மிக நீளமான இழை பருத்தி என்பது என்ன? -அசோக் குலாட்டி, ஆயுஷி குப்தா, ரித்திகா ஜுனேஜா

 முக்கிய அம்சங்கள்:


• ஏப்ரல் மாதம் 2026-ஆம் ஆண்டில், பருத்தி உற்பத்தித் திறனுக்கான தேசிய இயக்கத்திற்கு (Mission for Cotton Productivity) 5,659 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டிற்கு ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இந்தத் திட்டம் 2026–27-ஆம் ஆண்டு முதல் 2030–31-ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்திற்குச் செயல்படுத்தப்படவுள்ளது. 2025-26-ஆம் ஆண்டுடன் முடிவடைந்த கடந்த மூன்று ஆண்டுகளின் சராசரி பருத்திப் பஞ்சு உற்பத்தித் திறனான ஒரு ஹெக்டேருக்கு 441-கிலோ என்பதை, 2031-ஆம் ஆண்டிற்குள் ஒரு ஹெக்டேருக்கு 755-கிலோவாக உயர்த்துவதே இத்திட்டத்தின் முக்கிய இலக்காகும். இந்த இயக்கம் வெற்றிபெறுமா என்பதை மதிப்பிட, பருத்தித் துறையில் இந்தியாவின் கடந்தகால செயல்பாடுகளையும், தற்போதைய பருத்தித் துறை எதிர்கொண்டு வரும் நெருக்கடியின் தீவிரத்தையும் கவனிப்பது அவசியமாகும்.


• 2002-ஆம் ஆண்டில், அப்போதைய பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் அவர்கள், மரபணு பொறியியல் மதிப்பீட்டுக் குழுவின் (Genetic Engineering Appraisal Committee (GEAC)) ஒப்புதலைப் பெற்ற பிறகு, ஒருவகை மரபணு மாற்றப்பட்ட பருத்தி வகையான ‘மரபணு மாற்ற பருத்தி’ (Bacillus thuringiensis cotton (Bt Cotton)) ரகங்களின் வணிகரீதியான சாகுபடிக்கு அனுமதி அளித்தார். அப்போது அவர், உயிரித் தொழில்நுட்பம் (Biotechnology) என்பது அடுத்த பெரிய புரட்சியாக இருக்கும் என்றும், இது சாமானிய மக்களின் வாழ்க்கையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் குறிப்பிட்டார். இதில் இந்தியா பின்தங்கிவிடக் கூடாது என்றும், நாடு முழுவதும் உயிரித் தொழில்நுட்பத்தை ஊக்குவிப்பதன் மூலம் இத்துறையில் இந்தியா ஒரு முன்னோடியாக உருவெடுப்பதை இலக்காகக் கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.


• இந்த விஷயத்தில் இந்தியா பின்தங்கிவிடவில்லை. உண்மையில், ஏறக்குறைய ஒரு 10 ஆண்டுகள் இந்தத் துறையில் முன்னணியில் இருந்தது. பருத்திப்புழுக்களின் (Bollworm) தாக்குதலில் இருந்து பாதுகாப்பதற்காக, 'cry1Ac' மரபணுவைக் கொண்ட முதல் மரபணு மாற்ற பருத்தி (Bt Cotton) கலப்பின ரகங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து 2006-ஆம் ஆண்டில்,            மரபணு பொறியியல் மதிப்பீட்டுக் குழு (GEAC), இரண்டு மரபணுக்களைக் கொண்ட இரண்டாம் தலைமுறை கலப்பின ரகமான 'போல்கார்ட் II' (Bollgard II) என்ற பருத்திக்கு ஒப்புதல் அளித்தது. இதன் தாக்கம் மிகத் தெளிவாகத் தெரிந்தது: இந்தியாவின் பருத்தி உற்பத்தி 2002–03-ஆம் ஆண்டில் 13.6 மில்லியன் மூட்டைகளாக (Bales) இருந்தது, 2013–14-ஆம் ஆண்டில் 39.8 மில்லியன் மூட்டைகளாக உயர்ந்தது. இது 193 சதவீதம் அளவிற்கான பிரம்மாண்ட வளர்ச்சியாகும்.


உங்களுக்குத் தெரியுமா?


• பருத்தி என்பது வெப்பமண்டல மற்றும் துணை வெப்பமண்டல பகுதிகளில் வளரக்கூடிய ஒரு மிதமான வறட்சியான சூழலையும் தாங்கி வளரக்கூடிய ஒரு தாவரமாகும் (Semi-xerophyte). வயல்வெளிகளில் விதைகள் நன்றாக முளைப்பதற்கு குறைந்தபட்சம் 15°C வெப்பநிலை தேவைப்படுகிறது.


• பருத்திச் செடியின் இலை மற்றும் தண்டு வளர்ச்சிக்கு உகந்த வெப்பநிலை 21°C முதல் 27°C ஆகும். பருத்தியால் 43°C வரையிலான அதிக வெப்பநிலையைத் தாங்கி வளர முடியும். ஆனால், வெப்பநிலை 21°C-க்குக்கீழ் குறையும்போது அதன் வளர்ச்சி பாதிக்கப்படுகிறது. செடியில் காய் வைக்கும் பருவத்தில் (Fruiting period), பகலில் இதமான வெப்பமும், இரவில் குளிர்ச்சியான சூழலும், அதேபோல பகல் மற்றும் இரவுநேர வெப்பநிலைக்கு இடையே அதிக வித்தியாசம் இருப்பதும் பருத்திக்காய்கள் மற்றும் பஞ்சு நார்த்தன்மை நன்றாக வளர்ச்சி அடைய உதவுகின்றன.


• பருத்தி சாகுபடிக்கு நல்ல வடிகால் வசதியுள்ள பல்வேறு வகையான மண் வகைகள் ஏற்றவை ஆகும். பருத்திச் செடியானது மண்ணில் உள்ள உவர்ப்புத் தன்மையை ஓரளவிற்குத் தாங்கும் திறன்கொண்டது. ஆனால், நீர் தேங்குவதை தாங்காது, அது செடியின் வளர்ச்சியைப் பாதிக்கும். இந்தியாவின் வடக்குப் பகுதியில் உள்ள நல்ல வடிகால் வசதியுள்ள வண்டல் மண்ணும் (Alluvial soils), மத்தியப் பகுதியில் உள்ள கருப்பு களிமண் வகைகளும் (Black clayey soils), மற்றும் தெற்குப் பகுதியில் உள்ள கருப்பு மண் மற்றும் கலவையான கருப்பு-சிவப்பு மண் வகைகளும் பருத்தி உற்பத்திக்கு மிகவும் ஏற்றவை ஆகும்.


• இந்திய ஜவுளி அமைச்சகத்தின் (Ministry of Textiles) தரவுகளின்படி, இந்தியாவில் பருத்தி விளையும் ஒன்பது முக்கிய மாநிலங்கள் உள்ளன. இவை மூன்று வெவ்வேறு வேளாண்-சுற்றுச்சூழல் மண்டலங்களாகப் (Agro-ecological zones) பிரிக்கப்பட்டுள்ளன:


(i) வடக்கு மண்டலம் – பஞ்சாப், ஹரியானா மற்றும் ராஜஸ்தான்


(ii) மத்திய மண்டலம் – குஜராத், மகாராஷ்டிரா மற்றும் மத்திய பிரதேசம் 


(iii) தெற்கு மண்டலம் – தெலங்கானா, ஆந்திர பிரதேசம் மற்றும் கர்நாடகா


• ஜவுளி அமைச்சகத்தின் தகவல்படி, பருத்தியின் நான்கு முக்கிய வகைகளையும் பயிரிடும் ஒரே நாடு இந்தியாதான். அவை: ஜி. அர்போரியம் (G. Arboreum) மற்றும் ஜி. ஹெர்பேசியம் (G. Herbaceum) (ஆசியப் பருத்தி),                              ஜி. பார்படென்ஸ் (G. Barbadense) (எகிப்தியப் பருத்தி) மற்றும் ஜி. ஹிர்சூட்டம் (G. Hirsutum) (அமெரிக்க பருத்தி).


• ஒரு காலத்தில் "வெள்ளை தங்கம்" என்று போற்றப்பட்டதும், இந்தியாவின் ஜவுளிப் பொருளாதாரத்தின் முதுகெலும்பாகத் திகழ்வதுமான பருத்தித் தொழில், தற்போது பல சவால்களை எதிர்கொண்டு வருகிறது. பருத்தி பயிரிடப்படும் நிலப்பரப்பு குறைந்தது, சீரற்ற மழைப்பொழிவு மற்றும் கடுமையான வெப்பநிலை போன்ற காரணங்களால் பருத்தி உற்பத்தி தொடர்ந்து குறைந்து வருகிறது.


Original article : What is extra-long staple (ELS) cotton? -Ashok Gulati, Ayushi Gupta, Ritika Juneja

Share: