ஒரு சட்டத் திட்டத்தின்கீழ் நடந்த திருமணம், தம்பதியினருடன் சேர்ந்து மற்றொரு நாட்டிற்குச் செல்லும்போது இது போன்ற சிக்கல்கள் வெளிப்படுகின்றன. வெளிநாட்டில் வழங்கப்பட்ட ஒரு தீர்ப்பு அந்த நாட்டில் திருமண நிலையைத் தீர்மானிக்கலாம்; ஆனால் அது இந்தியாவில் அங்கீகரிக்கப்படுமா என்பது, அந்தத் திருமணத்தைக் கட்டுப்படுத்தும் சட்டம் மற்றும் அந்தத் தீர்ப்பை வழங்கிய வெளிநாட்டு நீதிமன்றத்தின் அதிகாரம் ஆகியவற்றைப் பொறுத்தே அமையும் என்கின்றனர்.
அமெரிக்காவின் ரோட் தீவில் (Rhode Island) தொடங்கப்பட்ட விவாகரத்து நடைமுறைகளை நிறுத்தக் கோரி ஒரு பெண் உச்சநீதிமன்றத்தில் பேராணை மனு (Writ Petition) தாக்கல் செய்துள்ளார். வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்களின் திருமணங்களில் இந்த வழக்கு ஒரு முக்கியமான கேள்வியை எழுப்புகிறது. ஒரு திருமணம் இந்திய கிறிஸ்தவ சட்டத்தின்கீழ் நடந்திருந்தால், கணவன் அல்லது மனைவி வெளிநாட்டில் விவாகரத்து கோருவதை இந்திய நீதிமன்றத்தால் தடுக்க முடியுமா என்கிற முக்கியச் சிக்கல் எழுந்துள்ளது.
அவர் மனுவில், அந்தப் பெண் இந்த நடவடிக்கையை “கடுமையான சர்வதேச திருமண துன்புறுத்தல், மன்றத் தேர்வு (forum shopping), கட்டாயப்படுத்தும் வெளிநாட்டு விவாகரத்து நடவடிக்கைகள் மற்றும் ஒரு இந்தியப் பெண்ணின் அடிப்படை உரிமைகளை மீறுதல்” என்று குறிப்பிடுகிறார்.
இந்தத் திருமணம் இந்தியக் கிறிஸ்தவ முறைப்படி நடத்தப்பட்டு, பின்னர் தமிழ்நாடு திருமணங்கள் பதிவுச் சட்டம் 2009-ன்கீழ் (Tamil Nadu Registration of Marriages Act, 2009) பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் இன்னும் இந்தியாவிலேயே வசிப்பதாகவும், இந்தத் திருமணம் இந்திய விவாகரத்துச் சட்டம் 1869-ன்கீழ் வருவதாகவும் அந்தப் பெண் தன் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த மனுவின்படி, மனைவியின் சம்மதம் இல்லாமலும், அந்த நீதிமன்றத்தின் அதிகார வரம்பிற்கு அவர் உட்படாத நிலையிலும், கணவர் அக்டோபர் மாதம் 2025-ஆம் ஆண்டில் விவாகரத்து நடைமுறைகளைத் தொடங்கியுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
வெளிநாட்டு நீதிமன்ற நடவடிக்கைகளை "அதிகார வரம்பற்றது, ஒடுக்குமுறை நிறைந்தது மற்றும் அரசியலமைப்புக்கு விரோதமானது" என்று அந்தப் பெண் விவரிக்கிறார். மேலும், அந்த நடவடிக்கைகள் தன்னை "மிரட்டிப் பணம் பறிக்கவும், கட்டாயப்படுத்தவும் மற்றும் பொருளாதாரரீதியாகத் துன்புறுத்தவும்" பயன்படுத்தப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்திய சட்டத்தின்படி வெளிநாட்டு நீதிமன்றங்களுக்கு இந்த விவகாரத்தில் அதிகார வரம்பு இல்லை என்றும், தனக்கு அங்கு தீர்வு கிடைக்காது என்றும், இந்த வழக்கிற்கான அடிப்படை இந்தியாவிலேயே தொடர்வதாகவும் அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
இத்தகைய சூழல்கள், ஒரு சட்ட முறைமையின்கீழ் நடந்த திருமணம், பின்னாளில் தம்பதியினர் வேறொரு நாட்டில் குடிபெயர்ந்து வாழும்போது உருவாகின்றன. வெளிநாட்டில் பெறப்பட்ட விவாகரத்து அந்த நாட்டில் திருமண நிலையை முடிவு செய்யலாம், ஆனால் இந்தியாவில் அதன் அங்கீகாரம் என்பது அந்த திருமணத்திற்கு பொருந்தும் சட்டம் மற்றும் அந்த வெளிநாட்டு நீதிமன்றத்திற்கு உரிய அதிகாரம் இருந்ததா என்பதைப் பொறுத்தே அமையும் என்றும் சுட்டிக்காட்டப்படுகிறது.
ஒய். நரசிம்ம ராவ் vs ஒய். வெங்கட லட்சுமி (1991) (Y. Narasimha Rao vs Y. Venkata Lakshmi (1991)) என்ற வழக்கில் உச்சநீதிமன்றம் இது குறித்துத் தெளிவுபடுத்தியுள்ளது. திருமணத் தகராறுகளைத் தீர்க்கும் அதிகாரம், சம்பந்தப்பட்ட நபர்களின் தனிநபர் சட்டம் மற்றும் அவர்கள் வசிக்கும் இடத்தின் அடிப்படையில் அமைந்த நீதிமன்றங்களுக்கே உண்டு என்று நீதிமன்றம் கூறியுள்ளது.
வெளிநாட்டில் விவாகரத்து கோருவது இந்திய திருமணச் சட்டத்தைப் புறக்கணிக்கும் ஒரு முயற்சியாகும் என்ற கொள்கையின் அடிப்படையில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
வெளிநாட்டு நீதிமன்றத் தீர்ப்புகளை அங்கீகரிப்பதைக் கட்டுப்படுத்தும் விதிகள் யாவை?
இந்தியாவில் வெளிநாட்டுத் தீர்ப்புகளை அமல்படுத்துவது உரிமையியல் நடைமுறைச் சட்டத்தின் மூலம் நிர்வகிக்கப்படுகிறது. சட்டப்பிரிவு 13-ன்படி, ஒரு வெளிநாட்டுத் தீர்ப்பு, அந்த நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லாதபோதோ, இந்தியச் சட்டத்தை மீறும் வகையிலோ அல்லது மோசடி மூலம் பெறப்பட்டிருந்தாலோ, அது இறுதியானதாகக் கருதப்படாது. சட்டப்பிரிவு 14-ன்படி, ஒரு வெளிநாட்டுத் தீர்ப்பை வழங்கிய நீதிமன்றத்திற்கு உரிய அதிகாரம் இருந்ததாகவே இந்திய நீதிமன்றங்கள் கருதும்; ஆனால், அதற்கு எதிரான ஆதாரங்கள் இருந்தால் அதை மாற்றியமைக்கலாம். சட்டப்பிரிவு 44A-ன்படி, இந்தியாவுடன் ஒப்பந்தம் செய்துள்ள நாடுகளின் தீர்ப்புகளை இந்தியாவில் அமல்படுத்த முடியும் என்றும் ஆனால், அத்தீர்ப்புகள் சட்டப்பிரிவு 13-ல் கூறப்பட்டுள்ள நிபந்தனைகளுக்கு உட்பட்டிருக்க வேண்டும் என்றும் விதிகள் வரையறுக்கப்பட்டுள்ளன.
கிறிஸ்தவ திருமணங்களைப் பொறுத்தவரை, சட்டமானது திருமணச் சடங்கு மற்றும் திருமண ரத்து ஆகிய இரண்டையும் தனித்தனியாகப் பிரிக்கிறது. இந்தச் சட்டப்பிரிவு 88-ன் படி, தம்பதியரில் யாரேனும் ஒருவருடைய தனிப்பட்ட மதம் சார்ந்த சட்டம் ஒரு திருமணத்தைத் தடை செய்தால், இந்தச் சட்டத்திலுள்ள எந்த ஒரு விதியும் அந்தத் திருமணத்தைச் செல்லுபடியாக்க முடியாது என்பதைத் தெளிவுபடுத்துகின்றனர்.
இதன் பொருள் என்னவென்றால், திருமண நிலையைவிட தனிநபர் சட்டத்திற்கே முன்னுரிமை அளிக்கப்படுகிறது. ஒரு திருமணம் எப்படி நடத்தப்பட வேண்டும் என்பதை அந்தந்த சட்டப்பிரிவுகள் தீர்மானிக்கின்றன. ஆனால், அந்தத் திருமணத்தை எந்த அடிப்படையில் ரத்து செய்யலாம் அல்லது விவாகரத்து வழங்கலாம் என்பதை விவாகரத்துச் சட்டம் (Divorce Act) தீர்மானிக்கிறது.
இந்திய நீதிமன்றங்களும் வெளிநாட்டு நடவடிக்கைகளும்
இந்திய நீதிமன்றங்கள், "வழக்குத் தொடர்வதைத் தடுக்கும் தடை உத்தரவுகள்" (Anti-suit injunctions) எனப்படும் உத்தரவுகள் மூலம், வெளிநாட்டு நீதிமன்றங்களில் தொடரப்படும் வழக்குகளை நிறுத்தி வைக்க அதிகாரம் கொண்டுள்ளன. குறிப்பாக, திருமணங்கள் இந்தியத் தனிநபர் சட்டத்தின்கீழ் வரும்போது, கணவன் அல்லது மனைவி இருவரில் யாரேனும் ஒருவர் வெளிநாட்டு நீதிமன்றத்தை நாடினால், அதைத் தடுக்க இத்தகைய உத்தரவுகள் பெரும்பாலும் பயன்படுத்தப்படுகின்றன.
மோடி என்டர்டெயின்மென்ட் நெட்வொர்க் vs டபிள்யூஎஸ்ஜி கிரிக்கெட் (Modi Entertainment Network vs WSG Cricket) வழக்கில் உச்சநீதிமன்றம் வழிகாட்டுதல் விதிகளை வகுத்துள்ளது. அத்தகைய நிவாரணம் (தடை ஆணை) நீதிமன்றத்தின் விருப்பத்திற்குட்பட்டது என்றும், அதை எச்சரிக்கையுடன் பயன்படுத்த வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. ஒரு தரப்பினரைத் தடுப்பதற்கு முன், அந்த நபர் தனது அதிகார வரம்பிற்குள் உட்பட்டிருப்பதை நீதிமன்றம் உறுதிசெய்ய வேண்டும். மேலும், இந்தத் தடையை விதிக்க மறுத்தால் அது நீதிக்குக் கேடு விளைவிக்கும் என்பதையும் நீதிமன்றம் கவனிக்க வேண்டும். நீதிமன்றங்கள் 'Comity' எனப்படும் சர்வதேச நீதிமன்றங்களுக்கு இடையிலான பரஸ்பர மரியாதையையும் கருத்தில் கொள்ள வேண்டும். இருப்பினும், வெளிநாட்டு வழக்கு ஒருவரைத் துன்புறுத்தும் விதமாகவோ அல்லது தேவையற்றதாகவோ இருந்தால், இந்திய நீதிமன்றங்கள் தலையிடலாம் என்றும் கூறப்படுகிறது.
இந்தக் கருத்தை விவேக் ராய் குப்தா vs நியதி குப்தா (Vivek Rai Gupta v. Niyati Gupta) என்ற வழக்கில் நீதிமன்றம் விளக்கிக் கூறியது. உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடையாக அந்த வழக்கை மேற்கொண்டு தொடர வேண்டாம் என்று உத்தரவிட்டிருந்த போதிலும், மனைவி அமெரிக்காவின் ஓஹியோ (Ohio) நீதிமன்றத்தில் விவாகரத்து மற்றும் பராமரிப்புத் தொகைப் பெற்றுக்கொண்டார். இதனை வேண்டுமென்றே செய்யப்பட்ட நீதிமன்ற உத்தரவு மீறல் என்று குறிப்பிட்ட இந்திய நீதிமன்றம், அந்த வெளிநாட்டுத் தீர்ப்பை இந்தியாவில் அமல்படுத்த அனைத்து இந்திய நீதிமன்றங்களுக்கும் தடை விதித்தது. இது வெளிநாட்டில் வழங்கப்பட்ட உத்தரவை ரத்து செய்யவில்லை; ஆனால், அந்த உத்தரவின் மூலம் இந்தியாவில் உள்ள சட்டப்பூர்வ உரிமைகளில் எந்த மாற்றமும் ஏற்படாது என்பதை உறுதி செய்தது.
ஒரு வெளிநாட்டு நீதிமன்றத் தீர்ப்பு இந்தியாவில் அமல்படுத்தப்படும்போது, அதனால் பாதிக்கப்படும் தரப்பினர் அதை எதிர்க்கும் உரிமையைப் பெற்றுள்ளனர். இந்திய நீதிமன்றம் ஏற்கனவே தடையுத்தரவு பிறப்பித்த பிறகு அந்த வெளிநாட்டுத் தீர்ப்பு வழங்கப்பட்டிருந்தால், அது ‘இந்தியாவில் செல்லாது’ என்று அந்த நபர் வாதிடலாம் என உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது. அத்தகைய சூழலில், அந்த ஆட்சேபனையை ஆய்வு செய்து, ஏற்கனவே உள்ள தடையுத்தரவின் தாக்கத்தைக் கருத்தில் கொண்டு சட்டப்படி முடிவெடுப்பது சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தின் கடமையாகக் கருதப்படுகிறது.
இருப்பினும், இந்த அதிகாரத்திற்கு சில எல்லைகள் உள்ளன. ஒரு தீர்ப்பு எந்த நாட்டில் வழங்கப்பட்டதோ, அந்த நாட்டில் அது எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது என்பதையோ அல்லது அங்குள்ள சொத்துக்கள் விற்கப்படுவதைத் தடுப்பதையோ இந்திய நீதிமன்றங்களால் கட்டுப்படுத்த முடியாது. இந்திய நீதிமன்றங்களின் அதிகாரம் அந்த நபர் மீதானது மட்டுமே. எனவே, இந்திய நீதிமன்றத்தின் உத்தரவை மீறி வெளிநாட்டில் ஒரு தீர்ப்பு பெறப்பட்டிருந்தால், அந்தத் தீர்ப்பின் மூலம் கிடைக்கும் பலன்களை அந்த நபர் இந்தியாவில் அனுபவிப்பதை மட்டுமே இந்திய நீதிமன்றங்களால் தடுக்க முடியும் என்பதையும் தெளிவுபடுத்துகின்றனர்.
இத்தகைய வெளிநாட்டுத் தீர்ப்புகளை அங்கீகரிக்க அல்லது நடைமுறைப்படுத்த மறுப்பது, நேர்மை மற்றும் நீதியின் அடிப்படையிலானது. இந்திய நீதிமன்றத்தின் தடையுத்தரவை மதிக்காமல், வேறொரு நாட்டில் நிவாரணம் பெறுபவர், இந்திய நீதிமன்றங்களின் உதவியை நாடும் உரிமையை இழக்கக்கூடும் என்று நீதிமன்றங்கள் கூறியுள்ளன. எனவே, ஒரு வெளிநாட்டுத் தீர்ப்பு அந்த நாட்டில் செல்லுபடியாகும் என்றாலும் அது இந்திய நீதிமன்றத்தின் உத்தரவை மீறிப் பெறப்பட்டிருந்தால், இந்தியாவில் அதை நடைமுறைப்படுத்த முடியாது என்றும் கூறப்படுகிறது.
Original article : Can Indian courts stop divorce proceedings abroad? A plea in top court raises a recurring question. -Amaal Sheikh