மே-ஜூன் மாதங்களில் தீவிரமாகும் எல் நினோ இந்தியாவை எவ்வாறு பாதிக்கக்கூடும்? -அபினவ் ராய்

நமது நாடு வேளாண்மை, நீர் வளங்கள் மற்றும் ஒட்டுமொத்த பொருளாதார நிலைத்தன்மையில் தென்மேற்குப் பருவமழையை சார்ந்திருக்கும் சூழலில், எல் நினோவின் வேகமான வளர்ச்சி எது போன்ற தாக்கத்தை ஏற்படுத்தும்?


வட, மத்திய மற்றும் கிழக்கு இந்தியா முழுவதும் கடுமையான வெப்ப அலை நிலவும் என இந்திய வானிலை ஆய்வு மையம் (India Meteorological Department (IMD)) தொடர்ந்து எச்சரித்துவரும் நிலையில், ஒரு புதிய மேற்கத்திய இடையூறு (Western Disturbance) வரும் நாட்களில் நிலைமையை தீவிரப்படுத்த வாய்ப்புள்ளது.


அமெரிக்காவைச் சேர்ந்த எல் நினோ தெற்கு அலைவு (El Niño Southern Oscillation (ENSO)), மே 11 அன்று வெளியிட்ட தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாக (National Oceanic and Atmospheric Administration (NOAA)) அறிக்கையில், இந்த ஆண்டு மே மற்றும் ஜூலை மாதங்களுக்கு இடையில் ஒரு எல் நினோ உருவாகி, ஆண்டு இறுதி வரை நீடிப்பதற்கு வலுவான வாய்ப்பு இருப்பதாகத் தெரிவித்துள்ளது. இது 2026-27 குளிர்காலத்தில் வட அரைக்கோளத்தைப் பாதிக்கும். மேலும், இந்தியா உள்ளிட்ட வெப்பமண்டல நாடுகளில் (tropical countries) அதிக தாக்கங்களை ஏற்படுத்தும்.


இந்தச் சூழலில், வரவிருக்கும் பருவமழைக்காலத்தில், 87 செ.மீ. அளவிலான நீண்டகால சராசரியில் (1971-2020) 92 சதவீத அளவுக்கே மழைப்பொழிவு இருக்கக்கூடும் என்றும், மழைப்பொழிவு இயல்பை விடக் குறைவாக இருக்கும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் ஏப்ரல் மாதத்தில் கணித்திருந்தது. 2015-16-ஆம் ஆண்டில் ஏற்பட்ட கடந்த 'சூப்பர் எல் நினோ' (Super El Niño) நிகழ்வின்போது, ​​இந்தியா தனது நீண்டகால சராசரி மழைப்பொழிவில் 86 சதவீதத்தை மட்டுமே  பெற்றிருந்தது.


எல் நினோ நிகழ்வு என்றால் என்ன, மேலும் அது உலகம் முழுவதிலும் மற்றும் இந்தியாவிலும் வானிலைகளை எவ்வாறு பாதிக்கிறது?

எல் நினோ-தெற்கு அலைவு(El Niño-Southern Oscillation) என்றால் என்ன?


கடல் மேற்பரப்பு வெப்பநிலை (Sea surface temperature (SST)) மற்றும் வளிமண்டல அழுத்தம் போன்றவையே உலகளாவிய கடல் நீரோட்டங்களை பாதிக்கும் இரண்டு முக்கிய காரணிகளாகும். எல் நினோ தெற்கு அலைவு (ENSO) என்பது, பூமத்திய ரேகைக்கு அருகிலுள்ள பசிபிக் பெருங்கடல் பகுதியில் கடல் மேற்பரப்பு வெப்பநிலை மற்றும் காற்று அழுத்தத்தில் ஏற்படும் ஒரு காலமுறை சார்ந்த கடல்-வளிமண்டல மாறுபாடாகும்.


பண்டைய பவள எலும்புக்கூடுகளின் வேதியியல் கலவையானது, கடந்த ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக எல் நினோ தெற்கு அலைவு நிகழ்ந்து வருவதை வெளிக் காட்டுகிறது. இது மூன்று முக்கிய கட்டங்களைக் கொண்டுள்ளது: அவை வெப்பமான அல்லது எல் நினோ, குளிர்ந்த அல்லது லா நினோ, மற்றும் நடுநிலை ஆகும். 


சாதாரண சூழ்நிலைகளில் அல்லது நடுநிலைக் கட்டத்தின்போது, ​​வர்த்தகக் காற்றுகள் (trade winds) என அறியப்படும் ஒரு அமைப்பில், வர்த்தகக் காற்றுகள் பூமத்திய ரேகையில் கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி வீசுகின்றன. பசிபிக் பெருங்கடலின் கிழக்குப் பகுதி (தென் அமெரிக்காவிற்கு அருகில் உள்ள பகுதி) மேற்குப் பகுதியை (இந்தோனேசியாவிற்கு அருகில் உள்ள பகுதி) விட குளிர்ச்சியாக உள்ளது.

வர்த்தகக் காற்றுகள் வெப்பமான மேற்பரப்பு நீரை ஆஸ்திரேலியா மற்றும் ஆசியாவை நோக்கித் தள்ளுவதால், மேற்கு பசிபிக் பகுதி வெப்பமாகிறது. வெப்பமான நீர் மேற்கு நோக்கி நகர்வதால், ஆழ்கடலில் இருந்து வரும் குளிர் நிறைந்த நீர் தென் அமெரிக்காவின் மேற்குக் கடற்கரைக்கு அருகில் மேற்பரப்புக்கு உயர்கிறது. இந்த செயல்முறை மேல்நோக்கி எழுதல் (upwelling) என்று அழைக்கப்படுகிறது. இந்த குளிர்ச்சியடைந்த நிறைந்த நீர், அந்தப் பகுதியில் மீன்வளத்தைப் பாதுகாக்க உதவுகிறது.


மேற்கு பசிபிக் பகுதியில் நிலவும் வெப்பமான குறைந்த காற்றழுத்த நிலைமைகள், தென் அரைக்கோளத்தில் உள்ள வடக்கு ஆஸ்திரேலியா, தென்கிழக்கு ஆசியா மற்றும் நியூ கினியா ஆகிய பகுதிகளில் டிசம்பர் மாதத்தில் அதிகமான மழையைக் (abundant rainfall) கொண்டு  வந்தன.


எல் நினோ என்றால் என்ன, அது எவ்வாறு உருவாகிறது?


‘எல் நினோ’ என்ற சொல் முதன்முதலில் 1600-களில் தென் அமெரிக்க மீனவர்களால் பயன்படுத்தப்பட்டது. இது ஸ்பானிய மொழியிலிருந்து வந்தது, மேலும் இதன் நேரடிப் பொருள் கிறிஸ்து குழந்தை அல்லது சிறுவன் என்பதாகும். ஏனெனில் இந்த நிகழ்வு பொதுவாக கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி உச்சத்தை அடைகிறது. எனவே, மீனவர்கள் பயன்படுத்திய முழுப் பெயர் ‘கிறிஸ்துமஸ் குழந்தை’ (El Niño de Navidad) என்பதாகும்.


எல் நினோ பொதுவாக மத்திய மற்றும் கிழக்கு வெப்பமண்டல பசிபிக் பெருங்கடலில் இரண்டு முதல் ஏழு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஏற்படுகிறது. இது உலகளாவிய வானிலை மற்றும் மழைப்பொழிவு முறைகள், கடல் நிலைமைகள் மற்றும் மீன்வளத்தைப் பாதிக்கிறது. ஒரு எல் நினோ பொதுவாக 12-18 மாதங்கள் நீடிக்கும் மற்றும் இந்தியத் துணைக்கண்டத்தின் ஏற்படும் பருவக்காற்றுகளை எல் நினோ பலவீனப்படுத்துகிறது.


வர்த்தகக் காற்றுகளின் திசை மாற்றம் அல்லது பலவீனம் காரணமாக எல் நினோ ஏற்படுகிறது. இது மத்திய மற்றும் கிழக்கு பசிபிக் பகுதிகளில் வெப்ப நீர் அதிகம் குவிவதற்கு வழிவகுக்கிறது. வலுவான மற்றும் பலவீனமான வர்த்தகக் காற்றுகள், வெப்பமண்டல பசிபிக் பகுதியின் வளிமண்டலத்தில் ஏற்படும் அழுத்தச் சரிவின் (ஒரு குறிப்பிட்ட தூரத்தில் காற்றின் அழுத்தம் மாறும் விகிதம்) மாற்றங்களுடன் தொடர்புடையவையாகும். இந்த இடையூறு கடல் மேற்பரப்பு வெப்பநிலை (SST), வளிமண்டல சுழற்சி மற்றும் வானிலை முறைகளைப் பாதிக்கிறது.


எல் நினோ நிகழ்வுகளின் போது, ​​மத்திய பசிபிக்கில் குறைந்த காற்றழுத்த மண்டலம் கிழக்கு நோக்கி நகர்கிறது. மேலும், மேற்கு பசிபிக் ஒரு பலவீனமான உயர் காற்றழுத்த மண்டலத்தையும் வறட்சி போன்ற நிலைமைகளையும் எதிர்கொள்கிறது. காற்றழுத்த அமைப்பில் ஏற்படும் இந்த மாற்றம் தெற்கு அலைவு(Southern Oscillation) என அழைக்கப்படுகிறது.


 எல் நினோ தெற்கு அலைவு  (El Niño Southern Oscillation (ENSO)) நிலைமைகளைக் கண்காணித்தல்


ENSO நிலைமைகளைக் கண்காணிப்பது, பூமத்திய ரேகை பசிபிக் பெருங்கடல் முழுவதும் உள்ள கடல் மேற்பரப்பு வெப்பநிலையின் சராசரி நிலைகளில் ஏற்படும் மாற்றங்களில் கவனம் செலுத்துகிறது. தேசிய கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் (National Oceanic and Atmospheric Administration (NOAA)) இந்த வெப்பநிலை முரண்பாடுகளைப் பல்வேறு குறியீடுகள் மூலம் கண்காணிக்கிறது.


1. பெருங்கடல் நினோ குறியீடு (Oceanic Niño Index (ONI)) – இது பசிபிக் பெருங்கடலில் நினோ 3.4 (5°வ–5°தெ, 120°மே-170°மே தீர்க்கரேகை) என அறியப்படும் ஒரு குறிப்பிட்ட பிராந்தியத்தில் உள்ள மூன்றாண்டு கால முழுமையான சராசரி கடல் மேற்பரப்பு வெப்பநிலை முரண்பாட்டை அளவிடுகிறது.


குறைந்தது ஐந்து தொடர்ச்சியான, ஒன்றன் மேல் ஒன்றாக ஏற்படும் மூன்று மாத காலங்களுக்கு நீடிக்கும், +0.5°C அல்லது அதற்கு மேற்பட்ட கடல் மேற்பரப்பு வெப்பநிலை மாறுபாடுகள் ENSO வெப்ப நிலை (எல் நினோ) என அறிவிக்கப்படுகின்றன. அதேசமயம் -0.5°C அல்லது அதற்குக் குறைவான மாறுபாடுகள் ENSO குளிர் நிலை (லா நினோ) என அழைக்கப்படுகின்றன.


2. தெற்கு அலைவுக் குறியீடு (Southern Oscillation Index (SOI)) – இது தஹிதி (பிரெஞ்சு பாலினேசியா) மற்றும் டார்வின் (ஆஸ்திரேலியா) ஆகியவற்றுக்கு இடையேயான கடல் மட்ட  வேறுபாடுகளை அளவிடுகிறது. அதிக தெற்கு அலைவுக் குறியீடு வலுவான வர்த்தகக் காற்றுகளையும் லா நினோ நிலைமைகளையும் குறிக்கிறது.  அதேசமயம் குறைந்த தெற்கு அலைவுக் குறியீடு பலவீனமான வர்த்தகக் காற்றுகள் மற்றும் எல் நினோ நிலைமைகளுடன் தொடர்புடையது.


3. சார்பு பெருங்கடல் நினோ குறியீடு (Relative Oceanic Niño Index (RONI)) – இது ஒரு மேம்பட்ட ENSO அளவீடு ஆகும். இது, உலகளாவிய பெருங்கடல் வெப்பமயமாதலுக்கு ஏற்ப சரிசெய்து, நினோ 3.4 வெப்பநிலை மதிப்புகளை அனைத்து வெப்பமண்டலப் பெருங்கடல்களின் வெப்பநிலையுடன் ஒரே நேரத்தில் ஒப்பிடுகிறது. உலகம் வெப்பமடையும்போது ஒரு உயர் அடிப்படை அளவைக் கணக்கில் எடுத்துக்கொள்வதன் மூலம் முன்னறிவிப்பை மேம்படுத்துவதே RONI-யின் நோக்கமாகும்.


ஒப்பீட்டு பெருங்கடல் எல் நினோ குறியீட்டின்  வலிமை நிகழ்வுகளின் அடிப்படையில், எல் நினோவை பின்வருமாறு வகைப்படுத்தலாம்:


– பலவீனமான  எல் நினோ (0.5°C முதல் 1°C)-யில் வரை ஏற்படும்.


– மிதமான எல் நினோ  (1°C முதல் 1.5°C)-யில் ஏற்படும்.


– அதிக வெப்பமுடைய எல் நினோ (1.5°C முதல் 2°C)-யில்   ஏற்படும்.


– மிகவும் வலிமையான எல் நினோ (≥ 2°C)-யில்  ஏற்படும்.


குறிப்பாக, 'சூப்பர் எல் நினோ’ என்பது அதிகாரப்பூர்வமான அறிவியல் சொல் அல்ல; இது  நடைமுறையில் பயன்படுத்தபடாத சொல் ஆகும். மிகவும் வலுவான எல் நினோ நிகழ்வைக் குறிக்க இந்த சொல் பயன்படுத்தப்படுகிறது. இந்த முறை அது போன்ற வலுவான எல் நினோ நிகழ்வு ஏற்படும் வாய்ப்பு உள்ளது. இருப்பினும், ‘மிகவும் வலுவான எல் நினோ நிகழ்வுகள், கட்டாயமாகத் தீவிரமான தாக்கங்களை ஏற்படுத்தும் என்று உறுதிகூற முடியாது. அவை குறிப்பிட்ட சில தாக்கங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகளை மட்டுமே அதிகரிக்கக்கூடும்’ என்று NOAA எச்சரித்துள்ளது.




எல் நினோ-தெற்கு அலைவு (El Niño-Southern Oscillation)  நிகழ்வுகளின் தாக்கம்


எல் நினோ-தெற்கு அலைவு நிகழ்வுகளின் தாக்கத்தை உலகளவில் காண முடிந்தாலும், தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியா, இலத்தீன் அமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்காவின் வெப்பமண்டல நாடுகளில் இதன் தாக்கம் மிகவும் அதிகமாக உணரப்படுகிறது. இந்தத் தாக்கங்கள் நாடுகளுக்கு இடையே  மாறுபடலாம்.


எல் நினோ நிலைமைகள் பொதுவாக தெற்கு ஆப்பிரிக்கா, தெற்காசியா, தென்கிழக்கு ஆசியா மற்றும் வடக்கு பிரேசில் ஆகிய பகுதிகளில் வறண்ட வானிலையைக் கொண்டு வருகின்றன. இதற்கு மாறாக, எல் நினோ மத்திய அமெரிக்கா, வடக்கு பெரு, ஈக்வடார் மற்றும் தென் அமெரிக்காவின் வடக்கு மற்றும் தென்கிழக்குப் பகுதிகளில் கனமழையையும், கிழக்கு-மத்திய பசிபிக் தீவுகள் மற்றும் பூமத்திய ரேகை கிழக்கு ஆப்பிரிக்காவின் சில பகுதிகளில் ஈரப்பதமான  வானிலையையும் கொண்டு வருகிகிறது.


எல் நினோ ஆண்டுகளில் பெரும்பாலும் சராசரியை விட அதிக வெப்பநிலை நிலவும். உதாரணமாக, 2023-24ல் ஏற்பட்ட வலுவான எல் நினோ நிகழ்வின் காரணமாக, 2024-ஆம் ஆண்டு  வரலாற்றில்  இல்லாத அளவுக்கு வெப்பமான ஆண்டாக அமைந்தது. இந்த நிலைமைகள் கடும் வெப்பம், வறட்சி, காட்டுத்தீ மற்றும் உணவுப் பாதுகாப்பின்மை போன்ற சூழல்களை  அதிகமாக ஏற்படுதும். மேலும், இவை பூச்சிகளால் பரவும் நோய்களின் பரவல் (vector-borne diseases) முறைகளையும் மாற்றக்கூடும்.


இந்தியாவில் ஏற்படவிருக்கும் தாக்கங்கள்


வேளாண்மை, நீர் வளங்கள் மற்றும் ஒட்டுமொத்த பொருளாதார நிலைத்தன்மைக்காக தென்மேற்குப் பருவமழையை இந்தியா சார்ந்திருப்பதால், எல் நினோவின் தாக்கம் இந்தியாவிற்கு அதிக தாக்கத்தை ஏற்படுதும். வரலாற்றுரீதியாக, எல் நினோ ஆண்டுகளில் குறைந்தது பாதி, பருவமழை வறட்சியுடன் (நீண்டகால சராசரியிலிருந்து -10% க்கும் குறைவான அளவில்) பொழிந்துள்ளது. 1950-ஆம் ஆண்டு முதல், 16 எல் நினோ ஆண்டுகளில், 7 ஆண்டுகளில் இந்தியா இயல்பை விடக் குறைவான பருவமழை பொழிவு ஏற்பட்டுள்ளது.


இந்த ஆண்டு இயல்பை விடக் குறைவான பருவமழை பெய்யும் என்ற இந்திய வானிலை ஆய்வு மையத்தின் கணிப்பு, பயிர் விளைச்சலையும் வேளாண் உற்பத்தித்திறனையும் அதிககமாகப் பாதிக்கக்கூடும். இது போன்ற ஒரு சூழல் உணவுப் பற்றாக்குறை, பணவீக்கம் மற்றும் கிராமப்புற வருமானச் சரிவை ஏற்படுத்தி, பொருளாதாரச் சிக்கல்களை மோசமாக்கும்.


குறைந்த மழைப்பொழிவு, நீண்ட வறண்ட காலங்கள், வறட்சி மற்றும் அதிக வெப்பநிலை ஆகியவை கிடைக்கக்கூடிய நீர் வளங்களுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். இந்த சூழல் காட்டுத் தீ மற்றும் வெப்ப அலைகள் அதிகரிப்பதற்கும் வழிவகுக்கலாம். இந்தக் காலநிலை மாற்றங்கள் சுகாதாரத்தில் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்.


மேலும், மேற்கு ஆசியாவில் நிலவும் நெருக்கடி மற்றும் ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டதன் காரணமாக எரிசக்தி மற்றும் உர விநியோகத்தில் ஏற்படும் பாதிப்புகள், குறைவான பருவமழை ஆண்டின் தாக்கத்தை  மோசமாக்கக்கூடும்.


ஆரம்பகால கணிப்புகள் (early forecasts) ஏன் முக்கியம்


எல் நினோ-தெற்கு அலைவு ஒரு இயற்கை நிகழ்வு, அதைத் தடுக்க முடியாது. ஆனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மூலம் அதன் தாக்கத்தைக் குறைக்க முடியும். மேம்பட்ட கண்காணிப்புத் திறன்கள், எல் நினோ நிகழ்வுகளின் தொடக்கம், தீவிரம் மற்றும் கால அளவைக் கணிப்பதற்கான நிலைமைகளை மேம்படுத்தியுள்ளன.


இதுபோன்ற முன்னறிவிப்புகள், ஏற்படக்கூடிய சேதங்களைக் குறைப்பதற்காக, பேரிடர் தயார்நிலையை வலுப்படுத்துதல், நீர் சேமிப்பை ஊக்குவித்தல் மற்றும் வேளாண் நடைமுறைகளை மேம்படுத்துதல் போன்ற நடவடிக்கைகளை எடுக்க தேவையான கால அவகாசத்தை வழங்குகின்றன.


குறிப்பாக, மழைப்பொழிவு பற்றாக்குறை உள்ள மாவட்டங்களில், வறட்சியைத் தாங்கக்கூடிய காரிஃப் பயிர் இரகங்களை ஊக்குவிப்பதும், விதைப்பு காலங்களை மாற்றி அமைப்பதும், விளைச்சல் குறையும் பட்சத்தில் விவசாயிகளுக்கான வருமான இழப்பைக் குறைக்க உதவக்கூடும்.

காலம் கடந்து போவதற்குள், மாநிலங்களும் தங்களின் வறட்சி மற்றும் வெப்பத் தடுப்பு நடவடிக்கைத் திட்டங்களைத் தயாரித்து, நிலத்தடி நீர் மறு அலைவுமற்றும் நீர் சேமிப்பு முயற்சிகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். முன்கூட்டிய கணிப்புகளின்படி நாம் செயல்பட்டால் மட்டுமே, அவை நமக்கு தேவையான அளவு  பயனளிக்கும்.

Original Link: How El Niño development during May-June is likely to affect India.


Share: