 25-ஆம் தேதி நள்ளிரவில், பிரதமர் இந்திரா காந்தியின் பரிந்துரையின் பேரில், ஜனாதிபதி ஃபக்ருதீன் அலி அகமது, நாட்டின் உள்நாட்டுப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்கள் இருப்பதாகக் காரணம் காட்டி, அவசரநிலையைப் பிரகடனப்படுத்தினார். ஆனால், வரலாற்றாசிரியர்கள் இதற்கான முக்கியக் காரணியாக அமைந்தது, 1971-ஆம் ஆண்டு தேர்தலில் இந்திராகாந்தி ஊழல் செய்ததாகக் குற்றம்சாட்டிய ஒரு மனுவை உறுதிசெய்த அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் ஜூன் 12-ஆம் தேதி தீர்ப்புதான் என்கின்றனர்.


அந்தத் தீர்ப்பையும், இந்திரா காந்திக்கு எதிரான குற்றச்சாட்டுகளையும், நெருக்கடி நிலையை பற்றியும் நாம்  தெரிந்து கொள்வோம்.

பிரபலமான ‘தேர்தல் வழக்கு’


1971-ஆம் ஆண்டு ரேபரேலி நாடாளுமன்றத் தேர்தலில் இந்திரா காந்தியிடம் தோல்வியடைந்த சோசலிசத் தலைவர் ராஜ் நாராயண், அவரது வெற்றியை எதிர்த்து வழக்குத் தொடர்ந்தபோது, ​​அலகாபாத் உயர்நீதிமன்றம் உன்னிப்பாகக் கவனிக்கப்பட்ட ஒரு சட்டப் போராட்டத்திற்கான களமாக மாறியது. 'தேர்தல் வழக்கு' என்று அறியப்பட்ட அந்த மனுவில், பிரதமர் ஊழல் முறைகள் மூலமாகவும், குறிப்பாக தேர்தல் பிரச்சாரச் செலவுகளுக்கான சட்ட வரம்பை மீறியதன் மூலமாகவும், தனது பிரச்சாரத்திற்கு ஆதரவளிக்க அரசு அதிகாரிகளையும் அரசு இயந்திரத்தையும் பயன்படுத்தியதன் மூலமாகவும் தனது வெற்றியைப் பெற்றதாகக் குற்றம் சாட்டப்பட்டது.


நீதிபதி ஜக்மோகன் லால் சின்ஹா ​​முன்னிலையில் வாதங்களும் எதிர்வாதங்களும் முன்வைக்கப்பட்ட நிலையில், இந்த வழக்கு 1973 மற்றும் 1974 முழுவதும்  நடைபெற்றது.


1975-ஆம் ஆண்டு மார்ச் 19 அன்று, நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்த முதல் இந்தியப் பிரதமர் என்ற பெருமையை இந்திரா காந்தி பெற்றார். அவர் தனது தேர்தல் பிரச்சாரம் குறித்த கேள்விகளுக்குப் பதிலளிப்பதற்காக, சாட்சிக் கூண்டில் ஐந்து மணிநேரம் செலவிட்டார். தீர்ப்பு ஜூன் மாதம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.


வரலாற்றாசிரியர் ராமச்சந்திர குஹா தனது ‘இந்தியா ஆஃப்டர் காந்தி’ (2008) என்ற தனது நூலில் இவ்வாறு குறிப்பிடுகிறார்: ஜூன் 12-ஆம் தேதி காலை,  இந்திரா காந்தியின் தந்தையும் தாத்தாவும் வழக்கறிஞர்களாகப் பணியாற்றிய நீதிமன்றத்தின் அறை எண் 15-ல், நீதிபதி ஜக்மோகன் லால் சின்ஹா, மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ராஜ் நாராயண் தாக்கல் செய்திருந்த வழக்கில் தனது தீர்ப்பை வாசித்தார்.


நீதிபதி சின்ஹா, இந்திராகாந்திக்கு எதிரான 14 குற்றச்சாட்டுகளில் 12-ஐத் தள்ளுபடி செய்தார். இருப்பினும், தனது 238 பக்க தீர்ப்பில், அவர் இரண்டு குற்றச்சாட்டுகளை உறுதி செய்தார்.


முதலில், இந்திரா காந்தியின் முன்னாள் தனிச் செயலாளரான யஷ்பால் கபூர், அரசுப் பணியிலிருந்து முறைப்படி விலகுவதற்கு முன்பே அவரது தேர்தல் முகவராகச் செயல்படத் தொடங்கிவிட்டார் என்று நீதிபதி சின்ஹாநீதிபதி சின்ஹா தீர்ப்பளித்தார்.


இரண்டாவதாக, உத்தரப் பிரதேச அரசாங்க அதிகாரிகள், தேர்தல் கூட்டங்களுக்கான வசதிகளைத் தயார் செய்து, மின்சார ஏற்பாடு செய்தல் மற்றும் அவர் வாக்காளர்களிடம் உரையாற்றுவதற்கான மேடையை அமைத்தல் உள்ளிட்டவற்றின் மூலம் அவரது பிரச்சாரத்திற்கு உதவியிருந்ததை நீதிபதி சின்ஹா கண்டறிந்தார்.


இந்தக் காரணங்களின் அடிப்படையில், சின்ஹா ​​காந்தியின் 1971-ஆம் ஆண்டு தேர்தலைச் செல்லாததாக அறிவித்து, ஆறு ஆண்டுகளுக்கு அவர் தேர்தலில் போட்டியிடத் தடை விதித்தார். இருப்பினும், இந்தத் தீர்ப்பை உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய அவருக்கு 20  நாட்கள் அவகாசம் வழங்கினார்.


ஜூன் 12 தீர்ப்புக்கான எதிர்வினைகள்


அலகாபாத் உயர் நீதிமன்றத் தீர்ப்புக்கு அடுத்த நாள், எதிர்க்கட்சித் தலைவர்கள், தாங்கள் "ஊழல்வாதி" என்று அழைத்த பிரதமரை குடியரசுத் தலைவர் பதவி நீக்கம் செய்யவேண்டும் என்று கோரி, ராஷ்டிரபதி பவனுக்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்டனர்.


இருப்பினும், இந்திரா காந்தியின் ஆதரவாளர்கள் இந்தப் பிரச்சாரத்தை முறியடிக்க விரைந்து செயல்பட்டனர். ஜூன் 13 அன்றே, ஹரியானா முதலமைச்சர் பன்சிலால், காங்கிரஸ் தொண்டர்களையும் ஆதரவாளர்களையும் டெல்லிக்கு அழைத்துச் சென்று, இந்திரா காந்திக்குத் தங்கள் விசுவாசத்தைப்  வெளிப்படுத்தத் தொடங்கினார். பிரதமரின் இல்லத்திற்கு வெளியே இருந்த சாலைகள் அவரது விசுவாசிகளால் நிரம்பி வழிந்தன. அவர்கள் அவருக்கு ஆதரவாக முழக்கமிட்டதோடு, நீதிபதி சின்ஹாவின் உருவ பொம்மைகளையும் எரித்தனர் என்று குஹா குறிப்பிடுகிறார். 


தன்னைப் பதவியிலிருந்து நீக்குவதற்காக வெளிநாட்டு சக்திகள் தனது உள்நாட்டு எதிரிகளுடன் சதி செய்வதாகக் குற்றம் சாட்டி, இந்திரா காந்தி கூட்டத்தினரிடையே உரையாற்ற வெளியே வந்தார். தனது எதிரிகளிடம் "தாராளமாகப் பணம் இருக்கிறது" என்று இந்திராகாந்தி கூறினார். ஒவ்வொரு நாளும் இந்திராகாந்தியின் இல்லத்திற்கு வெளியே பல ஆதரவாளர்கள் கூடினர். அவரும் அவர்களிடம் பேசுவதற்காக வெளியே வந்தார்.


ஜூன் 20 அன்று, இந்திரா காந்தி டெல்லியின் போட் கிளப் புல்வெளியில் நடைபெற்ற மாபெரும் பேரணியில் உரையாற்றினார். தனது மகன்கள் மற்றும் மருமகள் சோனியா காந்தியுடன் இருந்த அவர், நேரு-காந்தி குடும்பத்தின் பொதுச் சேவைப் பாரம்பரியத்தை நினைவுபடுத்தி, "தனது இறுதி மூச்சு உள்ள வரை" தேசத்திற்கு சேவை செய்வதாக உறுதியளித்தார்.


உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு என்ன?


ஜூன் 23 அன்று, காந்தியின் மேல்முறையீட்டை உச்சநீதிமன்றம் விசாரிக்கத் தொடங்கியது. மறுநாள், நீதிபதி வி. ஆர். கிருஷ்ண ஐயர் அலகாபாத் தீர்ப்புக்கு நிபந்தனைத் தடை விதித்தார். பிரதமர் தொடர்ந்து நாடாளுமன்றக் கூட்டங்களில் கலந்துகொள்ளலாம். ஆனால், உச்சநீதிமன்றத்தின் முழு அமர்வும் அவரது மேல்முறையீட்டை முடிவு செய்யும் வரை அவரால் வாக்களிக்கவோ அல்லது சம்பளம் பெறவோ முடியாது என்று கூறியது.


இருப்பினும், சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், உயர்நீதிமன்றம் சுட்டிக்காட்டிய விதிமீறல்கள் தொடர்புடைய சட்டத்தின்கீழ் பட்டியலிடப்பட்டுள்ள "மிகவும் தீவிரமான தேர்தல் முறைகேடுகள்" அல்ல என்பதால், அந்தத் தீர்ப்பு இறுதியில் வலுவற்றதாக அமையக்கூடும் என்று சின்ஹா ​​குறிப்பிட்டார்.




இந்த நிலையில், இந்திரா காந்தி தற்காலிகமாகப் பதவி விலகி, வழக்கிற்கு இறுதி தீர்ப்பு வழங்கப்படும் வரை ஜக்ஜீவன் ராம் போன்ற ஒரு மூத்த நபர் இடைக்காலப் பிரதமராகப் பணியாற்ற அனுமதிக்க வேண்டும் என்று சிலர் அறிவுறுத்தினர்.


ஆனால் இது தற்காலிகமானது என்று அவர் நம்பவில்லை என்று வரலாற்றாசிரியர் கியான் பிரகாஷ் தனது 2019-ஆம் ஆண்டு அவசரநிலைக் காலக் குறிப்புகள் (Emergency Chronicles) என்ற நூலில் சுட்டிக்காட்டியுள்ளார். "தனக்கு எதிராக ஒரு சதித்திட்டம் தீட்டப்படுவதாக அவர் உறுதியாக நம்பினார். சிலியின் சால்வடார் அலெண்டேவுக்கு எதிரான ஆட்சிக்கவிழ்ப்பைச் சுட்டிக்காட்டி, அவர் அமெரிக்காவின் முக்கிய உளவு நிறுவனமான CIA மற்றும் ரிச்சர்ட் நிக்சன் மீது தனது சந்தேகத்தை வெளிப்படுத்தினர். 


அவர் பதவியில் நீடிக்க வேண்டும் என்று வலியுறுத்தியவர்களில் அவரது மகன் சஞ்சய் காந்தி, மேற்கு வங்க முதல்வர் சித்தார்த்த சங்கர் ராய், ஹரியானா முதல்வர் பன்சிலால், பல காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆகியோர் அடங்குவர்.


அடுத்தநாள் ஜூன் 25 எதிர்க்கட்சியினர் டெல்லியின் ராம்லீலா மைதானத்தில் ஒரு மாபெரும் பேரணியை நடத்தினர். அரசாங்கத்திற்கு எதிரான இயக்கத்திற்குத் தலைமை தாங்கிய ஜெயப்பிரகாஷ் நாராயண், பிரதமர் பதவி விலக வலியுறுத்தி ஜூன் 29-ஆம் தேதி முதல் ஒருவார காலப் போராட்டத்தை நடத்தப்போவதாக அறிவித்தார்.


அவசரநிலை பிரகடனம்

இதற்கிடையில், நீதிமன்றத் தடை உத்தரவைப் பெற்ற பிறகு, அவசரநிலைப் பிரகடனத்தைக் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகளை பிரதமர் வேகமாக மேற்கொண்டாதாக பிரகாஷ் எழுதியுள்ளார். 


ஜூன் 25 அன்று, உள்நாட்டு அவசரநிலையைப் பிரகடனப்படுத்தும் அவசரச் சட்டத்தை வரைவதற்கு ரே உதவினார். அந்தச் சட்டம் குடியரசுத் தலைவரிடம் சமர்ப்பிக்கப்பட்டபோது, ​​அவர் உடனடியாக அதில் கையெழுத்திட்டார். அன்றிரவு, டெல்லி முழுவதும் உள்ள செய்தித்தாள் அலுவலகங்களுக்கான மின் விநியோகம் துண்டிக்கப்பட்டதால், ஜூன் 26 அன்று காலைப் பதிப்புகள் வெளிவரவில்லை.


மறுநாள், அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டு, மக்கள் உரிமைகள் முடக்கப்பட்டிருப்பதாக அரசு கட்டுப்பாட்டில் உள்ள வானொலி நாட்டுக்கு அறிவித்தது. அதனைத் தொடர்ந்து, காவல்துறைப் பிரிவுகள் எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு எதிராக விரைந்து செயல்பட்டு, ஜெயப்பிரகாஷ் நாராயண், மொரார்ஜி தேசாய் மற்றும் பலரைக் கைது செய்தன.


உச்சநீதிமன்றம் அலகாபாத் தீர்ப்பை ரத்து செய்யும் என்று பெரும்பாலான வழக்கறிஞர்கள் நம்பினர். இருப்பினும், டெல்லியைச் சேர்ந்த ஒரு மதிப்புமிக்க சட்ட அறிஞர் கூறியதுபோல், பிரதமர் மேல்முறையீடு என்ற நீதிமன்றத்தின் வழிமுறைகளைத் கண்டுகொள்ளாமல், அதற்கு பதிலாக அவசரநிலை (Emergency) என்ற அசாதாரணமான, ஜனநாயகத்திற்கு முரணான மற்றும் அரசியலமைப்புக்கு எதிரான நடவடிக்கைகளைத் தேர்ந்தெடுத்தார்’ என்று குஹா  குறிப்பிடுகிறார்.


Original article : Over 5 decades on, recalling Allahabad HC verdict against Indira that paved way for Emergency. -Nikita Mohta

Share: