ஓமன் விரிவான பொருளாதாரக் கூட்டாண்மை ஒப்பந்தம் (CEPA) : இந்தியாவின் ஏற்றுமதிக்கு ஒரு புதிய வாய்ப்பு - ஆனந்த் கோயங்கா

 இந்த ஒப்பந்தம் ஏற்றுமதி, சேவைகள், முதலீடு மற்றும் தொழில்முறை சார்ந்த மனிதவளப் பரிமாற்றம் ஆகியவற்றை ஊக்குவிக்கிறது.


இந்தியாவும் ஓமனும் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமையான வணிக மற்றும் கடல்சார் தொடர்புகளைக் கொண்ட, மிக நீண்டகால வர்த்தக உறவைக் கொண்டுள்ளன. நறுமணப் பொருட்கள் (spices), ஜவுளி (textiles) மற்றும் நறுமணப் பிசின் (frankincense) ஆகியவற்றின் வர்த்தகம் முதல் மக்களுக்கிடையிலான நீடித்த உறவுகள் வரை, வர்த்தகம் இந்த நட்புறவின் முக்கிய அங்கமாகத் திகழ்கிறது. ஜூன் 1, 2026 அன்று நடைமுறைக்கு வந்த இந்தியா-ஓமன் விரிவான பொருளாதாரக் கூட்டாண்மை ஒப்பந்தம் (CEPA), எதிர்காலத்திற்கான வர்த்தகம், முதலீடு மற்றும் பொருளாதார ஒத்துழைப்பை வலுவாக்குவதற்கான நவீனக் கட்டமைப்பை வழங்குவதன் மூலம், இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க உறவை உறுதிப்படுத்துவதுடன், அதனை மேலும் வலுப்படுத்துகிறது.


ஓமனுக்கான முக்கிய விநியோக நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும். இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு வர்த்தகம் 2023-24 நிதியாண்டில் 8.94 பில்லியன் டாலராக இருந்த நிலையில், 2025-26 நிதியாண்டில் 11.18 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. இது இரு பொருளாதாரங்களுக்கும் இடையே வளர்ந்து வரும் பரஸ்பரத் தேவைகள் மற்றும் வாய்ப்புகளைப் பிரதிபலிக்கிறது.


இந்தியாவின் வர்த்தக உறவுகளின் விரிவாக்கம்


இந்தியா தனது வர்த்தகக் கூட்டாண்மைகளைத் தீவிரமாகப் பன்முகப்படுத்தி, உலகளாவிய மதிப்புச் சங்கிலிகளுடன் (global value chains) வலுவாக இணைந்து வரும் சூழலில் இந்த விரிவான பொருளாதாரக் கூட்டாண்மை ஒப்பந்தம் (CEPA) மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு அமீரகம், ஆஸ்திரேலியா, ஐரோப்பிய தடையற்ற வர்த்தக சங்கம், ஐக்கிய இராச்சியம், நியூசிலாந்து மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றுடனான ஒப்பந்தங்களைத் தொடர்ந்து, இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பு, வர்த்தகம் மற்றும் இராஜதந்திர நலன்களுக்கு மிக முக்கியமான ஒரு பிராந்தியத்தில் இந்தியாவின் இருப்பை ஓமன் உடனான இந்த விரிவான பொருளாதாரக் கூட்டாண்மை ஒப்பந்தம் (CEPA) மேலும் வலுப்படுத்துகிறது.


இந்த விரிவான பொருளாதாரக் கூட்டாண்மை ஒப்பந்தம் (CEPA) இந்திய ஏற்றுமதியாளர்களுக்குப் பெரும் வாய்ப்புகளை வழங்குகிறது. ஓமன் தனது வரி விதிப்புப் பிரிவுகளில் 98.08 சதவீதத்திற்கு வரி விலக்கு அளித்துள்ளது. இது இந்தியாவின் மொத்த ஏற்றுமதி மதிப்பில் 99.38 சதவீதத்தை உள்ளடக்கியது. இந்த ஒப்பந்தத்திற்கு முன்பு, 'மிகவும் விரும்பப்படும் நாடு' (Most Favoured Nation) என்ற நடைமுறையின்கீழ் இந்தியாவின் ஏற்றுமதியில் 15.33 சதவீதம் மட்டுமே ஓமனுக்கு வரி இல்லாமல் சென்றடைந்தது. எனவே, பல்வேறு துறைகளில் உடனடிப் போட்டித்தன்மையை அதிகரிக்க இந்த விரிவான பொருளாதாரக் கூட்டாண்மை ஒப்பந்தம் (CEPA) உதவுகிறது. ஜவுளி மற்றும் ஆடைத் துறையைப் பொறுத்தவரை, ஓமனின் நெய்யப்பட்ட ஆடை (woven apparel) இறக்குமதியில் 43 சதவீதத்தையும், பின்னலாடை (knitted apparel) இறக்குமதியில் 31 சதவீதத்தையும் இந்தியா ஏற்கனவே தன்வசம் கொண்டுள்ளது. தற்போதுள்ள 5 சதவீத வரி நீக்கப்படுவது, இச்சந்தையில் மற்றொரு முக்கிய விநியோக நாடாகத் திகழும் சீனாவுக்கு எதிராக இந்திய உற்பத்தியாளர்களின் போட்டித்தன்மையை வலுப்படுத்தும். வேதிப்பொருட்களைப் பொறுத்தவரை, ஓமானின் கனிம வேதிப்பொருள் (inorganic chemical) இறக்குமதியில் இந்தியா ஏற்கனவே சுமார் 39% பங்களிப்பை வழங்கி, சந்தையில் முன்னணி வகிக்கிறது. சுங்கவரி இல்லாத வர்த்தக அனுமதி இந்த நிலையை மேலும் வலுப்படுத்தும்.


அதேபோல, பொறியியல் சார்ந்த பொருட்களும் இதன் மூலம் பயனடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஓமன் ஆண்டுதோறும் 3.7 பில்லியன் டாலருக்கும் அதிகமான இயந்திரங்களையும், 3.3 பில்லியன் டாலர் மதிப்பிலான வாகனங்களையும் இறக்குமதி செய்கிறது. இதில் இந்தியாவின் சந்தைப் பங்கு முறையே 5% மற்றும் 2% மட்டுமே உள்ளது. விரிவான பொருளாதாரக் கூட்டாண்மை ஒப்பந்தத்தின் (CEPA) கீழ் வழங்கப்படும் முன்னுரிமைச் சந்தை அணுகல், இந்திய பொறியியல் பொருட்களின் ஏற்றுமதியை கணிசமாக அதிகரிக்கவும், ஓமனின் உள்கட்டமைப்பு, கட்டுமானம் மற்றும் தொழில்துறை ஆகிய துறைகளில் இந்தியாவின் இருப்பை வலுப்படுத்தவும் உதவும்.


சுமார் 10% சந்தைப் பங்கைக் கொண்டுள்ள மருந்துத் துறையைப் பொறுத்தவரை, இந்த ஒப்பந்தத்தின் முக்கியத்துவம் சுங்கவரி குறைப்பில் மட்டுமல்ல, மாறாக ஒழுங்குமுறை நடைமுறைகளை எளிதாக்குவதிலும் உள்ளது. முன்னணி சர்வதேச ஒழுங்குமுறை அமைப்புகளால் (leading international regulators) ஏற்கனவே அங்கீகரிக்கப்பட்ட தயாரிப்புகளுக்கு ஓமனில் விரைவான ஒப்புதல்கள் வழங்கப்படும். இந்த விதிமுறை இணக்கத்திற்கான செலவுகளைக் குறைப்பதோடு, நிறுவனங்கள் சந்தையில் விரைவாக நுழையவும் உதவும் ஓமானின் மருந்துச் சந்தை தொடர்ந்து விரிவடைந்து வருவதால், இந்திய நிறுவனங்கள் அதில் பெரிய பங்கை ஈட்டுவதற்குச் சாதகமான நிலையில் இருக்கும். இறைச்சி, முட்டை, தேன், வெண்ணெய் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகள் போன்ற பொருட்களுக்கு வழங்கப்படும் வரிவிலக்கு அணுகல், இந்தியாவின் ஏற்கனவே வலுவான நிலையை மேலும் உறுதிப்படுத்தும். அதேவேளையில், பால் பொருட்கள், தானியங்கள், சமையல் எண்ணெய்கள் மற்றும் பல்வேறு விவசாயப் பொருட்கள் போன்ற உணர்திறன் மிக்க துறைகள் சுங்கவரிச் சலுகைகளிலிருந்து விலக்கப்பட்டுள்ளன. இதன் மூலம், உள்நாட்டு உற்பத்தியாளர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படுகிறது.


நடைமுறைகளைச் சீரமைத்தல்


வர்த்தகத்தை எளிதாக்குவதற்கான பல முக்கிய நடவடிக்கைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இந்தியாவின் ஏற்றுமதி ஆய்வு மன்றம் (Export Inspection Council (EIC)) வழங்கும் சான்றிதழ்களை ஓமன் ஏற்றுக்கொள்வதன் மூலம், தேவையற்ற கூடுதல் சோதனைகள் மற்றும் ஆய்வுகள் தவிர்க்கப்படும். அதேவேளையில், இந்தியாவின், தேசிய இயற்கை உற்பத்தித் திட்டம் (NPOP) மற்றும் ஹலால் சான்றிதழ் அமைப்புகளும் (halal certification system) அங்கீகரிக்கப்படும். சுகாதாரம் மற்றும் தாவர சுகாதாரம் (sanitary and phytosanitary (SPS)) மற்றும் வர்த்தகத்திற்கான தொழில்நுட்பத் தடைகள் (technical barriers to trade (TBT)) தொடர்பான பிரத்யேக விதிகளின் ஒழுங்குமுறை வெளிப்படைத்தன்மையையும் ஒத்துழைப்பையும் மேம்படுத்தும். மேலும், எளிதில் கெட்டுப்போகும் பொருட்களுக்கான விரைவான நடைமுறைகள் உட்பட, சுங்க அனுமதி செயல்முறைகள் சீரமைக்கப்படுவதால், செலவுகள் குறைவதோடு ஏற்றுமதித் திறனும் அதிகரிக்கும்.


விரிவான பொருளாதாரக் கூட்டாண்மை ஒப்பந்தத்தின் (CEPA) மற்றொரு தொலைநோக்கு அம்சம், சேவைகள் மற்றும் தொழில்முறை நிபுணர்களின் நடமாட்டம் ஆகியவற்றின் மீது அது செலுத்தும் தீவிர கவனமாகும். 2024-ல் இருதரப்பு சேவை வர்த்தகம் 863 மில்லியன் டாலராக இருந்தது. இதில், இந்தியா சுமார் 447 மில்லியன் டாலர் அளவிலான வர்த்தக உபரியைப் பதிவு செய்தது. இருப்பினும், ஓமனின் உலகளாவிய சேவை இறக்குமதியில் இந்தியாவின் பங்கு 5%-க்கும் சற்று அதிகமாகவே உள்ளது. இது வளர்ச்சிக்கான கணிசமான வாய்ப்புகள் இன்னும் பயன்படுத்தப்படாமல் இருப்பதைக் காட்டுகிறது.


கணக்கியல், பொறியியல், தகவல் தொழில்நுட்பம், சுகாதாரம், கல்வி மற்றும் ஆலோசனை போன்ற துறைகளைச் சேர்ந்த நிபுணர்கள் தொடர்பான கட்டாய உறுதிப்பாடுகளை ஓமன் ஏற்றுக்கொண்டுள்ளது. நிறுவனங்களுக்குள் பணியாளர்களை இடமாற்றம் செய்வதற்கான ஒதுக்கீடுகளையும் ஓமன் அதிகரித்துள்ளது. இது இந்தியத் தொழில்முறை நிபுணர்கள் மற்றும் சிறப்புத் திறன் கொண்டவர்கள் அங்குச் சென்று பணியாற்றுவதை எளிதாக்கும். ஆயுஷ் (AYUSH) மற்றும் பாரம்பரிய மருத்துவம் தொடர்பான விதிகள், வளைகுடா பிராந்தியத்தில் இந்திய சுகாதாரம் மற்றும் நல்வாழ்வுச் சேவைகளுக்கான வாய்ப்புகளையும் உருவாக்குகின்றன.


இராஜதந்திர அமைவிடத்தின் சாதகமான அம்சம்


வர்த்தகப் புள்ளிவிவரங்களைத் தாண்டி, இந்த விரிவான பொருளாதாரக் கூட்டாண்மை ஒப்பந்தம் (CEPA) ஒரு பெரிய இராஜதந்திர ரீதியில் முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது. வளைகுடாப் பகுதி, இந்தியப் பெருங்கடல் மற்றும் கிழக்கு ஆப்பிரிக்கா ஆகியவற்றை இணைக்கும் சந்திப்பில் ஓமன் ஒரு தனித்துவமான இடத்தைப் பெற்றுள்ளது. சோஹார்(Sohar), டுகம் (Duqm)மற்றும் சலாலா (Salalah) ஆகிய இடங்களில் உள்ள துறைமுகங்கள் முக்கிய தளவாட மற்றும் தொழில்துறை மையங்களாக உருவெடுத்து வருகின்றன. இந்திய வணிகங்களைப் பொறுத்தவரை, ஓமன் ஒரு சந்தையாக மட்டுமல்லாமல், பரந்த வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் (Gulf Cooperation Council (GCC)) பிராந்தியத்திற்கும் கிழக்கு ஆப்பிரிக்கப் பொருளாதாரங்களுக்கும் ஒரு நுழைவாயிலாகவும் செயல்பட முடியும்.


இந்தியாவின் வர்த்தகக் கொள்கையானது, வெறும் வரி தொடர்பான பேச்சுவார்த்தைகளில் இருந்து மாறி, பொருட்கள், சேவைகள், முதலீடு, நிபுணர் நடமாட்டம் மற்றும் ஒழுங்குமுறை ஒத்துழைப்பு ஆகியவற்றை உள்ளடக்கிய விரிவான பொருளாதாரக் கூட்டாண்மைகளை நோக்கி வளர்ந்துள்ளதை இந்தியா-ஓமன் விரிவான பொருளாதாரக் கூட்டாண்மை ஒப்பந்தம் (CEPA) மீண்டும் நிரூபிக்கிறது. இதன் பலன்கள் தமிழ்நாட்டின் ஜவுளித் தொகுப்புகள் மற்றும் குஜராத்தின் ரத்தினம் மற்றும் ஆபரணத் தொழில் முதல் மகாராஷ்டிரா மற்றும் பஞ்சாபின் பொறியியல் மையங்கள் வரையிலும், தெலுங்கானாவின் மருந்து உற்பத்தியாளர்கள் முதல் ஆந்திரப் பிரதேசம் மற்றும் கேரளாவின் கடல் உணவு ஏற்றுமதியாளர்கள் வரையிலும் பரவியிருக்கும்.




இப்போதுள்ள உண்மையான சவால், இந்த ஒப்பந்தத்தைச் செயல்படுத்துவதும் அதைச் சிறப்பாகப் பயன்படுத்திக்கொள்வதுமே ஆகும். வணிக நிறுவனங்கள் இந்த ஒப்பந்தத்தின் மூலம் உருவாகும் வாய்ப்புகளைச் சரியாகப் பயன்படுத்திக்கொண்டால், விரிவான பொருளாதாரக் கூட்டாண்மை ஒப்பந்தமானது (CEPA) இந்தியாவின் ஏற்றுமதி வரம்பை கணிசமாக விரிவுபடுத்தவும், வளைகுடா நாடுகளுடனான பொருளாதார ஒருங்கிணைப்பை வலுப்படுத்தவும், அத்துடன் உலக அளவில் போட்டித்தன்மை வாய்ந்த உற்பத்தி மற்றும் சேவை மையமாகத் திகழும் இந்தியாவின் பரந்த லட்சியத்திற்கு ஆதரவளிக்கவும் உதவும். இந்தியாவைப் பொறுத்தவரை, இந்த ஒப்பந்தம் ஓமன் சந்தையை மட்டுமல்லாமல், வளைகுடா மற்றும் அதற்கும் அப்பால் உள்ள பகுதிகளுக்கான ஒரு பரந்த நுழைவாயிலையும் திறந்துவிடுகிறது.


அனந்த் கோயங்கா, இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை கூட்டமைப்பின் (FICCI) தலைவராவார்.


Original article : The Oman CEPA, a new gateway for India’s exports -Anant Goenka

Share: