இந்தியாவின் தூய எரிசக்தி மாற்றத்திற்கு, வீடுகள் மற்றும் உழவர்கள் உள்ளூரிலேயே மின்சாரம் தயாரிப்பதை ஊக்குவிப்பது ஒரு முக்கியமான நடவடிக்கையாகும். ஆனால், அதிக ஆரம்பக் காலச் செலவுகள் மற்றும் மலிவான கட்டமைப்பு மின்சாரம் (grid power) ஆகியவை பரவலாக்கப்பட்ட சூரிய மின்சக்தி பயன்பாட்டை மெதுவாக்கியுள்ளன.
இந்தியா கடந்த சில ஆண்டுகளில் தனது புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திறனை வேகமாக அதிகரித்து வருகிறது.
இந்த வளர்ச்சிக்கு சூரிய ஆற்றலே முக்கியமானதாக இருந்துள்ளது. இது தற்போது இந்தியாவின் மொத்த நிறுவப்பட்ட மின்சாரத் திறனில் ஏறக் குறைய 30%-ஆக உள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில் நாடு 50 ஜிகாவாட்டிற்கும் (gigawatts (GW)) அதிகமான சூரிய மின்சார உற்பத்தித் திறனை புதிதாக சேர்த்துள்ளது. மேலும், 2025-ஆம் ஆண்டில் சீனாவிற்கு அடுத்தபடியாக உலகிலேயே அதிக அளவு புதிய சூரிய மின்சாரத் திறனைச் சேர்த்த நாடாக இந்தியா இருந்தது.
தூய்மையான எரிசக்தி நோக்கிய இந்த மாற்றத்தை விரைவுபடுத்துவதற்காக, சூரிய மின் உற்பத்தியைப் பரவலாக்கும் இரண்டு முக்கியத் திட்டங்களை அரசாங்கம் செயல்படுத்தி வருகிறது. அவை, வீடுகளையும் உழவர்களையும் உள்ளூரிலேயே மின்சாரம் உற்பத்தி செய்ய ஊக்குவிப்பதகும்.
பிரதம மந்திரி சூர்யாகர் (Suryaghar Yojana) யோஜனா, ஒரு கோடி வீடுகளில் கூரை மேல் சூரிய மின்சக்தி அலகுகளை நிறுவுவதை இலக்காகக் கொண்டுள்ளது. இந்தத்திட்டம் ஒவ்வொரு பயனாளிக்கும் மாதம் 300 யூனிட் வரை இலவச மின்சாரத்தையும், உபகரணங்களுக்கான பண மானியத்தையும் வழங்குகிறது.
பிரதம மந்திரி கிசான் உர்ஜா சுரக்ஷா ஏவம் உத்தன் மகாபியான் ((Pradhan Mantri Kisan Urja Suraksha Evam Utthan Mahabhiyan (PM-KUSUM)) திட்டமானது, உழவர்களின் பயன்படுத்தப்படாத நிலங்களில் சிறிய சூரிய மின் நிலையங்களை அமைக்கவும் அல்லது பாசனத் தேவைகளுக்காக மின் கட்டமைப்புடன் இணைக்கப்பட்ட அல்லது தனியாக இருக்கும் சூரிய சக்தி மூலம் இயங்கும் நீர் இறைப்பான்களை (solar water pumps) நிறுவுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. உழவர்கள் தங்கள் நிலத்தில் உற்பத்தி செய்யப்படும் சூரிய மின்சாரத்தை விற்பதன் மூலம் கூடுதல் வருமானம் ஈட்டலாம் அல்லது பாரம்பரிய நீர் இறைப்பான்களுக்கான டீசல் அல்லது மின்சாரக் கட்டணங்களைச் சேமிக்கலாம்.
95,000 கோடி ரூபாய் ஒருங்கிணைந்த நிதி ஒதுக்கீட்டின்கீழ் செயல்படுத்தப்படும் இந்த இரண்டு திட்டங்களும் வெற்றிகளைக் கண்டிருந்தாலும், இதுவரை அவற்றின் முழுத் திறனைவிடக் குறைவாகவே செயல்பட்டுள்ளன. அது ஏன் நிகழ்கிறது? நாங்கள் விளக்குகிறோம்.
சீரற்ற முன்னேற்றம்
நடப்பு நிதியாண்டின் இறுதிக்குள் 40 ஜிகாவாட் என்ற இலக்கிற்கு எதிராக, பிரதம மந்திரி சூர்யாகர் யோஜனா மற்றும் பிரதம மந்திரி கிசான் உர்ஜா சுரக்ஷா ஏவம் உத்தன் மகாபியான் திட்டங்கள் ஒன்றிணைந்து 13 ஜிகாவாட் பரவலாக்கப்பட்ட சூரிய மின்சக்தியை நிறுவியுள்ளன.
2019-ல் தொடங்கப்பட்ட பிரதம மந்திரி கிசான் உர்ஜா சுரக்ஷா ஏவம் உத்தன் மகாபியான் (PM-KUSUM) திட்டம், 2022-க்குள் தனது இலக்குகளை அடைந்திருக்க வேண்டும். ஆனால், பெருந்தொற்று காரணமாக, அது இந்த நிதியாண்டின் இறுதி வரை நீட்டிக்கப்பட்டது.
இந்தத்திட்டத்தின் மிகவும் முக்கியமான அம்சம், உழவர்கள் தங்களது தனித்த, மின்சார இணைப்பு இல்லாத சூரிய ஆற்றல் நீர் இறைப்பிகளை அமைப்பதற்கு அளிக்கப்பட்ட ஊக்கத்தொகையாகும். 14 லட்சம் என்ற இலக்கிற்கு எதிராக, 10.9 லட்சத்திற்கும் அதிகமான புதிய சூரிய சக்தி மூலம் இயங்கும் நீர் இறைப்பிகள் (solar water pumps) நிறுவப்பட்டுள்ளதாக அரசாங்கப் புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.
ஆனால், வெவ்வேறு மாநிலங்களில் இந்தத் திட்டங்களின் சீரற்ற முன்னேற்றம் பல்வேறு உண்மைகளை வெளிக் கொண்டு வருகிறது. இந்த இரண்டு திட்டங்களும் சில மாநிலங்களில் மிகச் சிறப்பாகவும், மற்ற மாநிலங்களில் மிகவும் மோசமாகவும் செயல்பட்டுள்ளன.
தமிழ்நாடு மற்றும் கர்நாடகா போன்ற மாநிலங்கள் அல்லது ஆற்றல் வசதி குறைவாக உள்ள பீகார் மற்றும் ஜார்க்கண்ட் போன்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில், பிரதம மந்திரி சூர்யாகர் (Suryaghar Yojana) யோஜனா கூரை வழி சூரியசக்தித் திட்டத்தை ஏற்றுக்கொள்வதில் குஜராத், மகாராஷ்டிரா மற்றும் கேரளா ஆகிய மாநிலங்கள் கணிசமாக அதிக விகிதத்தைப் பதிவு செய்துள்ளன.
இந்தத்திட்டத்தின் கீழ், சிறப்பாகச் செயல்படும் குஜராத், மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், கேரளா மற்றும் ராஜஸ்தான் போன்ற ஐந்து மாநிலங்கள், இதுவரை நிறுவப்பட்டுள்ள 33 லட்சம் மேற்கூரை சூரியசக்தி அமைப்புகளில் ஏறக்குறைய 70 சதவீதத்தைக் கொண்டுள்ளன.
இலவச மின்சாரம் திட்டத்தை மக்கள் ஏற்றுக்கொள்வதைத் தடுக்கிறது.
சில பெரிய மாநிலங்களில் இந்தத் திட்டங்கள் குறைவாக ஏற்றுக்கொள்ளப்படுவதற்கு மின்சார மானியங்களே முக்கியக் காரணங்களில் ஒன்றாகும். பல மாநில அரசுகள், வீட்டு உபயோக மற்றும் வேளாண் நுகர்வோருக்கு இலவச மின்சாரத்தையோ அல்லது அதிக மானிய விலையிலான மின்சாரத்தையோ வழங்குகின்றன.
மின்சாரம் ஏற்கனவே இலவசமாகவோ அல்லது அதிக அளவில் மானியமாகவோ வழங்கப்படும்போது, ஒப்பீட்டளவில் இலவசமான சூரிய மின்சக்தியைப் பெறுவதற்காக, அதை நிறுவுவதற்கான ஆரம்பகட்ட செலவுகளைச் செய்ய மக்களுக்கு எந்த ஊக்கமும் வழங்கப்படுவதில்லை. இது பிரதம மந்திரி சூர்யாகர் கூரைத் திட்டத்திற்கு மட்டுமல்ல, உழவுப் பணிகளில் ஈடுபட்டுள்ள நுகர்வோரை இலக்காகக் கொண்ட பிரதம மந்திரி கிசான் உர்ஜா சுரக்ஷா ஏவம் உத்தன் மகாபியான் (PM-KUSUM) திட்டத்திற்கும் பொருந்தும்.
பஞ்சாப் மாநிலத்தை எடுத்துக்காட்டாக எடுத்துக்கொள்வோம். மாநிலம் ஏற்கனவே ஒவ்வொரு மாதமும் வீட்டு உபயோக நுகர்வோருக்கு 300 யூனிட் இலவச மின்சாரத்தையும் அனைத்து வேளாண் ஆழ்துளைக் கிணறுகளுக்கும் முற்றிலும் இலவச மின்சாரத்தையும் வழங்குகிறது.
கடந்த ஆண்டு மின்சார மானியக் கட்டணங்களுக்காக ரூ. 20,000 கோடிக்கு மேல் செலவிட்ட பஞ்சாபில், இரண்டு சூரியசக்தித் திட்டங்களையும் ஏற்றுக்கொள்வோரின் விகிதம் குறைவாகவே உள்ளது.
தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் டெல்லியில் பிரதம மந்திரி சூர்யாகர் (Suryaghar Yojana) திட்டத்தின்கீழ், மின்சார பயன்பாடு ஒப்பீட்டளவில் குறைவாக இருப்பதற்கு, இந்த மாநிலங்களின் மானியக் கட்டமைப்பும் ஒரு முக்கியக் காரணியாகும். கடந்த ஆண்டு, கர்நாடகா மற்றும் தமிழ்நாட்டிற்கான மின்சார மானியச் செலவுகள் முறையே ரூ. 27,000 கோடியாகவும், ரூ. 15,700 கோடியாகவும் இருந்தன. மறுபுறம், குஜராத், கேரளா மற்றும் மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில், குறிப்பாக அதிக மின்சாரம் பயன்படுத்தும் நுகர்வோர்களுக்கு, மின்சாரக் கட்டணங்கள் அதிகமாக உள்ளன.
இந்த இரண்டு திட்டங்களின் முன்னேற்றம் குறித்த சமீபத்திய அறிக்கையில், நாடாளுமன்றத்தின் மதிப்பீட்டுக் குழு இந்தப் பிரச்சினையைச் சுட்டிக்காட்டியது. சில மாநிலங்களில் பிரதமர் சூர்யாகர் திட்டம் குறைவாக ஏற்றுக்கொள்ளப்பட்டதற்கான காரணங்களை அந்தக்குழு தெரிந்து கொள்ள முற்பட்டபோது, ஏற்கனவே இலவச மின்சாரம் வழங்கப்படுவதே அதற்கான முக்கியக் காரணிகளில் ஒன்று என்று புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம் தெரிவித்தது.
பல மாநிலங்களில் வீட்டு உபயோக நுகர்வோருக்கான மின்சாரக் கட்டணம் பூஜ்ஜியத்திற்கு அருகில் இருப்பதாலும், சில சமயங்களில் பூஜ்ஜியமாகவே இருப்பதாலும், கூரைமேல் சூரிய மின்சார அமைப்பை (Rooftop Solar System) நிறுவுவது தங்களுக்கு நிதிரீதியாக லாபகரமாக இல்லை என்று பலரும் நினைக்கிறார்கள் என்று அமைச்சகம் கூறியது.
உபகரணங்களின் ஆரம்பக்கட்ட செலவு சில லட்சம் ரூபாயாக இருக்கலாம். அதனை 300 யூனிட் இலவச மின்சாரத்தைப் பயன்படுத்துவதன் மூலமும், உற்பத்தி செய்யப்படும் உபரி மின்சாரத்தை விற்பனை செய்வதன் மூலமும் மட்டுமே காலப்போக்கில் நிதியை ஈடுகட்ட முடியும்.
கூடுதல் மானியங்கள்
முரண்பாடாக, இந்தத் தடைக்கான பதில் மேலும் மானியங்களாகவே அமைந்துள்ளன. உத்தரப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் போன்ற மாநிலங்கள், தங்கள் வீட்டு உபயோக மற்றும் உழவுப் பணிகளை செய்யும் நுகர்வோருக்கு அதிக மானிய விலையில் மின்சாரத்தை வழங்குகின்றன. இந்தத்திட்டங்களின்கீழ் ஏற்கனவே கிடைக்கும் சலுகைகளுக்கு அதிகமாக, கூடுதல் நிதிச் சலுகைகளை வழங்குவதன் மூலம், நுகர்வோர் உபகரணங்களை எளிதாக பெற்று சூரிய மின்சக்திக்கு மாறுவதற்கான வாய்ப்புகளை உறுதிப்படுத்தி, இந்த மாநிலங்கள் பிரதம மந்திரி சூர்யாகர் யோஜனா மற்றும் பிரதம மந்திரி கிசான் உர்ஜா சுரக்ஷா ஏவம் உத்தன் மகாபியான் திட்டங்களில் குறிப்பிடத்தக்க வகையில் சிறப்பாகச் செயல்பட்டுள்ளன.
மின்சார மானியங்கள் ஏற்படுத்தும் முடிவில்லாத தொடர் செலவினங்களுக்கு மாறாக, இந்தக் கூடுதல் சலுகைகள் அரசுக்கு ஒரு முறை மட்டுமே செலவு ஏற்படும் என்பதால் இது இன்னமும் பயனுள்ளதாகவே இருக்கிறது.
உண்மையில், மதிப்பீட்டுக் குழு அது போன்ற நடவடிக்கைகளை ஆதரிப்பது போல் தோன்றியது. இரண்டு திட்டங்களிலும் நுகர்வோர் முன்பணத்தைச் செலுத்துவதையும், அதன் பலன்களைப் பெறுவதையும் எளிதாக்கும் வழிகளை அரசாங்கம் ஆராய வேண்டும் என்று மதிப்பீட்டுக் குழுபரிந்துரைத்தது.
வெப்பம் சார்ந்த தொடர்பு
இந்தியாவின் தூய எரிசக்தி மாற்றத்திற்கான பரந்த திட்டத்தில், பரவலாக்கப்பட்ட சூரிய மின்சார உற்பத்தி ஒரு முக்கியப் பகுதியாக உள்ளது. வரும் ஆண்டுகளில் மின்சாரத் தேவை கணிசமாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், அதிக அளவில் சூரிய மின் பூங்காக்களை அமைப்பதற்கான நிலம் கிடைப்பது ஏற்கனவே ஒரு சவாலான பிரச்சினையாக மாறியுள்ளது. எந்த ஒரு சூழலிலும், மின் தொகுப்பிலிருந்து (grid) பெறப்படும் மின்சாரத்திற்கும், சூரிய ஆற்றல் மூலம் பெறப்பட்டதாக இருந்தாலும் நுகர்வோருக்கு மானியம் வேண்டும்.
இது அரசியல் ரீதியான ஒரு பிரச்சினையாகும். மானியங்கள் நாளுக்கு நாள் பொருளாதாரரீதியாக வழங்க முடியாத அளவுக்கு சுமையாக மாறி வந்தாலும், எந்த அரசாங்கமும் அவற்றை எளிதாக திரும்பப் பெற முடியாது. மதிப்பிட்டுக் குழுவின் (Estimates Committee) அறிக்கையின்படி, பிரதம மந்திரி சூர்ய கர் திட்டம் முழுமையாகச் செயல்படுத்தப்பட்டால், மின்சாரச் செலவில் அரசாங்கத்திற்கு ஆண்டுக்கு ரூ.75,000 கோடி வரை சேமிக்கப்படும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது
அதிகரித்து வரும் மின்சாரத் தேவையை, சூரிய ஆற்றல் மற்றும் பிற புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலங்களை மேலும் விரிவுபடுத்துவதன் மூலமே பூர்த்தி செய்ய முடியும். தற்போது, நாட்டில் மின்சார உற்பத்தியில் 2-வது பெரிய ஆதாரமாக இருந்த நீர்மின் சக்தியை பின்னுக்கு தள்ளி, சூரிய ஆற்றல் அந்த இடத்தைப் பெறத் தயாராக உள்ளது. பாரம்பரியமாக, கோடை காலத்தில் ஏற்படும் கூடுதல் மின்சாரத் தேவையைப் பூர்த்தி செய்ய நீர்மின்சாரமே முக்கிய ஆதாரமாக இருந்து வந்தது. நீர்மின்சாரத்தை உற்பத்தி செய்யும் நீர்த்தேக்கங்களை நிரப்புவதில் பருவமழை முக்கிய காரணியாக அமைகிறது.
இருப்பினும், அதிக அளவிலான நீர்மின் உற்பத்தித் திறன் தற்போது தேக்கமடைந்துள்ளது. மின்சாரத் தேவை மிகவும் உயர்ந்துவிட்டதால், அதை நீர்மின்சக்தியால் மட்டுமே பூர்த்தி செய்ய முடியாது. இந்த ஆண்டு ஏப்ரல் மற்றும் மே மாதங்களில், பகல் நேரங்களில் ஏற்பட்ட உச்சபட்ச தேவைகள் பெரும்பாலும் சூரிய சக்தி மூலமே நிர்வகிக்கப்பட்டன.
மழைப்பொழிவு குறைவாகவும், வெப்பநிலை மிக அதிகமாகவும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால், மின்சாரத் தேவையும் மிகவும் அதிகமாக இருக்கும் தற்போதைய ஆண்டைப் போன்ற ஒரு வருடத்தில், பரவலாக்கப்பட்ட சூரிய ஆற்றல் அதிக முக்கியத்துவம் பெறுகிறது. இந்த ஆண்டு ஒரு தனிப்பட்ட நிகழ்வு அல்ல. இது போன்ற சூழ்நிலைகள் இயல்பானதாக மாறி வருகின்றன. பரவலாக்கப்பட்ட சூரிய ஆற்றல் இவற்றின் தாக்கத்தைக் குறைக்க உதவக்கூடும்.
Original article : Power subsidies are slowing household solar adoption. A solution: More subsidies. -Amitabh Sinha