சிறு வரி செலுத்துவோரின் வெளிநாட்டுச் சொத்துக்கள் – வெளிப்படுத்தல் திட்டத்தின் (FAST-DS) முக்கிய அம்சங்கள் யாவை? -ரோஷ்னி யாதவ்

FAST-DS :  Foreign Assets of Small Taxpayers – Disclosure Scheme : சிறு வரி செலுத்துவோரின் வெளிநாட்டுச் சொத்துக்கள் – வெளிப்படுத்தல் திட்டம்


முக்கிய அம்சங்கள் :


மத்திய நேரடி வரிகள் வாரியம் (Central Board of Direct Taxes (CBDT)), 'சிறிய வரி செலுத்துவோரின் வெளிநாட்டுச் சொத்துக்கள் – வெளிப்படுத்தும் திட்டம்-2026' (FAST-DS) தொடர்பான விதிகளை அறிவித்துள்ளது. இந்த விதிகள், FAST-DS குறித்த நிதிநிலை அறிக்கை தொடர்பான அறிவிப்பைச் செயல்படுத்தும் வகையில் அமைந்துள்ளன. இத்திட்டம் ஆகஸ்ட் 16 முதல் அமலுக்கு வருகிறது. மேலும் சொத்துக்கள் அல்லது வருமானத்தை வெளிப்படுத்துவதற்கான கடைசி தேதி டிசம்பர் 31 ஆகும்.


இத்திட்டம் சொத்துக்கள் அல்லது வருமானத்தின் இரண்டு முக்கிய வகைகளை உள்ளடக்கியது. முதலாவது, இந்தியாவிற்கு வெளியே அமைந்துள்ள, ரூ.1 கோடி வரையிலான மதிப்புள்ள வெளிப்படுத்தப்படாத வெளிநாட்டு வருமானம் அல்லது சொத்துக்களை உள்ளடக்கியது. இரண்டாவது, ரூ. 5 கோடி வரையிலான மதிப்புள்ள வெளிநாட்டுச் சொத்துக்களை உள்ளடக்கியது. வரி செலுத்துவோர் இந்தியாவில் வசிக்காதவராக (non-resident) இருந்தபோது ஈட்டிய வருமானத்தைக் கொண்டு இச்சொத்துக்கள் வாங்கப்பட்டிருக்கலாம். ஆனால், அவர் இந்தியாவில் வசிப்பவராக மாறிய பிறகு தாக்கல் செய்த வருமான வரி அறிக்கையில் இவை குறிப்பிடப்படாமல் இருந்திருக்கலாம். மேலும், வருமான வரிச் சட்டத்தின்கீழ் ஏற்கனவே வரிக்கு உட்படுத்தப்பட்ட வருமானத்தைக் கொண்டு வாங்கப்பட்ட சொத்துக்களையும் இது உள்ளடக்குகிறது. ஆனால், அத்தகைய சொத்துக்கள் வருமானவரி அறிக்கையின் தொடர்புடைய அட்டவணையில் குறிப்பிடப்படாமல் இருந்திருக்கலாம்.


முதல் வகையின்கீழ், வரி செலுத்துவோர் அச்சொத்துக்களின் நியாயமான சந்தை மதிப்பில் 30% அல்லது வெளிப்படுத்தப்படாத வருமானத்தில் 30% தொகையை வரியாகச் செலுத்த வேண்டும். அத்துடன், அபராதத்திற்குப் பதிலாக கூடுதல் வருமான வரியாக 30% தொகையையும் அவர்கள் செலுத்த வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம், அவர்கள் சட்ட நடவடிக்கையிலிருந்து விலக்கு (immunity) பெறத் தகுதி பெறுவார்கள். இரண்டாவது வகையைப் பொறுத்தவரை, ரூ. 1 லட்சம் கட்டணம் செலுத்துவதன் மூலம் அபராதம் மற்றும் சட்ட நடவடிக்கை ஆகிய இரண்டிலிருந்தும் விலக்கு பெறலாம்.


ஃபாஸ்ட்-டிஎஸ் (FAST-DS) திட்டத்தின் கீழ் முறையான அறிவிப்பைச் செய்து பணம் செலுத்தினால், அவ்வாறு அறிவிக்கப்பட்ட வருமானம் அல்லது சொத்து தொடர்பாக, 2015-ம் ஆண்டு கருப்புப் பணச் சட்டத்தின் (Black Money Act) கீழ் விதிக்கப்படும் கூடுதல் வரி, அபராதம் மற்றும் வழக்குத் தொடரப்படுவதிலிருந்து விலக்கு அளிக்கப்படும் என்று வருமான வரித் துறை தெரிவித்துள்ளது. மேலும், இந்தத் திட்டத்தின் கீழ் அறிவிக்கப்பட்ட வருமானம் அல்லது சொத்தில் செய்யப்பட்ட முதலீட்டுத் தொகை, வருமான வரிச் சட்டம் அல்லது கருப்புப் பணச் சட்டத்தின்கீழ் வரி செலுத்துபவரின் மொத்த வருமானத்தில் சேர்க்கப்படாது என்றும் அது கூறியுள்ளது.


புதிதாக அறிவிக்கப்பட்ட விதிகளின்படி, வெளிப்படுத்தப்படாத வருமானம் மற்றும் சொத்துக்களின் மொத்த மதிப்பு, சொத்துக்கள் அறிவிக்கப்படும் வகையைப் பொறுத்து ரூ. 1 கோடி அல்லது ரூ. 5 கோடிக்கு மிகாமல் இருக்கும் பட்சத்தில், எந்தவொரு சொத்து அல்லது வருமானத்திற்கான அறிவிப்பையும் வருமான வரி அதிகாரியிடம் படிவம்-1-ல் மின்னணு முறையில் சமர்ப்பிக்க வேண்டும்.


வங்கி கணக்கைத் தவிர, வேறு எந்தவொரு சொத்துக்களை அறிவிக்கும்போது, தவறான தகவல்களைக் கொடுத்தல், உண்மைகளை மறைத்தல் அல்லது பொய்யான முக்கிய விவரங்களை அளித்தல் ஆகிய காரணங்களுக்காக செல்லாததாகவோ அல்லது ரத்து செய்யப்பட்டதாகவோ கருதப்படாது. இருப்பினும், மதிப்பீடு அல்லது விசாரணையின் போது மதிப்பீட்டு அதிகாரி அல்லது வேறு ஏதேனும் வருமான வரி அதிகாரியால் நிர்ணயிக்கப்பட்ட மதிப்பிற்கும், அந்தச் சொத்தின் நியாயமான சந்தை மதிப்பிற்கும் (fair market value) இடையிலான வித்தியாசம் 20%-க்கு மிகாமல் இருந்தால் மட்டுமே இந்த விதி பொருந்தும் என்று விதிகள் தெரிவிக்கின்றன.


இந்தத் திட்டத்திற்கான மதிப்பீட்டுத் தேதி மார்ச் 31, 2026 ஆகும். மேலும், அறிவிக்கப்படவிருக்கும் சொத்துக்களின் நியாயமான சந்தை மதிப்பு இந்தத் தேதியின் அடிப்படையில் கணக்கிடப்பட வேண்டும்.


2002-ம் ஆண்டின் பணமோசடி தடுப்புச் சட்டத்தின் (Prevention of Money-laundering Act) கீழ் நடவடிக்கைகள் தொடங்கப்பட்ட அல்லது நிலுவையில் உள்ள குற்றச் செயல்களின் வருமானத்தை, நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஏதேனும் வருமானம் அல்லது சொத்து குறித்தாலோ; அல்லது 2015-ம் ஆண்டின் கருப்புப் பணச் சட்டத்தின் (Black Money Act) கீழ் மதிப்பீட்டு நடவடிக்கைகள் ஏற்கனவே முடிக்கப்பட்ட ஒரு மதிப்பீட்டு ஆண்டு தொடர்பான ஏதேனும் வருமானம் அல்லது சொத்து குறித்தாலோ இந்தத் திட்டம் பொருந்தாது என்று அந்தத் துறை தெரிவித்துள்ளது.


உங்களுக்குத் தெரியுமா? 


கடந்த பிப்ரவரியில் தனது நிதிநிலை அறிக்கை உரையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மாணவர்கள், இளம் தொழில் வல்லுநர்கள், தொழில்நுட்ப ஊழியர்கள், இடம்பெயர்ந்த வெளிநாடு வாழ் இந்தியர்கள் மற்றும் பிறர் போன்ற சிறு வரி செலுத்துவோர், ஒரு குறிப்பிட்ட அளவிற்கு குறைவான வருமானம் அல்லது சொத்துக்களை வெளிப்படுத்துவதில் உள்ள நடைமுறைச் சிக்கல்களைத் தீர்க்கும் வகையில், அரசாங்கம் ஒரு முறை மட்டும் வழங்கப்படும் 6 மாத கால அவகாசம் கொண்ட வெளிநாட்டுச் சொத்து அறிவிப்புத் திட்டம்' (foreign asset window) அறிமுகப்படுத்தப்படும் என்று கூறியிருந்தார்.





Share: