Showing posts with label innovation. Show all posts
Showing posts with label innovation. Show all posts

இந்தியாவிடம் இப்போது ஆராய்ச்சித் துறையில் ஒரு பெரிய முன்னேற்றத்திற்கான நிதியும் திறமையும் நல்வாய்ப்பும் உள்ளன. -சிவ்குமார் கல்யாணராமன் மற்றும் வி ஆனந்த நாகேஸ்வரன்


அத்தியாவசியத் தேவைகளுக்கு மற்றவர்களைச் சார்ந்திருப்பதில் உள்ள ஆபத்துகளை ஹார்முஸ் (Hormuz) விவகாரம் நமக்குக் காட்டிக்கொடுத்தது. தொழில்நுட்பத் துறையில் உண்மையான சவால்களைத் தாங்கி நிற்கும் திறன், நீண்டகால முக்கியத்துவத்தையும் பெற வேண்டுமென்றால், நாட்டின் உள்நாட்டுத் திறன்களை அடிமட்டத்திலிருந்து வலுவாகக் கட்டமைப்பதன் மூலம் மட்டுமே அது சாத்தியமாகும்.


இந்த ஆண்டின் வசந்த காலத்தில், மூன்று மாதங்களாக இந்தியப் பொருளாதாரத்தைப் பாதித்த மிக முக்கியமான காரணியாக இருந்தது, எண்ணெய் கப்பல்களுக்கும் ஹார்முஸ் நீரிணைக்கும் (Strait of Hormuz) இடையே இருந்த தூரம்தான். மார்ச் மாதத்தில் இந்த நீரிணை மூடப்பட்டபோது, தனக்குத் தேவையான பெரும்பாலான எண்ணெயை இறக்குமதி செய்யும் இந்தியா, ஒரு மிகப்பெரிய விநியோகத் தடையை எதிர்கொண்டது. இதனால் எண்ணெய் ஏற்றி வந்த கப்பல்கள் மாற்றுப் பாதையில் திருப்பிவிடப்பட வேண்டியிருந்தது. இது ரஷ்ய கச்சா எண்ணெயின் பயணக் காலத்தை நீட்டித்து, அதன் விலையையும் மிகவும் அதிகமாக்கியது. இது ஒரு முக்கியமான பாடம் என்றாலும், இதோடு எல்லாம் முடிந்துவிடவில்லை. எண்ணெய் விநியோகத்தை எப்போதாவது ஒரு வழியில் மாற்றி அமைத்துவிட முடியும். ஆனால், முக்கியமான தொழில்நுட்பங்களில் சுயசார்பு அடைய இலக்கு நிர்ணயித்துள்ள ஒரு நாட்டிற்கு, மாற்றுவழியைத் தேர்ந்தெடுக்கும் அத்தகைய நெகிழ்வுத்தன்மை இருக்காது.


இதன் மூலம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம் என்னவென்றால், விநியோகத் தொடர்கள் வெறும் பலவீனமானவை என்பது மட்டுமல்ல, அவை தற்போதைய காலகட்டத்தில் ஒரு நாட்டின் கொள்கைகளைச் செயல்படுத்தும் கருவிகளாகவே மாறிவிட்டன. ஒரு பொருளை ஏற்றுமதி செய்வதற்கான உரிமம் என்பது பிற நாட்டை வழிக்குக் கொண்டுவரும் ஒரு கருவியாகப் பயன்படுத்தப்படுகிறது. விநியோகப் பாதையில் ஏற்படும் ஒரு தடை அல்லது நெருக்கடி ஆயுதமாகப் பயன்படுத்தப்படுகிறது. ஒரு வருடம் சுதந்திரமாக வர்த்தகம் செய்யப்பட்ட ஒரு தொழில்நுட்பம், அடுத்த வருடமே மற்றவர்களுக்குக் கிடைக்காமல் மறுக்கப்படும் ஒரு பொருளாக மாறிவிடுகிறது. சீனா தனது மொத்த உற்பத்தியில் 2.43 விழுக்காட்டை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்காகச் செலவிடுகிறது. இதில் முக்கால்வாசிப் பணத்தை அதன் சொந்த நிறுவனங்களே நிதியுதவியாக வழங்குகின்றன. இந்தச் செலவினத்தின் பின்னணியில் அதற்கு ஒரே ஒரு லட்சியம் மட்டும்தான் உள்ளது: மற்றவர்களின் கட்டுப்பாட்டில் உள்ள தொழில்நுட்பங்களைச் சார்ந்து வாழ்வதை முடிவுக்குக் கொண்டுவருவது மற்றும் தன்கட்டுப்பாட்டில் உள்ள தொழில்நுட்பங்களை உலகம் சார்ந்திருக்கும்படிச் செய்வதே ஆகும்.


இந்தியா தன்னைத்தானே மதிப்பீடு செய்து கொண்டுள்ளதால், தனது பலங்கள் மற்றும் பலவீனங்களை நன்றாகவே அறிந்துள்ளது. 2023-ஆம் ஆண்டில், இந்தியா தனது ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் வெறும் 0.64 விழுக்காட்டை மட்டுமே ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பணிக்காகச் செலவிட்டது. ஆனால், உலகளாவிய சராசரியோ இதைவிட இரண்டு மடங்குக்கும் அதிகமாக இருந்தது. மேலும், சீனா, தென்கொரியா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளில் இந்தச் செலவினத்தில் 75 விழுக்காடு அல்லது அதற்கும் அதிகமாகத் தனியார் நிறுவனங்களிடமிருந்து வரும் நிலையில், இந்தியாவில் இந்தச் செலவில் சுமார் 40 விழுக்காடு மட்டுமே தனியார் நிறுவனங்களிடமிருந்து வந்தது. இருப்பினும், இந்தச் சூழ்நிலையை மேம்படுத்துவதற்காக முதன்முறையாக அரசாங்கம் இப்போது தீவிரமான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.


2024-ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட அனுசந்தன் தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளை (Anusandhan National Research Foundation (ANRF)) என்பது பிரதமரின் தலைமையில் இயங்கும் ஒரு சட்டப்பூர்வ அமைப்பாகும். இது பல்கலைக்கழகங்கள், தொழில்துறைகள், புத்தொழில் நிறுவனங்கள், கொடையாளர்கள் மற்றும் வெளிநாடுவாழ் இந்தியர்களை ஒன்றிணைக்கிறது. நிதிசார்ந்த அபாயங்களைக் குறைப்பதன் மூலம், ஆராய்ச்சித் துறையில் அதிக முதலீடுகளை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த அமைப்பின் 'ஆராய்ச்சி, மேம்பாடு மற்றும் கண்டுபிடிப்பு' நிதியின்கீழ், தனியார்துறை ஆராய்ச்சிகளுக்கு நீண்டகால நிதியுதவியாக ஆறு ஆண்டுகளில் 1 லட்சம் கோடி ரூபாய் வழங்கப்படும். மேலும், அனுசந்தன் தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளையின் முதன்மைப் பிரிவு, அடிப்படை அறிவியல் ஆராய்ச்சிகளுக்காக ஐந்து ஆண்டுகளில் மேலும் 50,000 கோடி ரூபாயை முதலீடு செய்யும். தனியார் முதலீடுகளை அதிக அளவில் ஈர்ப்பதே இதன் முக்கிய நோக்கமாகும்: ஒரு நிறுவனம் வணிகரீதியாக மாறுவதற்கு முந்தைய ஆராய்ச்சிகளில் அனுசந்தன் தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளையுடன் (ANRF) இணைந்து முதலீடு செய்யும் ஒவ்வொரு ஒரு ரூபாய்க்கும், அந்த ஆராய்ச்சியை முழுமையான வணிகப் பயன்பாட்டிற்கு கொண்டுவரவும் விரிவுபடுத்தவும் மேலும் 5 முதல் 10 ரூபாய் வரை முதலீடு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அரசாங்கத்திற்கும் சமூகத்திற்கும் இடையிலான இந்தக் கூட்டுமுயற்சி, உற்பத்தித்திறனை மேம்படுத்தவும் பெரிய அளவிலான தாக்கத்தை ஏற்படுத்தவும் இலக்கு நிர்ணயித்துள்ளது. மேலும், அரசாங்கத்தின் கொள்கைகளையும் கொள்முதல் முறைகளையும் தனது ஆராய்ச்சி இலக்குகளுக்கு ஏற்ப மாற்றுவதன் மூலம் புதிய கண்டுபிடிப்புகளையும் அனுசந்தன் தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளை (ANRF) ஆதரிக்கிறது.


ஒரு நிறுவனம் பல்வேறு வழிகளில் இந்த அறக்கட்டளையுடன் இணைந்து பணியாற்ற முடியும். அந்த அறக்கட்டளையின் முதன்மை முதலீட்டுடன் இணைந்து, இரண்டாம் நிலை நிதி மேலாண்மை அமைப்பில் ஒரு வரையறுக்கப்பட்ட பங்காளராக சேரலாம் அல்லது தகுதிவாய்ந்த ஒரு தொழில்நுட்ப நிறுவனமாக நேரடியாக இதில் பங்கேற்கலாம் அல்லது இந்தியாவில் ஏற்கனவே செயல்பட்டு வரும் புத்தொழில் நிறுவனங்கள் மற்றும் உலகளாவிய திறன் மையங்களுடன் கூட்டு முயற்சியில் ஈடுபடலாம். அறிவியல் துறையைப் பொறுத்தவரை, அது ஒரு தேசியப் பணியில் இணைந்து செயல்படலாம்; அல்லது அறக்கட்டளையுடன் இணைந்து நிதி வழங்குவதற்காகப் போட்டிக்கு முந்தைய சவால் ஒன்றை முன்மொழியலாம்; நிறுவன சமூகப் பொறுப்புணர்வு நிதியை 'அனுசந்தன் தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளை (ANRF) கண்டுபிடிப்பு நிதி' மூலமாகச் செலுத்தலாம்; அல்லது ஒரு பெரிய முதலீட்டைச் செய்வதற்கு முன்பாக, ஒரு குறிப்பிட்ட திட்டத்திற்கான செலவைப் பகிர்ந்து கொள்ளலாம். இந்த அறக்கட்டளையில் இணைவதற்கு இத்தனை விருப்பங்கள் இருப்பதற்கு ஒரே ஒரு முக்கியக் காரணம்தான் உள்ளது: இணைய விரும்பும் எந்தவொரு நிறுவனமும், தொடக்கக் கட்டுப்பாடுகள் மற்றும் கட்டணங்கள் அதிகமாக இருக்கின்றன என்ற காரணத்திற்காக விலகியிருக்கக்கூடாது என்பதுதான். 


ஆனால், இந்த அறக்கட்டளை என்ன வழங்குகிறது என்பதில் இருந்து, ஒட்டுமொத்தத் தொழிற்துறை என்ன செய்ய வேண்டும் என்பதை நோக்கி நமது கவனம் மாற வேண்டும். ஏனெனில், அறக்கட்டளை என்பது ஒரு தூண்டுகோல் மட்டுமே; அது நிறுவனங்களுக்கு மாற்றாகவோ அல்லது ஒரு ஊன்றுகோலாகவோ இருக்க முடியாது. இது நிறுவனங்களின் அபாயங்களைக் குறைக்கலாமே தவிர, அவர்களுக்கான வேலையை அதுவே செய்துவிட முடியாது. எனவே, தொழிற்துறை மூன்று முக்கியமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். முதலாவதாக, நிறுவனங்கள் பொது நிதியுதவியுடன் இணைந்து தங்களது சொந்த மூலதனத்தையும் முதலீடு செய்ய வேண்டும். இரண்டாவதாக, பிற நாடுகளை அல்லது நிறுவனங்களை நம்பியிருப்பது ஆபத்தானதாக இருக்கும் மற்றும் உள்நாட்டுத் திறன் மிகவும் அவசியமாகத் தேவைப்படும் உத்திசார் தொழில்நுட்பங்களில் அவர்கள் தீவிரமாக முதலீடு செய்ய வேண்டும் அதை தவிர்த்து, தங்களுக்குப் பாதுகாப்பான சந்தைகளில் இருந்து கிடைக்கும் சிறிய லாபங்களில் மட்டுமே கவனம் செலுத்தக் கூடாது. மூன்றாவதாக, மற்றும் மிக முக்கியமாக, குறுகியகால காலாண்டு முடிவுகளை மட்டுமே குறிக்கோளாகக் கொள்ளாமல், நீண்டகால ஆராய்ச்சிகளை ஆதரிக்கும் வலுவான உள்நாட்டு அமைப்புகளை உருவாக்க வேண்டும். அதாவது, அர்ப்பணிக்கப்பட்ட ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பிரிவுகள், பெருநிறுவனங்களின் கூட்டு நிதி மற்றும் திட்டமிடல் குழுக்கள் போன்றவற்றை உருவாக்க வேண்டும்.


இந்தியத் தொழில்துறை இதற்கு முன்பும் இதுபோன்ற சவால்களை வெற்றிகரமாக எதிர்கொண்டுள்ளது. 1990-களின் நடுப்பகுதியில் உலக வர்த்தக அமைப்பின் (World Trade Organisation (WTO)) அறிவுசார் சொத்துரிமை விதிகளை இந்தியா ஏற்றுக்கொண்டு, மருந்துத் துறையில் 'பொருட்களுக்கான காப்புரிமைகளை' (Product patents) அங்கீகரிக்கச் சம்மதித்தபோது, உள்நாட்டு மருந்து நிறுவனங்கள் சர்வதேச நிறுவனங்களின் வரவால் பாதிக்கப்படும் என்றே பலரும் எதிர்பார்த்தனர். ஏனெனில், அதற்கு முன்பு வரை இந்திய நிறுவனங்கள் பிற நாடுகளில் உருவாக்கப்பட்ட மருந்துகளின் தயாரிப்பு முறையை ஆராய்ந்து, அவற்றை மறுஉருவாக்கம் செய்யும் முறையையே நம்பியிருந்தன. ஆனால், அவர்கள் எதிர்பார்த்தபடி எதுவும் நடக்கவில்லை. இந்திய நிறுவனங்கள் சந்தையை விட்டு வெளியேறுவதற்குப் பதிலாக, வேதியியல் செயல்முறைகளில் தங்களது நிபுணத்துவத்தை மேம்படுத்திக் கொண்டன. உலகின் மிகக் கடுமையான தரக் கட்டுப்பாட்டு விதிகளுக்கு இணங்கச் செயல்பட்டு, உலகம் முழுவதும் மலிவு விலையிலான மருந்துகளை வழங்கும் முக்கிய விநியோகஸ்தர்களாக மாறின. இன்று இந்திய தொழிற்துறை நிறுவனங்கள் எதிர்கொள்ளும் சவால் மிகவும் பரந்தது, ஆனால் அதன் மூலம் நாம் கற்கும் பாடம் ஒன்றுதான்: வெற்றி என்பது நமது திறன்களை வளர்த்துக் கொள்வதில்தான் இருக்கிறதே தவிர, சவால்களைக் கண்டு பின்வாங்குவதில் இல்லை.


முன்னர் வளர்ச்சி அடைந்த நாடுகளைவிட இந்தியா இன்னும் அதிவேகமாக வளர்ச்சி பெறமுடியும். அதற்குப் பல சாதகமான அம்சங்கள் ஏற்கனவே இந்தியாவில் உள்ளன: தற்போது நமக்குக் கிடைத்து, எப்போதும் நிலைத்திருக்காத மக்கள்தொகை ஈவுத்தொகை (Demographic dividend), உலகத்தரம் வாய்ந்த டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு (Digital public infrastructure), ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள நிதி மற்றும் திட்ட அமைப்புகள், மற்றும் ஒரு குறிப்பிட்ட நாட்டை மட்டுமே உலக நாடுகள் தங்களின் தேவைகளுக்குச் சார்ந்திருப்பதைத் தவிர்த்து அதற்கு மாற்றாக விளங்கும் நாடுகளுக்கு ஆதரவாக இருக்கும் தற்போதைய உலகளாவிய சூழல் ஆகியவை ஆகும். இந்த பலங்கள் இந்தியா மற்ற நாடுகளுக்கு இணையாக வளர்வதோடு மட்டுமல்லாமல், அறிவுசார் சொத்துக்களை வெறும் பயனாளராகப் பயன்படுத்துபவராக மட்டும் இல்லாமல், அதை உருவாக்குபவராக மாறுவதற்கும் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள உதவும். இருப்பினும், இந்த வாய்ப்பு நமக்கு எப்போதும் கிடைத்துக் கொண்டிருக்காது, மேலும் அரசாங்கம் மட்டுமே இதனை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள முடியாது. சமீபத்தில் ஏற்பட்ட ஹார்முஸ் (Hormuz) நெருக்கடியானது, நமது அத்தியாவசியத் தேவைகளுக்கு மற்ற நாடுகளைச் சார்ந்திருப்பதில் உள்ள ஆபத்துகளை இந்தியாவிற்கு உணர்த்தியுள்ளது. இந்தியா தனது சொந்தத் திறன்களை ஆரம்பத்திலிருந்தே கட்டியெழுப்புவதன் மூலம் மட்டுமே தொழில்நுட்பரீதியாகத் தற்சார்பு அடையவும், சவால்களை எதிர்கொள்ளும் வலிமையைப் பெறவும், இறுதியில் உலகிற்குத் தவிர்க்க முடியாத ஒரு நாடாகவும் மாற முடியும். இதற்கான முதற்கட்ட நடவடிக்கைகளை அரசாங்கம் எடுத்துள்ளது, ஆராய்ச்சி ஆய்வகங்களும் தயாராக உள்ளன, நிதியும் கிடைக்கிறது; இனி இந்த முயற்சியை முழுமையாக முடிப்பதற்குத் தொழில்துறையினர் தங்களை அர்ப்பணித்துக் கொள்ள வேண்டும்.


சிவ்குமார் கல்யாணராமன் மற்றும் வி ஆனந்த நாகேஸ்வரன், அனுசந்தன் தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளையின் (ANRF) தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் இந்திய அரசின் முதன்மை பொருளாதார ஆலோசகர் ஆவர்.


Original Link: India now has the funds, the talent and the opening for a research leap.

Share:

ஒரு புதிய அரசு மானியத் திட்டம், உலகளவில் போட்டியிடக்கூடிய ஒரு இந்திய திறன்பேசி வணிக நிறுவனத்தை உருவாக்குவதை எவ்வாறு நோக்கமாகக் கொண்டுள்ளது? -சௌம்யரேந்திர பாரிக்

இந்தியாவிற்கென ஒரு சொந்த திறன்பேசி வணிக நிறுவனத்தை உருவாக்குவதற்கான இந்த முயற்சி, மின்னணுத் துறையில் வெறும் தொழிற்சாலைகளை ஈர்ப்பது மற்றும் பாகங்களை ஒன்றுசேர்க்கும் பணிகளை அதிகரிப்பது ஆகியவற்றைத் தாண்டி, ஒன்றிய அரசின் லட்சியம் அடுத்த கட்டத்திற்கு நகர்வதைக் காட்டுகிறது.


இந்தியாவில் விற்கப்படும் ஏறக்குறைய அனைத்து திறன்பேசிகளுமே இங்கேயேதான் தயாரிக்கப்படுகின்றன. ஆனால், அந்தத் திறன்பேசிகளில் இருக்கும் நிறுவனங்களின் பெயர்களைப் பார்க்கும்போது, இந்திய நிறுவனங்களின் பெயர்கள் மட்டும் எங்குமே காணப்படுவதில்லை. மத்திய அமைச்சரவை புதன்கிழமை அன்று ஒப்புதல் அளித்த புதிய 62,500 கோடி ரூபாய் மதிப்பிலான திறன்பேசிகள் தயாரிப்புத் திட்டம், இந்த நிலையை மாற்றியமைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


திறன்பேசி பாகங்களை ஒருங்கிணைப்பதற்காக கொண்டுவரப்பட்ட உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகைத் (Production Linked Incentive (PLI)) திட்டத்தின் தொடர்ச்சியாக, அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கான புதிய திட்டம் ஒன்றை அரசு செயல்படுத்த உள்ளது. இந்தியாவில் திறன்பேசி உற்பத்தியை வெற்றிகரமாக உள்நாட்டிலேயே உருவாக்க இந்த உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகைத் (PLI) திட்டம் உதவியது. இந்த புதிய திட்டத்தின்கீழ், உள்நாட்டு மதிப்புக் கூட்டலை அதிகரிப்பதற்காகத் தேவையான உதிரிபாகங்களை இந்தியாவிலேயே வாங்குவதிலும், இந்திய வணிக முத்திரை வடிவமைப்பு மற்றும் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பணிகளிலும் அரசு கவனம் செலுத்துகிறது. அத்துடன் திறன்பேசி ஏற்றுமதியுடன் இணைக்கப்பட்ட ஊக்கத்தொகைகளும் இதில் வழங்கப்படும் என்று மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.


இந்திய திறன்பேசி வணிக முத்திரைகளை உருவாக்குவதற்காக, இந்தத் திட்டத்தின்கீழ் தயாரிப்பின் வடிவமைப்பு மற்றும் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்ளும் தகுதியுடைய விற்பனைக்கு கூடுதலாக 3 விழுக்காடு ஊக்கத்தொகை வழங்கப்படும்.


இந்திய திறன்பேசி வணிக முத்திரையை உருவாக்குவதற்கான இந்த முயற்சி, மின்னணுத் துறையில் வெறும் தொழிற்சாலைகளை ஈர்ப்பது மற்றும் பாகங்கள் ஒருங்கிணைப்பை அதிகரிப்பது ஆகியவற்றைத் தாண்டி அரசாங்கத்தின் லட்சியம் நகர்வதைக் காட்டுகிறது. இந்தியாவை ஒரு முக்கிய உற்பத்தித் தளமாக ஏற்கனவே நிலைநிறுத்தியுள்ள ஒன்றிய அரசு, இப்போது இந்திய நிறுவனங்கள் இந்த உற்பத்திச் சங்கிலியின் இன்னும் ஆழமான பகுதிகளுக்குச் செல்ல வேண்டும் என்று விரும்புகிறது. அதாவது, தயாரிப்பு வடிவமைப்பு, ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, அறிவுசார் சொத்துரிமை, உதிரிபாகங்களுக்கான சுற்றுச்சூழல் அமைப்பு மற்றும் வணிக முத்திரை உரிமையாளராக மாறுவது ஆகியவற்றை நோக்கி நகர வேண்டும் என அரசு விரும்புகிறது.


இது ஒரு நீண்டகாலத் திட்டமாக இருந்தாலும், ஒரு இந்திய திறன்பேசி வணிக முத்திரையை (Smartphone brand) முன்னெடுத்துச் செல்வதற்காக அரசாங்கம் முக்கியமாக எதற்கு மானியம் வழங்க விரும்புகிறது என்றால், ஏற்கனவே சந்தையில் தடம் பதித்துள்ள சீன நிறுவனங்களுக்கு எதிராக ஆரம்பக்கட்டத்தில் இந்திய நிறுவனங்களுக்கு ஏற்படும் கூடுதல் உற்பத்திச் செலவுச் சுமையை குறைப்பதற்காகத்தான்.


"தரம் மற்றும் விலையில் மற்ற நிறுவனங்களுடன் போட்டியிடக்கூடிய வகையில், ஒரு திறன்பேசி வணிக நிறுவனத்தை உருவாக்க நான்கு அல்லது ஐந்து இந்திய நிறுவனங்கள் ஆர்வம் காட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், ஆரம்பத்தில் அவர்களுக்கு 10 முதல் 15 விழுக்காடு வரை கூடுதல் உற்பத்திச் செலவுச் சுமை இருக்கக்கூடும். எனவே, கொண்டுவரப்படவுள்ள புதிய திட்டத்தின் மூலம் அதில் குறைந்தபட்சம் 5 முதல் 6 விழுக்காடு வரையிலான சுமையைக் குறைக்க அரசாங்கம் ஆலோசித்து வருகிறது" என்று ஒரு உயர்அதிகாரி தெரிவித்தார்.


ஏன் ஒரு இந்திய திறன்பேசி வணிக நிறுவனம் உருவாக்கப்பட வேண்டும்?

ஒரு இந்திய திறன்பேசி வணிக நிறுவனம் உருவாக்குவதற்கான இந்த முயற்சி, இந்தியாவின் மின்னணு உற்பத்தித் துறையில் உள்ள ஒரு பெரிய இடைவெளியை அடிப்படையாகக் கொண்டது. திறன்பேசிகளைப் பெரிய அளவில் உற்பத்தி செய்ய உலகளாவிய நிறுவனங்களை ஈர்ப்பதில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது. ஆனால், தயாரிப்பு வடிவமைப்பு, அறிவுசார் சொத்துரிமை, வணிக முத்திரை மற்றும் தொழில்நுட்பம் என இந்தத் துறையின் மூலம் உருவாக்கப்படும் பெரும்பாலான மதிப்பு, வெளிநாடுகளைத் தலைமையிடமாகக் கொண்ட நிறுவனங்களுக்கே சொந்தமாக உள்ளது. ‘Tata Electronics’ மற்றும் ‘Dixon’ போன்ற இந்திய நிறுவனங்கள் ஒப்பந்த உற்பத்தித் துறையில் தங்களை நிலைநிறுத்தி வந்தாலும், இந்த நிலை நீடிக்கிறது.

இந்திய வணிக நிறுவனத்திற்கு ஆதரவளிப்பதன் மூலம் இந்த இடைவெளியை நேரடியாகக் களைவதே அரசாங்கத்தின் புதிய திறன்பேசி தயாரிப்புத் திட்டத்தின் நோக்கமாகும். தொழில்நுட்ப இறையாண்மையை அடைவது, இத்துறையின் மூலம் உருவாக்கப்படும் பொருளாதார மதிப்பில் பெரும் பங்கைக் கைப்பற்றுவது மற்றும் வடிவமைப்பு, ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு ஆகியவற்றில் இந்தியக் காப்புரிமைகளை உருவாக்குவது ஆகியவற்றை முக்கியக் குறிக்கோள்களாகக் கொண்டுள்ளது.

இது மிகவும் முக்கியமான ஒன்றாகும்; ஏனெனில், வெறும் உற்பத்தியை மட்டும் செய்வதால் ஒரு துறையின் முழுமையான கட்டுப்பாடு நமக்குக் கிடைத்துவிடாது. இந்தியாவில் பாகங்கள் ஒன்றிணைக்கப்படும் ஒரு திறன்பேசி, வேறொரு நாட்டில் வடிவமைக்கப்பட்டதாக இருக்கலாம், வெளிநாட்டுக்குச் சொந்தமான அறிவுசார் சொத்துரிமையைப் பயன்படுத்துவதாக இருக்கலாம் மற்றும் வெளிநாட்டு வணிக முத்திரையின்கீழ் விற்கப்படுவதாகவும் இருக்கலாம். இப்போது, இந்திய நிறுவனங்கள் இந்த மதிப்புச் சங்கிலியில் அடுத்த கட்டத்திற்கு முன்னேற வேண்டும் என்று அரசாங்கம் விரும்புகிறது. ஐந்து ஆண்டுகளில் ₹62,500 கோடி மதிப்பீட்டைக் கொண்டுள்ள இத்திட்டம், உள்நாட்டு மதிப்புச் சேர்க்கையை ஆழப்படுத்தவும், விநியோகச் சங்கிலிகளை வலுப்படுத்தவும் மற்றும் உலகளாவிய போட்டித்திறனை மேம்படுத்தவும் திட்டமிட்டுள்ளது. அதேநேரத்தில் தகுதியான விற்பனைக்கு ஊக்கத்தொகையையும் வழங்குகிறது.

இந்தக் கொள்கையானது, இந்தியாவின் திறன்பேசி உற்பத்தி ஊக்கத்தின் மறைமுகக் குறைபாடுகளைப் பிரதிபலிக்கிறது. உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகைத் திட்டங்கள் (PLI) ‘Apple’ போன்ற உலகளாவிய உற்பத்தியாளர்களை ஈர்க்கவும், திறன்பேசிகளைத் தயாரிப்பதற்கான இந்தியாவின் திறனை விரிவுபடுத்தவும் உதவின. இதன் விளைவாக நாடு ஒரு முக்கிய உற்பத்தி மற்றும் ஏற்றுமதி தளமாக உருவெடுத்தது. ஆனால், இந்தியா இன்னும் அவற்றுக்கு இணையான அளவிலும் உலகளாவியரீதியிலும் பெரிய அளவிலான ஒரு திறன்பேசி வணிக முத்திரையை உருவாக்கவில்லை. புதிய திட்டம் அந்த இடைவெளியை நிரப்புவதற்கான ஒரு முயற்சியாகும்; அதாவது, வளர்ச்சியின் அடுத்த கட்டம் என்பது இந்தியாவில் அதிக திறன்பேசிகள் தயாரிக்கப்படுவதை மட்டும் பற்றியதாக இல்லாமல், அந்த திறன்பேசிகளுக்குப் பின்னால் உள்ள வடிவமைப்பு, தொழில்நுட்பம் மற்றும் வணிக முத்திரை ஆகியவற்றை இந்திய நிறுவனங்கள் சொந்தமாகக் கொண்டிருப்பதை உறுதி செய்வதாகும்.

"உள்நாட்டு மதிப்பு கூட்டல், திறன்பேசி பாகங்களை உள்நாட்டிலேயே பெறுதல், வடிவமைப்பு சார்ந்த உற்பத்தி மற்றும் இந்திய வணிக முத்திரை ஆகியவற்றின்மீது இந்தத் திட்டம் செலுத்தும் தீவிர கவனம், மின்னணு சுற்றுச்சூழல் அமைப்பை ஆழப்படுத்தும்; விநியோகச் சங்கிலியின் நெகிழ்வுத்தன்மையை வலுப்படுத்தும் மற்றும் ஏற்றுமதிப் போட்டியை அதிகரிக்கும். இது புதிய முதலீடுகளை ஈர்க்கவும், உள்நாட்டுத் தொழில்நுட்ப வளர்ச்சியை வளர்க்கவும், மேம்பட்ட திறன்பேசி தயாரிப்பில் உலக அளவில் இந்தியா ஒரு விருப்பமான இடமாக மாறுவதற்கும் தேவையான நீண்டகாலக் கொள்கை உறுதியை வழங்குகிறது," என்று ‘Optiemus Electronics Limited’ நிறுவனத்தின் தலைவர் அசோக் குப்தா கூறினார்.

சீன நிறுவனங்கள் இந்திய திறன்பேசி நிறுவனங்களை எவ்வாறு வீழ்த்தின?

இந்த அதிரடி முன்னேற்றம், இந்தியாவின் மிக வேகமாக வளர்ந்துவரும் திறன்பேசி சந்தையைப் பயன்படுத்திக் கொள்வதில் முந்தைய தலைமுறை இந்திய அடைந்த தோல்வியையும் காட்டுகிறது. ‘Micromax’, ‘Karbonn’ மற்றும் ‘Lava’ போன்ற நிறுவனங்கள் சாதாரண கைப்பேசிகள் மற்றும் குறைந்த விலை கைப்பேசி சந்தையில் தங்களை வலுவாக நிலைநிறுத்தியிருந்தன. ஆனால், கைப்பேசி சந்தையானது தொழில்நுட்பரீதியாக அதிகத் தேவைகளைக் கொண்டதாக மாறியபோது, அதற்கு ஏற்றவாறு திறன்பேசி தயாரிப்புக்கு மாறுவதில் இந்த நிறுவனங்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டன.

Indian smartphones market share

இதற்கிடையில், சீன நிறுவனங்கள் குறைந்த விலை நிர்ணயம், அடிக்கடி புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்துதல், அதிரடி விளம்பரங்கள் மற்றும் மிக வேகமாக விரிவடைந்த விநியோகக் கட்டமைப்பு ஆகியவற்றின் கூட்டணியோடு இந்தியாவிற்குள் நுழைந்தன. ‘Xiaomi’, ‘Vivo’, ‘Oppo’ மற்றும் ‘Realme’ போன்ற நிறுவனங்களால், சில்லறை விற்பனைக் கட்டமைப்பு, விற்பனைக்குப் பிந்தைய சேவை மற்றும் வணிக முத்திரை மதிப்பு ஆகியவற்றில் பெரும் முதலீடு செய்ய முடிந்தது. அதேநேரத்தில் போட்டி நிறுவனங்களுக்கு இணையாகக் குறைந்த விலையில் சிறந்த தொழில்நுட்பக் சிறப்பம்சங்களையும் அவர்களால் வழங்க முடிந்தது. இது ஆரம்பத்தில் அவர்களுக்கு இருந்த குறைந்த விலை என்பதைத் தாண்டி, சந்தையின் பல்வேறு பிரிவுகளிலும் தங்களது வலுவான ஆதிக்கத்தை நிலைநிறுத்த உதவியது.

இதன் முடிவு இன்றும் தெளிவாகத் தெரிகிறது. 2026-ஆம் ஆண்டின் முதல் காலாண்டில், ‘Samsung’ நிறுவனத்தைத் தவிர்த்து, இந்தியாவின் திறன்பேசி சந்தையை சீன நிறுவனங்களே பெருமளவில் ஆக்கிரமித்திருந்தன. சந்தை நிலவரங்களை ஆய்வு செய்யும் 'கவுண்டர்பாயிண்ட் ரிசர்ச்' (Counterpoint Research) நிறுவனத்தின் தரவுகளின்படி, ‘Vivo’ நிறுவனம் 21 விழுக்காடு சந்தைப் பங்களிப்புடன் இந்திய திறன்பேசி சந்தையில் முதலிடத்தில் உள்ளது. அதனைத் தொடர்ந்து ‘Samsung’ மற்றும் ‘Oppo’ ஆகிய இரு நிறுவனங்களும் தலா 17 விழுக்காடு சந்தைப் பங்கைக் கொண்டுள்ளன. முதல் ஐந்து இடங்களின் கடைசிப் பகுதிகளில் ‘Xiaomi’ மற்றும் ‘Realme’ நிறுவனங்கள் முறையே 12 விழுக்காடு மற்றும் 9 விழுக்காடு சந்தைப் பங்குகளைக் கொண்டுள்ளன.


Original Link: How a new govt subsidy plan hopes to create a competitive Indian smartphone brand.

Share:

இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் எரிபொருள் ரயில் எப்படி இயங்குகிறது? - மைத்ரி போரேச்சா

இயந்திர சக்தியை உருவாக்க எரிபொருளை எரிக்கும் வழக்கமான டீசல் இன்ஜின்களைப் போல் இல்லாமல், ஒரு ஹைட்ரஜன் ரயில், புரோட்டான் பரிமாற்ற சவ்வு (Proton Exchange Membrane (PEM) எரிபொருள் மின்கலம் வடிவில் ஒரு சிறிய மின் உற்பத்தி நிலையத்தைத் கொண்டுள்ளது.


தற்போதைய செய்தி: ஹரியானாவின் ஜிந்த் மற்றும் சோனிபட் இடையே 89 கி.மீ தூரத்திற்கு இயக்கப்படவுள்ள இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில் சேவையை, பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைக்கவுள்ளார். இந்திய ரயில்வே நிலக்கரி மற்றும் நீராவியிலிருந்து தூய்மையான, நிலையான எரிசக்தி ஆற்றல்களை நோக்கி மாறிவரும் நிலையில், இது ஒரு புதிய தொடக்கத்தைக் குறிக்கிறது" என்று மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் இந்த வாரத் தொடக்கத்தில் செய்தியாளர்களிடம் கூறியிருந்தார்.

ஹைட்ரஜனால் இயங்கும் ரயில் (Hydrogen-powered train) என்றால் என்ன?


இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் எரிபொருள் செல் இரயில், 2,600 பயணிகளை ஏற்றிச் செல்லும் திறனுடைய,  பத்து பெட்டிகளைக் கொண்ட ஒரு ரயில் தொகுப்பாகும்.  மிகவும் தூய்மையான எரிபொருளான ஹைட்ரஜனைப் பயன்படுத்தி, இந்த இரயில் தனக்குத் தேவையான மின்சாரத்தை இரயிலுக்குள்ளேயே உற்பத்தி செய்கிறது.


மேல்நிலை மின்கம்பிகளில் இருந்து மின்சாரத்தைப் பெறும் வழக்கமான மின்சார ரயில்களைப் போல் இல்லாமல், இந்த ஹைட்ரஜன் எரிபொருள் மின்கலத் தொடர்வண்டியானது, ஹைட்ரஜன் மற்றும் ஆக்ஸிஜனுக்கு இடையேயான ஒரு வேதிவினை (Chemical Reaction) மூலம் ரயிலுக்குள்ளேயே மின்சாரத்தை உற்பத்தி செய்கிறது. இதன் ஒரே துணை விளைபொருள் நீராவி மட்டுமே இருக்கும். இந்த ரயில், ஜிந்த்-சோனிபட் வழித்தடத்தில் மணிக்கு 75 கி.மீ. இயக்க வேகத்திலும், மணிக்கு 110 கி.மீ. வடிவமைப்பு வேகத்திலும் இயக்கப்படும்.


இந்தத் ரயில் இரண்டு ஹைட்ரஜன் மூலம் இயங்கும் பெட்டிகளையும் (Driving Power Cars (DPCs)) 8 இழுவைப் பெட்டிகளையும் (Trailer Coaches (TCs)) கொண்டுள்ளது. ஒவ்வொரு ஹைட்ரஜன் உந்துசக்திப் பெட்டியிலும் எரிபொருள் கலன்கள், லித்தியம் இரும்பு பாஸ்பேட் (lithium iron phosphate (LFP)) மின்கலங்கள் மற்றும் ஹைட்ரஜன் சேமிப்பு உருளைகள் உள்ளன. இவை அனைத்தும் சேர்ந்து இழுவைச் சக்தியை வழங்குவதோடு, மாறுபட்ட இயக்கச் சூழல்களிலும் ரயில் நம்பகத்தன்மையுடன்  இயங்குவதை உறுதி செய்கின்றன.


ரயிலின் இரு முனைகளிலும் தலா ஒரு ஹைட்ரஜன் மூலம் இயங்கும் பெட்டி (Driving Power Car (DPC)) அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு இயங்கும் பெட்டியும் 1,200 கிலோவாட் (kW) அல்லது 1,600 குதிரைத்திறன் (Horsepower (hp)) சக்தியை உற்பத்தி செய்கிறது. இந்த இரண்டு பெட்டிகளும் இணைந்து செயல்பட்டு, முழு ரயிலையும் மணிக்கு 110 கிலோமீட்டர் வேகம் வரை இயக்குவதற்குத் தேவையான சக்தியை வழங்குகின்றன.




இந்த ரயிலுக்கான ஹைட்ரஜன் எரிபொருள் எங்கிருந்து கிடைக்கிறது?


ஜிந்த் நகரில் நிறுவப்பட்டுள்ள பிரத்யேக ஹைட்ரஜன் சேமிப்பு, அழுத்தம் கூட்டுதல் (compression) மற்றும் விநியோக வசதி போன்றவை எரிபொருள் நிரப்பும் பணிகளுக்கு உதவும் என்று இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது. பெட்ரோல் பங்க் அல்லது அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயு (Compressed Natural Gas (CNG)) நிலையத்தைப் போலவே, இந்த ரயிலுக்கும் எரிபொருள் நிரப்புவதற்கான ஒரு நிலையம் தேவைப்படுகிறது.


முதலில், பசுமை ஹைட்ரஜன் ஆலையில் மின்பகுப்பு (Electrolysis) முறையின் மூலம் நீர், மின்சாரத்தைப் பயன்படுத்தி ஹைட்ரஜன் மற்றும் ஆக்சிஜன் ஆகப் பிரிக்கப்படுகிறது. உற்பத்தி செய்யப்பட்ட ஹைட்ரஜன், பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட சேமிப்புத் தொட்டிகளில் பாதுகாப்பாக சேமிக்கப்படுகிறது.


இரண்டாவது கட்டத்தில், உற்பத்தி செய்யப்பட்ட ஹைட்ரஜன் 500 பார்  அழுத்தத்திற்கு சுருக்கப்படுகிறது. இதன் மூலம், குறைந்த இடத்தில் அதிக அளவு ஹைட்ரஜனை சேமிக்க முடியும். இறுதியாக, 350 பார் என்ற சீரான அழுத்தத்தில் இரண்டு தனித்தனி ஹைட்ரஜன் விநியோகக் கருவிகள் மூலம் இது விநியோகிக்கப்படுகிறது. இதன் மூலம் இரண்டு ஹைட்ரஜன் ரயில்களிலும் ஒரே நேரத்தில் எரிபொருளை நிரப்ப முடிவதுடன், செயல்பாட்டுக்கான கால அவகாசமும் குறைக்கப்படுகிறது. இந்த வசதி ஒரே நேரத்தில் 3,000 கிலோ ஹைட்ரஜனைச் சேமித்து வைக்கும் திறன் கொண்டது. இது ரயிலின் வழக்கமான செயல்பாடுகளுக்குப் போதுமானதாகும். மேலும், இதன் சேமிப்பு மற்றும் விநியோக அமைப்புக்கு பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள் பாதுகாப்பு அமைப்பு (Petroleum and Explosives Safety Organisation (PESO)) ஒப்புதல் அளித்துள்ளது.


ஆராய்ச்சி வடிவமைப்பு மற்றும் தரநிலைகள் அமைப்பு (Research Designs and Standards Organisation (RDSO)) தொழில்நுட்பம் பற்றிய குறிப்புகளை உருவாக்கி, வடிவமைப்பு ஒப்புதல் செயல்முறைக்குத் தலைமை வகித்து வருகிறது. இந்த ஹைட்ரஜன் ரயில் தொகுப்பை, M/s Medha Servo Drives நிறுவனம் ஒருங்கிணைத்துள்ளது. அதேவேளையில், ஒருங்கிணைந்த பெட்டி தொழிற்சாலை (Integral Coach Factory (ICF)), ரயிலின் கருப்பொருள் மற்றும் வெளிப்புற வடிவமைப்பை உருவாக்குவதில் முக்கியப் பங்களிப்பை வழங்கியுள்ளது.

எளிதில் தீப்பற்றக்கூடிய வாயுவால் இயங்கும் ரயிலில் பயணம் செய்வது பாதுகாப்பானதா?


ஹைட்ரஜன் நிறமற்ற, மணமற்ற, சுவையற்ற மற்றும் நச்சுத்தன்மையற்ற ஒரு வாயுவாகும். ஆனால், இது மிகவும் எரியக்கூடியது (Highly Inflammable) என்பதால், மிகவும் கவனமாகக் பராமரிக்கப்பட வேண்டும். ஹைட்ரஜனை கண்களால் காணவோ அல்லது அதன் வாசனையை உணரவோ முடியாது என்பதால், இந்த ஹைட்ரஜன் ரயில் திட்டத்தின் முழுப்  பாதுகாப்பு அமைப்பும் மிகச் சிறிய அளவிலான கசிவைக் கூட உடனடியாகக் கண்டறியும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.


ரயிலும், ஹைட்ரஜன் உற்பத்தி நிலையமும் ஹைட்ரஜன் கசிவு, அசாதாரண வெப்பநிலை, தீப்பிழம்பு (Flame), புகை போன்றவற்றை தொடர்ந்து கண்காணிக்கும் கருவிகளால் பொருத்தப்பட்டுள்ளன. இடைவிடாத காற்றோட்ட வசதி ரயிலுக்குள் எப்போதும் காற்றைச் சுழலச் செய்வதால், மிகச் சிறிய அளவில் ஹைட்ரஜன் கசிந்தாலும், அது ஒரே இடத்தில் தேங்காமல், வெளிக்காற்றில் கலந்து பாதுகாப்பாகச் சிதறிவிடும்.


தானியங்கி முறையில் செயல்பாட்டை நிறுத்தும் பாதுகாப்பு அமைப்பும் (automatic shut-off system) இதில் உள்ளது. ஏதேனும், அசாதாரண நிகழ்வு கண்டறியப்பட்டால், மனிதர்களின் தலையீட்டிற்காகக் காத்திருக்காமலேயே, இந்த அமைப்பு தானாகவே ஹைட்ரஜன் விநியோகத்தை நிறுத்திவிடும். ஓட்டுநரின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் அவரது அறை (Loco Pilot’s cabin) சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. அவசர காலங்களில் ரயிலைப் பாதுகாப்பான இடத்திற்குக் கொண்டு செல்ல உதவும் சிறப்பு வசதி மற்றும் ரயிலின் முழுமையான அமைப்பின் தற்போதைய நிலையைத் தொடர்ந்து காட்டும் கண்காணிப்பு திரை ஆகியவையும் இதில் உள்ளன.







ஜிண்ட் ஹைட்ரஜன் நிலையத்திலும் கசிவைக் கண்டறியும் கருவிகள், தீப்பிழம்பைக் கண்டறியும் கருவிகள், தானியங்கி முறையில் செயல்பாட்டை நிறுத்தும்  பாதுகாப்பு அமைப்புகள், தீயைக் கட்டுப்படுத்த நீர் தெளிப்பான்கள் மற்றும் தீ எச்சரிக்கை கருவிகள் போன்ற  பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.


ஹைட்ரஜன் ரயில் சேவையில் அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன், முழு அமைப்பும் ஜெர்மனியைச் சேர்ந்த TÜV SÜD என்ற உலகின் முன்னணி தொழில்நுட்ப ஆய்வு மற்றும் சான்றளிப்பு நிறுவனங்களில் ஒன்றால், தானாக இயங்கும் மூன்றாம் தரப்பு பாதுகாப்பு தொடர்பான மதிப்பீடு செய்யப்பட்டது என்று இந்திய ரயில்வே செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.


உலகளவில் ஹைட்ரஜன் ரயில்களின் தற்போதைய நிலை என்ன?


உலகளவில் ஹைட்ரஜனால் இயங்கும் ரயில்கள் இன்னும் தொடக்க நிலையிலேயே உள்ளன. வணிக ரீதியாக ஹைட்ரஜன் பயணிகள் ரயில்களை அறிமுகப்படுத்திய முதல் நாடக ஜெர்மனி  இருந்து வருகிறது. அதேசமயம், பிரான்ஸ், இத்தாலி, சீனா, ஜப்பான் உள்ளிட்ட சில நாடுகள் முன்மாதிரி  திட்டங்கள் அல்லது குறைந்த அளவிலான செயல்பாடுகளையோ மேற்கொண்டு வருகின்றன. இருப்பினும், இந்த ரயில்கள் பொதுவாக இரண்டு முதல் நான்கு பெட்டிகளைக் கொண்டிருப்பதோடு, அவை பிராந்திய பயணிகள் சேவைகளுக்காகவே வடிவமைக்கப்பட்டுள்ளன.


இந்தியாவில் ஹைட்ரஜன் ரயில்களின் எதிர்காலம் என்ன?


இந்திய இரயில்வே, ஜிண்ட்-சோனிபத் (Jind–Sonipat) ஹைட்ரஜன் ரயில் திட்டம் மூலம் பெற்ற அனுபவத்தைப் பயன்படுத்தி, கல்கா-ஷிம்லா (Kalka–Shimla) உள்ளிட்ட பாரம்பரிய இரயில்வே பாதைகளில் ஹைட்ரஜன் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதை ஆராய்ந்து வருகிறது. மேலும், இந்த முன்னோடி திட்டத்தை ஹைட்ரஜன் மூலம் இயங்கும் ரயில் வண்டிகளுக்கான (Hydrogen-powered Rolling Stock) ஒழுங்கமைக்கப்பட்ட தேசியத் திட்டமாக மாற்ற இந்திய ரயில்வே திட்டமிட்டுள்ளது. இந்த முயற்சி, தேசிய பசுமை ஹைட்ரஜன் இயக்கம் (National Green Hydrogen Mission) மற்றும் இந்தியாவின் நீண்டகால கார்பன் உமிழ்வில்லா நிலை இலக்கை அடைவதில் முக்கியப் பங்களிப்பை வழங்கும் என்று இந்திய ரயில்வே செய்தித் தொடர்பாளர்  கூறினார்.


Original Link: How India’s first hydrogen-powered train works.

Share:

இந்தியாவின் உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிகாரம் அளிப்பது எப்படி புத்தாக்கம் மற்றும் வளர்ச்சியைத் தொடங்கி வைக்கும்? -தேவேஷ் கபூர், அர்விந்த் சுப்ரமணியன்

இந்தியக் கூட்டாட்சி குறித்த விவாதங்கள் இனி மத்திய-மாநிலங்களுக்கு இடையிலான உறவுகளில் மட்டும் கவனம் செலுத்த முடியாது. நகரங்களுக்கு அதிகாரம் அளிப்பதும், அவற்றின் நிர்வாகத்தை மேலும் பொறுப்புள்ளதாக்குவதும் இந்த விவாதங்களில் ஒருங்கிணைக்கப்பட வேண்டும்.


காரணங்கள் எதுவாக இருந்தாலும், நமது உள்ளாட்சி அமைப்புகள், பொதுவாக, வெற்றிக்கும் செயல்திறனுக்கும் சிறந்த எடுத்துக்காட்டுகளாகத் திகழ்வதில்லை என்பதே மறுக்க முடியாத உண்மை...” இது ஒரு சமகாலப் புலம்பல் அல்ல, மாறாக 1925-ல் அலகாபாத் நகராட்சியின் தலைவரான ஜவஹர்லால் நேருவால் வெளிப்படுத்தப்பட்ட ஒன்றாகும். நூறு ஆண்டுகள் கடந்தும், பெரிய அளவில் எதுவும் மாறவில்லை.


கூட்டாட்சி விவாதங்களில், கிராமப்புற மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளை உள்ளடக்கிய மூன்றாம் அடுக்கு அரசாங்கம் பெரும்பாலும் இடம்பெறுவதில்லை. ஏனெனில், அந்த விவாதங்கள் மத்திய மற்றும் மாநில அரசுகளில் மட்டுமே கவனம் செலுத்துகின்றன. உள்ளாட்சி அமைப்புகள், இந்தியக் கூட்டாட்சியின் புறக்கணிக்கப்பட்ட மாற்றாந்தாய் பிள்ளையைப் போல நடத்தப்படுகின்றன. இதற்கு நேர் மேலே இருந்து இதைக் கட்டுப்படுத்தும் இரண்டாம் அடுக்கான மாநில அரசுகளே கட்டுப்படுத்தும் மாற்றாந்தாய்ப் பிள்ளையாகும்.


மாநில அரசுகளைச் சார்ந்திருத்தல்


நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள், பணியாளர் நியமனம், நிதி மற்றும் பொதுச் செலவினங்களில், நகர்ப்புற மூன்றாம் அடுக்கு மக்கள் மோசமாகப் புறக்கணிக்கப்படுவது தெளிவாகத் தெரிகிறது.



அரசியல் அமைப்புகளில் முற்றிலும் மாறுபட்ட நாடுகளான அமெரிக்காவிலும் சீனாவிலும், கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பங்கு அரசு ஊழியர்கள் உள்ளாட்சி அமைப்புகளில் பணியாற்றுகின்றனர். இந்தியாவில், 10 சதவீதத்திற்கும் சற்று அதிகமான அரசு ஊழியர்கள் மட்டுமே உள்ளாட்சி அளவில் பணியாற்றுகின்றனர் என்பதை விளக்கப்படம்-1 குறிப்பிடுகிறது. இதன் விளைவாக, அமெரிக்காவில் பெரும்பாலான பொதுச் சேவைகள் மூன்றாம் அடுக்கால் வழங்கப்படுகின்றன. ஆனால், இந்தியாவில் மிகக் குறைவான சேவைகளே அவ்வாறு வழங்கப்படுகின்றன.



அடுத்து, நிதியைக் கருத்தில் கொள்வோம். திறமையான செயல்பாட்டிற்கு, பணியாளர்களுடன் சேர்த்து, சுயமாக உருவாக்கப்படும் வளங்களும் மிக முக்கியமானவை. மற்ற இரண்டு அடுக்கு அமைப்புகளுடன் ஒப்பிடும்போது, ​​நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் (ULBs) செயல்திறன் எவ்வளவு மோசமாக இருந்துள்ளது என்பதை விளக்கப்படம்-2 விளக்குகிறது. மத்திய மற்றும் மாநில அரசுகள், கடந்த அறுபது ஆண்டுகளில், சேவைகளை வழங்குவதற்காக மத்திய அரசு தானே உருவாக்கும் வளங்களை முறையே 2 மற்றும் 2.5 மடங்கு அதிகரிக்க முடிந்துள்ளது.


இதற்கு மாறாக, வரி வருவாயில் நகர்ப்புற மூன்றாம் அடுக்கின் பங்கு, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வெறும் 0.3 சதவீதம் என்ற அளவில் தேக்கமடைந்துள்ளது. இதன் விளைவாக, மூன்றாம் அடுக்கின் செலவினங்கள் மிகக் குறைவாக (மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1 சதவீதத்திற்கும் குறைவு) உள்ளன. மேலும், மாநில அரசுகளும், மத்திய அரசும் முறையே சுமார் 15 மற்றும் 20 மடங்கு அதிகமாகச் செலவிடுகின்றன. குறைந்த அளவிலான சொந்த வரி வருவாய் என்பது, மிகச் சிறிய அளவிலான செலவினங்களுக்கும்கூட வெளி ஆதாரங்கள் மூலமே நிதியளிக்கப்படுகிறது என்பதாகும். இது, மூன்றாம் அடுக்கிற்கு இருக்கக்கூடிய எந்தவொரு செயல்பாட்டுத் திறனையும் செயலிழக்கச் செய்து, மாநில அரசுகளைச் சார்ந்திருக்கும் நிலையை மேலும் வலுப்படுத்துகிறது.



விரைவான நகரமயமாக்கல் மற்றும் 1993-ல் நடைமுறைக்கு வந்த, உள்ளாட்சி அமைப்புகளுக்கு அரசியலமைப்பு அந்தஸ்து வழங்கிய 73-வது மற்றும் 74-வது அரசியலமைப்புத் திருத்தங்கள் நிறைவேற்றப்பட்டதைக் கருத்தில் கொள்ளும்போது, ​​இது மிகவும் கவனிக்கத்தக்க ஒன்றாகும்.





நிலத்தை பணமாக்குதல் 


மூன்றாம் அடுக்கு அரசாங்கத்தின் பலவீனங்கள், நிலம் தொடர்பான ஒரு ஆழமான பிரச்சனையுடன் பிணைக்கப்பட்டுள்ளன. இந்தப் பிரச்சனையின் ஒரு அறிகுறியை சீனாவையும் இந்தியாவையும் ஒப்பிடுவதன் மூலம் காணலாம். நிலம் பற்றாக்குறையாக உள்ள நாடுகளில், வேகமான பொருளாதார வளர்ச்சி பொதுவாக மொத்த உள்நாட்டு உற்பத்தியுடன் (GDP) ஒப்பிடும்போது நிலம் மற்றும் சொத்து விலைகள் வேகமாக உயரக் காரணமாகிறது. இது சீனாவிலும் இந்தியாவிலும் நிகழ்ந்தது. இதன் காரணமாக, நிலம் அரசாங்க வருவாய்க்கு ஒரு வலுவான மற்றும் வளர்ந்துவரும் ஆதாரமாக மாறக்கூடும்.



ஆனால், விளக்கப்படம்-3 காட்டுவது போல, இரு நாடுகளிலும் ஏற்பட்ட விரைவான பொருளாதார வளர்ச்சிக் காலத்தில், சீனா, உயர்ந்துவரும் நில மதிப்புகளை அரசாங்க வருவாயாக மாற்ற முடிந்தது. அது நிலத்திற்கு வரி விதிப்பதை விட, அதை விற்பதன் மூலம் அதிகப் பணம் ஈட்டியது. முரண்பாடாக, ஒரு கம்யூனிஸ்ட் நாடு இந்த வருவாயின் ஒரு பகுதியைக் கைப்பற்றுவதற்காக நிலத்தைத் தனியார்மயமாக்கியது. சீனாவின் நில வருவாய், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1 சதவீதத்திற்கும் குறைவாக இருந்து, அதன் உச்சக்கட்டத்தில் 10 சதவீதத்திற்கும் அதிகமாக அதிகரித்தது.


இதற்கு மாறாக, இந்தியாவின் நில வருவாய் அதன் வளர்ச்சிக் காலம் முழுவதும் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 1% என்ற அளவில் கிட்டத்தட்ட மாற்றமின்றி இருந்தது. இந்த வேறுபாட்டைப் புரிந்துகொள்வதற்கான மற்றொரு வழி, 1999-ல் செலவழிக்கக் கிடைத்த ஒவ்வொரு நகர்ப்புறக் குடியிருப்புவாசியிடமிருந்தும் சீன அரசாங்கம் பெற்ற நில வருவாய், இந்தியாவை விட சுமார் 15 மடங்கு அதிகமாக இருந்தது. 2020-ல், அதன் உச்சக்கட்டத்தில், இந்த மடங்கு 225 ஆக அதிகரித்தது. சீனாவின் வேகமான வளர்ச்சியும், உயர்ந்துவரும் நில மதிப்புகளைப் பொது வருவாயாக மாற்றும் அதன் சிறந்த திறனும், அரசாங்க வருவாயைப் பெருமளவில் விரிவுபடுத்தின. இருப்பினும், இந்தியா உயர்ந்து வரும் நில மதிப்புகளால் மிகக் குறைவாகவே பயனடைந்தது.


நிலத்திலிருந்து வருவாய் ஈட்ட முடியாததற்கு சோசலிச சித்தாந்தமும் சுயநலக் குழுக்களும் ஒருங்கே காரணமாக இருந்தன. இரண்டாம் நிலை அரசாங்கம் அதிகக் கட்டுப்பாடுகளை விதித்ததாலும், மூன்றாம் நிலை அரசாங்கம் பலவீனமாக இருந்ததாலும் இந்தப் பிரச்சினை மேலும் மோசமடைந்தது. சோசலிசம், 1976-ம் ஆண்டின் நகர்ப்புற நில உச்சவரம்புச் சட்டம் (Urban Land Ceiling Act) போன்ற தவறான சட்டங்களுக்கு உத்வேகம் அளித்தது. அச்சட்டம், மிகக் குறைந்த உபரி நிலமே அடையாளம் காணப்பட்டு, பொது நோக்கங்களுக்காக அரசால் குறைந்த அளவு நிலம் கையகப்படுத்தப்பட்டு, நிலத்தைச் சிறு சிறு பகுதிகளாகப் பிரித்தது.


அப்படியிருந்தும், பல அரசு நிறுவனங்களான முடக்கப்பட்ட பொதுத்துறை நிறுவனங்கள், துறைமுகங்கள், பாதுகாப்புத் துறை, அரசால் நிர்வகிக்கப்படும் கோயில்கள் ஆகியவை ஒருபோதும் பணமாக்கப்படாத, காலியாக உள்ள அல்லது ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்களைக் கொண்டிருந்தன. சீனாவுக்கு இருந்ததைப் போன்ற நிலத்தின் மீதான ஏகபோகம் இந்திய அரசுக்கு ஒருபோதும் இருந்ததில்லை. இதன் காரணமாக, சீனாவின் உள்ளாட்சி அமைப்புகள் விற்ற அளவுக்கு இந்தியாவால் ஒருபோதும் நிலத்தை விற்க முடியவில்லை. இருப்பினும், இந்தியா அவ்வாறு செய்ய தீவிரமாக முயற்சி கூட செய்யவில்லை. பற்றாக்குறை வாடகைத் தேடலை ஊக்குவிக்கிறது. ஆனால், இந்தச் சட்டங்களின் (நிலப் பயன்பாட்டுக் கட்டுப்பாடுகள் மற்றும் கட்டிடத் துணை விதிகளுடன் சேர்த்து) மிக மோசமான விளைவு, நிலம் மற்றும் வாடகைச் சந்தைகளில் ஏற்பட்ட கடுமையான சிதைவுகளே ஆகும். இதுவே ‘கருப்புப் பணத்தின்’ (black money) முக்கிய உந்து சக்தியாக விளங்கியது. இந்தியாவில் மனை வணிகத் (ரியல் எஸ்டேட்) துறையைப் போல வேறு எந்தத் துறையும் கருப்புப் பணத்தால் இவ்வளவு கடுமையாகப் பாதிக்கப்படவில்லை.


இதன் விளைவாக, இந்தியாவில் உள்ள நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் (Urban Local Bodies (ULB)) ஒரு குறைந்த சமநிலை அரசியல் பொருளாதார அமைப்பில் சிக்கியுள்ளன. மத்திய மற்றும் மாநில அரசுகள் என உயர்மட்ட அரசாங்கங்கள், கீழ் அதன் நிலைகளைக் கட்டுப்படுத்தவும் செல்வாக்கு செலுத்தவும் தங்கள் நிதி அதிகாரங்களைப் பயன்படுத்துகின்றன. அதேநேரத்தில், உள்ளாட்சி அமைப்புகள் தங்களைச் சுற்றியுள்ள குடிமக்களுக்கு நேரடியாக வரி விதிக்க இயலாமலும் விரும்பாமலும் இருக்கின்றன. இது வளங்களின் நாள்பட்ட பற்றாக்குறையையும், உயர் அரசாங்கங்களை அதிக அளவில் சார்ந்திருக்கும் நிலையையும் உருவாக்குகிறது. இது உள்ளாட்சி அமைப்புகளின் தன்னாட்சியை கடுமையாகக் கட்டுப்படுத்தும் ஒரு அரசியல் மற்றும் நிர்வாகக் கட்டுப்பாட்டுக் கருவியாக மாநிலங்களால் செயல்படுகிறது.


இந்தப் பிரச்சினை நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு (ULBs) குறிப்பாகப் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. மாநில அரசுகள் நியமனங்களைக் கடுமையாகக் கட்டுப்படுத்துவதே அவற்றின் பலவீனமான நிர்வாகத் திறனுக்கு ஒரு பகுதிக் காரணமாகும். நகராட்சி ஆணையர்களையும் அவர்களின் மூத்த நிர்வாகக் குழுக்களையும் நியமிப்பதற்கோ அல்லது நியமனங்கள், பதவி உயர்வுகள் மற்றும் தங்கள் ஊழியர்களை ஒழுங்குபடுத்துவதற்கோ நகர அரசுகளுக்கு அதிகாரம் இல்லை. சில செயல்பாடுகள் அதிகாரப்பூர்வமாக உள்ளாட்சி அமைப்புகளுக்கு மாற்றப்பட்டாலும், பணியாளர்கள் தொடர்ந்து மாநில அரசுகளுக்குப் பொறுப்புடையவர்களாகவே உள்ளனர்.


இதற்கு ஒரு தீர்வு உள்ளதா?


கட்டமைப்பு சீர்திருத்தங்களுக்குத் தங்களை அர்ப்பணித்துக் கொள்ளும் மாநிலங்கள் மற்றும் நகரங்களுடன் நிதியுதவியை இணைத்த ஜவஹர்லால் நேரு தேசிய நகர்ப்புற புனரமைப்பு இயக்கம் (Jawaharlal Nehru National Urban Renewal Mission (JNNURM)) மற்றும் அதன் தொடர்ச்சியான அடல் புத்துயிர்ப்பு மற்றும் நகர்ப்புற உருமாற்ற இயக்கம் (Atal Mission for Rejuvenation and Urban Transformation (AMRUT)) போன்ற நகர்ப்புற மேம்பாட்டுக்கான மத்திய அரசின் திட்டங்கள் மூலம் உள்ளாட்சி அமைப்புகளுக்கு (ULBs) அதிக நிதி ஆதாரங்கள் கிடைத்தன. சமீபத்திய ஆண்டுகளில், அடுத்தடுத்து வந்த நிதி ஆணையங்களும் இந்த மூன்றாம் அடுக்குக்கு அதிக வளங்களை ஒதுக்கியுள்ளன.


இருப்பினும், இந்த கூடுதல் வளங்கள் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு உண்மையில் தேவைப்படும் நிதியில் ஒரு சிறிய பகுதியாக மட்டுமே உள்ளன. மிக முக்கியமாக, மத்திய அரசின் திட்டங்கள் என்பவை குடிமக்களின் குறைந்த பங்களிப்புடன் மேலிருந்துகீழ் திணிக்கப்படும் முயற்சிகளாக உள்ளன. மேலும், உள்ளாட்சி அமைப்புகளின் பலவீனமான நிர்வாக மற்றும் தொழில்நுட்பத் திறன், மற்றும் மாநில அரசுகளின் மேலாதிக்கப் பங்கு போன்ற கட்டுப்படுத்தும் தடைகளை அவற்றால் தீர்க்க முடியவில்லை. உண்மை என்னவென்றால், மத்தியில் அதீத அதிகாரக் குவிப்பால் சில சமயங்களில் பாதிக்கப்படும் மாநில அரசுகளே, தங்களின் மூன்றாம் அடுக்குக்கு எதிராகக் குற்றவாளிகளாக இருக்கின்றன. பொருளாதார நிபுணர் ராஜா செல்லையா பிரபலமாகக் கூறியது போல, அனைவரும் அதிகாரப் பரவலாக்கத்தை விரும்புகிறார்கள். ஆனால், அது உயர் மட்டத்திற்கு மட்டுமே.


இந்தியா மேலும் நகரமயமாகிவரும் வேளையில், அதன் நகரங்களில் உள்ள பிரச்சனைகள், புத்தாக்கம் மற்றும் பொருளாதார வளர்ச்சியின் ஒரு முக்கிய தடையாக இருக்கின்றன. சீனாவின் வளர்ச்சியை அதிகரிப்பதில் தொழில்துறைக் கொள்கைகளின் பங்கு குறித்த விவாதங்கள், சீனாவில் பெரும்பாலான தொழில்துறைக் கொள்கைகள் தேசிய அல்லது மாகாணத் தலைநகரங்களில் உள்ள அதிகாரிகளால் அல்லாமல், அதன் நகரங்களாலேயே வகுக்கப்பட்டுச் செயல்படுத்தப்படுகின்றன என்ற உண்மையை மறைக்கின்றன. சீனாவில் நகரங்களுக்கு இடையேயான கடுமையான போட்டியானது, நிறுவனங்களுக்கு இடையேயான கடுமையான போட்டியை வலுப்படுத்தி, அந்நாட்டின் அசாதாரணமான ஆற்றலுக்கு உந்துதலாக அமைகிறது.





இந்தியாவில், போட்டியின்மை வளர்ச்சிக்கு ஒரு தடையாகச் செயல்படுகிறது, இருப்பினும் சில மாற்றங்கள் மெதுவாகத் தொடங்குகின்றன. புது தில்லி அபாயகரமான அளவில் மாசுபடுவதாலும், பெங்களூரு கடுமையான நெரிசலுக்கு உள்ளாவதாலும், மக்களும் முதலீட்டாளர்களும் வாழ்வதற்கும் முதலீடு செய்வதற்கும் மற்ற இடங்களைத் தேடத் தொடங்குவார்கள். புவனேஸ்வர், கோயம்புத்தூர், இந்தூர், கொச்சி, மொஹாலி, சூரத் போன்ற இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்களின் வளர்ச்சி ஊக்கமளிப்பதாக இருந்தாலும், இந்த நகரங்களுக்கு வலுவான ஆதரவு தேவை.


போட்டி கூட்டாட்சி முறையால் மட்டுமல்லாமல், போட்டி நிறைந்த துணைக் கூட்டாட்சி முறைகளாலும் கட்டவிழ்த்து விடப்படும் இயக்கத்தின், மாற்றத்திற்கான ஒரு நம்பிக்கைக்குரிய சக்தியாக உருவெடுக்கக்கூடும். நகர்ப்புற மக்கள்தொகையின் அதிகரித்து வரும் முக்கியத்துவமும் மற்றொரு உந்து சக்தியாக உருவாகலாம். இது புதிய மக்கள்தொகைக் கணக்கெடுப்பில் வெளிப்படும் அதே வேளையில், அதன் விளைவாக ஏற்படும் மாநிலங்களுக்கு இடையேயான தொகுதி வரையறையானது நகர்ப்புற வாக்காளர்களுக்கு அதிக முக்கியத்துவத்தை வழங்கும்.


எவ்வாறாயினும், இந்தியக் கூட்டாட்சி குறித்த விவாதங்கள் இனி மத்திய அரசுக்கும் மாநிலங்களுக்கும் இடையிலான உறவுகளில் மட்டும் கவனம் செலுத்த முடியாது. இந்த விவாதங்களில், நகரங்களுக்கு அதிகாரம் அளிப்பதன் அவசியத்தையும், நகர நிர்வாகத்தை மேலும் பொறுப்புணர்வுச் செய்வதையும் உள்ளடக்க வேண்டும். பல பத்தாண்டுகளாக டெல்லி ஒரு திறந்தவெளி விஷவாயு அறையாகவே இருந்துவருவது. கூட்டாட்சி குறித்த விவாதங்களில் நகரங்கள் இடம்பெறவில்லை என்பதற்கான ஓர் நினைவூட்டலாகவும் குற்றச்சாட்டாகவும் விளங்குகிறது.


கூட்டாட்சி முறை குறித்த விவாதத்தைச் சார்ந்த இரண்டு கட்டுரைகளில் இது இரண்டாவது ஆகும். இது, ஆசிரியர்களின் சமீபத்திய நூலான ‘மனிதகுலத்தின் ஆறில் ஒரு பங்கு: சுதந்திர இந்தியாவின் வளர்ச்சிப் பயணம்’ (A Sixth of Humanity: Independent India’s Development Odyssey) என்ற நூலையும், குறிப்பாக அதன் பதினான்காம் அத்தியாயத்தையும் அடிப்படையாகக் கொண்டுள்ளது. இதன் முதல் பகுதியை குறிப்பிடுகிறது.


தேவேஷ் கபூர் ஒரு அரசியல் அறிவியலாளர் ஆவார். வாஷிங்டன் டி.சி.-யில் அமைந்துள்ள ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் மேம்பட்ட சர்வதேச ஆய்வுகள் பள்ளியில், இவர் தெற்காசிய ஆய்வுகளுக்கான 'ஸ்டார் அறக்கட்டளைப் பேராசிரியராக'ப் பணியாற்றுகிறார்.


அரவிந்த் சுப்பிரமணியன் ஓர் இந்தியப் பொருளாதார அறிவியலாளர் ஆவார். இவர் 2014 முதல் 2018 வரை இந்திய அரசாங்கத்தின் தலைமைப் பொருளாதார ஆலோசகராகப் பணியாற்றினார். தற்போது, ​​வாஷிங்டன் டி.சி.-யில் உள்ள 'பீட்டர்சன் சர்வதேசப் பொருளாதார நிறுவனத்தில்' இவர் ஒரு மூத்த ஆய்வாளராக உள்ளார்.


Original Link: How empowering India’s local governments can kickstart innovation and growth.

Share: