Showing posts with label Citizenship Amendment Rules. Show all posts
Showing posts with label Citizenship Amendment Rules. Show all posts

'விமானத்தில் பிறக்கும் குழந்தைகள்', தேசப் பிரிவினை: குடியுரிமை குறித்து அரசியல் நிர்ணய சபை எவ்வாறு விவாதித்தது? -ஜதின் ஆனந்த்

அரசியலமைப்பு நிர்ணய சபையில் குடியுரிமை பற்றிய விவாதம் நடந்தபோது, மதம், பிறப்பு மற்றும் நாட்டின் பிரிவினை தொடர்பான பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. அதேவேளையில், மதச்சார்பற்ற மற்றும் நிலப்பரப்பை அடிப்படையாகக் கொண்ட குடியுரிமைக் கோட்பாடும் முன்வைக்கப்பட்டு, இறுதியாக அதுவே அரசியலமைப்பில் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதுகுறித்து தெரிந்துகொள்ள வேண்டிய விவரங்கள் பின்வருமாறு:


1949-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில், இந்திய அரசியலமைப்பு வரைவின் குடியுரிமை தொடர்பான விதிகள் குறித்து அரசியலமைப்பு நிர்ணய சபையில் விவாதிக்கப்பட்டபோது, அரசியலமைப்பு வரைவின் பிரிவு-5 தான் வரைவுக் குழுவிற்கு "மற்ற அனைத்து விதிகளையும்விட அதிக தலைவலியைக் கொடுத்தது" என்று பி.ஆர்.அம்பேத்கர் கூறினார். இந்த விதியின்மீது சுமார் 140 திருத்தங்கள் முன்மொழியப்பட்டதால், அவை ஒரு "அடர்ந்த காட்டைப் போல சிக்கலாக உள்ளன" என்று ராஜேந்திர பிரசாத் விவரித்தார்.


இறுதியில் அம்பேத்கரின் வரைவு ஏற்றுக்கொள்ளப்பட்ட போதிலும், இந்த விவாதம் இந்தியக் குடியுரிமையின் உண்மையான அர்த்தம் குறித்து உறுப்பினர்களிடையே இருந்த கருத்து வேறுபாடுகளை வெளிப்படுத்தியது. சில உறுப்பினர்கள் குடியுரிமையானது மதத்தின் அடிப்படையில் அமைய வேண்டும் என்று விரும்பினர். வேறு சிலரோ பிறந்த இடத்திற்குப் பதிலாக ஒருவரது வம்சாவளியின் (Ancestry) அடிப்படையிலேயே குடியுரிமை தீர்மானிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினர். இந்தியப் பிரிவினையால் பாதிக்கப்பட்ட அகதிகளுக்கு அதிக பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும் என்று சிலர் வலியுறுத்தினர். அதேநேரத்தில், அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ரோஹிணி குமார் சௌத்ரி, அந்த மாநிலத்திற்குள் மக்கள் இடம்பெயர்வதைக் கட்டுப்படுத்த கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று வாதிட்டார். இறுதியில், இந்த பல்வேறுபட்ட மற்றும் முரண்பட்ட கருத்துக்களில் ஒரே ஒரு அணுகுமுறையை மட்டுமே நமது அரசியலமைப்பு ஏற்றுக்கொண்டது.



குடியுரிமை தானாக வழங்கப்படக்கூடாது, அது கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும்’


மத்திய மாகாணங்கள் மற்றும் பேரார் பகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்திய பஞ்சாப் ராவ் ஷாம்ராவ் தேஷ்முக், குடியுரிமை பற்றிய சட்டப்பிரிவை "முழு அரசியலமைப்பிலேயே மிகக் துரதிர்ஷ்டவசமான பிரிவு" என்று வர்ணித்தார். அம்பேத்கர் முன்மொழிந்த இந்த வரைவு இலக்கணம், இந்தியக் குடியுரிமையை உலகிலேயே மிக மலிவான ஒன்றாக மாற்றிவிடும் என்று அவர் வாதிட்டார்.


மேலும், "இந்தியாவுக்கு மனிதர்களின் குணாதிசயங்களைப் பற்றியோ அல்லது நாட்டின் நலன்களைப் பற்றியோ கவலைப்படாமல், இன்னும் கூடுதல் மனிதர்கள் தேவைப்படும் ஒரு சிறிய நாடாக இருந்திருந்தால், இத்தகைய கொள்கையை என்னால் புரிந்து கொள்ள முடிந்திருக்கும். ஆனால், இந்தியாவிலோ ஏற்கனவே மிக அதிக மக்கள்தொகை உள்ளது. இத்தகைய சூழ்நிலையில், இந்தியக் குடியுரிமையைப் பெறுவதை நாம் ஏன் இந்த அளவிற்கு எளிதாக்குகிறோம்?" என்று கேள்வி எழுப்பினார்.


குடியுரிமை பெறுவதை மேலும் கடினமானதாக மாற்ற வேண்டும் என்று தேஷ்முக் வாதிட்டார். இந்தியப் பெற்றோருக்குப் பிறந்தவர்கள் அல்லது சட்டப்படி இயல்பான குடியுரிமை பெற்றவர்களுக்கு மட்டுமே இந்தியக் குடியுரிமை வழங்கப்பட வேண்டும் என்று முன்மொழிந்தார். மேலும், வேறு எந்த நாட்டின் குடியுரிமையையும் பெறாத "இந்துக்கள் அல்லது சீக்கியர்கள்" இந்தியக் குடியுரிமை பெறத் தகுதியுடையவர்களாக இருக்க வேண்டும் என்றும் விரும்பினார். ஏனெனில், அவர்கள் தஞ்சமடைய வேறு எந்த நாடும் இல்லை என்பதையும் அவர் குறிபிட்டார்.


இந்தியாவில் ஐந்து ஆண்டுகள் வசிப்பது மட்டுமே ஒருவருக்குத் தானாகவே குடியுரிமையைப் பெற்றுத் தந்துவிடக்கூடாது என்றும் அவர் தொடர்ந்து வலியுறுத்தினார். அதற்குப் பதிலாக, சட்டப்பூர்வமாக இயல்பான குடியுரிமை பெற்றவர்கள் மட்டுமே இந்தியக் குடிமக்களாக அங்கீகரிக்கப்பட வேண்டும் என்று கூறினார்.


பிறப்பிடமா அல்லது பெற்றோர் வழி உறவா?


இந்தியாவில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும், அக்குழந்தைக்கு பெற்றோரின் குடியுரிமையோடு எந்தத் தொடர்பும் இல்லாவிட்டாலும்கூட, இந்தியக் குடியுரிமை வழங்குவதை தேஷ்முக் எதிர்த்தார். இதற்கு உதாரணமாக, வெளிநாட்டுத் தம்பதி பயணிக்கும் விமானம் மும்பையில் சில மணிநேரங்கள் மட்டும் நிற்பதாக வைத்துக்கொள்வோம், அப்படியிருக்கும் போது, அந்தப் பெண் அங்கு ஒரு குழந்தையைப் பெற்றெடுத்தால், பெற்றோரின் குடியுரிமையைப் பொருட்படுத்தாமல் அக்குழந்தை தானாகவே இந்தியக் குடிமகனாகிவிடும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.


மேற்குவங்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்திய நசீருதீன் அகமது இந்தக்  கருத்தை ஏற்றுக்கொண்டார். குடியுரிமை என்பது வெறும் பிறந்த இடத்தை மட்டும் அடிப்படையாகக் கொண்டு வழங்கப்படாமல், பெற்றோரின் குடியுரிமையை அடிப்படையாகக் கொண்டே வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார். இது மிகவும் சிக்கலான ஒரு விவகாரம் என்பதால், இதனை இவ்வளவு எளிமையான முறையில் தீர்மானித்திருக்கக் கூடாது என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.


மேலும், இதுபோன்ற குழந்தையை இந்தியாவின் குடிமகன் என்றும், அந்தக் குழந்தையின் தாயின் நாட்டின் குடிமகன் என்றும், தந்தையின் நாட்டின் குடிமகன் என்றும் ஒரே நேரத்தில் உரிமைகோர முடியும்; இது பெரிய குழப்பத்தை ஏற்படுத்தும் என்றும் அகமது தெரிவித்தார்.


இந்தியாவில் பிறந்த காரணத்திற்காக இந்தியா அந்தக் குழந்தைக்குக் குடியுரிமை கோரும் என்றும், அதேவேளையில் தாயின் நாடு மற்றும் தந்தையின் நாடு ஆகிய இரண்டும் தங்களது தேசியக் குடியுரிமையின் அடிப்படையில் அந்தக் குழந்தைக்குக் குடியுரிமை கோரக்கூடும் என்றும் கூறினார். இதன் விளைவாக, அந்தக் குழந்தையின் குடியுரிமைக்காக இந்த மூன்று நாடுகளுமே ஒன்றோடொன்று போட்டியிடும் நிலை ஏற்படக்கூடும் என்றும் தெரிவித்தார்.


ஜனவரி மாதம் 26-ஆம் தேதி 1950-ஆம் ஆண்டுக்குப் பிறகான அரசியலமைப்புச் சட்ட இடைவெளி 


பெரும்பாலான விமர்சகர்களைப் போல அல்லாமல், ஐக்கிய மாகாணத்தைப் பிரதிநிதித்துவப்படுத்திய ஜஸ்பத் ராய் கபூர், கொள்கை சார்ந்த கேள்விக்கு பதிலாக நடைமுறை சார்ந்த ஒரு கவலையை எழுப்பினார். இந்திய அரசியலமைப்புச் சட்டம், 26-ஆம் தேதி ஜனவரி மாதம் 1950-ஆம் ஆண்டு வரையிலான குடியுரிமையை மட்டுமே வரையறுத்துள்ளது என்றும்; அந்தத் தேதிக்குப் பிறகு பிறப்பவர்கள் எவ்வாறு குடியுரிமையைப் பெறுவார்கள் என்பதை விளக்கவில்லை என்றும் சுட்டிக்காட்டினார்.


எனவே, 26-ஆம் தேதி ஜனவரி மாதம் 1950-ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்தியாவில் இந்தியப் பெற்றோருக்குப் பிறக்கும் குழந்தைகளையும் இதில் சேர்ப்பதற்காக, அரசியலமைப்பின் பிரிவு 5-ல் திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று அவர் முன்மொழிந்தார்.


“இந்தியாவிலிருந்து பாகிஸ்தானுக்குத் தனது விசுவாசத்தை மாற்றிக்கொண்ட” எவருக்கும் குடியுரிமை வழங்குவதையும் கபூர் எதிர்த்தார். அத்தகைய இடம்பெயர்வு "முழுமையான மற்றும் உறுதியான ஒன்றாகும்" என்றும், அது இந்தியக் குடியுரிமைக்கான அவர்களின் உரிமையை இல்லாமல் செய்துவிடும் என்றும் அவர் வாதிட்டார்.

பிரிவினை அகதிகளுக்கும் பரந்த அளவிலான பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும்


கிழக்கு பஞ்சாப்பைப் பிரதிநிதித்துவப்படுத்திய பூபிந்தர் சிங் மான், இந்தியப் பிரிவினையால் இடம்பெயர்ந்த அகதிகளைப் பாதுகாப்பதில் அரசியலமைப்பு வரைவு போதுமானதாக இல்லை என்று வாதிட்டார். மேலும், அரசியலமைப்பின் இந்த அணுகுமுறையை "ஒரு பலவீனமான வகை மதச்சார்பின்மை… மற்றும் நியாயமற்ற ஒருதலைப்பட்சமான செயல்" என்றும் அவர் விமர்சித்தார்.


பாகிஸ்தானில் நடந்த மதக்கலவரங்களில் இருந்து தப்பித்து ஓடிவந்து, இந்திய அரசியலமைப்பு அமலுக்கு வந்தபோது இந்தியாவில் இருந்த மக்களுக்கு, அவர்கள் எவ்விதப் பதிவும் செய்யாமலோ அல்லது 6 மாதங்கள் இந்தியாவில் வசித்ததாக நிரூபிக்காமலோ, தானாகவே குடியுரிமை வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.


1948-ஆம் ஆண்டு ஜூலை மாதம் 19-ஆம் தேதியை, எல்லை நிர்ணய நாளாக மாற்றியமைத்ததையும் பூபிந்தர் சிங் மான் கேள்வி எழுப்பினார். "துரதிர்ஷ்டவசமான இந்த அகதிகள் இந்தக் குறிப்பிட்ட தேதியை முன்னரே கணித்திருக்க முடியாது; அப்படித் தெரிந்திருந்தால், அவர்கள் பாகிஸ்தானின் கத்தியால் தங்களை முன்னதாகவே காயப்படுத்திக் கொள்ள அனுமதித்திருப்பார்கள்... ஜூலை மாதம் 19-ஆம் தேதி, 1948-ஆம் ஆண்டுக்குப் பிறகு பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்திய எல்லைகளை மூடுவது மிகவும் கொடூரமான செயல்” என்றும் அவர் வாதிட்டார்.


குடியுரிமை என்பது ஒரு மதச்சார்பற்ற, பிராந்திய ஒப்பந்தமாகும்


பிரிவினைக்குப் பிறகு பல மாதங்கள் நடத்தப்பட்ட தீவிர ஆலோசனைகளுக்குப் பிறகே இந்த வரைவு சட்டமுன்வரைவு உருவாக்கப்பட்டது என்று கூறி பிரதமர் ஜவஹர்லால் நேரு இதற்கு ஆதரவாகப் பேசினார். எந்தவொரு குடியுரிமைச் சட்டமும், நீதியை நிலைநாட்டும் அதேவேளையில் ஏற்படக்கூடிய அனைத்துச் சூழ்நிலைகளையும் முழுமையாக உள்ளடக்கிவிட முடியாது என்று வாதிட்டார். பிரிவினைப் பிரச்சனை மற்றும் வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களின் நிலை ஆகிய இரண்டையும் கையாள வேண்டியிருந்ததால், "அரசியலமைப்பின் மற்ற எந்தப் பகுதியையும்விட இந்தக் குடியுரிமை விதிகளுக்குத்தான் அதிக யோசனையும் தீவிரப் பரிசீலனையும் வழங்கப்பட்டுள்ளது" என்று அவர் கூறினார்.


இது "திருப்திப்படுத்தும் அரசியல்" என்ற குற்றச்சாட்டுகளை நிராகரித்த நேரு, குடியுரிமை என்பது மதம் அல்லது அரசியல் லாபங்களின் அடிப்படையில் அமையாமல், நீதி மற்றும் நியாயத்தின் அடிப்படையில் மட்டுமே அமைய வேண்டும் என்றார்.


"திருப்திப்படுத்தும் அரசியல் பற்றிப் பேசும் மதிப்பிற்குரிய நாடாளுமன்ற உறுப்பினர்கள், நீதிக்கும் சமத்துவத்திற்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லாத சில விதிகளைப் பயன்படுத்த வேண்டும் என்று நினைக்கிறார்களா?... ஒவ்வொரு தனிநபருக்கும் அல்லது குழுவிற்கும் நீதி என்று எதனைக் கருதுகிறதோ, அதிலிருந்து இந்த அரசாங்கம் ஒரு முடி இழையளவு கூட விலகிச் செல்லாது." என்றும் நேரு தெரிவித்தார். 


அம்பேத்கரின் கருத்தை ஆதரித்து, மதராஸ் மாகாணத்தைச் சேர்ந்த அல்லாடி கிருஷ்ணசுவாமி அய்யர், இந்தியாவின் குடியுரிமை விதிகள் அமெரிக்க நாட்டின் குடியுரிமை விதிகளைவிட ஏற்கனவே மிகவும் கடுமையானவையாகவே உள்ளன என்று வாதிட்டார். இந்தியாவில் பிறந்தார் என்ற ஒரே காரணம் மட்டும் போதுமானது அல்ல; ஒருவர் இந்நாட்டில் நிரந்தரமாக வசிப்பவராகவும் இருக்க வேண்டும் என்றும் சுட்டிக்காட்டினார்.


மேலும், அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 5A-ஐ ஆதரித்துப் பேசிய அவர், அது எந்தவொரு மத சமூகத்திற்கும் இடையே பாகுபாடு காட்டவில்லை என்றும், மாறாக, அது பிரிவினையின்போது நிலவிய சூழல்களைக் கையாளவே செய்யப்பட்டது என்றும், மத அடிப்படையில் குடியுரிமையை வழங்கவில்லை என்றும் விளக்கினார். அகதிகள் இந்தியாவையே தங்களது நிரந்தர நாடாக மாற்றிக் கொள்ள விரும்புகிறார்கள் என்பதை உறுதிப்படுத்திய பின்னரே அரசு அவர்களைக் குடியேற அனுமதித்ததால், அவர்களுக்குக் குடியுரிமையை மறுப்பது "மிகப்பெரிய அநீதியாக" அமையும் என்றும் வாதிட்டார்.



முன்மொழியப்பட்ட அனைத்துத் திருத்தங்களையும் ஒவ்வொன்றாக நிராகரித்து, அரசியலமைப்பு நிர்ணய சபையானது அம்பேத்கரின் வரைவை ஏற்றுக்கொண்டது. இதன் மூலம், அரசியலமைப்பு நடைமுறைக்கு வந்த காலத்தில், அது ஒரு மதச்சார்பற்ற மற்றும் நிலப்பரப்பு சார்ந்த குடியுரிமைக் கோட்பாட்டை ஏற்றுக்கொண்டது. அதேவேளையில், குடியுரிமைக்கான நிரந்தரச் சட்டத்தைப் பின்னர் நாடாளுமன்றமே உருவாக்கிக்கொள்ளலாம் என்றும் அனுமதித்தது.


Original Link: Babies born in planes’, Partition: How Constituent Assembly debated citizenship.

Share:

உச்சநீதிமன்றத் தீர்ப்பிற்கு நீண்டகாலத்திற்கு முன்பே, அசாமின் குடியுரிமைப் பிரச்சினையை அம்பேத்கர் எவ்வாறு கையாண்டார்? -ஜதின் ஆனந்த்

இந்த வாரம், உச்சநீதிமன்றம் 27 வழக்குகளை மீண்டும் புதிய விசாரணைக்காக அந்தந்த 'வெளிநாட்டினர் தீர்ப்பாயங்களுக்கு' (Foreigners' Tribunals) திருப்பி அனுப்பியுள்ளது. இந்த முடிவு, 1949-ஆம் ஆண்டு நடந்த அரசியலமைப்பு நிர்ணய சபை விவாதங்களின்போது, அசாம் மாநிலத்தின் புலம்பெயர்ந்தோர் தொடர்பான கவலைகளை பி. ஆர். அம்பேத்கர் எவ்வாறு கையாண்டார் என்பதை நினைவுகூர்கிறது.


திங்கட்கிழமை ஜூலை மாதம் 13-ஆம் தேதி, ஒருவருடைய குடியுரிமை என்பது நியாயமான, சட்டப்பூர்வமான மற்றும் முறையான நடைமுறையின் மூலமாகவே தீர்மானிக்கப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. எனவே, அசாம் மாநிலத்தில் உள்ள வெளிநாட்டினர் தீர்ப்பாயங்கள் (Foreigners' Tribunals) இந்த 27 வழக்குகளையும் மீண்டும் புதியதாக விசாரித்துத் தீர்ப்பு வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் திருப்பி அனுப்பியுள்ளது.


1949-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில், ஆகஸ்ட் மாதம் 10-ஆம் தேதி முதல் 12-ஆம் தேதி வரை மூன்று நாட்கள் நடந்த விவாதங்களின்போது, தலைவர் ராஜேந்திர பிரசாத் தலைமையில் கூடிய அரசியல் நிர்ணய சபை, இந்தியக் குடியுரிமையை எவ்வாறு வரையறுப்பது என்பது குறித்து விவாதித்தது. அந்தநேரத்தில், புதிதாக சுதந்திரம் பெற்ற இந்தியா, பஞ்சாப் பிரிவினைக்குப் பிறகு கோடிக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்த சிக்கலை எதிர்கொண்டிருந்தது; இது நாடு முழுவதும் அகதிகளின் பெரும் வருகைக்கு வழிவகுத்தது.



பெரும்பாலான விவாதங்கள் இந்தியாவின் வடக்கு மற்றும் மேற்குப் பகுதிகளுக்கு வந்த அகதிகளைக் குறித்து அமைந்திருந்தன. இருப்பினும், அசாம் மாநிலத்திற்குள் மக்கள் புலம்பெயர்ந்து வருவது குறித்த கவலைகளும் விவாதத்தில் எழுப்பப்பட்டன. இதற்குப் பதிலளிக்கும் விதமாக, குடியுரிமை தொடர்பான அரசியலமைப்பு வரைவு விதிகளில் சேர்க்கப்பட்டிருந்த பாதுகாப்பு அம்சங்களை பி. ஆர். அம்பேத்கர் ஆதரித்துப் பேசினார்.


முன்மொழியப்பட்ட சுமார் 140 திருத்தங்களை ஒரு "உண்மையான காடு" (Veritable jungle) எனக் குறிப்பிட்ட ராஜேந்திர பிரசாத், வரைவு அரசியலமைப்பின் குடியுரிமை தொடர்பான 5 மற்றும் 6-வது பிரிவுகளை விளக்குமாறு அம்பேத்கரிடம் கேட்டுக்கொண்டார். இந்த விவாதத்தின்போது பேசிய அம்பேத்கர், மற்ற எந்தவொரு விதியையும்விட 5-வது பிரிவுதான் வரைவுக் குழுவிற்கு (Drafting Committee) மிக அதிகமான சிரமங்களைக் கொடுத்தது என்று கூறினார்.


“ஐயா, வரைவு அரசியலமைப்பில் உள்ள மற்றொரு விதியைத் தவிர, வேறு எந்த ஒரு விதியும் இந்த குறிப்பிட்ட விதியைப் போல வரைவுக் குழுவிற்கு (Drafting Committee) இவ்வளவு பெரிய தலைவலியைத் தந்திருக்காது என்று நான் நினைக்கிறேன். இந்த விதியின்கீழ் கொண்டுவரப்பட வேண்டியது அவசியமானது மற்றும் விரும்பத்தக்கது என்று கருதப்பட்ட அனைத்துச் சூழல்களையும் உள்ளடக்குவதற்கு, எத்தனை வரைவுகள் தயாரிக்கப்பட்டன, எத்தனை வரைவுகள் போதிய அளவில் இல்லை என்று அழிக்கப்பட்டன என்பது எனக்கே தெரியவில்லை,” என்று அவர் கூறியதாகக் குறிப்பிடப்படுகிறது.

குடியுரிமை பற்றிய வரைவு விதிகள்


அரசியலமைப்பின் 5 மற்றும் 6-ஆவது பிரிவுகளைப் பற்றிக் குறிப்பிட்ட அம்பேத்கர், "இந்த அரசியலமைப்புச் சட்டம் அமலுக்கு வரும் தேதியில்" யார் இந்தியக் குடிமகனாக இருக்க முடியும் என்பதைப் பிரிவு 5 வரையறுக்கிறது என்றார். அதன்படி: (அ) இந்தியப் பகுதிக்குள் பிறந்த ஒரு நபர், அல்லது (ஆ) அவரது பெற்றோரில் எவரேனும் ஒருவர் இந்தியப் பகுதிக்குள் பிறந்திருந்தால் அல்லது               (இ) இந்த அரசியலமைப்புச் சட்டம் அமலுக்கு வரும் தேதிக்கு முந்தைய ஐந்து ஆண்டுகளுக்குக் குறையாமல் இந்தியப் பகுதியில் வழக்கமாக வசித்து வந்தவர்கள். அத்தகைய நபர், "அவர் தானாக முன்வந்து எந்தவொரு வெளிநாட்டுத் தேசத்தின் குடியுரிமையையும் பெறாதிருக்கும்பட்சத்தில், இந்தியாவின் குடிமகனாக இருப்பார்".

சட்டப்பிரிவு-5A பாகிஸ்தானில் இருந்து குடியேறியவர்களுக்கான தனி விதிகளை வகுத்துக் கொடுத்தது. அதன்படி, ஜூலை மாதம் 19-ஆம் தேதி, 1948-ஆம் ஆண்டுக்கு முன்பு இந்தியாவிற்கு வந்தவர்களில் — அவர்களோ அல்லது அவர்களின் பெற்றோரோ அல்லது தாத்தா பாட்டியோ பிரிக்கப்படாத இந்தியாவில் பிறந்திருந்து, அவர்கள் குடியேறியதில் இருந்து இந்தியாவில் வழக்கமாக வசித்து வந்திருந்தால் அவர்களுக்குக் குடியுரிமை வழங்கப்பட்டது. இந்தத் தேதிக்குப் பிறகு வந்தவர்கள், இந்தியாவில் ஆறு மாதங்கள் வசித்த பிறகு குடியுரிமைக்காகப் பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டது.


சட்டப்பிரிவு-5AA, மார்ச் மாதம் 1-ஆம் தேதி, 1947-ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்தியாவில் இருந்து பாகிஸ்தானுக்குக் குடிபெயர்ந்தவர்களை (இந்தியக் குடியுரிமையிலிருந்து) விலக்கி வைத்தது. ஆனால், அவர்கள் நிரந்தரமாக மறுகுடியேற்றம் செய்வதற்கான முறையான அனுமதிச் சீட்டின்கீழ் மீண்டும் இந்தியா திரும்பியிருந்தால் இந்த விதிமுறை பொருந்தாது. அதேநேரத்தில், ஒரு நிரந்தரமான குடியுரிமைச் சட்டத்தை இயற்றும் அதிகாரத்தைப் நாடாளுமன்றத்திடமே பிரிவு-6 விட்டுவிட்டது.


அசாம் பற்றிய கேள்வி


அரசியலமைப்பு நிர்ணய சபையின் பல முக்கிய உறுப்பினர்களிடமிருந்து அம்பேத்கர் பல கேள்விகளை எதிர்கொண்டார். இவர்களில் அசாமில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ரோகிணி குமார் சௌத்ரி எழுப்பிய கேள்விகள் மிகவும் முக்கியமானவையாகும்.


கிழக்குவங்கத்தில் "தங்களால் வாழ முடியாத சூழ்நிலை ஏற்பட்டதன் காரணமாக அங்கிருந்து வந்தவர்களுக்குக் குடியுரிமை வழங்க வேண்டும் என்று சௌத்ரி கோரினார். மேற்குவங்கத்திற்கோ அல்லது அசாமிற்கோ குடிபெயர்ந்து வந்துள்ள இந்த கிழக்குவங்க மக்களின் மனதில் எந்த ஒரு அசம்பாவிதம் பற்றிய பயமும் இல்லை என்று யாராவது ஒரு கணம் கூட நினைத்துப் பார்க்க முடியுமா?" என்று அவர் கேள்வி எழுப்பினார்.



மேலும், முதலில் அசாமின் சில்ஹெட் (Sylhet) பகுதியைச் சேர்ந்தவர்களாக இருந்து, இந்தியப் பிரிவினைக்கு நீண்டகாலத்திற்கு முன்பே ஏதோ ஒரு தொழில் விஷயமாகவோ, அரசு ஊழியர்களாகவோ அல்லது வர்த்தகர்களின் பணியாளர்களாகவோ அசாம் பள்ளத்தாக்கிற்கு வந்த ஒரு குறிப்பிட்ட பிரிவினருக்கும் குடியுரிமை வழங்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.


ஆனால், அதேநேரத்தில் "வெறும் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வந்து, சட்ட மறுப்பு இயக்கத்தைத் (Civil disobedience movement) தொடங்கி, தங்களுக்குச் சொந்தமில்லாத நிலங்களை வலுக்கட்டாயமாக ஆக்கிரமித்து, மாகாணத்தில் அமைதியை நிலைநாட்டுவதற்காகப் ராணுவத்தின் உதவியை நாடும்படி நல்லாட்சி செய்யும் அரசாங்கத்தையே கட்டாயப்படுத்திய நபர்களைக் குடியுரிமையில் இருந்து விலக்கி வைக்க வேண்டும் என்றும் சௌத்ரி கோரினார்.


"...யார் ரகசியமாக எனது மாகாணத்திற்குள் நுழைந்து, இப்போது தங்களின் சொந்தச் சகோதரர்களுடன் தங்களைக் கலந்துகொண்டு, தங்களின் சொந்த மாகாணங்களில் எந்த ஒரு பாதுகாப்பற்ற உணர்வும் இல்லாத நிலையிலும் அசாம் மாகாணத்தை மேலும் சுரண்ட வேண்டும் என்ற எண்ணத்தோடு குடியுரிமை உரிமைகளைக் கேட்கிறார்களோ, அத்தகைய நபர்களை நான் இதிலிருந்து விலக்க விரும்புகிறேன்," என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.


பாகிஸ்தானைச் சேர்ந்த பலர் அசாமில் எந்தவொரு பாதுகாப்பற்ற சூழலும் இல்லாதபோதிலும் அங்கு நுழைந்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், அதேநேரத்தில் கிழக்குவங்கத்தில் உள்ள சிறுபான்மையினரின் நிலைமையையும் சுட்டிக்காட்ட விரும்பினார்.


"அங்குள்ள சிறுபான்மையினருக்கு எந்தவொரு அரசுப் பணியும் கிடைப்பதில்லை. சிறுபான்மைச் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர்கூட அங்கு ஒரு சிறிய பதவியில்கூட இல்லை... அப்படியிருக்க, அனைத்து நன்மைகளையும் அனுபவித்து வரும் கிழக்குவங்கத்தைச் சேர்ந்த பெரும்பான்மைச் சமூக மக்கள் அசாமுக்கு வருவதற்கு என்ன காரணம்? அசாமைச் சுரண்டுவதும், சில நன்மைகளைப் பெறுவதுமே அதற்குக் காரணம். இதை நீங்கள் ஊக்குவிக்கப் போகிறீர்களா?" என்று அவர் கேள்வி எழுப்பினார்.


மேலும், இது போன்ற ஊடுருவல்களைக் கட்டுப்படுத்துவதற்கான அனுமதிகளை வழங்கும் அதிகாரத்தைத் தங்களுக்கு வழங்குமாறு அசாம் அரசு இந்திய அரசிடம் கோரியிருந்ததாகவும், ஆனால் அது மறுக்கப்பட்டுவிட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.


"ஒரு மாகாணத்தை நீங்கள் சரியாக ஆட்சி செய்ய விரும்பினால், அங்குள்ள மக்கள்தொகையின் சமநிலை எந்தவொரு பாதிப்பும் அடையாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். மேலும், இந்தியாவின் நலன்களுக்கு ஏற்றதாக இல்லாத மற்றும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய நபர்களுக்கு நீங்கள் குடியுரிமை வழங்கக் கூடாது. இந்த விவகாரங்களில் நான் இந்த விதியைத்தான் பின்பற்றுவேன்," என்று அவர் கூறினார்.


அம்பேத்கரின் பதில்


இறுதியாக, அரசியலமைப்பின் 5 மற்றும் 6-ஆவது பிரிவுகளில் அம்பேத்கர் முன்மொழிந்த திருத்தங்களை ஏற்றுக்கொள்வதற்காக, நிர்ணய சபையில் தேவையான எண்ணிக்கையைவிட அதிகமான வாக்குகள் செலுத்தப்பட்டு அவை நிறைவேற்றப்பட்டன. அம்பேத்கருக்குப் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் ஆதரவு கிடைத்தது. குறிப்பாகப் பிரிவினையால் (Partition) ஏற்பட்ட சவால்கள் காரணமாக, குடியுரிமை தொடர்பான இந்தப் பிரிவுகள் "கடந்த சில மாதங்களாக இந்த அரசியலமைப்பில் உள்ள மற்ற எந்தப் பிரிவையும்விட அதிக சிந்தனைக்கும் பரிசீலனைக்கும் உட்படுத்தப்பட்டிருக்கலாம்" என்று நேருவும் ஒப்புக்கொண்டார்.


இந்த விவாதத்திற்குப் பதிலளித்துப் பேசிய அம்பேத்கர், பாகிஸ்தானில் இருந்து இந்தியாவிற்கு வந்தவர்கள், இந்தியாவில் இருந்து பாகிஸ்தானிற்குச் சென்றவர்கள் மற்றும் அசாம் மாநிலம் எதிர்கொள்ளும் சிக்கல்கள் குறித்த கவலைகளுக்குப் விளக்கமளித்தார்.


இந்த வரைவுச் சட்டம் கிழக்குவங்கத்திலிருந்து வரும் புலம்பெயர்ந்தோருக்காக "கதவுகளைத் திறந்துவிட்டுள்ளது" என்ற சவுத்ரியின் வாதத்திற்குப் பதிலளித்த அம்பேத்கர், சவுத்ரி இந்த விதிகளைத் தவறாகப் புரிந்துகொண்டுள்ளார் என்றும், அவரது அச்சங்கள் "முற்றிலும் அடிப்படையற்றவை" என்றும் கூறினார்.


“அவர் இந்த விதிமுறைகளை மீண்டும் வாசித்துப் பார்த்தால், 1948-ஆம் ஆண்டு ஜூலை மாதம் 19-ஆம் தேதிக்கு முன்னர் அசாமிற்குள் நுழைந்தவர்கள் மட்டுமே, அவர்கள் இந்தியப் பகுதிக்குள் வசித்திருந்தால், தானாகவே அசாமின் குடிமக்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர் என்பதை அவர் அறிந்துகொள்வார்,” என்றும் தெளிவுபடுத்தினார்.


1948-ஆம் ஆண்டு ஜூலை மாதம் 19-ஆம் தேதிக்குப் பிறகு, இந்து வங்காளிகளாக இருந்தாலும் சரி, முஸ்லிம்களாக இருந்தாலும் சரி, அசாமில் நுழைந்தவர்கள் குறித்து அம்பேத்கர், குடியுரிமை என்பது "எந்த வகையிலும் தானாகக் கிடைக்கக்கூடிய ஒன்றல்ல" என்று அம்பேத்கர் கூறினார். இந்தத் தேதிக்குப் பிறகு அசாமிற்குள் நுழைந்தவர்களுக்கு மூன்று நிபந்தனைகளை அவர் பட்டியலிட்டார்: முதலாவதாக, அந்த நபர் குடியுரிமைக்கு விண்ணப்பிக்க வேண்டும்; இரண்டாவதாக, அவர் அந்த மாநிலத்தில் ஆறு மாதங்கள் வசித்திருப்பதை நிரூபிக்க வேண்டும்; இறுதியாக, "இந்திய டொமினியன் (Dominion of India) அரசால் நியமிக்கப்பட்ட ஒரு அதிகாரியால் அவர் பதிவு செய்யப்பட வேண்டும். இந்த மூன்றாவது நிபந்தனையை மிகவும் கடுமையானது மற்றும் முழுமையான அதிகாரம் (Plenary power) கொண்டது என்று குறிப்பிட்ட அவர், ஒரு விண்ணப்பதாரரைப் பதிவு செய்யலாமா வேண்டாமா என்பதை முடிவு செய்வதில் அரசு அதிகாரிக்கு "போதிய விருப்ப அதிகாரம்" (Enough discretion) உள்ளது என்பதையும் வலியுறுத்தினார்.


“வேறுவிதமாகச் சொல்வதானால், அந்த நபர் இந்தியாவுக்கு வந்ததன் நோக்கம் என்ன என்பதைத் தீர்மானிக்க, அங்குள்ள ஆதாரங்களை அந்த அதிகாரி ஆய்வு செய்யலாம். அதாவது, அந்த நபர் உண்மையிலேயே இந்தியாவின் நிரந்தரக் குடிமகனாக மாற வந்துள்ளாரா அல்லது வேறு ஏதேனும் நோக்கத்திற்காக வந்துள்ளாரா என்பதை அவர் ஆராயலாம்," என்று அவர் கூறினார்.


Original Link: Long before Supreme Court ruling, how Ambedkar grappled with Assam’s citizenship question.


Share:

குடியுரிமை (திருத்த) விதிகள், 2026 என்றால் என்ன? -பிரியா குமாரி சுக்லா

முக்கிய அம்சங்கள்:


• திங்கட்கிழமை வெளியிடப்பட்ட அரசாங்க அரசிதழ் அறிவிப்பில், மத்திய உள்துறை அமைச்சகம் (Ministry of Home Affairs (MHA)), 1955-ஆம் ஆண்டின் குடியுரிமைச் சட்டத்தின் பிரிவு-18-ன்கீழ் உருவாக்கப்பட்ட 'குடியுரிமை (திருத்த) விதிகள், 2026' (Citizenship Amendment Rules, 2026), 2009-ஆம் ஆண்டு விதிகளின் அட்டவணை (IC)-ல் ஒரு புதிய பத்தியைச் சேர்த்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. அந்தப் புதிய விதியான பத்தி (iiiA)-ன்படி, விண்ணப்பதாரர்கள் தங்களுக்குப் அண்டை நாடுகள் மூன்றில் ஏதேனும் ஒன்றால் வழங்கப்பட்ட செல்லுபடியாகும் அல்லது காலாவதியான கடவுச்சீட்டு (Passport) உள்ளதா என்பதைக் குறிப்பிட வேண்டும். அத்தகைய கடவுச்சீட்டுகளை வைத்திருப்பவர்கள், அதன் எண், வழங்கப்பட்ட தேதி, இடம் மற்றும் காலாவதியாகும் தேதி போன்ற விவரங்களை வழங்க வேண்டும். மேலும், தங்களுக்கு இந்தியக் குடியுரிமைக்கான ஒப்புதல் கிடைத்த 15 நாட்களுக்குள், சம்பந்தப்பட்ட அஞ்சல்துறை முதுநிலை கண்காணிப்பாளர் அல்லது அஞ்சல்துறை கண்காணிப்பாளரிடம் அந்த கடவுச்சீட்டை ஒப்படைக்க ஒப்புக்கொள்ள வேண்டும் என்று அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.



உங்களுக்குத் தெரியுமா?


• அரசாங்க அறிவிப்பின்படி, இந்த புதிய விதிகள் அதிகாரப்பூர்வ அரசிதழில் வெளியிடப்படும் தேதியிலிருந்து நடைமுறைக்கு வரும் என்றும் குடியுரிமை தொடர்பான வழக்குகளில், சரிபார்ப்பு மற்றும் ஆவணப் பராமரிப்பை மேம்படுத்துவதற்காகக் கொண்டுவரப்பட்ட ஒரு நிர்வாகரீதியான தெளிவுபடுத்தல் மட்டுமே இந்தத் திருத்தம் என்றும் மத்திய உள்துறை அமைச்சகத்தின் (MHA) அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.


• இந்த மாத தொடக்கத்தில், மத்திய உள்துறை அமைச்சகம் 'குடியுரிமை (திருத்த) விதிகள், 2026'-ஐ அறிவித்தது. இது மின்னணு இந்திய வெளிநாட்டு குடிமக்கள் (electronic Overseas Citizen of India (e-OCI)) அட்டைகள், முழுமையான இணையவழி விண்ணப்ப முறை மற்றும் சிறுவர்களுக்கான இருநாட்டு கடவுச்சீட்டுகள் (Dual passports) மீதான கடுமையான விதிகளை அறிமுகப்படுத்துகிறது. இணையவழி விண்ணப்பங்கள், மின்னணு ஆவணங்கள் மற்றும் ஒப்புகைகளைக் கட்டாயமாக்குவதன் மூலம் முழுமையான மின்னணு இந்திய வெளிநாட்டு குடிமக்கள் (OCI) அமைப்பை இந்த விதிகள் உருவாக்குவதோடு, மீண்டும் மீண்டும் காகிதங்களில் செய்யப்படும் எழுத்துப் பணிகளைக் குறைப்பதாக மத்திய உள்துறை அமைச்சக (MHA) அதிகாரி ஒருவர் தெரிவித்தார். வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான காகிதமில்லா அடையாள அமைப்புகளை உருவாக்கும் நோக்கத்துடன், நேரடியாக வழங்கப்படும் அட்டைகளுடன் சேர்த்து மின்னணு இந்திய வெளிநாட்டு குடிமக்கள் (e-OCI) அட்டைகளை வழங்குவதற்கும் ஒரு புதிய விதிமுறை அனுமதிக்கிறது. மேலும், எதிர்காலத்தில் தானியங்கிப் பதிவிற்கு வசதியாக, அதிவேக குடிவரவுத் திட்டங்களுடன் இணைக்க விண்ணப்பதாரர்கள் தங்களின் உயிரியல் அடையாளத் தரவுகளைப் (Biometric) பகிரவும் சம்மதிக்க வேண்டும் என்றும் கூறப்படுகிறது.


Original Link: What is Citizenship (Amendment) Rules, 2026?


Share: