சரியான நடைமுறைகளைப் பின்பற்றாமல், ஆயிரக்கணக்கான மத்திய மற்றும் மாநில அரசு அதிகாரிகளுக்கு சமூக வலைதளப் பதிவுகளை நீக்கும் மற்றும் முடக்கும் அதிகாரத்தை ‘சஹ்யோக் வலைதளம்’ சட்டவிரோதமாக வழங்கியுள்ளதாக மனுதாரர்கள் குணால் கம்ரா மற்றும் ஹரேஷ் ஜக்தியானி குற்றம் சாட்டியுள்ளனர்.
கடந்த வெள்ளிக்கிழமையன்று, நகைச்சுவை கலைஞர் குணால் கம்ரா மற்றும் மூத்த வழக்கறிஞர் ஹரேஷ் ஜக்டியானி ஆகியோர் மும்பைவ உயர்நீதிமன்றத்தை அணுகினர். இந்தியாவின் விரிவடைந்து வரும் இணைய தணிக்கை முறையில் ஒரு முக்கிய கருவியாக மாறியுள்ள, சர்ச்சைக்குரிய 'சஹ்யோக் வலைதளத்தை' எதிர்த்து அவர்கள் இந்த வழக்கைத் தொடர்ந்துள்ளனர்.
சமூக ஊடக நிறுவனங்கள் மற்றும் பிற இணையதள இடைத்தரகர்கள், அத்தகைய தவறான தகவல்களை 36 மணி நேரத்திற்குள் நீக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தும் தகவல் தொழில்நுட்ப விதிகளின் திருத்தத்தையும் அவர்கள் எதிர்த்து வழக்கு தொடர்ந்துள்ளனர்.
உயர்நீதிமன்றத்தின் இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு, இந்த வழக்கை மார்ச் மாதம் 16-ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளும் என்று கூறப்படுகிறது.
சஹ்யோக் வலைத்தளம் எவ்வாறு செயல்படுகிறது, திருத்தப்பட்ட தகவல் தொழில்நுட்ப விதிகள் எதை வலியுறுத்துகின்றன, மற்றும் இவை இரண்டிற்கும் எதிராக எழுப்பப்பட்டுள்ள கேள்விகள் என்ன என்று விவரிக்கப்பட்டுள்ளது.
சஹ்யோக் வலைத்தளம் என்றால் என்ன?
மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், உள்துறை அமைச்சகத்துடன் இணைந்து உருவாக்கிய சஹ்யோக் வலைத்தளம், தகவல் தொழில்நுட்பச் சட்டம், 2000-ன்கீழ் (Information Technology (IT Act, 2000)) இணையதளங்களில் உள்ள "ஆட்சேபனைக்குரிய உள்ளடக்கங்களை" விரைவாக முடக்குவதற்காக 2024-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.
இந்த வலைத்தளம், அங்கீகரிக்கப்பட்ட அனைத்து இடைநிலை அமைப்புகளையும் ஒரே இடத்தில் ஒருங்கிணைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இதன் மூலம், சட்டவிரோதமான இணையதளத் தகவல்கள்மீது விரைவாகவும் தானியங்கி முறையிலும் நடவடிக்கை எடுக்க முடியும் என்கின்றனர்.
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் (Right To Information Act (RTI)) தி இந்தியன் எக்ஸ்பிரஸ் பெற்ற தரவுகளின்படி, அக்டோபர் மாதம் 2024-ஆம் ஆண்டு முதல் அக்டோபர் மாதம் 2025-ஆம் ஆண்டு வரை வாட்ஸ்அப், பேஸ்புக், யூடியூப் மற்றும் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட 19 இணையதள நிறுவனங்களுக்கு, இந்த வலைத்தளம் மூலமாக 2,300-க்கும் மேற்பட்ட தடுப்பு உத்தரவுகள் அனுப்பப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.
சுமார் 118-க்கும் மேற்பட்ட இடைநிலை அமைப்புகள் 'சஹ்யோக்' வலைத்தள அமைப்பில் இணைந்துள்ளதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன. இதன்மூலம், அரசாங்கத்தின் உள்ளடக்க நீக்க உத்தரவுகளை பின்பற்ற வேண்டிய கட்டாயத்தில் அதிகளவிலான இணையதளங்கள்/தளங்கள் இருப்பது தெரியவருகிறது. இந்த முடக்க உத்தரவுகள் மத்திய, மாநில மற்றும் யூனியன் பிரதேச அமைப்புகளால் பிறப்பிக்கப்பட்டுள்ளன.
சஹ்யோக் வலைத்தளம் சட்டச் சிக்கல்களைச் சந்திப்பது இது முதல் முறையல்ல என்றும் கூறப்படுகிறது.
முன்பு டிவிட்டர் (Twitter) என்று அழைக்கப்பட்ட எக்ஸ் (X) சமூக ஊடகத் தளம், அந்த வலைத்தளத்திற்கு எதிராக கர்நாடக உயர் நீதிமன்றத்தை அணுகியது. செப்டம்பர் மாதம் 2025-ஆம் ஆண்டில், நீதிமன்றத்தின் தனி நீதிபதி அமர்வு அந்த இணையதளத்தின் செல்லுபடியாகும் தன்மையை உறுதி செய்தது. தற்போது எக்ஸ் (X) நிறுவனத்தின் மேல்முறையீடு இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வின் முன் நிலுவையில் உள்ளதாகவும் கூறப்படுகிறது.
சர்ச்சைக்குரிய திருத்தப்பட்ட தகவல் தொழில்நுட்ப விதி
கடந்த அக்டோபர் மாதம் 2025-ஆம் ஆண்டில், மத்திய அரசு தகவல் தொழில்நுட்ப (IT) விதிகளின் விதி 3(1)(d)-ஐத் திருத்தியது. இதன்படி, சட்டவிரோதமான செயல்களுக்குப் பயன்படுத்தப்படும் தகவல்களைப் பற்றி 'உண்மையான அறிவுறுத்தல்' (Actual Knowledge) கிடைத்த 36 மணி நேரத்திற்குள், இடைநிலை நிறுவனங்கள் அந்தத் தகவல்களை நீக்க வேண்டும் அல்லது அதற்கான அணுகலைத் தடுக்க வேண்டும் என்று விதிகளைத் திருத்தி வெளியிட்டது.
"உண்மையான அறிவுறுத்தல்" என்பது நீதிமன்ற உத்தரவுகள் அல்லது அங்கீகரிக்கப்பட்ட மூத்த அதிகாரிகளிடமிருந்துவரும் எழுத்துப்பூர்வமான அறிவிப்புகள் மூலம் கிடைப்பதாகும். அந்த அறிவிப்புகளில் சட்டபூர்வமான அடிப்படை, சம்பந்தப்பட்ட சட்டம், சட்டவிரோதச் செயலின் தன்மை மற்றும் அந்தத் தகவலின் துல்லியமான இணைய முகவரி (URL அல்லது அடையாளம்) ஆகியவை தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும் என்றும் தெளிவுபடுத்தியுள்ளது.
திருத்தப்பட்ட விதியானது கடந்த நவம்பர் மாதம் 15-ஆம் தேதி, 2025-ஆம் ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட்டது. சட்டவிரோதமான உள்ளடக்கங்களை இடைநிலை அமைப்புகள் வெளிப்படையான, முறையான மற்றும் பொறுப்பான முறையில் நீக்குவதை உறுதிசெய்ய, கூடுதல் பாதுகாப்பு அம்சங்களைச் சேர்த்துள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
சவால்களும் ஆட்சேபனைகளும்
மனுதாரர்களான கம்ரா மற்றும் ஜக்தியானி, சஹ்யோக் வலைத்தளத்தின் செயல்பாடு சட்டவிரோதமானது என்று குற்றம் சாட்டியுள்ளனர். தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் (IT Act) விதிமுறைகளை பின்பற்றாமல், மத்திய மற்றும் மாநில அரசு அதிகாரிகள் ஆயிரக்கணக்கானோருக்கு, இணையதளப் பக்கங்களை உடனடியாக முடக்க அல்லது நீக்க இந்த வலைத்தளம் அதிகாரம் அளிப்பதாக அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
திருத்தப்பட்ட தகவல் தொழில்நுட்ப விதிகளின்படி, சம்பந்தப்பட்ட உள்ளடக்கப் படைப்பாளர்களுக்கு (content creators) எந்தவித முன்னறிவிப்போ அல்லது விளக்கமளிக்கும் வாய்ப்போ வழங்காமல், நியமிக்கப்பட்ட அதிகாரிகளின் உத்தரவின் மூலம் இணையதளத்தில் பகிரப்பட்ட தகவல்களை ஒருதலைப்பட்சமாக நீக்கவோ அல்லது முடக்கவோ இந்த வலைத்தளம் வழிவகுக்கிறது.
அவர்களின் கருத்துப்படி, இந்த விதிகள் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் பிரிவு 69A மற்றும் 2009-ஆம் ஆண்டின் தடுப்பு விதிகளுக்கு இணையாக ஒரு உள்ளடக்கத்தை அகற்றும் முறையை உருவாக்குகின்றன. ஆனால், இதில் பாதுகாப்பு வழிமுறைகள் ஏதும் இல்லை என்றும் சுட்டிக்காட்டுகின்றனர்.
நீதிமன்ற முறையீடுகளுக்கு உட்படுத்தப்பட்ட முடிவுகள் இந்திய அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 19(1)(g) வழங்கும் உரிமைகளான, எந்தவொரு தொழிலையும் செய்வதற்கோ அல்லது எந்தவொரு தொழில், வர்த்தகம் அல்லது வணிகத்தை மேற்கொள்வதற்கோ உள்ள உரிமையையும் மற்றும் 14-வது சட்டப்பிரிவின்கீழ் வழங்கப்படும் சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்கிற அடிப்படை உரிமைகளை மீறுகின்றன என்று மனுதாரர்கள் தெரிவித்தனர்.
அரசு அதிகாரிகளுக்கு இத்தகைய அதிகாரங்களை வழங்குவது, அரசியலமைப்புச் சட்டத்தால் அனுமதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளைத் தாண்டி, பேச்சுரிமையின் மீது இந்திய அரசியலமைப்பிற்கு முரணான மற்றும் நியாயமற்ற கட்டுப்பாட்டை உருவாக்குகிறது என்று மனுதாரர்கள் வாதிட்டனர்.
தகவல் தொழில்நுட்ப விதி 3(1)(d) மற்றும் சஹ்யோக் வலைத்தளம் ஆகியவை, இணையத்தில் உள்ள அனைத்து தகவல்களையும் எப்போது வேண்டுமானாலும் தன்னிச்சையாக நீக்கக்கூடிய அபாயத்தை உருவாக்குகின்றன. இத்தகைய நடவடிக்கைகளுக்கு எதிராக முறையிட எந்த வழிமுறைகளும் தெளிவுபடுத்தப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. மேலும், இது ஆயிரக்கணக்கான மத்திய மற்றும் மாநில அரசு அதிகாரிகளுக்கு இணையத் தகவல்களின் மீது கட்டுப்பாடற்ற அதிகாரத்தை வழங்குகிறது. இது ஜனநாயகத்திற்கும், குடிமக்களின் தகவல் அறியும் உரிமைக்கும் தீங்கு விளைவிப்பதாக அந்த மனுக்கள் தெரிவிக்கின்றன.
மனுதாரர்களின் கோரிக்கைகள்
இணையதள பக்கங்களை முடக்குவதற்கான தடுப்பு உத்தரவுகளைப் பிறப்பிக்கும் அதிகாரத்தை திருத்தப்பட்ட விதியானது 3(1)(d) வழங்கவில்லை என்று மும்பை உயர்நீதிமன்றம் அறிவிக்க வேண்டும் என்று மனுதாரர்கள் கேட்டுக்கொண்டனர்.
கம்ரா மற்றும் ஜக்தியானி ஆகியோரின் தனித்தனி மனுக்களில், தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் பிரிவு 79(3)(b) தகவல்களைத் தடுக்கும் உத்தரவுகளைப் பிறப்பிக்க அதிகாரம் வழங்கவில்லை என்று நீதிமன்றம் அறிவிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டனர்.
சஹ்யோக் வலைத்தளத்தை உடனடியாக முடக்கி, நீக்க வேண்டும் என்று நீதிமன்றத்தைக் கேட்டுக்கொண்டனர். இந்த வழக்கு இறுதி முடிவுக்கு வரும் வரை, அந்த வலைத்தளத்தைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த மனுக்கள் நிலுவையில் உள்ள நிலையில், திருத்தப்பட்ட விதி 3(1)(d)-ஐ அதிகாரிகள் செயல்படுத்துவதைத் தடுக்கவும், தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் (IT Act) பிரிவு 69A-ன்கீழ் தேவைப்படும் நடைமுறை இல்லாமல் எந்த அரசு அதிகாரியும் தகவல் முடக்கம் அல்லது நீக்க உத்தரவுகளைப் பிறப்பிக்க முடியாது என்ற உத்தரவையும் மனுதாரர்கள் இடைக்கால நிவாரணமாகக் கோரியுள்ளனர்.
Original article : Why Kunal Kamra approached Bombay HC against Sahyog Portal, amended IT Rules?. -Omkar Gokhale