ஒரு புதிய அரசு மானியத் திட்டம், உலகளவில் போட்டியிடக்கூடிய ஒரு இந்திய திறன்பேசி வணிக நிறுவனத்தை உருவாக்குவதை எவ்வாறு நோக்கமாகக் கொண்டுள்ளது? -சௌம்யரேந்திர பாரிக்

இந்தியாவிற்கென ஒரு சொந்த திறன்பேசி வணிக நிறுவனத்தை உருவாக்குவதற்கான இந்த முயற்சி, மின்னணுத் துறையில் வெறும் தொழிற்சாலைகளை ஈர்ப்பது மற்றும் பாகங்களை ஒன்றுசேர்க்கும் பணிகளை அதிகரிப்பது ஆகியவற்றைத் தாண்டி, ஒன்றிய அரசின் லட்சியம் அடுத்த கட்டத்திற்கு நகர்வதைக் காட்டுகிறது.


இந்தியாவில் விற்கப்படும் ஏறக்குறைய அனைத்து திறன்பேசிகளுமே இங்கேயேதான் தயாரிக்கப்படுகின்றன. ஆனால், அந்தத் திறன்பேசிகளில் இருக்கும் நிறுவனங்களின் பெயர்களைப் பார்க்கும்போது, இந்திய நிறுவனங்களின் பெயர்கள் மட்டும் எங்குமே காணப்படுவதில்லை. மத்திய அமைச்சரவை புதன்கிழமை அன்று ஒப்புதல் அளித்த புதிய 62,500 கோடி ரூபாய் மதிப்பிலான திறன்பேசிகள் தயாரிப்புத் திட்டம், இந்த நிலையை மாற்றியமைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


திறன்பேசி பாகங்களை ஒருங்கிணைப்பதற்காக கொண்டுவரப்பட்ட உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகைத் (Production Linked Incentive (PLI)) திட்டத்தின் தொடர்ச்சியாக, அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கான புதிய திட்டம் ஒன்றை அரசு செயல்படுத்த உள்ளது. இந்தியாவில் திறன்பேசி உற்பத்தியை வெற்றிகரமாக உள்நாட்டிலேயே உருவாக்க இந்த உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகைத் (PLI) திட்டம் உதவியது. இந்த புதிய திட்டத்தின்கீழ், உள்நாட்டு மதிப்புக் கூட்டலை அதிகரிப்பதற்காகத் தேவையான உதிரிபாகங்களை இந்தியாவிலேயே வாங்குவதிலும், இந்திய வணிக முத்திரை வடிவமைப்பு மற்றும் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பணிகளிலும் அரசு கவனம் செலுத்துகிறது. அத்துடன் திறன்பேசி ஏற்றுமதியுடன் இணைக்கப்பட்ட ஊக்கத்தொகைகளும் இதில் வழங்கப்படும் என்று மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.


இந்திய திறன்பேசி வணிக முத்திரைகளை உருவாக்குவதற்காக, இந்தத் திட்டத்தின்கீழ் தயாரிப்பின் வடிவமைப்பு மற்றும் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்ளும் தகுதியுடைய விற்பனைக்கு கூடுதலாக 3 விழுக்காடு ஊக்கத்தொகை வழங்கப்படும்.


இந்திய திறன்பேசி வணிக முத்திரையை உருவாக்குவதற்கான இந்த முயற்சி, மின்னணுத் துறையில் வெறும் தொழிற்சாலைகளை ஈர்ப்பது மற்றும் பாகங்கள் ஒருங்கிணைப்பை அதிகரிப்பது ஆகியவற்றைத் தாண்டி அரசாங்கத்தின் லட்சியம் நகர்வதைக் காட்டுகிறது. இந்தியாவை ஒரு முக்கிய உற்பத்தித் தளமாக ஏற்கனவே நிலைநிறுத்தியுள்ள ஒன்றிய அரசு, இப்போது இந்திய நிறுவனங்கள் இந்த உற்பத்திச் சங்கிலியின் இன்னும் ஆழமான பகுதிகளுக்குச் செல்ல வேண்டும் என்று விரும்புகிறது. அதாவது, தயாரிப்பு வடிவமைப்பு, ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, அறிவுசார் சொத்துரிமை, உதிரிபாகங்களுக்கான சுற்றுச்சூழல் அமைப்பு மற்றும் வணிக முத்திரை உரிமையாளராக மாறுவது ஆகியவற்றை நோக்கி நகர வேண்டும் என அரசு விரும்புகிறது.


இது ஒரு நீண்டகாலத் திட்டமாக இருந்தாலும், ஒரு இந்திய திறன்பேசி வணிக முத்திரையை (Smartphone brand) முன்னெடுத்துச் செல்வதற்காக அரசாங்கம் முக்கியமாக எதற்கு மானியம் வழங்க விரும்புகிறது என்றால், ஏற்கனவே சந்தையில் தடம் பதித்துள்ள சீன நிறுவனங்களுக்கு எதிராக ஆரம்பக்கட்டத்தில் இந்திய நிறுவனங்களுக்கு ஏற்படும் கூடுதல் உற்பத்திச் செலவுச் சுமையை குறைப்பதற்காகத்தான்.


"தரம் மற்றும் விலையில் மற்ற நிறுவனங்களுடன் போட்டியிடக்கூடிய வகையில், ஒரு திறன்பேசி வணிக நிறுவனத்தை உருவாக்க நான்கு அல்லது ஐந்து இந்திய நிறுவனங்கள் ஆர்வம் காட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், ஆரம்பத்தில் அவர்களுக்கு 10 முதல் 15 விழுக்காடு வரை கூடுதல் உற்பத்திச் செலவுச் சுமை இருக்கக்கூடும். எனவே, கொண்டுவரப்படவுள்ள புதிய திட்டத்தின் மூலம் அதில் குறைந்தபட்சம் 5 முதல் 6 விழுக்காடு வரையிலான சுமையைக் குறைக்க அரசாங்கம் ஆலோசித்து வருகிறது" என்று ஒரு உயர்அதிகாரி தெரிவித்தார்.


ஏன் ஒரு இந்திய திறன்பேசி வணிக நிறுவனம் உருவாக்கப்பட வேண்டும்?

ஒரு இந்திய திறன்பேசி வணிக நிறுவனம் உருவாக்குவதற்கான இந்த முயற்சி, இந்தியாவின் மின்னணு உற்பத்தித் துறையில் உள்ள ஒரு பெரிய இடைவெளியை அடிப்படையாகக் கொண்டது. திறன்பேசிகளைப் பெரிய அளவில் உற்பத்தி செய்ய உலகளாவிய நிறுவனங்களை ஈர்ப்பதில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது. ஆனால், தயாரிப்பு வடிவமைப்பு, அறிவுசார் சொத்துரிமை, வணிக முத்திரை மற்றும் தொழில்நுட்பம் என இந்தத் துறையின் மூலம் உருவாக்கப்படும் பெரும்பாலான மதிப்பு, வெளிநாடுகளைத் தலைமையிடமாகக் கொண்ட நிறுவனங்களுக்கே சொந்தமாக உள்ளது. ‘Tata Electronics’ மற்றும் ‘Dixon’ போன்ற இந்திய நிறுவனங்கள் ஒப்பந்த உற்பத்தித் துறையில் தங்களை நிலைநிறுத்தி வந்தாலும், இந்த நிலை நீடிக்கிறது.

இந்திய வணிக நிறுவனத்திற்கு ஆதரவளிப்பதன் மூலம் இந்த இடைவெளியை நேரடியாகக் களைவதே அரசாங்கத்தின் புதிய திறன்பேசி தயாரிப்புத் திட்டத்தின் நோக்கமாகும். தொழில்நுட்ப இறையாண்மையை அடைவது, இத்துறையின் மூலம் உருவாக்கப்படும் பொருளாதார மதிப்பில் பெரும் பங்கைக் கைப்பற்றுவது மற்றும் வடிவமைப்பு, ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு ஆகியவற்றில் இந்தியக் காப்புரிமைகளை உருவாக்குவது ஆகியவற்றை முக்கியக் குறிக்கோள்களாகக் கொண்டுள்ளது.

இது மிகவும் முக்கியமான ஒன்றாகும்; ஏனெனில், வெறும் உற்பத்தியை மட்டும் செய்வதால் ஒரு துறையின் முழுமையான கட்டுப்பாடு நமக்குக் கிடைத்துவிடாது. இந்தியாவில் பாகங்கள் ஒன்றிணைக்கப்படும் ஒரு திறன்பேசி, வேறொரு நாட்டில் வடிவமைக்கப்பட்டதாக இருக்கலாம், வெளிநாட்டுக்குச் சொந்தமான அறிவுசார் சொத்துரிமையைப் பயன்படுத்துவதாக இருக்கலாம் மற்றும் வெளிநாட்டு வணிக முத்திரையின்கீழ் விற்கப்படுவதாகவும் இருக்கலாம். இப்போது, இந்திய நிறுவனங்கள் இந்த மதிப்புச் சங்கிலியில் அடுத்த கட்டத்திற்கு முன்னேற வேண்டும் என்று அரசாங்கம் விரும்புகிறது. ஐந்து ஆண்டுகளில் ₹62,500 கோடி மதிப்பீட்டைக் கொண்டுள்ள இத்திட்டம், உள்நாட்டு மதிப்புச் சேர்க்கையை ஆழப்படுத்தவும், விநியோகச் சங்கிலிகளை வலுப்படுத்தவும் மற்றும் உலகளாவிய போட்டித்திறனை மேம்படுத்தவும் திட்டமிட்டுள்ளது. அதேநேரத்தில் தகுதியான விற்பனைக்கு ஊக்கத்தொகையையும் வழங்குகிறது.

இந்தக் கொள்கையானது, இந்தியாவின் திறன்பேசி உற்பத்தி ஊக்கத்தின் மறைமுகக் குறைபாடுகளைப் பிரதிபலிக்கிறது. உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகைத் திட்டங்கள் (PLI) ‘Apple’ போன்ற உலகளாவிய உற்பத்தியாளர்களை ஈர்க்கவும், திறன்பேசிகளைத் தயாரிப்பதற்கான இந்தியாவின் திறனை விரிவுபடுத்தவும் உதவின. இதன் விளைவாக நாடு ஒரு முக்கிய உற்பத்தி மற்றும் ஏற்றுமதி தளமாக உருவெடுத்தது. ஆனால், இந்தியா இன்னும் அவற்றுக்கு இணையான அளவிலும் உலகளாவியரீதியிலும் பெரிய அளவிலான ஒரு திறன்பேசி வணிக முத்திரையை உருவாக்கவில்லை. புதிய திட்டம் அந்த இடைவெளியை நிரப்புவதற்கான ஒரு முயற்சியாகும்; அதாவது, வளர்ச்சியின் அடுத்த கட்டம் என்பது இந்தியாவில் அதிக திறன்பேசிகள் தயாரிக்கப்படுவதை மட்டும் பற்றியதாக இல்லாமல், அந்த திறன்பேசிகளுக்குப் பின்னால் உள்ள வடிவமைப்பு, தொழில்நுட்பம் மற்றும் வணிக முத்திரை ஆகியவற்றை இந்திய நிறுவனங்கள் சொந்தமாகக் கொண்டிருப்பதை உறுதி செய்வதாகும்.

"உள்நாட்டு மதிப்பு கூட்டல், திறன்பேசி பாகங்களை உள்நாட்டிலேயே பெறுதல், வடிவமைப்பு சார்ந்த உற்பத்தி மற்றும் இந்திய வணிக முத்திரை ஆகியவற்றின்மீது இந்தத் திட்டம் செலுத்தும் தீவிர கவனம், மின்னணு சுற்றுச்சூழல் அமைப்பை ஆழப்படுத்தும்; விநியோகச் சங்கிலியின் நெகிழ்வுத்தன்மையை வலுப்படுத்தும் மற்றும் ஏற்றுமதிப் போட்டியை அதிகரிக்கும். இது புதிய முதலீடுகளை ஈர்க்கவும், உள்நாட்டுத் தொழில்நுட்ப வளர்ச்சியை வளர்க்கவும், மேம்பட்ட திறன்பேசி தயாரிப்பில் உலக அளவில் இந்தியா ஒரு விருப்பமான இடமாக மாறுவதற்கும் தேவையான நீண்டகாலக் கொள்கை உறுதியை வழங்குகிறது," என்று ‘Optiemus Electronics Limited’ நிறுவனத்தின் தலைவர் அசோக் குப்தா கூறினார்.

சீன நிறுவனங்கள் இந்திய திறன்பேசி நிறுவனங்களை எவ்வாறு வீழ்த்தின?

இந்த அதிரடி முன்னேற்றம், இந்தியாவின் மிக வேகமாக வளர்ந்துவரும் திறன்பேசி சந்தையைப் பயன்படுத்திக் கொள்வதில் முந்தைய தலைமுறை இந்திய அடைந்த தோல்வியையும் காட்டுகிறது. ‘Micromax’, ‘Karbonn’ மற்றும் ‘Lava’ போன்ற நிறுவனங்கள் சாதாரண கைப்பேசிகள் மற்றும் குறைந்த விலை கைப்பேசி சந்தையில் தங்களை வலுவாக நிலைநிறுத்தியிருந்தன. ஆனால், கைப்பேசி சந்தையானது தொழில்நுட்பரீதியாக அதிகத் தேவைகளைக் கொண்டதாக மாறியபோது, அதற்கு ஏற்றவாறு திறன்பேசி தயாரிப்புக்கு மாறுவதில் இந்த நிறுவனங்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டன.

Indian smartphones market share

இதற்கிடையில், சீன நிறுவனங்கள் குறைந்த விலை நிர்ணயம், அடிக்கடி புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்துதல், அதிரடி விளம்பரங்கள் மற்றும் மிக வேகமாக விரிவடைந்த விநியோகக் கட்டமைப்பு ஆகியவற்றின் கூட்டணியோடு இந்தியாவிற்குள் நுழைந்தன. ‘Xiaomi’, ‘Vivo’, ‘Oppo’ மற்றும் ‘Realme’ போன்ற நிறுவனங்களால், சில்லறை விற்பனைக் கட்டமைப்பு, விற்பனைக்குப் பிந்தைய சேவை மற்றும் வணிக முத்திரை மதிப்பு ஆகியவற்றில் பெரும் முதலீடு செய்ய முடிந்தது. அதேநேரத்தில் போட்டி நிறுவனங்களுக்கு இணையாகக் குறைந்த விலையில் சிறந்த தொழில்நுட்பக் சிறப்பம்சங்களையும் அவர்களால் வழங்க முடிந்தது. இது ஆரம்பத்தில் அவர்களுக்கு இருந்த குறைந்த விலை என்பதைத் தாண்டி, சந்தையின் பல்வேறு பிரிவுகளிலும் தங்களது வலுவான ஆதிக்கத்தை நிலைநிறுத்த உதவியது.

இதன் முடிவு இன்றும் தெளிவாகத் தெரிகிறது. 2026-ஆம் ஆண்டின் முதல் காலாண்டில், ‘Samsung’ நிறுவனத்தைத் தவிர்த்து, இந்தியாவின் திறன்பேசி சந்தையை சீன நிறுவனங்களே பெருமளவில் ஆக்கிரமித்திருந்தன. சந்தை நிலவரங்களை ஆய்வு செய்யும் 'கவுண்டர்பாயிண்ட் ரிசர்ச்' (Counterpoint Research) நிறுவனத்தின் தரவுகளின்படி, ‘Vivo’ நிறுவனம் 21 விழுக்காடு சந்தைப் பங்களிப்புடன் இந்திய திறன்பேசி சந்தையில் முதலிடத்தில் உள்ளது. அதனைத் தொடர்ந்து ‘Samsung’ மற்றும் ‘Oppo’ ஆகிய இரு நிறுவனங்களும் தலா 17 விழுக்காடு சந்தைப் பங்கைக் கொண்டுள்ளன. முதல் ஐந்து இடங்களின் கடைசிப் பகுதிகளில் ‘Xiaomi’ மற்றும் ‘Realme’ நிறுவனங்கள் முறையே 12 விழுக்காடு மற்றும் 9 விழுக்காடு சந்தைப் பங்குகளைக் கொண்டுள்ளன.


Original Link: How a new govt subsidy plan hopes to create a competitive Indian smartphone brand.

Share: