கட்டிட ஆபத்துகள் : தீ விபத்துக்களை தடுத்தல் மற்றும் எதிர்த்துப் போராடுதல் குறித்து . . .

 தீ விபத்துகளைத் தடுக்கவும், அவற்றை எதிர்த்துப் போராடவும் இந்தியா இன்னும் அதிகம் கவனம் செலுத்த வேண்டியுள்ளது.


நகரங்களில் மனித உயிர்களைப் பறிக்கும் ஒவ்வொரு பெரியளவிலான தீ விபத்தும், அதற்கான காரணங்கள் மற்றும் அதைத் தீவிரப்படுத்தும் காரணிகளின் வெவ்வேறு தொகுப்புகளையும் வெளிப்படுத்துகிறது. டெல்லியின் கிழக்குப் பகுதியான ஷாஹ்தாராவில் சமீபத்தில் நடந்த விபத்து, அவசர காலங்களில், குறிப்பாக தீ விபத்துகளின்போது, ​​கட்டிடங்களைக் காலி செய்வதற்கான திட்டமிடலில் போதுமான கவனம் செலுத்தப்படவில்லை என்பதை எடுத்துக்காட்டியது. அந்த விபத்தில் ஒன்பது பேர் இறந்துள்ளனர் மற்றும் சுமார் 15 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். எட்டு வீடுகளைக் கொண்ட, தூண்கள் மற்றும் நான்கு மாடிகளைக் கொண்ட அந்தக் குடியிருப்பு கட்டிடத்தில், பாதுகாப்பை மேம்படுத்தும் நிலைகள் இருந்தன. ஆனால் அவையே பின்னால் ஆபத்தானவையாக மாறின. கதவுகளில் திறக்க முடியாத மின்னணு பூட்டுகள், எளிதில் அணுக முடியாத ஒரு மொட்டை மாடிப் பகுதி மற்றும் பால்கனிகள் உட்பட, கட்டிடத்தைச் சுற்றி உலோகக் கம்பிகள் பொருத்தப்பட்டிருந்தன. இதனால், தீயணைப்புப் படையினர் பாதிக்கப்பட்டவர்களை அடைந்து மீட்க இந்தக் கம்பிகளை வெட்ட வேண்டியிருந்தது. மார்ச் மாதம் பாலத்தில் நடந்த மற்றொரு தீ விபத்தில், ஒரு கூட்டுக் குடும்பத்தைச் சேர்ந்த ஒன்பது பேரும் உயிரிழந்தது, டெல்லியில் தீயணைப்புப் படையினரின் மீட்புநிலையின் சிக்கல்களை எடுத்துக்காட்டியது. அந்தக் கலப்புப் பயன்பாட்டுக் கட்டிடத்தில், அத்தகைய கட்டிடங்களுக்குத் தேவையான, பரிந்துரைக்கப்பட்ட தீயணைப்பு வசதிகள் குறைவாகவே இருந்ததே இதற்கு முக்கியக் காரணமாகும். தீயணைப்புப் பணியாளர்கள் மேல் மாடிகளுக்குச் செல்லப் பயன்படுத்திய ஹைட்ராலிக் மின்தூக்கிகள் பழுதடைந்திருந்ததாக நேரில் பார்த்தவர்கள் புகார் தெரிவித்தனர். ஷாஹ்தாரா விபத்து நடந்த இடத்திற்குத் தீயணைப்புப் படையினர் சரியான நேரத்தில் சென்றடைந்ததாகக் கூறினாலும், தலைநகரில் மற்ற நிகழ்வுகளில் மீட்புப் பணிகள் தாமதமாகியுள்ளன. 2025-ம் ஆண்டு துவாரகாவில் ஏற்பட்ட ஒரு தீ விபத்தின்போது, ​​குடியிருப்புச் சங்கத்தின் பெயர் பலகை தீயணைப்பு வாகனங்களைத் தடுத்ததால், அவற்றால் உள்ளே நுழைய முடியவில்லை.


டெல்லியின் தீத்தடுப்புத் தயார்நிலை மற்றும் தீயணைப்புத் திறன்களை மறுஆய்வு செய்ய வேண்டிய அவசியம் நிச்சயமாக இருந்தாலும், இந்திய நகரங்கள் முழுவதும் இந்தத் தீவிபத்துகளுக்குக் காரணமான மின்சாரப் பிரச்சனைகள் பெரும்பாலும் கவனிக்கப்படாமல் போகின்றன. கோடைக்காலம் தொடங்கியதும், ஷாஹ்தாரா தீவிபத்தில் நடந்தது போல, குளிரூட்டி வெடிப்புகள் (air-conditioner blasts) பெரும்பாலும் சாதாரணமாகக் குறிப்பிடப்படுகின்றன. வெப்பமான கோடை நாட்களில் குளிரூட்டி போன்ற உபகரணங்கள் அதிக சுமையேற்றப்படுவதே பெரும்பாலும் நிகழ்கிறது. அத்தகைய அதிக மின்சாரச் சுமைகளைத் தாங்கும் வகையில் கம்பிகள் பெரும்பாலும் வடிவமைக்கப்படுவதில்லை. இதன் காரணமாக, அவை சூடாகி எரிந்துவிடுகின்றன. மேலும், பாதுகாப்பிற்காக உபகரணங்களைத் துண்டித்திருக்க வேண்டிய மின்சுற்று முறிப்பான்கள் (circuit breakers) அவ்வாறு செய்வதில்லை. இந்தியாவில், மின்சுமை மற்றும் மின்சுற்று முறிப்பான்களின் சரியான விதிமுறை பெரும்பாலும் கடைப்பிடிக்கப்படுவதில்லை. ஏனெனில், ஒரு மின்சார அமைப்பின் பாதுகாப்பான திறனுக்கு அப்பாற்பட்ட அதிக சுமை கொண்ட உபகரணங்களால் குடியிருப்புகள் நிரம்பியுள்ளன. எல்லாச் சூழ்நிலைகளிலும் உபகரணங்களை இயங்க வைப்பதே பெரும்பாலும் நோக்கமாக உள்ளது. ஆனால் அதிக சுமையேற்றப்பட்ட உபகரணங்களைத் துண்டிப்பது ஒரு அவசியமான பாதுகாப்பு அம்சமாகும். அடிப்படைத் தடுப்புப் பாதுகாப்பு நடவடிக்கைகள் இன்னும் முறையாக அமல்படுத்தப்படாத போதிலும், தீயை அணைக்க ட்ரோன்களையும் ரோபோக்களையும் பயன்படுத்துவது குறித்து நகர அதிகாரிகள் பேசுகிறார்கள்.


Original article : Building hazards: On preventing and fighting fires.

Share: