மனநல நெருக்கடியை இந்தியா எவ்வாறு கையாள்கிறது? -பிந்து ஷாஜன் பெரப்படான்

 நிதிநிலை அறிக்கையில் மனநல நிறுவனங்களுக்காக எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது? ஒரு அவசரநிலையைச் சமாளிக்க அந்த நிதி போதுமானதாக இருக்குமா?


தற்போதைய செய்தி: 


கடந்த மாதம், பொருளாதார ஆய்வறிக்கை, குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினரிடையே அதிகரித்துவரும் டிஜிட்டல் அடிமைத்தனம் மற்றும் திரை தொடர்பான மனநலப் பிரச்சினைகள் குறித்து எச்சரிக்கை விடுத்தது. பிப்ரவரி 1 அன்று மனநல உள்கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை வரவு செலவு அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. வட இந்தியாவில் 2-வது தேசிய மனநலம் மற்றும் நரம்பியல் அறிவியல் நிறுவனத்தை (National Institute of Mental Health and Neuro Sciences (NIMHANS)) நிறுவுவதற்கான முன்மொழிவு மற்றும் பிராந்திய அணுகலை மேம்படுத்துவதற்காக ராஞ்சி மற்றும் தேஜ்பூரில் உள்ள முதன்மை நிறுவனங்களை மேம்படுத்துவது போன்றவை இதன் முக்கிய நோக்கங்கள் ஆகும்.




இந்தியாவின் மனநலப் பாதிப்பின் அளவு என்ன?


நிபுணர்களின் கூற்றுப்படி, இந்தியா ஒரு மனநல அவசரநிலையை எதிர்கொண்டுள்ளது. உலகின் தற்கொலைகள், மனச்சோர்வு மற்றும் அடிமைத்தன வழக்குகளில் ஏறக்குறைய மூன்றில் ஒரு பங்கு இந்தியாவில் நிகழ்கிறது. உள்துறை அமைச்சகத்தின்கீழ் உள்ள தேசிய குற்ற ஆவணக் காப்பகம் (National Crime Records) மற்றும் மாதிரிப் பதிவு அமைப்பு ஆகியவற்றின் தரவுகளின்படி, 15 முதல் 29 வயதுக்குட்பட்ட இந்தியர்களிடையே இறப்பிற்கான முக்கியக் காரணங்களில் தற்கொலையும் ஒன்றாக உள்ளது.


உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, 2012 மற்றும் 2030-ஆம் ஆண்டிற்கு இடையில் இந்தியாவில் மனநலப் பிரச்சினைகளால் ஏற்படும் பொருளாதார இழப்பு 1.03 டிரில்லியன் டாலராக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. மனநலக் கோளாறுகளால் பாதிக்கப்பட்டவர்களில் 70% முதல் 92% பேர், விழிப்புணர்வு இல்லாமை மற்றும் நிபுணர்களின் பற்றாக்குறை காரணமாக முறையான சிகிச்சையைப் பெறுவதில்லை. இந்திய மனநல மருத்துவ இதழின்படி, இந்தியாவில் ஒரு லட்சம் மக்களுக்கு 0.75 மனநல மருத்துவர்களே உள்ளனர். இருந்த போதிலும் உலக சுகாதார அமைப்பு ஒரு லட்சம் மக்களுக்கு குறைந்தபட்சம் மூன்று மனநல மருத்துவர்கள் இருக்கவேண்டும் என்று பரிந்துரைக்கிறது.


2014-15 நிதியாண்டு முதல் சுகாதாரத்திற்கான செலவுகள் அதிகரித்த போதிலும், மனநல சேவைகளுக்கான குறிப்பிட்ட ஒதுக்கீடுகள் காலம் காலமாக மொத்த சுகாதார வரவு செலவு அறிக்கையில் 1% மிகக் குறைவாகவே இருந்துள்ளன.

இந்தியாவில் போதுமான மருத்துவமனைகள் உள்ளதா?


தரமான மனநல சேவைகளுக்கான அதிகரித்துவரும் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக,  ஒன்றிய  அரசு மனநல சேவைகளை ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் ஒருங்கிணைத்து, அவற்றை சுகாதார மற்றும் நல்வாழ்வு மையங்கள் (Health and Wellness Centres (HWCs)) என்று அழைக்கிறது. ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின்கீழ், அரசாங்கம் 1.73 லட்சத்திற்கும் மேற்பட்ட துணை சுகாதார மையங்களையும், ஆரம்ப சுகாதார மையங்களையும், ஆயுஷ்மான் நல்வாழ்வு மையங்களாகத் தரம் உயர்த்தியுள்ளது. மேலும், இந்த மையங்களில் வழங்கப்படும் விரிவான ஆரம்ப சுகாதாரப் பராமரிப்பு சேவைகளின் தொகுப்பில் மனநல சேவைகளும் சேர்க்கப்பட்டுள்ளன. கடந்த இரண்டு ஆண்டுகளில், அரசாங்கம் தனது மனிதவளத் தளத்தையும் விரிவுபடுத்தியுள்ளது. மனநலத் துறையில் அதிக முதுகலை மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்கவும், மேம்பட்ட சிகிச்சைகளை வழங்கவும் 20-க்கும் மேற்பட்ட சிறப்பு மையங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. மொத்தத்தில், மனநலம் தொடர்பான 47 முதுகலைத் துறைகள் உருவாக்கப்பட்டுள்ளன.


மேலும், மாநிலங்கள் முழுவதும் தொலைநிலை மனநல உதவி மற்றும் வலையமைப்பு (Tele Mental Health Assistance and Networking Across States (Tele MANAS)) என்பது இந்தியாவில் 24 மணி நேரமும் செயல்படும் ஒரு இலவச முன்முயற்சியாகும். இது 14416 அல்லது 1-800-891-4416 என்ற கட்டணமில்லா உதவி எண்கள் மூலம் மனநல ஆதரவை வழங்குகிறது. அக்டோபர் 10, 2022 அன்று தொடங்கப்பட்ட இந்தத் திட்டத்தில், 36 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் 53 செயல்பாட்டு மையங்கள் உள்ளன. இந்த மையங்களுக்கு 23 சிறப்பு வழிகாட்டுதல் நிறுவனங்கள் ஆதரவளிக்கின்றன.


குறைபாடு எங்கே இருக்கிறது?


கடந்த ஐந்து ஆண்டுகளில், இந்தியாவின் மனநலத்திற்கான நிதி ஒதுக்கீடு 2020-21-ஆம் ஆண்டில் ரூ.683 கோடியிலிருந்து 2024-25-ஆம் ஆண்டில் ரூ.1,898 கோடியாக அதிகரித்துள்ளது. இந்த உயர்வு பெரும்பாலும் ஒரு முன்னேற்றமாகக் குறிப்பிடப்பட்டாலும், சூழலைக் கருத்தில் கொள்ளும்போது இது மிகக் குறைவாகவே உள்ளது. மனநலப் பிரச்சினைகளில் பணியாற்றும் பங்குதாரர்களின் வலையமைப்பான இந்திய மனநலக் கூட்டணியின் (India Mental Health Alliance (IMHA)) இணை நிறுவனர் மற்றும் நிறுவன உறுப்பினரான நேஹா கிருபால் கூறுகிறார். இந்த நிதிநிலை அறிக்கை ஒதுக்கீடு மொத்த சுகாதார வரவு செலவு அறிக்கை ஒதுக்கீட்டில் 2%-க்கும் குறைவாக உள்ளது என்றும், அந்த சுகாதார வரவு செலவு அறிக்கை நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2% மட்டுமே என்றும் அவர் மேலும் கூறுகிறார். இதன் தாக்கத்துடன் ஒப்பிடும்போது,  குறைந்த முதலீடு இருப்பது தெளிவாகத் தெரிகிறது.


அடிப்படை அளவிலான மனநலத் திட்டங்களுக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நிதி ஒதுக்கீடு ஏன் அவசியம் என்பதை விளக்கிய அவர், இந்த வரவுசெலவுத் திட்டத்திலும்கூட, நிதி ஒதுக்கீட்டின் கணிசமான பங்கு தேசிய மனநலம் மற்றும் நரம்பியல் அறிவியல் நிறுவனம் (National Institute of Mental Health and Neuro Sciences (NIMHANS)) போன்ற உயர்மட்ட நிறுவனங்களுக்கும், புதிய சிறப்பு மையங்களுக்கும் தொடர்ந்து செல்கிறது என்று குறிப்பிடுகிறார். "இந்தியா போன்ற ஒரு நாட்டில் மனநலப் பராமரிப்பை பொதுக் கண்ணோட்டத்தில் மட்டும் பார்ப்பது போதுமானதாக இருக்காது" என்று அவர் விளக்குகிறார். மற்றொரு பிரச்சினை நிதியைப் பயன்படுத்துவது பற்றியது. ஒதுக்கப்படும் நிதிக் குறைவாக இருக்கலாம். ஆனால், தேசிய அளவில் அந்த நிதிகள்  முழுமையாகப் பயன்படுத்தப்படுவதில்லை என்று வல்லுநர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். நிதி சிறப்பாகப் பயன்படுத்தப்படுவதற்கு, மனநலத்திற்கான இந்தியாவின் வரவுசெலவு அறிக்கை ஒதுக்கீடுகள் சமூக அடிப்படையிலான, ஆரம்பக்காலத் தலையீட்டு மாதிரிகளை (early-intervention models) ஆதரிக்க வேண்டும் என்று சுகாதார வல்லுநர்கள் வாதிடுகின்றனர்.


முன்னோக்கிய வழி என்ன?


இந்தியாவிற்கு மலிவு விலையில் சுகாதாரப் பராமரிப்பு, தொடர் சிகிச்சை மற்றும் விரைவான மருத்துவ உதவி தேவைப்படுகிறது. ஆனால், உதவி கிடைப்பது கடினமாக உள்ளது. இது தேவையற்ற மரணங்களுக்கும், பல வருட துன்பங்களுக்கும் வழிவகுக்கிறது. பிரச்சனைகள் ஏற்பட்ட பிறகு அவற்றைச் சரிசெய்யும் விலை உயர்ந்த சிறப்பு மருத்துவமனைகளில் நாம் அதிக கவனம் செலுத்துகிறோம். அவற்றை முன்கூட்டியே தடுப்பதில் கவனம் செலுத்துவதில்லை. நமது அவசரகால மருத்துவ சேவை பலவீனமாக உள்ளது. மேலும், மனநல நிபுணர்களுக்கும் அதிக பற்றாக்குறை உள்ளது. இதன் விளைவாக, 95% மக்களால் மனநல சேவைகளைப் பெற முடியவில்லை என்று கிர்பால் கூறுகிறார்.


இதற்கிடையில், சுகாதார அமைச்சகம், ஒரு ‘முழு சமூக அணுகுமுறைக்கு’ (whole-of-community) முக்கியத்துவம் அளித்து வருவதாகவும், மன நலனைப் பள்ளிப் பாடத்திட்டங்களில் ஒருங்கிணைத்து வருவதாகவும், மன அழுத்தத்தை கையாள்வதற்காகப் பணியிடக் கொள்கைகளை வலுப்படுத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளது.


Original article : How is India tackling mental health crisis? -Bindu Shajan Perappadan

Share: