பிரதமரின் நிவாரண நிதி மற்றும் வேறு இரண்டு நிதிகள் தொடர்பான கேள்விகளும் விவகாரங்களும் மக்களவையின் செயல்முறை மற்றும் நடத்தை விதிகள்கீழ் விவாதிக்க அனுமதிக்கப்படாது என்று பிரதமர் அலுவலகம் மக்களவை செயலகத்திடம் தெரிவித்துள்ளது. அதற்கான காரணம் இங்கே.
பிரதமரின் நிவாரண நிதி (PM Cares), பிரதமரின் தேசிய நிவாரண நிதி (Prime Minister’s National Relief Fund (PMNRF)) மற்றும் தேசிய பாதுகாப்பு நிதி (National Defence Fund (NDF)) தொடர்பான நாடாளுமன்றக் கேள்விகளும் விவகாரங்களும், மக்களவையின் அலுவல் நடத்தை தொடர்பான (conduct of business in Lok Sabha) விதிகளின்கீழ் அனுமதிக்கப்படாது என்று பிரதமர் அலுவலகம் மக்களவைச் செயலகத்திடம் தெரிவித்துள்ளது என The Indian Express நாளிதழ் திங்களன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ஜனவரி 30 அன்று, மக்களவை நடைமுறை மற்றும் நடத்தை விதிகள் 41(2)(viii) மற்றும் 41(2)(xvii) ஆகியவற்றின் கீழ், அந்த மூன்று நிதிகள் தொடர்பான கேள்விகளும் விவகாரங்களும் விவாதிக்க அனுமதிக்கப்படாது என்று பிரதமர் அலுவலகம் மக்களவைச் செயலகத்திடம் தெரிவித்ததாகத் தெரிய வந்துள்ளது.
பிரதமரின் தேசிய நிவாரண நிதி (Prime Minister’s National Relief Fund (PMNRF)) மற்றும் மற்ற இரண்டு நிதிகள் என்றால் என்ன?
கோவிட்-19 நோய்த்தொற்று பரவலைத் தொடர்ந்து, பிரதமரின் தேசிய நிவாரண நிதி மார்ச் 27, 2020 அன்று அமைக்கப்பட்டது. "கோவிட்-19 பெருந்தொற்றால் ஏற்பட்டதைப் போன்ற எந்தவொரு அவசர அல்லது நெருக்கடி நிலையையும் எதிர்கொள்வதற்காகவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவதையும் முக்கிய நோக்கமாகக் கொண்ட ஒரு பிரத்யேக நிதியின் தேவை கருதி, 'பிரதமரின் குடிமக்கள் உதவி மற்றும் அவசரகால நிவாரண நிதி (Prime Minister’s Citizen Assistance and Relief in Emergency Situations Fund (PM CARES Fund)) என்ற பெயரில் ஒரு பொது அறக்கட்டளை அமைக்கப்பட்டுள்ளது என்று PMCares நிதியின் அதிகாரப்பூர்வ இணையதளம் கூறுகிறது.
இந்த நிதி ஒரு பொது தொண்டு அறக்கட்டளையாகப் பதிவு செய்யப்பட்டதுடன், அதன் அறக்கட்டளைப் பத்திரம் 2020-ஆம் ஆண்டு மார்ச் 27-ஆம் தேதி புது டெல்லியில் 1908-ஆம் ஆண்டு பதிவுச் (Registration Act) சட்டத்தின்கீழ் அதிகாரப்பூர்வமாகப் பதிவு செய்யப்பட்டது.
பிரதமரின் குடிமக்கள் உதவி மற்றும் அவசரகால நிவாரண நிதியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கடைசியாக வெளியிடப்பட்ட 2022-23-ஆம் ஆண்டுக்கான வரவு செலவுக் கணக்கு அறிக்கையின்படி, மார்ச் 2023 இறுதி நிலவரப்படி மொத்த இருப்பு ரூ. 6,283.7 கோடியாக இருந்தது.
பிரதமர் அலுவலகத்தின் ஜனவரி 30, 2026 தேதியிட்ட தகவலில் குறிப்பிடப்பட்டுள்ள மற்ற இரண்டு நிதிகளும் பிரதமர் அலுவலகத்தின் கட்டுப்பாட்டிலேயே உள்ளன.
பிரதமரின் தேசிய நிவாரண நிதி (Prime Minister’s National Relief Fund (PMNRF)) ஜனவரி 1948-ல் பாகிஸ்தானிலிருந்து இடம்பெயர்ந்தவர்களுக்கு உதவுவதற்காகப் பொதுமக்களின் பங்களிப்புகளுடன் நிறுவப்பட்டது. இதன் நிதி ஆதாரங்கள் தற்போது வெள்ளம், புயல் மற்றும் நிலநடுக்கம் போன்ற இயற்கை சீற்றங்களில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கும், விபத்துகள் மற்றும் கலவரங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் உடனடி உதவி வழங்குவதற்காகப் பயன்படுத்தப்படுகிறது.
தேசிய பாதுகாப்பு நிதி (National Defence Fund (NDF)) என்பது ஆயுதப் படைகள் மற்றும் துணை ராணுவப் படைகளின் உறுப்பினர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்தவர்களின் நலனுக்காகப் பயன்படுத்தப்படுகிறது. இந்த நிதியானது, அதன் அதிகாரப்பூர்வ இணையதளத்தின்படி, பிரதமரைத் தலைவராகவும், பாதுகாப்பு, நிதி மற்றும் உள்துறை அமைச்சர்களை உறுப்பினர்களாகவும் கொண்ட ஒரு செயற்குழுவால் கையாளப்படுகிறது.
கடந்த காலத்தில் பிரதமரின் குடிமக்கள் உதவி மற்றும் அவசரகால நிவாரண நிதி (Prime Minister’s Citizen Assistance and Relief in Emergency Situations Fund (PM CARES Fund)) குறித்து அரசாங்கத்தின் நிலைப்பாடு என்னவாக இருந்தது?
ஜனவரி 2023-ல், PM CARES நிதி ஒரு பொது தொண்டு அறக்கட்டளையாக அமைக்கப்பட்டுள்ளது என்றும், அது அரசியலமைப்பின் கீழோ அல்லது நாடாளுமன்றம் அல்லது மாநிலத்தால் இயற்றப்பட்ட எந்தவொரு சட்டத்தின் கீழோ உருவாக்கப்படவில்லை என்று ஒன்றிய அரசு டெல்லி உயர்நீதிமன்றத்தில் தெரிவித்தது. அந்த நிதியின் செயல்பாடுகளில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வதற்காக, அரசியலமைப்பின் 12-வது பிரிவின் கீழ் அந்த நிதியை ஒரு 'அரசு அமைப்பு' (state) என அறிவிக்கக் கோரிய ஒரு மனு மீதான விசாரணையின்போது ஒன்றிய அரசு இந்தத் தகவலைத் தெரிவித்தது.
ஒன்றிய அரசு தனது பிரமாணப் பத்திரத்தில், அந்த அறக்கட்டளை எந்தவொரு அரசாங்கத்தாலோ அல்லது அரசாங்கத்தின் எந்தவொரு அமைப்பாலோ சொந்தமாகவோ அல்லது கட்டுப்படுத்தப்படுவதற்கோ அமைக்கப்படவில்லை என்றும், பொதுப் பதவிகளை வகிப்பவர்களைக் கொண்ட அறங்காவலர் குழுவின் அமைப்பு (board of trustees) என்பது நிர்வாக வசதிக்காக மட்டுமே அமைக்கப்படுகிறது என்றும் கூறியிருந்தது.
மேலும், அந்த அறக்கட்டளை சட்டம் அல்லது அரசியலமைப்பின்கீழ் உருவாக்கப்படாததால், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் விதிகளின்கீழ் PM CARES நிதி ஒரு பொது அதிகாரம் கொண்ட அமைப்பாக இருக்க முடியாது என்றும் அந்தப் பிரமாணப் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.
PM CARES நிதி குறித்த உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்புகள் என்ன?
ஆகஸ்ட் 18, 2020 அன்று, உச்ச நீதிமன்றம், PM CARES நிதியிலிருந்து தேசிய பேரிடர் நிவாரண நிதிக்கு (National Disaster Response Fund (NDRF)) நிதியை மாற்றுமாறு உத்தரவிட மறுத்துவிட்டது. ஏனெனில், அவை "வெவ்வேறு நோக்கங்களையும் குறிக்கோள்களையும் கொண்ட முற்றிலும் இரண்டு வேறுபட்ட நிதிகள்" என்றும், அத்தகைய ஒரு உத்தரவுக்கு "எந்த ஒரு முகாந்திரமும் இல்லை" என்றும் நீதிமன்றம் கூறியது.
தேசிய பேரிடர் நிவாரண நிதியை இந்தியத் தலைமை கணக்குத் தணிக்கையாளர் (Comptroller & Auditor General of India (CAG)) தணிக்கை செய்வதற்கு வழிகாட்டுதல்கள் வழிவகை செய்கின்றன. ஆனால், PM CARES நிதி ஒரு பொது அறக்கட்டளை என்பதால், அத்தகைய தணிக்கைக்கு "எந்த ஒரு முகாந்திரமும் இல்லை" என்றும் உச்சநீதிமன்றம் கூறியது.
பொது நல வழக்கு மையம் (Centre for Public Interest Litigation (CPIL)) என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் தாக்கல் செய்த ஒரு நீதிப்பேராணை மனுவை (writ petition) தள்ளுபடி செய்த நீதிமன்றம், “PM CARES நிதியில் திரட்டப்பட்ட நிதிகள் முற்றிலும் வேறுபட்ட நிதிகள் ஆகும். அவை ஒரு பொது தொண்டு அறக்கட்டளையின் நிதிகள் மட்டுமே. எனவே, அந்த நிதிகளை தேசிய பேரிடர் நிவாரண நிதிக்கு (NDRF) மாற்றுமாறு எந்த உத்தரவையும் பிறப்பிக்க வேண்டிய அவசியம் இல்லை” என்று கூறியிருந்தது.
அந்த மூன்று நிதிகள் குறித்த கேள்விகளையும் விவாதங்களையும் அனுமதிக்க வேண்டாம் என்று பிரதமர் அலுவலகம் ஏன் மக்களவைச் செயலகத்திற்கு அறிவுறுத்தியுள்ளது?
மக்களவையில் கேள்விகளும் விவகாரங்களும் அனுமதிக்கப்படாததற்கான பிரதமரின் அலுவலகம் அளித்த காரணம், இந்த நிதிகளின் மூலதனம் இந்தியத் தொகுப்பு நிதியிலிருந்து (Consolidated Fund of India) எந்தவொரு ஒதுக்கீட்டிலிருந்தும் அல்லாமல், முற்றிலும் பொதுமக்களின் பங்களிப்பால் உருவாக்கப்பட்டது என்று தெரிய வந்துள்ளது. இந்த விளக்கம், ஒன்றிய அரசு இதற்கு முன்னர் நீதிமன்றங்களில் தெரிவித்த விளக்கத்தைப் போன்றே உள்ளது.
கேள்விகளை அனுமதிக்க வேண்டாம் என்று மக்களவைச் செயலகத்திடம் கேட்கும்போது, பிரதமர் அலுவலகம் எந்த விதிகளை மேற்கோள் காட்டியது?
பிரதமர் அலுவலகம் மக்களவைச் செயலகத்திடம், அந்த மூன்று நிதிகள் தொடர்பான கேள்விகளும் விவகாரங்களும், மக்களவையின் நடைமுறை மற்றும் அலுவல் நடத்தை விதிகள் 41(2)(viii) மற்றும் 41(2)(xvii) ஆகியவற்றின் கீழ் விவாதம் நடத்த அனுமதி வழங்க முடியாது என்று தெரிவித்துள்ளது.
மக்களவையில் கேள்விகள் கேட்பதற்கான உரிமையை நிர்வகிக்கும் குறிப்பிடப்பட்ட நிபந்தனைகளின்கீழ், விதி 41(2) (viii), “முக்கியாக இந்திய அரசாங்கத்தின் பொறுப்பில் இல்லாத ஒரு விவகாரம் தொடர்பாக இருக்கக்கூடாது” என்று கூறுகிறது. விதி 41(2) (xvii) “முக்கியாக இந்திய அரசாங்கத்திற்குப் பொறுப்பில்லாத அமைப்புகள் அல்லது நபர்களின் கட்டுப்பாட்டில் உள்ள விவகாரங்களை பற்றி கேள்வி எழுப்பக்கூடாது” என்று கூறுகிறது.
Original article : PMO says no question on PM CARES, two other funds admissible in Lok Sabha: Reasons it gave. -Asad Rehman