நீதிபதி யஷ்வந்த் வர்மா மீதான விசாரணை : குழு ஆய்வு முடிவுகள் மற்றும் அடுத்தகட்ட நடவடிக்கைகள் என்ன? - சந்தீப் ஃபுகான்

இவ்விவகாரம் குறித்து அரசாங்கம் இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்த அறிக்கையையும் வெளியிடவில்லை என்றாலும், நீதிபதி வர்மா பதவி விலகுவதற்கு வெகு காலத்திற்கு முன்பே அவரைப் பதவி நீக்கம் செய்வதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுவிட்டதால், நீதிபதியை நீக்கும் நடைமுறையைத் தொடரலாம் என்று மூத்த அதிகாரிகள் வாதிடுகின்றனர்.


தற்போதைய நிகழ்வுகள் :


விளக்கமளிக்கப்படாத ரொக்கப் பணத்தை (unexplained cash) வைத்திருந்ததாகக் கூறப்படும் நீதிபதி யஷ்வந்த் வர்மா மீதான விசாரணை ஒரு முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது. மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவால் நியமிக்கப்பட்ட மூன்று பேர் கொண்ட குழு, அவர் மீதான மூன்று குற்றச்சாட்டுகளும் "நிரூபிக்கப்பட்டதாக" கண்டறிந்துள்ளது. இதற்கான அறிக்கை புதன்கிழமை, ஆகஸ்ட் 12, 2026 அன்று நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தாக்கல் செய்யப்பட்டது.


மார்ச் 14, 2025 அன்று புதுதில்லியில் உள்ள நீதிபதி வர்மாவின் அதிகாரப்பூர்வ இல்லமான '30, துக்ளக் கிரசண்ட்' (30, Tughlaq Crescent) பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தைத் தொடர்ந்து இந்த சர்ச்சை தொடங்கியது. தீயை அணைக்கச் சென்ற தீயணைப்பு வீரர்கள், அங்குள்ள ஒரு சேமிப்பறையில் எரிந்த நிலையில் இருந்த ரூபாய் நோட்டுகளைக் கண்டெடுத்தனர். அப்போது புதுதில்லி உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த நீதிபதி வர்மா, அந்தப் பணம் தனக்குச் சொந்தமானது என்பதை மறுத்ததுடன், ஆதாரங்கள் கையாளப்பட்ட விதத்தையும் கேள்விக்குள்ளாக்கினார்.



இதனைத் தொடர்ந்து, அவரைப் பதவி நீக்கம் செய்யக் கோரும் தீர்மானத்தில் சுமார் 200 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டனர். 'நீதிபதிகள் (விசாரணை) சட்டம்-1968' (Judges (Inquiry) Act)-ன் கீழ், உச்சநீதிமன்ற நீதிபதி அரவிந்த் குமார் தலைமையில், மும்பை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி ஸ்ரீசந்திரசேகர் மற்றும் மூத்த வழக்கறிஞர் பி.வி.ஆச்சார்யா ஆகியோரை உறுப்பினர்களாகக் கொண்ட ஒரு விசாரணைக் குழுவை சபாநாயகர் அமைத்தார். இக்குழு தனது அறிக்கையை மே மாதத்தில் சபாநாயகரிடம் சமர்ப்பித்தது.


குழு என்ன கண்டறிந்தது?


நீதிபதி வர்மா மீதான மூன்று குற்றச்சாட்டுகளை இந்த அறிக்கை பட்டியலிடுகிறது.


முதலாவதாக, நீதிபதி வர்மாவின் அதிகாரப்பூர்வ இல்ல வளாகத்தில் உள்ள சேமிப்பறையில், விளக்கமளிக்கப்படாத கணிசமான அளவு ₹500 ரூபாய் நோட்டுகள் கண்டெடுக்கப்பட்டதையும், அவற்றின் இருப்பு, ஆதாரம் அல்லது உரிமை குறித்து அவர் திருப்திகரமான விளக்கத்தை அளிக்கத் தவறியதையும் குழு கண்டறிந்தது. எனவே, முதல் குற்றச்சாட்டு (Article I) நிரூபிக்கப்பட்டது.


இரண்டாவதாக, முக்கிய ஆதாரங்கள் முறையாகப் பாதுகாக்கப்படவில்லை அல்லது பராமரிக்கப்படவில்லை என்று குழு கண்டறிந்தது. இந்த அறை சட்டப்பூர்வமாக முத்திரையிடப்பட்டு ஆய்வு செய்யப்படுவதற்கு முன்பே சேமிப்பறையில் இருந்த ஆதாரங்களின் நிலை மாற்றப்பட்டதாகவும், அதன் பிறகு அந்தப் பணம் கிடைக்காமல் போனதற்கான காரணம் விளக்கப்படவில்லை என்றும் அது குறிப்பிட்டது.


மூன்றாவதாக, நீதிபதி வர்மாவின் விளக்கங்களை ஆய்வுசெய்த குழு, விளக்கமானது போதுமானதாக இல்லை என்று கண்டறிந்தது. இத்தகைய சூழலில் எதிர்பார்க்கப்படும் "நேர்மை, வெளிப்படைத்தன்மை மற்றும் நிறுவனரீதியான பொறுப்புணர்வு" ஆகியவற்றைக் கொண்டிருக்கவில்லை என்றும், சுதந்திரமான அதிகாரப்பூர்வ சாட்சிகள் மற்றும் உறுதிப்படுத்தும் ஆதாரங்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது அவரது விளக்கங்கள் "நேரடியான பதிலைத் தவிர்ப்பதாகவும் திருப்தியற்றதாகவும்" இருந்தன என்றும் அறிக்கை கூறியது. இதன் அடிப்படையில், மூன்றாவது குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டது.


குழுவின் ஒருங்கிணைந்த முடிவு சந்தேகத்திற்கு இடமின்றி பின்வருமாறு உள்ளது. அவை, "குற்றச்சாட்டுகள் I, II மற்றும் III ஆகியவை நிரூபிக்கப்பட்டுள்ளன." அதனைத் தொடர்ந்து, "சட்டத்திற்கேற்ப மேற்கொள்ளப்படக்கூடிய மேல்நடவடிக்கைக்காக" அக்குழு அறிக்கையையும் விசாரணை ஆவணங்களையும் சமர்ப்பித்தது. இந்த முடிவுகள் மட்டுமே ஒரு நீதிபதியை அவரது பதவியிலிருந்து நீக்கிவிடாது.


அடுத்து என்ன நடக்கும்?


பொதுவாக, 'நீதிபதிகள் (விசாரணை) சட்டம்' பிரிவு 6-ன் கீழ் ஒரு நீதிபதி மீது சுமத்தப்பட்ட முறையற்ற நடத்தை நிரூபிக்கப்பட்டால், அந்தக் குழுவின் அறிக்கையுடன் பதவி நீக்கத் தீர்மானமானது, நிலுவையில் உள்ள அவைக்குத் திருப்பி அனுப்பப்படும். அந்தத் தீர்மானம் ஏற்றுக்கொள்ளப்பட்டால், அது நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் அரசியலமைப்பின் சிறப்புப் பெரும்பான்மையுடன் (அதாவது, மொத்த உறுப்பினர்களில் பெரும்பான்மையினரும், அவையில் இருந்து வாக்களிப்பவர்களில் குறைந்தது மூன்றில் இரண்டு பங்கும் ஆதரவளிக்க வேண்டும்) நிறைவேற்றப்பட வேண்டும்.


அதன்பிறகு, நீதிபதியைப் பதவியிலிருந்து நீக்கக் கோரி இரு அவைகளும் குடியரசுத் தலைவரிடம் முறையான கோரிக்கையைச் சமர்ப்பிக்கும்.


இருப்பினும், நீதிபதி வர்மாவின் ராஜினாமா இந்த நடைமுறையைச் சிக்கலாக்கியுள்ளது. அவர் ராஜினாமா செய்திருந்தாலும், அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அவர் இன்னும் உயர்நீதிமன்றத்தின் மூத்த நீதிபதிகளில் ஒருவராகவே குறிப்பிடப்பட்டுள்ளார்.


அவரது ராஜினாமா குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இருப்பினும், அத்தகைய ராஜினாமாவுக்குத் தனிப்பட்ட முறையில் தேர்வு (separate acceptance) ஏதும் தேவையில்லை என்றும், அது தானாகவே நடைமுறைக்கு வந்துவிடும் என்றும் சட்ட நிபுணர்கள் வாதிடுகின்றனர். அரசியலமைப்பின் 217-வது பிரிவு, உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவர் குடியரசுத் தலைவருக்குக் கடிதம் எழுதுவதன் மூலம் தனது பதவியை ராஜினாமா செய்ய அனுமதிக்கிறது.


அவரது ராஜினாமா நடைமுறைக்கு வந்ததாகக் கருதப்பட்டால், பதவி நீக்கம் செய்யப்பட வேண்டிய நிலையில் இருக்கும் நீதிபதி யாரும் பதவியில்  இருக்கமாட்டார்கள். இதனால், நாடாளுமன்றத்தின் இந்த நடைமுறை பயனற்றதாகிவிடும்.


ஒரு நீதிபதி பதவியிலிருந்து விலகிய பிறகு அவருக்கு அளிக்கப்பட வேண்டிய தண்டனை குறித்து 'நீதிபதிகள் (விசாரணை) சட்டம்' தெளிவாக எதையும் குறிப்பிடவில்லை. குறிப்பாக பிரிவு-6 ஆனது, குழுவின் குற்றச்சாட்டு உறுதிப்படுத்தப்பட்ட முடிவை, பதவி நீக்கத் தீர்மானத்தை பரிசீலிப்பதோடு மட்டுமே இணைக்கிறது.


இது, பதவி விலகலுக்குப் பிறகும் நாடாளுமன்றத்தால் இந்த நடைமுறையைத் தொடர முடியுமா என்ற கேள்வி இது எழுப்புகிறது. சட்டப்படி அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு இந்த அறிக்கையின் முடிவுரை பரிந்துரைப்பதால், இந்தச் சிக்கலுக்குத் தெளிவான தீர்வைக் கூறவில்லை.


இது குறித்து அரசு அதிகாரப்பூர்வமாக எந்த அறிக்கையையும் வெளியிடவில்லை என்றாலும், நீதிபதி வர்மா ராஜினாமா செய்வதற்கு வெகு காலத்திற்கு முன்பே பதவி நீக்க நடவடிக்கைகளைத் தொடங்கிவிட்டதால், பதவி நீக்க நடைமுறையைத் தொடர்ந்து நடத்தலாம் என்று மூத்த அதிகாரிகள் வாதிடுகின்றனர். நீதித்துறையில் பொறுப்புணர்வையும் நேர்மையையும் நிலைநாட்டுவதே இந்த விவகாரத்தின் நோக்கம் என்று அவர்கள் கூறுகின்றனர். இருப்பினும், மூன்று பேர் கொண்ட குழுவின் ஆய்வுகள் மற்றும் பரிந்துரைகள் அடிப்படையில் அரசு எப்போது, ​​எப்படிச் செயல்பட விரும்புகிறது என்பது குறித்து இன்னும் தெளிவு இல்லை.


Original Link: Justice Yashwant Varma inquiry: What the panel found and what happens next? 

Share: