2026-ஆம் ஆண்டு உலக ஏற்றத்தாழ்வு அறிக்கையின்படி, உலகளாவிய வருமானம் மற்றும் செல்வங்கள் உச்சத்தை எட்டியுள்ளன. இருப்பினும், இந்தியாவிலும் உலக அளவிலும் ஏற்றத்தாழ்வு அதிகமாகவே நீடிக்கிறது. இதற்குப் பின்னாலுள்ள முக்கியக் காரணிகள் யாவை?
உலகளாவிய வருமானம் மற்றும் செல்வம் இதுவரை இல்லாத உச்ச அளவை எட்டியுள்ளபோதிலும், ஏற்றத்தாழ்வு இன்றும்அதிகமாகவே நீடிக்கிறது. உலக மக்கள் தொகையில் மிகவும் செல்வந்தர்களான 10 சதவீதத்தினர் மொத்த செல்வத்தில் ஏறக்குறைய முக்கால் பங்கையும், மிகவும் ஏழ்மையான நிலையில் உள்ள பாதிப் பேர் 2 சதவீதத்தையும் மட்டுமே கொண்டுள்ளனர் என்று '2026 உலக ஏற்றத்தாழ்வு அறிக்கை' தெரிவிக்கிறது.
குறிப்பாக, இந்தியாவில் நிலவும் சமத்துவமின்மை உலகிலேயே அதிகமான ஒன்றாகத் தொடர்கிறது. கடந்த சில ஆண்டுகளில் சமத்துவமின்மை அளவில் மாற்றம் எதுவும் ஏற்படவில்லை. அதிக வருமானம் ஈட்டுபவர்களில் முதல் 10 சதவீதத்தினர் தேசிய வருமானத்தில் 58 சதவீதத்தைப் பெறுகின்றனர். அதே, வேளையில் கீழ்மட்ட 50 சதவீதத்தினர் வெறும் 15 சதவீதத்தை மட்டுமே பெறுகின்றனர் என்று அந்த அறிக்கை கூறுகிறது.
தொடர்ந்து நிலவும் சமத்துவமின்மைக்குப் பின்னால் உள்ள முக்கிய காரணிகள் யாவை? செல்வத்தைத் தாண்டி, பாலினம், வாய்ப்பு மற்றும் காலநிலை ஆகியவற்றில் சமத்துவமின்மை எவ்வாறு வெளிப்படுகிறது?
2026-ஆம் ஆண்டு உலக சமத்துவமின்மை அறிக்கை: யாருக்கு என்ன கிடைக்கும்?
பொருளாதாரம் - உலகளாவிய சமத்துவமின்மை
உலக வருமானம் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது. 1820-ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும், செல்வந்தர்களான 10% பேர் அதில் பாதிக்கும் மேற்பட்டதைத் தங்களுக்குச் சொந்தமாக்கிக் கொண்டுள்ளனர். 2026-ஆம் ஆண்டின் உலக சமத்துவமின்மை அறிக்கை இதையே காட்டுகிறது.
இரண்டு நூற்றாண்டுகளின் சீரற்ற விநியோகம்
1820-ஆம் ஆண்டு முதல், உலக மக்கள்தொகையில் மேல்தட்டு மக்கள் 10% பேர் உலகளாவிய வருமானத்தில் 50%-க்கும் குறைவாக ஒருபோதும் பெற்றதில்லை. கீழ்தட்டு மக்கள் 50% பேர் 15%-க்கும் அதிகமாக ஒருபோதும் பெற்றதில்லை. ஒட்டுமொத்த செல்வம் அதிகரித்து வந்தபோதிலும், இந்தக் கட்டமைப்புரீதியான ஏற்றத்தாழ்வில் பெரிய அளவில் மாறம் ஏற்படவில்லை.
சமத்துவமின்மை குறைந்து வருவதாகக் கூறப்படும் கூற்றுகள் குறித்து அறிக்கை வெளிப்படுத்தும் தகவல்கள் என்ன
'2026-ஆம் ஆண்டு உலக சமத்துவமின்மை அறிக்கை' இரண்டு முக்கியக் கண்டுபிடிப்புகளை முன்னிலைப்படுத்துகிறது. முதலாவதாக, உலகளாவிய வருமானம் மற்றும் செல்வம் ஆகியவை வரலாற்றியிலே இல்லாத அளவிற்கு உச்சத்தை எட்டியுள்ளன. 19-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து, மக்கள் தொகை வளர்ச்சியைவிடத் தனிநபர் வருமானம் வேகமாக அதிகரித்துள்ளது.
1800 மற்றும் 2025-ஆம் ஆண்டுக்கு இடையில் மக்கள்தொகை ஆண்டுக்குச் சராசரியாக 0.9 சதவீதம் அதிகரித்தபோதிலும், தனிநபர் வருமானம் ஆண்டுக்கு 1.2 சதவீதம் என்ற விகிதத்தில் அதிகரித்தது. கோட்பாட்டளவில், இது இன்றைய உலகம் செல்வம் மிக்கதாக மாறியுள்ளது என்றும், ஒவ்வொரு நபருக்கும் மாதத்திற்கு ரூ. 1.32 லட்சம் அல்லது €1,200 வழங்க முடியும் என்றும் கூறுகிறது. இருப்பினும், யதார்த்தம் இதற்கு முற்றிலும் மாறாக உள்ளது.
அறிக்கையின் இரண்டாவது முக்கியக் கண்டுபிடிப்பு, பொருளாதார வளங்கள் தொடர்ந்து சமமற்ற முறையில் விநியோகிக்கப்பட்டு வருகின்றன என்பதை காட்டுகிறது. இது பல்வேறு வழிகளில் வெளிப்படுகிறது. உதாரணமாக, உலக மக்கள்தொகையில் முதல் 10 சதவீதத்தினர் 56 கோடி மக்கள் மொத்த உலக வருமானத்தில் 53 சதவீதத்தைப் பெறுகின்றனர். அதேசமயம், கடைசி 50 சதவீதத்தினர் (280 கோடி மக்கள்) வெறும் 8 சதவீதத்தை மட்டுமே பெறுகின்றனர்.
இன்னும் கவலைக்குரிய விஷயம் என்னவென்றால், மேல்தட்டு மக்கள் 1 சதவீதத்தினர், கீழ்தட்டு மக்கள் 50 சதவீதத்தினரை விட 2.5 மடங்கு அதிகமாக வருமானம் ஈட்டுகின்றனர். அதே சமயம், மேல்தட்டு மக்கள் 0.1 சதவீதத்தினர், உலக மக்கள்தொகையின் கீழ்தட்டுப் பாதி மக்கள் சம்பாதிக்கும் அளவுக்குச் சமமாக சம்பாதிக்கின்றனர்.
1980-ஆம் ஆண்டு முதல் உலகளாவிய வருமானம் ஆண்டுக்கு 1.1 சதவிகிதம் என்ற விகிதத்தில் வளர்ந்து வந்தபோதிலும், சமத்துவமின்மை குறைந்துவிட்டது என்ற கூற்றுகளுக்குச் சவால் விடும் வகையில், மிகவும் செல்வந்தர்களான 0.1 சதவிகிதத்தினர் விகிதாசாரத்திற்கு அப்பாற்பட்ட அதிக வருமான வளர்ச்சி விகிதங்களைக் கண்டுள்ளனர் என்று தரவுகள் வெளிப்படுத்துகின்றன. அதே நேரத்தில், நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த 40 சதவிகிதத்தினர் வருமான வளர்ச்சியில் தேக்கநிலையைச் சந்தித்தனர்.
நடுத்தர வருமானக் குழுக்களுக்கு ஏன் அதிக கவனம் தேவைப்படுகிறது?
செல்வப் பகிர்விலும் (wealth distribution) இதே போன்ற ஒரு போக்கு காணப்படுகிறது. உலகின் மொத்த செல்வத்தில் 37 சதவீதத்தை மேல்தட்டு மக்கள் 1 சதவீதம் பேர் கொண்டுள்ளனர். அதே, சமயம் கீழ்தட்டு மக்கள் 50 சதவீதம் பேருக்கு 2 சதவீதம் மட்டுமே கிடைக்கிறது.
வருமான ஏற்றத்தாழ்வுக்கும் செல்வ ஏற்றத்தாழ்வுக்கும் உள்ள வேறுபாட்டைப் புரிந்துகொள்வது முக்கியம். வருமான ஏற்றத்தாழ்வு (income inequality) என்பது ஒரு நாட்டின் மக்களிடையே குடும்ப அல்லது தனிநபர் வருமானத்தின் (சம்பாத்தியம், ஊதியம், முதலீடுகள்) பகிர்வில் உள்ள வேறுபாட்டை அளவிடுகிறது. அதே, சமயம் செல்வ ஏற்றத்தாழ்வு (wealth inequality) என்பது திரட்டப்பட்ட சொத்துக்களின் (நிகர மதிப்பு, சொத்து, சேமிப்பு) பகிர்வில் உள்ள வேறுபாட்டை அளவிடுகிறது. இவை இரண்டுமே பொருளாதார ஏற்றத்தாழ்வைப் பிரதிபலிக்கின்றன.
இருப்பினும், அதிக வருமானம் மற்றும் செல்வ ஏற்றத்தாழ்வு என்பது சமீபத்திய நிகழ்வு அல்ல. 1820-ஆம் ஆண்டு முதல், உலக மக்கள்தொகையில் முதல் 10 சதவீதத்தினர் உலகளாவிய வருமானத்தில் 50 சதவீதத்திற்கும் அதிகமான பங்கைத் தொடர்ந்து பெற்றுள்ளனர் என்றும், அதே சமயம் கீழ்மட்ட மக்கள் 50 சதவீதத்தினர் 15 சதவீதத்திற்கும் அதிகமாகப் பெற்றதில்லை என்றும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
ஆனால், நடுத்தர வருமானக் குழுக்களின் மாறிவரும் நிலை கவனிக்கப்பட வேண்டிய ஒன்றாகும். நடுத்தர வருமானம் உள்ள 40 சதவீதத்தினரின் வருமானப் பங்கு 1920 மற்றும் 1980-க்கு இடையில் உயர்ந்தது; அதைத் தொடர்ந்து 2000-ஆம் ஆண்டு வரை அந்தப் பங்கு சரிந்து. அதன் பிறகு ஒரு பகுதி சிறிதளவு அதிகரித்தது. தரவுகள் குறிப்பிடும் வருமான ஏற்றத்தாழ்வின் வரலாற்றுச் சரிவானது, நடுத்தர வர்க்கத்தினருக்கே பயனளித்துள்ளது. கீழ்மட்டத்தில் உள்ள 10 சதவீதத்தினருக்கு அது பயனளிக்கவில்லை.
ஏழை நாடுகளைவிட பணக்கார நாடுகள் ஏன் அதிக சமத்துவத்துடன் இருக்கின்றன
பிரெஞ்சுப் பொருளியலாளர் தாமஸ் பிக்கெட்டி, தனது 'சமத்துவத்தின் ஒரு சுருக்கமான வரலாறு' (2022) என்ற நூலில், நடுத்தர வருமானம் கொண்ட மக்கள் 40 சதவீதத்தினரைக் குறிப்பிடுவதற்கு "பரம்பரை நடுத்தர வர்க்கம்" (patrimonial middle class) என்ற சொல்லைப் பயன்படுத்துகிறார். சமத்துவமின்மைக் குறைப்புகளால் இந்தக் குழுவினர் எவ்வாறு பயனடைந்தனர் என்பதைப் புரிந்துகொள்வதற்கான ஒரு வழி, முதலாம் உலகப் போருக்கு முந்தைய செல்வப் பங்கீட்டை ஆராய்வதாகும்.
1900-களின் முற்பகுதியில், முதல் 10 சதவீதத்தினர் உலகளாவிய செல்வத்தில் 85 சதவீதத்தை வைத்திருந்தனர். தற்போது, அந்தப் பங்கு 50-60 சதவீதமாகக் குறைந்திருந்தாலும் அது இன்னும் கவலைக்குரிய வகையில் அதிகமாகவே உள்ளது. இது ஒரு கணிசமான குறைப்பைக் காட்டுகிறது. இது, காலப்போக்கில் செல்வத்தில் தங்கள் பங்கை அதிகரித்துக் கொண்ட, நடுதர வருமானம் உள்ள 40 சதவீதத்தினருக்கோ அல்லது ‘மேல்-நடுத்தர’ வர்க்கத்தினருக்கோ பயனளித்துள்ளது.
பிக்கெட்டியும் (Piketty) உலக சமத்துவமின்மை அறிக்கையும், ஏழை நாடுகளைவிட பணக்கார நாடுகள் அதிக சமத்துவத்துடன் இருக்கின்றன என்பதைச் சுட்டிக்காட்டியுள்ளன. இருப்பினும், இது எப்போதும் உண்மையாக இருந்ததில்லை. நலத்திட்டங்களின் வளர்ச்சி மற்றும் விரிவாக்கம், பொதுச் சேவைகள், மற்றும் தொலை நோக்க பார்வை கொண்ட வரிவிதிப்பு போன்ற அரசால் வழிநடத்தப்பட்ட கொள்கைகளின் மூலம், 20-ஆம் நூற்றாண்டில் முன்னேறிய பொருளாதாரங்களிடையே ஒப்பீட்டு சமத்துவம் குறிப்பிடத்தக்கதாக மாறியது.
மறுபங்கீட்டுக் கொள்கைகள் சமத்துவமின்மையைக் குறைக்க உதவியபோதிலும், கீழ்மட்டத்தில் உள்ள 50 சதவீதத்தினருக்குக் கிடைத்த முன்னேற்றம் மிகவும் குறைவாகவே உள்ளது என்பதே பிக்கெட்டியின் முக்கிய வாதமாக உள்ளது.
இந்தியாவின் ஏற்றத்தாழ்வுக்குப் பின்னால் உள்ள காரணிகள்
இந்தியாவைப் பொறுத்தவரை, மக்கள்தொகையில் முதல் 1 சதவீதம் பேர் 40 சதவீத செல்வத்தையும், முதல் 10 சதவீதம் பேர் 65 சதவீத செல்வத்தையும் கொண்டுள்ளனர் என்று அந்த அறிக்கை குறிப்பிடுகிறது. இது இந்தியாவை உலகின் மிகவும் சமத்துவமின்மை கொண்ட நாடுகளில் ஒன்றாக இருக்க வைக்கிறது. மேலும், சமத்துவமின்மையில் குறைப்பு ஏற்பட்டதற்கான சான்றுகள் குறைவாகவே உள்ளன. வருமான சமத்துவமின்மையைப் பொறுத்தவரை, முதல் 10 சதவீதம் பேர் மொத்த வருமானத்தில் 58 சதவீதத்தையும், கடைசி 50 சதவீதம் பேர் வெறும் 15 சதவீதத்தையும் ஈட்டுகின்றனர்.
இந்தியாவின் குறிப்பிடத்தக்க ஏற்றத்தாழ்வுக்கு, தரமான கல்வி மற்றும் சுகாதாரத்திற்கான அணுகல் இல்லாமை, பொருளாதார தாராளமயமாக்கலுக்குப் பிறகு உருவான சேவைத் துறை சார்ந்த பொருளாதார வளர்ச்சி உள்ளிட்ட பல்வேறு காரணங்களை ஆராய்ச்சியாளர்களும் அறிஞர்களும் குறிப்பிடுகின்றனர்.
"செல்வத்தின் நிதியமயமாக்கல்" (financialisation of wealth) அல்லது வர்த்தகம் மற்றும் முதலீடுகள் போன்ற செயல்பாடுகளின் முக்கியத்துவம் அதிகரித்து வருவது—மேல்மட்டத்தில் உள்ள 1 சதவீதத்தினரின் செல்வப் பங்கை அதிகரித்துள்ளது. இந்தியாவில், மேல்மட்டத்தில் உள்ள 1 சதவீதத்தினரின் வருமானப் பங்கு 1922-ஆம் ஆண்டில் 13 சதவீதமாக இருந்தது என்று வரலாற்றுத் தரவுகள் காட்டுகின்றன. 1950-கள் முதல் 1980-களின் முற்பகுதி வரையிலான காலத்தில் இந்தப்பங்கு குறைந்திருந்தாலும், பொருளாதாரச் சீர்திருத்தங்களுக்குப் பிறகு மீண்டும் அதிகரித்து. 2022-ஆம் ஆண்டில் 22.6 சதவீதம் என்ற இதுவரை இல்லாத அளவு உச்சத்தை எட்டியுள்ளது.
நிலம், பாலினம் மற்றும் காலநிலை
இந்தியப் பொருளாதாரத்தின் மற்றொரு முக்கிய அம்சம் நில ஏற்றத்தாழ்வும் (land inequality) நிலப் பிரிவினையுமாகும் (land fragmentation). இந்தியாவில் உள்ள கிராமப்புறக் குடும்பங்களில் 46 சதவீதம் பேர் நிலமற்றவர்களாக உள்ளனர். அதே, சமயம் மேல்தட்டு மக்கள் 10 சதவீதத்தினர் மொத்த கிராமப்புற நிலத்தில் 44 சதவீதத்தைச் சொந்தமாகக் கொண்டுள்ளனர்.
பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினர் அதிக அளவில் வசிக்கும் கிராமங்களில் நில இல்லாத மக்களின் விகிதம் அதிகமாகக் காணப்படுவதாக 2026-ஆம் ஆண்டின் சமத்துவமின்மை அறிக்கை குறிப்பிடுகிறது. இருப்பினும், கேரளா மற்றும் மேற்குவங்கம் போன்ற மாநிலங்கள் விதிவிலக்குகளாகக் கருதப்படுகின்றன. அங்கு, சமத்துவமின்மையைக் குறைப்பதில் நிலச் சீர்திருத்தங்கள் முக்கியப் பங்கு வகித்தன என்று வாதிடலாம்.
பரவலான அனுமானங்களுக்கு மாறாக, சந்தைகளை எளிதில் அணுகுவது சமத்துவமின்மையைக் குறைத்துவிடாது. நகரங்கள், சாலைகள் மற்றும் பெருநகரங்களுக்கு அருகில் இருப்பது, வரலாற்றுரீதியாக வேரூன்றிய சமத்துவமின்மைகளை மாற்றுவதற்குப் போதுமானதாக இருந்ததில்லை.
சமத்துவமின்மைக்கு பாலினம் மற்றும் சமூகப் பரிமாணங்களும் உண்டு. உதாரணமாக, இந்தியாவில் பெண்கள் குறைந்த தொழிலாளர் பங்கேற்பு விகிதங்கள், தொழிலாளர் வருமானம், செல்வம் மற்றும் நில உரிமையில் வரலாற்று ரீதியான சமத்துவமின்மை, மற்றும் வீட்டு மற்றும் பராமரிப்புப் பணிகளின் சமமற்ற சுமை ஆகியவற்றைத் தொடர்ந்து எதிர்கொள்கின்றனர். இதேபோல், ஆதிக்கக் குழுக்களுடன் ஒப்பிடும்போது மற்ற விளிம்புநிலை மற்றும் நலிவடைந்த குழுக்கள் வளங்களையும் வருமானத்தையும் சமமற்ற முறையில் அணுகுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.
மேலும், காலநிலை மாற்றம் இந்த ஏற்றத்தாழ்வுகளை மேலும் தீவிரப்படுத்துகிறது. மிகவும் ஏழ்மையானவர்கள் பெரும்பாலும் குறைந்த கரியமில வாயு வெளியேற்றத்தைக் கொண்டிருந்தாலும், அவர்கள் தண்ணீர் நெருக்கடி, வெப்ப அழுத்தம் மற்றும் தீவிர வானிலை நிகழ்வுகள் போன்ற காலநிலை தொடர்பான அதிர்ச்சிகளுக்கு ஆளாகும் வாய்ப்பு அதிகமாக உள்ளது.
சமத்துவமின்மையை எவ்வாறு குறைப்பது (How to reduce inequality)
பயனுள்ள தலையீடுகள் மூலம் சமத்துவமின்மையைக் குறைக்க முடியும் என்று அந்த அறிக்கை வாதிடுகிறது. அவற்றுள் சில:
1) கல்வி மற்றும் சுகாதாரத்தில் பொது முதலீட்டை அதிகரித்தல்.
2) பணப் பரிமாற்றம், ஓய்வூதியம் மற்றும் வேலையின்மை உதவித்தொகை போன்ற மறுபங்கீட்டுத் திட்டங்கள்.
3) வேலை மற்றும் வாய்ப்புகளின் சமமற்ற பங்கீட்டை உருவாக்கும் கட்டமைப்புத் தடைகளை அகற்றுதல்.
4) ஒரு நியாயமான வரி முறையை உருவாக்குதல் போன்ற பணிகளாகும்.
மேல்தட்டு வர்க் மக்கள் அதிக விகிதத்தில் வரி செலுத்தும் முற்போக்கு வரிவிதிப்பு, கல்வி, சுகாதாரம் மற்றும் காலநிலை தகவமைப்பு ஆகியவற்றில் அதிக மாற்றங்களைக் கொண்டுவர உதவும். இருப்பினும், "செல்வந்தர்களுக்கு வரி விதிப்பது" குறித்த விவாதங்கள், அது போன்ற நடவடிக்கைகள் பொருளாதார வளர்ச்சியை குறைத்து, மூலதன வெளியேற்றத்தைத் தூண்டக்கூடும் என்ற கவலைகளாகவே சுருக்கப்படுகின்றன.
எனவே, வெறும் சமத்துவமின்மையைக் குறைப்பதைவிட, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி மூலம் வறுமையை ஒழிப்பதே மிகவும் முக்கியமானது என்று வாதிடப்படுகிறது. இருப்பினும், இவை இந்தியாவில் நிலவும் சமத்துவமின்மையின் அளவை உண்மை என்று நிரூபிக்கின்றன. உதாரணமாக, சஜித் பாய் மற்றும் அமல் வாட்ஸ் ஆகியோரின் 2023-ஆம் ஆண்டு ஆய்வு ஒன்று, “1% இந்தியர்கள் 45% விமானப் பயணங்களை மேற்கொள்கின்றனர். 2.6% இந்தியர்கள் பரஸ்பர நிதிகளில் முதலீடு செய்கின்றனர், ஒருங்கிணைந்த பணப்பரிவர்த்தனை இடைமுகத்தில் (Unified Payment Interface (UPI)) நடைபெறும் 44% டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கு 6.5% பயனர்களே காரணமாக உள்ளனர் என்று குறிப்பிடுகிறது.
எனவே, “பரம்பரைச் சொத்து மறுபகிர்வு” (redistribution of inheritance) போன்ற ஒரு தீவிரமான நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், கடுமையான சமத்துவமின்மை நீண்ட காலத்திற்கு நீடிக்க வாய்ப்புள்ளது என்று பிக்கெட்டி வாதிட்டுள்ளார்.
Original article : Why inequality in India and the world shows little movement in recent years. -Ritwika Patgiri