அரசியலமைப்பில் மாநிலத்தின் பெயரை 'கேரளம்' என மாற்றுவதற்கு வழிவகுக்கும் 2026-ஆம் ஆண்டு 'கேரள (பெயர் மாற்றம்) மசோதாவை, மக்களவை ஆகஸ்ட் 11 அன்று குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றியது.
ஆகஸ்ட் 11-ஆம் தேதி அன்று, எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புக்கு இடையே 2026-ஆம் ஆண்டு “கேரளா (பெயர் மாற்றம்) மசோதாவை, குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றியது. அரசியலமைப்பில் இடம்பெற்றுள்ள மாநிலத்தின் “கேரளா” என்ற பெயரை “கேரளம்” என மாற்றுவதே இந்த மசோதாவின் நோக்கமாகும்.
இந்த மசோதா, கேரள சட்டப்பேரவையில் 2023 ஆகஸ்ட் மற்றும் 2024 ஜூன் மாதங்களில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட இரண்டு தீர்மானங்களைத் தொடர்ந்து கொண்டுவரப்பட்டது. இந்தப் பெயர் மாற்ற முன்மொழிவுக்கு மத்திய அமைச்சரவை இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ஒப்புதல் அளித்தது. அதன் பின்னர், மசோதா மாநில சட்டப்பேரவைக்கு அனுப்பப்பட்ட நிலையில், சட்டப்பேரவையும் அதனை ஒருமனதாக ஆதரவளித்தது.
கேரளா இந்தப் பெயரை மாற்ற கோரிக்கை விடுத்தது, ஏன்?
2024-ஆம் ஆண்டு ஜூன் மாதம், அரசியலமைப்பின் 3-வது பிரிவின்கீழ் மாநிலத்தின் பெயரை கேரளம் என மாற்றுவதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தும் தீர்மானத்தை மாநில சட்டமன்றம் ஒருமனதாக நிறைவேற்றியது. 2023-ஆம் ஆண்டு ஆகஸ்டில் நிறைவேற்றப்பட்ட முந்தைய தீர்மானத்திற்குப் பிறகு, சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட 2-வது தீர்மானம் இதுவாகும்.
மலையாளத்தில் மாநிலத்தின் பெயர் ‘கேரளம்’ என்றும், ஆங்கிலத்தில் பயன்படுத்தப்படும் "கேரளா", அரசியலமைப்பின் முதல் அட்டவணையிலும் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் சட்டமன்றம் வாதிட்டது.
‘கேரளா’ மற்றும் ‘கேரளம்’ ஆகிய பெயர்கள் எங்கிருந்து வந்தன?
கேரளம் என்ற சொல்லின் வேர்ச்சொல் தோற்றம் குறித்து பல்வேறு கோட்பாடுகள் உள்ளன.
இந்தச் சொல்லின் ஆரம்பகால பயன்பாடுகளில் ஒன்று கி.மு.257-ஆம் ஆண்டைச் சேர்ந்த பேரரசர் அசோகரின் பாறைக்கல்வெட்டு II-ல் காணப்படுகிறது. அந்தக் கல்வெட்டில், “சோழர்கள், பாண்டியர்கள், சத்தியபுத்திரர்கள், கேரளபுத்திரர்கள்” போன்ற தெற்கு எல்லைப் பகுதிகளை ஆட்சி செய்த அரசர்களைப்பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை கல்வெட்டியல் அறிஞர் டி. ஆர். பண்டார்கர் மொழிபெயர்த்துள்ளார்.
“கேரளபுத்திரர்” என்பது சமஸ்கிருதத்தில் “கேரளத்தின் மகன்” ஆகும். தென்னிந்தியாவின் மூன்று முக்கிய அரசுகளில் ஒன்றான சேரர்களின் வம்சத்தை இந்த சொல் குறிக்கிறது.
ஆரம்பகால மலையாள-ஆங்கில அகராதியைத் தொகுத்த ஜெர்மானிய சமயப் பரப்புரையாளரும் மொழியியலாளருமான ஹெர்மன் குண்டர்ட், கன்னட வார்த்தையான “கேரம்” (keram) என்பதற்கும், கர்நாடகாவில் உள்ள கோகர்ணாவிற்கும், இந்தியாவின் தென்கோடி முனையான தமிழ்நாட்டில் உள்ள கன்னியாகுமரிக்கும் இடையேயான கடலோர நிலத்தைக் குறிக்கும் “சேரம்” (cheram) என்பதற்கும் இடையே ஒரு தொடர்பு இருப்பதைக் குறிப்பிட்டார். மற்றொரு கருத்தின்படி, இது “சேர்” (cher) என்ற பழைய தமிழ் வேர்ச்சொல்லிலிருந்தும், “ஆலம்” (alam) என்றால் பகுதி அல்லது நிலம் என்ற பொருள்படும் சொல்லிலிருந்தும் உருவானதாகக் கூறப்படுகிறது.
நவீன கேரள மாநிலம் எவ்வாறு உருவானது?
மலையாளம் பேசும் மக்கள் வரலாற்றுரீதியாக பல்வேறு அரசியல் அமைப்புகளின்கீழ் வாழ்ந்து வந்தனர். அவற்றில் திருவிதாங்கூர் மற்றும் கொச்சி சமஸ்தானங்களும், மெட்ராஸ் பிரசிடென்சியின் மலபார் மாவட்டமும் அடங்கும்.
மலையாளம் பேசும் பகுதிகளை ஒன்றிணைக்க வேண்டும் என்ற கோரிக்கை 1920-களில் நடைபெற்ற “ஐக்கிய கேரளா” (Aikya Kerala – United Kerala) இயக்கத்தின் மூலம் வலுப்பெற்றது.
இந்தியா சுதந்திரம் பெற்ற பின்னர், திருவிதாங்கூர் மற்றும் கொச்சி சமஸ்தானங்கள் 1949-ஆம் ஆண்டு ஒன்றிணைக்கப்பட்டு திருவிதாங்கூர்-கொச்சி மாநிலம் உருவாக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, மொழிவாரி மாநில மறுசீரமைப்பு (States Reorganisation Commission) மலையாளம் பேசும் தனி மாநிலம் உருவாக வழிவகுத்தது. சியத் ஃபஸல் அலி தலைமையிலான மாநில மறுசீரமைப்பு ஆணையத்தின் பரிந்துரைகளைத் தொடர்ந்து, 1956 நவம்பர் 1-ஆம் தேதி நவீன கேரள மாநிலம் உருவானது.
மலபார் மாவட்டமும் காசர்கோடு தாலுக்கும் புதிய மாநிலத்தில் இணைக்கப்பட்டன. அதேவேளையில், திருவிதாங்கூரின் தெற்குப்பகுதிகளில் இருந்த தோவாளை, அகஸ்தீஸ்வரம், கல்குளம் மற்றும் விளவங்கோடு ஆகிய நான்கு தாலுக்குகளும், செங்கோட்டை பகுதியின் சில பகுதிகளும் புதிய கேரள மாநிலத்தில் சேர்க்கப்படாமல், பின்னர் தமிழ்நாட்டின் பகுதிகளாக இணைந்தன.
மலையாள மொழியில் புதிய மாநிலம் “கேரளம்” (Keralam) என்று அழைக்கப்பட்டது. ஆனால், ஆங்கிலத்திலும் அரசியலமைப்பிலும் அதன் பெயர் “கேரளா” என்றே தொடர்ந்தது.
ஒரு மாநிலத்தின் பெயர் எவ்வாறு மாற்றப்படுகிறது?
ஒரு மாநிலத்தின் பெயரை மாற்றுவதற்கான அதிகாரத்தை இந்திய நாடாளுமன்றத்திற்கு அரசியலமைப்பு தெளிவாக வழங்கியுள்ளது.
அரசியலமைப்பின் 3-வது பிரிவின்கீழ், மாநிலத்தின் பெயரை மாற்றுவதற்கான மசோதா குடியரசுத்தலைவரின் பரிந்துரையின் பேரிலேயே நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட முடியும். அந்த முன்மொழிவு ஒரு மாநிலத்தின் பரப்பளவு, எல்லைகள் அல்லது பெயரை பாதிக்கும் பட்சத்தில், குடியரசுத் தலைவர் அந்த மசோதாவை சம்பந்தப்பட்ட மாநில சட்டப்பேரவைக்கு அனுப்பி, மாநில சட்டப்பேரவையின் கருத்துகளைத் தெரிவிப்பதற்கான வாய்ப்பை வழங்குகிறார். இருப்பினும், மாநில சட்டமன்றத்தின் கருத்து நாடாளுமன்றத்தைக்கட்டுப்படுத்தாது.
கேரளாவைப் பொறுத்தவரை, 2026-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் மத்திய அமைச்சரவை முன்மொழிவுக்கு ஒப்புதல் அளித்த பின்னர், குடியரசுத் தலைவர் கேரளா (பெயர் மாற்றம்) மசோதா, (Kerala (Alteration of Name) Bill, 2026) மசோதாவை கேரள சட்டப்பேரவைக்கு அனுப்பினார். சட்டப்பேரவையும் மசோதாவை ஒருமனதாக ஏற்றுக்கொண்டது.
இந்த மசோதா பின்னர் ஆகஸ்ட் 10-ஆம் தேதி மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டு, ஆகஸ்ட் 11-ஆம் தேதி குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. இனி இந்த மசோதா மாநிலங்களவையால் நிறைவேற்றப்பட்டு, குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெற வேண்டும். அதன் பின்னரே “கேரளா” என்பதிலிருந்து “கேரளம்” என்ற பெயர் மாற்றம் சட்டப்பூர்வமாக நடைமுறைக்கு வரும்.