பெண் வாக்காளர்களின் அதிக வாக்குப்பதிவு ஜனநாயகம் சுறுசுறுப்பாகவும் வலுவாகவும் இருபதறகான அறிகுறியாகும். ஆனால், உண்மையான அதிகாரமளித்தல் என்பது வாக்களிப்பது மட்டுமல்ல. முடிவெடுக்கும் பொறுப்புகளிலும் பெண்களுக்கு இடம் இருக்க வேண்டும்.
இந்தியா ஒரு அசாதாரணமான ஜனநாயகச் சந்திப்பில் உள்ளது. இது உலகின் மிகவும் துடிப்பான ஜனநாயக நாடுகளில் ஒன்றாகும். அதிக வாக்காளர் பங்கேற்பு மற்றும் அதிகாரித்துவரும் பெண் வாக்காளர்களால் இது குறிக்கப்படுகிறது. ஆனால், அதன் சட்டமன்ற அமைப்புகளுக்குள், பெண்களின் பிரதிநிதித்துவம் வெளிப்படையாகக் குறைவாகவே உள்ளது. பங்கேற்புக்கும் பிரதிநிதித்துவத்திற்கும் இடையிலான இந்த முரண்பாடு, பெண்களுக்கான இட ஒதுக்கீடு மசோதாவை உடனடியாகச் செயல்படுத்துவதற்கான ஒரு வலுவான வாதத்தை முன்வைக்கிறது.
இந்த இடைவெளி தொடர்ந்து முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியப் பெண்கள் ஒரு தீர்க்கமான தேர்தல் சக்தியாக உருவெடுத்துள்ள போதிலும், சட்டமியற்றும் அமைப்புகளில் பெண்களின் பிரதிநிதித்துவம் இன்னும் மிகக் குறைவாகவே உள்ளது. மாநில மற்றும் தேசியப் பிரதிநிதித்துவத்திற்கு இடையிலான பெரும் வேறுபாட்டில் இந்த ஏற்றத்தாழ்வு மிகவும் தெளிவாகத் தெரிகிறது.
மாநில சட்டமன்றங்களில், சராசரியாக, சட்டமன்ற உறுப்பினர்களில் பெண்கள் சுமார் 9% மட்டுமே உள்ளனர். அதேசமயம், நாடாளுமன்றத்தில் அவர்களின் பிரதிநிதித்துவம் சுமார் 14%-15% ஆக உள்ளது. இது, நாட்டின் மொத்த மக்கள்தொகையில் பெண்களின் பங்கான கிட்டத்தட்ட 50%-ஐப் பிரதிபலிப்பதிலிருந்து வெகு தொலைவில் உள்ளது.
இந்த ஏற்றத்தாழ்வு வெறும் எண்ணிக்கை சார்ந்தது மட்டுமல்ல, இது கட்டமைப்பு ரீதியானது. கடந்த இருபது ஆண்டுகளில், இந்தியாவில் பெண்கள் செயலற்ற வாக்காளர்களிலிருந்து தீவிர அரசியல் பங்கேற்பாளர்களாக மாறியுள்ளனர். பல மாநிலங்களில், பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை இப்போது ஆண்களின் எண்ணிக்கைக்குச் சமமாகவோ அல்லது அதைவிட அதிகமாகவோ உள்ளது. இது ஒரு குறிப்பிடத்தக்க ஜனநாயகச் சாதனையாகும். இது பெண்களிடையே தங்களின் செயல்திறன், விழிப்புணர்வு மற்றும் வளர்ந்துவரும் அரசியல் உரிமையுணர்வை உணர்த்துகிறது. இருப்பினும், பங்கேற்பில் ஏற்பட்ட இந்த எழுச்சி, பிரதிநிதித்துவத்தில் அதற்கு இணையான பிரதிநிதித்துவத்திற்கு வழிவகுக்கவில்லை.
கட்டமைப்புரீதியான குறைபாடுகள்
இதற்கான காரணங்கள் இந்தியாவின் அரசியல் அமைப்பின் செயல்பாட்டில் ஆழமாக வேரூன்றியுள்ளன. அரசியல் கட்சிகள் வாயில்காப்பாளர்களாகச் செயல்படுகின்றன. மேலும், ஆண்களைவிட மிகக் குறைவான பெண் வேட்பாளர்களையே தொடர்ந்து நியமிக்கின்றன. தேர்தல் அரசியல் என்பது அதிக வளங்கள் தேவைப்படும் ஒரு துறையாகும். இதற்கு நிதி ஆதரவு, வலையமைப்புகள் மற்றும் சமூக மூலதனம் தேவைப்படுகின்றன. இந்தத் துறைகளில் பெண்கள் பெரும்பாலும் அமைப்புரீதியான சிக்கல்களை எதிர்கொள்கின்றனர். கலாச்சார நெறிமுறைகளும் பாதுகாப்பு குறித்த கவலைகளும் பெண்களை அரசியல் களத்தில் நுழைவதிலிருந்து மேலும் தடுக்கின்றன. இதன் விளைவாக, ஒவ்வொரு தேர்தலிலும் தொடர்ந்து நிகழும் ஒரு புறக்கணிப்புச் சுழற்சி உருவாகிறது. சரியாக இந்த காரணத்தினால்தான் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விரும்பத்தக்கது மட்டுமல்ல, அவசியமானதும் ஆகும். சட்டமன்றங்களில் பெண்களுக்கு ஒரு குறிப்பிட்ட பங்கு இடங்களைக் கட்டாயமாக்குவதன் மூலம், நியாயமான பிரதிநிதித்துவத்தைத் தடுக்கும் கட்டமைப்புத் தடைகளை இது நேரடியாகக் களைகிறது. இத்தகைய ஒதுக்கீடுகள் தகுதியைக் குறைத்து மதிப்பிடுகின்றன அல்லது பெயரளவிலான பிரதிநிதித்துவத்திற்கு வழிவகுக்கின்றன என்று விமர்சகர்கள் அடிக்கடி வாதிடுகின்றனர். ஆனால் இந்த வாதம், தற்போதைய அமைப்புரீதியாக தகுதியின் அடிப்படையில் இயங்குகிறது என்று கருதுகிறது. ஆனால் அது தெளிவாக அவ்வாறு இல்லை. இந்தியாவில் அரசியல் அதிகாரத்திற்கான அணுகலானது, திறமையைப் போலவே சலுகைகள் மற்றும் வலையமைப்புகளாலும் வடிவமைக்கப்படுகிறது.
உள்ளாட்சி மட்டத்தில் இட ஒதுக்கீடு குறித்த இந்தியாவின் தனிபட்ட அனுபவத்திலிருந்தே கிடைக்கும் சான்றுகள் ஒரு வலுவான மாற்றுக்கருத்தை அளிக்கின்றன. பஞ்சாயத்து ராஜ் நிறுவனங்களில், பெண்களுக்கு இடங்கள் ஒதுக்கப்பட்ட இடங்களில், அதன் விளைவுகள் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளன. பெண் தலைவர்கள் திறம்படப் பங்கேற்றது மட்டுமல்லாமல், சுகாதாரம், கல்வி, நீர் மற்றும் சுகாதாரம் போன்ற பிரச்சினைகளை நோக்கி கொள்கை முன்னுரிமைகளையும் மாற்றியுள்ளனர். இவை சாதாரணமான பிரச்சினைகள் அல்ல, அவை மனித வளர்ச்சிக்கும் பொருளாதார முன்னேற்றத்திற்கும் மையமானவை.
மேலும், பிரதிநிதித்துவம் ஒரு சங்கிலித் தொடர் விளைவை ஏற்படுத்துகிறது. பெண்கள் அதிகாரப் பதவிகளை வகிக்கும்போது, அவர்கள் ஆழமாக வேரூன்றிய சமூக நெறிகளுக்கு சவால் விடுகிறார்கள். இளம் பெண்கள் தலைமைப் பதவியை அடைய முடியும் என்று கருதி வளர்கிறார்கள். குடும்பங்களும் சமூகங்களும் பெண்களின் பொதுப் பங்குகளை மிகவும் எளிதாக ஏற்றுக்கொள்ளத் தொடங்குகின்றன. காலப்போக்கில், இது எதிர்காலத் தலைவர்களின் ஒரு தொடர் வரிசையை உருவாக்குகிறது. எனவே, இட ஒதுக்கீடு என்பது ஒரு நிரந்தரத் தீர்வு அல்ல, மாறாக அது ஒரு வினையூக்கியாகச் செயல்படுகிறது. அது வரலாற்று ரீதியான ஏற்றத்தாழ்வுகளைச் சரிசெய்ய உதவுகிறது மற்றும் மிகவும் சமத்துவமான ஒரு அமைப்புக்கு களம் அமைக்கிறது.
மாநில சட்டமன்றங்கள் மற்றும் நாடாளுமன்றம் குறித்து
மாநில சட்டமன்றங்களுக்கும் நாடாளுமன்றத்திற்கும் இடையிலான ஒப்பீடு, இந்த சீர்திருத்தத்தின் அவசரத்தை மேலும் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
மாநில அளவில் பிரதிநிதித்துவம் 9% ஆகக் குறைவாக இருந்தால், சட்டமியற்றும் அதிகாரத்தின் அடிமட்டத்தில் பிரச்சினை இன்னும் கடுமையாக உள்ளது என்பதையே அது காட்டுகிறது. சுகாதாரம், கல்வி, சட்டம் மற்றும் ஒழுங்கு, மற்றும் உள்ளாட்சி மேம்பாடு தொடர்பான கொள்கைகளை உருவாக்குவதில் மாநில அரசுகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. இவை குடிமக்களின் அன்றாட வாழ்க்கையை நேரடியாகப் பாதிக்கின்றன. இந்த முடிவெடுக்கும் அமைப்புகளில் பெண்கள் ஏறக்குறைய இல்லாததால், மக்கள்தொகையில் பாதிப் பேருக்கு அவற்றை வடிவமைப்பதில் குறைந்த அளவே குரல் மட்டுமே உள்ளது என்பதாகும்.
தேசிய அளவில், நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் சுமார் 14%–15% என்ற சற்றே உயர்ந்த எண்ணிக்கை பெரும்பாலும் ஒரு முன்னேற்றமாகக் குறிப்பிடப்படுகிறது. ஆனால் இதுவும் உலகளாவிய அளவுகோல்கள் மற்றும் ஜனநாயகக் கொள்கைகளுக்கு போதுமானதாக இல்லை. ஒரு பிரதிநிதித்துவ ஜனநாயகம், அதன் மக்களின் பன்முகத்தன்மையை வெறும் கோட்பாட்டில் மட்டுமல்ல, நடைமுறையிலும் பிரதிபலிக்க வேண்டும். பெண்களின் குறைவான பிரதிநிதித்துவம், இந்தியாவின் ஜனநாயக நிறுவனங்களின் சட்டபூர்வத்தன்மையையும் அனைவரையும் உள்ளடக்கும் தன்மையையும் பலவீனப்படுத்துகிறது.
காலம் மற்றொரு முக்கியக் காரணியாகும். இந்தியா சமூக மற்றும் பொருளாதார ரீதியாக வேகமாக மாறி வருகிறது. அதிகமான பெண்கள் உயர்கல்வியில் சேர்கிறார்கள். அதிகமான பெண்கள் பணியிடங்களில் இணைகிறார்கள். அவர்கள் தங்கள் உரிமைகளை மேலும் வலுவாக நிலைநாட்டுகிறார்கள். அவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்த வேண்டிய நிறுவனங்களைவிட அவர்களின் விருப்பங்கள் வேகமாக வளர்ந்து வருகின்றன. மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவைச் செயல்படுத்துவதில் தாமதம் செய்வது, இந்த இடைவெளியை மேலும் விரிவுபடுத்தும் அபாயத்தை ஏற்படுத்துவதோடு, விரக்திக்கும் ஈடுபாடின்மைக்கும் வழிவகுக்கும்.
சட்டப்பூர்வ ஆணைகளைச் சார்ந்திருப்பதை விடுத்து, அரசியல் கட்சிகள் தாமாக முன்வந்து அதிக பெண் வேட்பாளர்களை நிறுத்த வேண்டும் என்று சிலர் வாதிடுகின்றனர். இது ஒரு விரும்பத்தக்க இலக்காக இருந்தாலும், தாமாக முன்வந்து எடுக்கப்படும் நடவடிக்கைகள் பலனளிக்கவில்லை என்பதை கடந்தகால அனுபவங்கள் காட்டுகின்றன. தொடர்ந்து அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் இருந்தபோதிலும், பெண் வேட்பாளர்களின் விகிதம் குறைவாகவே நீடித்து வருகிறது. கட்டமைப்பு சார்ந்த சிக்கல்களுக்குக் கட்டமைப்பு சார்ந்த தீர்வுகளே தேவை; இட ஒதுக்கீடு அத்தகைய தீர்வுகளில் ஒன்றாகும்.
ஜனநாயகத்தை வலுப்படுத்துதல்
மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவின் சாராம்சம், ஜனநாயகத்தை வலுப்படுத்துவதே ஆகும். பெண் வாக்காளர்களிடையே அதிக வாக்குப்பதிவு என்பது ஜனநாயகத்தின் தீவீரத்திற்கான ஓர் அறிகுறியாகும். ஆனால், உண்மையான அதிகாரமளித்தலுக்கு வாக்களிப்பது மட்டும் போதாது. முடிவெடுக்கும் அமைப்புகளிலும் பெண்களுக்கு ஓர் இடம் தேவை. சட்டங்களும் கொள்கைகளும் உருவாக்கப்படும் இடங்களில் அவர்கள் ஒரு அங்கமாக இருக்க வேண்டும். பங்கேற்பிலிருந்து பிரதிநிதித்துவத்திற்கு நகர்வதே இந்தியாவின் ஜனநாயகப் பயணத்தின் அடுத்த தர்க்கரீதியான படியாகும்.
இதில் ஒரு வலுவான வளர்ச்சி சார்ந்த வாதமும் உள்ளது. பாலின சமத்துவமான ஆளுகை சிறந்த விளைவுகளுக்கு வழிவகுக்கிறது என்பதை நாடு தழுவிய ஆய்வுகள் காட்டுகின்றன — அதாவது, அதிக சமத்துவமான கொள்கைகள், மேம்பட்ட சமூகக் குறிகாட்டிகள் மற்றும் நிலையான வளர்ச்சி. இந்தியாவைப் போன்ற பன்முகத்தன்மை வாய்ந்த மற்றும் சிக்கலான ஒரு நாட்டில், மக்கள்தொகையில் பாதியை அரசியல் தலைமையிலிருந்து விலக்குவது அநீதியானது மட்டுமல்ல, அது திறமையற்றதும் ஆகும்.
நிறுவன சீர்திருத்தத்தால் சமூக மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்பதை இந்தியா ஏற்கனவே காட்டியுள்ளது. உள்ளாட்சி நிர்வாகத்தில் இட ஒதுக்கீட்டின் வெற்றி, அரசியல் விருப்பம் இருக்கும்போது மாற்றம் சாத்தியம் என்பதை நிரூபிக்கிறது. இந்தக் கொள்கையை மாநில சட்டமன்றங்கள் மற்றும் நாடாளுமன்றத்திற்கும் விரிவுபடுத்துவது ஒரு தீவிரமான நடவடிக்கை அல்ல, அது ஒரு அவசியமான முன்னேற்றமாகும். இறுதியில், மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவிற்கு இந்தியா தயாராக இருக்கிறதா என்பது கேள்வியல்ல, மாறாக மகளிர் இட ஒதுக்கீட்டிற்காக அதன் ஜனநாயகம் இன்னும் காத்திருக்க முடியுமா என்பதே கேள்வி. பங்கேற்பிற்கும் பிரதிநிதித்துவத்திற்கும் இடையிலான இடைவெளி புறக்கணிக்க முடியாத அளவுக்குப் பெரியது.
இந்தியாவின் ஜனநாயகப் பயணம் குறிப்பிடத்தக்கது, ஆனால் அது இன்னும் முழுமையடையவில்லை.
இந்த இடைவெளியைக் குறைப்பதற்குத் துணிச்சலான நடவடிக்கை தேவை. மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை உடனடியாகச் செயல்படுத்துவது என்பது வெறும் நியாயத்தைப் பற்றியது மட்டுமல்ல, அது மேலும் பிரதிநிதித்துவமிக்க, பதிலளிக்கக்கூடிய மற்றும் மீள்திறன் கொண்ட ஒரு ஜனநாயகத்தைக் கட்டமைப்பதாகும்.
ஷாமிகா ரவி, EAC-PM அமைப்பின் உறுப்பினர்.
Original Link : Why women’s reservation cannot wait any longer