எலி வளைச் சுரங்கத் தொழில் (Rat-hole mining) என்பது குறுகிய, கிடைமட்ட நிலக்கரிப் படிவங்களிலிருந்து நிலக்கரியை வெட்டி எடுக்கும் ஒரு முறையாகும். இது தொழிலாளர்களுக்குப் பல பாதுகாப்பு அபாயங்களைக் கொண்டது. தடை இருந்தபோதிலும், இது இந்தியா முழுவதும் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.
மேகாலயாவின் தாங்சோ பகுதியில் உள்ள ஒரு சட்டவிரோத எலி வளைச் சுரங்கத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தைத் தொடர்ந்து, சனிக்கிழமை நிலவரப்படி 27 தொழிலாளர்களின் உடல்கள் மீட்கப்பட்ட நிலையில், அப்பகுதியில் உள்ள சட்டவிரோத சுரங்க நடவடிக்கைகளுக்கு எதிராக அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்க அரசு உத்தரவிட்டுள்ளது.
தி இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டபடி, வியாழக்கிழமை ஏற்பட்ட இந்த வெடிவிபத்தைத் தொடர்ந்தே கிழக்கு ஜெயின்டியா ஹில்ஸ் மாவட்ட நிர்வாகம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. சுரங்கப் பாதைகளுக்குள் எத்தனை தொழிலாளர்கள் இருந்தனர் என்பது தெளிவாகத் தெரியவில்லை. மேலும், அப்பகுதியில் தேடுதல் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
எலி வளைச் சுரங்கத் தொழில் என்பது, சுரங்கங்களில் உள்ள குறுகிய, சுரங்கப்பாதை போன்ற துளைகளுக்குள் தொழிலாளர்கள் ஊர்ந்து செல்வதால் அந்தப் பெயரைப் பெறுகிறது. இந்த நடைமுறை குறிப்பிடத்தக்க பாதுகாப்பு அபாயங்களை ஏற்படுத்துகிறது. 2014-ல் தேசிய பசுமைத் தீர்ப்பாயம் (National Green Tribunal (NGT)) இதைத் தடை செய்தும், ஒரு வருடம் கழித்து அந்தத் தடையை மீண்டும் உறுதிப்படுத்திய போதிலும், இந்த வேலை தொடர்கிறது. உண்மையில், 2023-ல் உத்தரகாண்டில் இடிந்து விழுந்த சில்கியாரா-பர்கோட் (Silkyara-Barkot tunnel) சுரங்கப்பாதையில் சிக்கிய தொழிலாளர்களை மீட்க, எலி வளைத் தொழிலாளர்களே பணியமர்த்தப்பட்டனர்.
எலி வளைச் சுரங்கத் தொழில் (rat-hole mining) என்றால் என்ன?
எலி வளைச் சுரங்கம் என்பது குறுகிய, கிடைமட்ட நிலக்கரிப் படிவங்களிலிருந்து நிலக்கரியைப் பிரித்தெடுக்கும் ஒரு முறையாகும். வடகிழக்கு இந்தியாவில் மிகப்பெரிய நிலக்கரி இருப்புக்களைக் கொண்ட மேகாலயாவில் இந்த முறை பரவலாகப் பின்பற்றப்படுகிறது. 'எலி வளை' என்ற சொல், நிலத்தில் தோண்டப்படும் குறுகிய குழிகளைக் குறிக்கிறது. இந்தக் குழிகள் பொதுவாக ஒரு நபர் உள்ளே இறங்கி நிலக்கரியை எடுப்பதற்குப் போதுமான அகலம் கொண்டதாக இருக்கும்.
குழிகள் தோண்டப்பட்டவுடன், சுரங்கத் தொழிலாளர்கள் கயிறுகள் அல்லது மூங்கில் ஏணிகளைப் பயன்படுத்தி நிலக்கரிகளை எடுக்க கீழே இறங்குகின்றனர். பின்னர், மண்வெட்டி, கடப்பாரை மற்றும் கூடைகள் போன்ற பழமையான கருவிகளைப் பயன்படுத்தி நிலக்கரிகள் கையால் வெட்டி எடுக்கப்படுகிறது.
ஷில்லாங்கில் உள்ள வடகிழக்கு மலைப் பல்கலைக்கழகத்தின் (North Eastern Hill University (NEHU)) சுற்றுச்சூழல் ஆய்வுகள் பேராசிரியர் ஓ.பி. சிங், எலி வளைச் சுரங்க முறை பரவலாக இரண்டு வகைப்படும் என்று முன்னதாக The Indian Express நாளிதழிடம் தெரிவித்தார். பக்கவாட்டு சுரங்க முறையில், மலைச் சரிவுகளில் குறுகிய சுரங்கங்கள் தோண்டப்பட்டு, தொழிலாளர்கள் நிலக்கரிப் படுக்கையைக் கண்டுபிடிக்கும் வரை உள்ளே செல்கின்றனர். மேகாலயாவின் மலைப்பகுதிகளில் உள்ள நிலக்கரிப் படிவம் மிகவும் மெல்லியதாக உள்ளது, பெரும்பாலான சந்தர்ப்பங்களில் இது 2 மீட்டருக்கும் குறைவாகவே இருக்கிறது என்று அவர் கூறினார்.
மற்றொரு வகை எலி வளைச் சுரங்க முறையான பெட்டி வடிவ தோண்டுதல் (box-cutting) முறையில், 10 முதல் 100 சதுர மீட்டர் வரை பரப்பளவு கொண்ட ஒரு செவ்வகத் திறப்பு (vertical pit is dug) உருவாக்கப்பட்டு, அதன் வழியாக 100 முதல் 400 அடி ஆழத்திற்கு ஒரு செங்குத்துக் குழி தோண்டப்படுகிறது. நிலக்கரிப் படுக்கை கண்டுபிடிக்கப்பட்டதும், எலி வளை அளவுள்ள சுரங்கங்கள் கிடைமட்டமாகத் தோண்டப்படுகின்றன. அதன் வழியாகத் தொழிலாளர்கள் நிலக்கரியை வெட்டி எடுக்கின்றனர்.
ஜார்க்கண்டில் உள்ள எலி வளைச் சுரங்கத் தொழிலாளி பர்சதி லோதி, சில்கியாராவில் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையிடம், தான் டெல்லி மற்றும் அகமதாபாத்தில் 10 ஆண்டுகளாக இந்த வேலையில் ஈடுபட்டு வருவதாகக் கூறினார். நாங்கள் பயப்படுவதற்கு எந்தக் காரணமும் இல்லை. இது 800 மி.மீ அகலமுள்ள குழாய், 600 மி.மீ அளவுள்ள துளைகளிலேயே வேலை செய்திருக்கிறோம் என்று அவர் கூறினார்.
எலி வளைச் சுரங்கம் தோண்டுவது சட்டவிரோதமானதா?
தேசிய பசுமைத் தீர்ப்பாயம் (NGT) 2014-ல் இந்த நடைமுறைக்குத் தடை விதித்து, 2015-லும் அந்தத் தடையைத் தொடர்ந்தது. அது, “எலி வளைச் சுரங்கத்தின் காரணமாக, மழைக்காலத்தில் சுரங்கப் பகுதிகளில் வெள்ளம் புகுந்து, ஊழியர்கள்/தொழிலாளர்கள் உட்பட பல தனிநபர்கள் உயிரிழந்த பல வழக்குகள் உள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது,” என்று குறிப்பிட்டது.
குறிப்பாக, இந்த உத்தரவு மேகாலயா தொடர்பாகப் பிறப்பிக்கப்பட்டது. அங்கு நிலக்கரிச் சுரங்கத்தில் இது ஒரு பரவலான நடைமுறையாக இருந்தது. பின்னர் மாநில அரசு இந்த உத்தரவை உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. எலி வளைச் சுரங்கச் சம்பவங்கள் குறித்த மத்திய தரவுத்தளம் எதுவும் இல்லாத நிலையில், மேகாலயா காவல்துறைப் பதிவுகளின்படி, ஏப்ரல் 2014 மற்றும் நவம்பர் 2018-க்கு இடையில், தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவை மீறியதால் காரணமாக 477 சம்பவங்கள் நடந்துள்ளன.
எலி வளைச் சுரங்கம் பாதுகாப்பு அபாயங்கள் மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்புகளின் காரணமாக கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது. இந்தச் சுரங்கங்கள் ஒழுங்குபடுத்தப்படாதவை; முறையான காற்றோட்டம், கட்டமைப்பு ஆதரவு அல்லது தொழிலாளர்களுக்கான பாதுகாப்பு உபகரணங்கள் போன்ற பாதுகாப்பு நடவடிக்கைகள் இதில் இல்லை. மேலும், இந்தச் சுரங்க செயல்முறை நிலச் சீரழிவு, காடழிப்பு மற்றும் நீர் மாசுபாட்டை ஏற்படுத்தக்கூடும்.
பல உயிரிழப்புகள் மற்றும் காயங்கள் ஏற்பட்டபோதிலும், அத்தகைய நடைமுறைகளைக் கட்டுப்படுத்தவோ அல்லது தடை செய்யவோ அதிகாரிகள் சில முயற்சிகளை மேற்கொண்டிருந்தாலும், இந்த வேலைகள் தொடர்கின்றன. தாங்சோ சம்பவத்திற்கு முன்பு, ஏறக்குறைய ஒரு வருடத்திற்கு முன்பு அசாமின் திமா ஹசாவ் மாவட்டத்தில் உள்ள ஒரு எலி வளைச் சுரங்கத்தில் பல தொழிலாளர்கள் சிக்கிக்கொண்டனர். சுரங்கத்தில் வெள்ளம் ஏற்பட்டதால் ஒன்பது தொழிலாளர்கள் உயிரிழந்தனர். 2018-ஆம் ஆண்டிலும், மேகாலயாவில் உள்ள ஒரு நிலக்கரிச் சுரங்கத்தில் இரண்டு வாரங்களாகச் சிக்கிக்கொண்ட 15 எலி வளைச் சுரங்கத் தொழிலாளர்கள் இறந்தனர்.
இந்தச் சுரங்கப் பணிகள் தொடர்ந்து நடைபெறுவதற்கு என்ன காரணம்? உள்ளூர் மக்களுக்குப் பொருளாதார வாய்ப்புகள் இல்லாததே ஒரு முக்கிய காரணியாகும். இது அவர்களை இதுபோன்ற வேலைகளைச் செய்யத் தூண்டுகிறது. அசாம் சம்பவத்திற்குப் பிறகு 'தி இந்தியன் எக்ஸ்பிரஸ்' ஒரு தலையங்கத்தில் எழுதியது போல, "வடகிழக்கு மாநிலங்களில், நிலக்கரிப் படிவங்கள் மெல்லியதாக இருப்பதாலும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் (MGNREGA) மற்றும் பிற அரசுத் திட்டங்களைவிட எலி வளைச் சுரங்கத் தொழில் அதிக ஊதியத்தை வழங்குவதாலும், இந்த சட்டவிரோத செயல்பாடு தங்குதடையின்றி நடைபெறுகிறது. அதிகாரத்தின் கூட்டணி இதைப் புறக்கணிக்கும்போது இது போன்ற சம்பவங்கள் நிகழ்கிறது."
"தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவை எழுத்துப்பூர்வமாகவும், உண்மையான நோக்கத்துடனும் செயல்படுத்துவதற்கு, இந்தப் பிரச்சனையை அங்கீகரிப்பதும், அதைத் தீர்ப்பதற்கான அரசியல் நடவடிக்கைகளும் தேவைப்படுகிறது" என்று குறிப்பிட்டது.
Original article : 27 die in Meghalaya: What is rat-hole mining, why it continues despite ban