2025-கடற்படை தினம், இந்திய கடற்படை வங்காளதேசப் போர்: அதைத் தொடர்ந்து டிசம்பர்-4 அன்று கடற்படை தினமாகக் கடைப்பிடிக்க வழிவகுத்த ‘ஆபரேஷன் ட்ரைடண்ட்’ (Operation Trident) என்றால் என்ன?
கடற்படை தினம் 2025 ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 4-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. வியாழக்கிழமை அன்று, இந்திய ஆயுதப் படைகளின் உச்ச தளபதியான குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, கடற்படை வீரர்கள், முன்னாள் வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு வாழ்த்து தெரிவித்தார்.
நம் நாட்டின் கடல் எல்லைகளையும், தேசிய நலன்களையும் துணிச்சலுடனும் அர்ப்பணிப்புடனும் பாதுகாக்கும் வீரமிக்க ஆண்களையும் பெண்களையும் தேசம் வணங்குவாதாகத் அவர் தெரிவித்தார்.
இந்த நினைவு நாளின் தேதி காலப்போக்கில் மாறி உள்ளது. ராயல் இந்தியன் கடற்படை (Royal Indian Navy) தனது முதல் கடற்படைத் தினத்தை அக்டோபர் மாதம் 21-ஆம் தேதி, 1944-ஆம் ஆண்டு அனுசரித்தது. 1945-ஆம் ஆண்டு காலக்கட்டத்தில், அது பம்பாய் (இப்போது மும்பை) மற்றும் கராச்சியில் டிசம்பர் 1-ஆம் தேதி கொண்டாடப்பட்டது. சுதந்திரத்திற்குப் பிறகு 1972-ஆம் ஆண்டு வரையிலும் டிசம்பர் மாதம் 15-ஆம் தேதி கடைப்பிடிக்கப்பட்டது. அப்படியானால், இறுதியாக டிசம்பர் 4 ஏன் தேர்ந்தெடுக்கப்பட்டது?
இந்தியா-பாகிஸ்தான் போரின் போது நடத்தப்பட்ட ஆப்ரேஷன் ட்ரைடென்ட்
டிசம்பர் மாதம் 4-ஆம் தேதி நினைவுகூரப்படும் கடற்படை தினமானது, 1971-ஆம் ஆண்டு வங்காளதேச விடுதலைப் போரின்போது கராச்சி துறைமுகத்தில் இருந்த பாகிஸ்தான் கப்பல்களுக்கு இந்தியக் கடற்படை பெரும் சேதத்தை ஏற்படுத்திய ஆப்ரேஷன் டிரைடென்ட் (Operation Trident) நடவடிக்கையைக் குறிக்கிறது.
கடற்படை நடவடிக்கை தொடங்குவதற்கு ஒரு நாள் முன்பு, பாகிஸ்தான் விமானப்படை மேற்கு இந்தியாவில் உள்ள விமான நிலையங்களைத் தாக்கியபோது போர் தொடங்கியது. இதற்குப் பதிலடியாக, இந்தியா, டிசம்பர் 4-ஆம் தேதி அதிகாலையில் போரை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
ஆபரேஷன் ட்ரைடென்ட் (Operation Trident) நடவடிக்கையின்போது, இந்திய கடற்படையானது புதிதாகப் பெறப்பட்ட சோவியத் ஓசா ஏவுகணைப் படகுகளைப் பயன்படுத்தி, கராச்சிக்கு அருகில் மூன்று கப்பல்களை மூழ்கடித்தது. இந்தப் படகுகளில் நான்கு SS-N-2 (P-15) ஸ்டைக்ஸ் வகை ஏவுகணைகள் பொருத்தப்பட்டிருந்தன.
இந்தியா கடற்படைக் கப்பல் கில்டான் (Indian Navy Ship (INS Kiltan)), கட்சால் (Katchall), நிபாட் (Nipat), நிகாட் (Nighat), மற்றும் வீர் (Veer) ஆகியவை பாகிஸ்தான் கடற்படைக் கப்பலான கைபர் (Pakistan Naval Ship (PNS Khaibar)) கப்பலை மூழ்கடித்தன. இதில் 222 பாகிஸ்தான் மாலுமிகள் கொல்லப்பட்டனர். மேலும்,. பாகிஸ்தான் கடற்படைக் கப்பல் முஹாஃபிஸ் (PNS Muhafiz) மூழ்கடிக்கப்பட்டது; இதில் 33 மாலுமிகள் கொல்லப்பட்டனர். அத்துடன், வணிகக் கப்பலான எம்.வி. வீனஸ் சேலஞ்சர் (Merchant Vessel (MV) Venus Challenger) மூழ்கடிக்கப்பட்டது. இதே நாளில், இந்திய விமானப்படை கராச்சியின் கெமாரி எண்ணெய் சேமிப்புக் கலன்கள் மீது தாக்குதல் நடத்தியது. இது ஒரு தனிப்பட்ட நடவடிக்கை என்றாலும், இந்திய விமானப்படை இதன் பொறுப்பை ஏற்கவில்லை. இருப்பினும், இந்த தாக்குதல் ஆபரேஷன் ட்ரைடென்ட் (Operation Trident) நடவடிக்கையில் ஒரு முக்கியப் பங்காற்றியதாகத் தெரிவித்தனர்
டிசம்பர் மாதம் 5-ஆம் தேதி, இந்தியக் கடற்படையின் மேற்குப் பிராந்தியத் தலைமை அதிகாரி வைஸ் அட்மிரல் எஸ்.என். கோலிக்கு, “அங்கார்” என்ற குறியீட்டுச் சொல் கிடைத்தது. இது அந்த நடவடிக்கை வெற்றி பெற்றதற்கான அறிகுறிச் சொல் ஆகும். 1971-ஆம் ஆண்டு போர், டிசம்பர் மாதம் 16-ஆம் தேதி முடிவடைந்தது. அன்றைய தினம், மாலை 4:55 மணிக்கு டாக்காவில் பாகிஸ்தானின் ஜெனரல் ஏ.ஏ.கே. நியாசி சரணடைய கையெழுத்திட்டார். அப்போது ஜெனரல் ஜெ.எஸ். அரோரா அதைப் பார்த்துக் கொண்டிருந்தார். இந்த கணம் போரின் நீடித்த அடையாளமாக இன்றும் உள்ளது.
ஆபரேஷன் ட்ரைடென்ட்' கடற்படை நடவடிக்கையின் முதன்மையான அம்சங்கள்
இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் முன்னதாக செய்தி வெளியிட்டதைப் போல, இந்தத் தாக்குதல்களின் பல அம்சங்கள் புதியவை. இதில், இப்பகுதியில் முதன்முறையாக ஏவுகணைகளைப் பயன்படுத்தியது, ஏவுகணை தூரத்தை அதிகரிக்க பெரிய கப்பல்களால் இழுத்துச் செல்லப்பட்டது, புத்திசாலித்தனமான தகவல் தொடர்பு முறைகள் மூலம் வானொலி அலை முடக்கத்தைக் (radio silence) கடைப்பிடிப்பது, மற்றும் கடலோர பாதுகாப்புப் படகுகளை தாக்குதலுக்கு பயன்படுத்தியது ஆகியன குறிப்பிடப்படுகின்றன.
ஏவுகணைப் படகுக் குழுவினர் ரஷ்யாவில் பயிற்சி பெற்றிருந்ததால், அவர்களுக்கு ரஷ்ய மொழி நன்கு தெரிந்திருந்தது. இந்த மொழியை அவர்கள் ரேடியோ தகவல்தொடர்புகளுக்குப் பயன்படுத்தினர். இது பாகிஸ்தான் புலனாய்வுப் பிரிவை ஏமாற்றியது. 'வினாஷ்' கப்பலின் தலைவரான விஜய் ஜெரத் அவர்கள், இந்த நடவடிக்கையின்போது காட்டிய பொறுமை மற்றும் தலைமைத்துவ நடவடிக்கைக்காக 'வீர சக்ரா' விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார். இந்திய கடற்படை ஏற்கனவே முழுமையான கடல் ஆதிக்கத்தை பெற்றுவிட்டதால், டிசம்பர் மாதம் 10-ஆம் தேதி திட்டமிடப்பட்டிருந்த மூன்றாவது ஏவுகணைத் தாக்குதலான “ஆபரேஷன் ட்ரையம்ப்” (Operation Triumph) ரத்து செய்யப்பட்டதாகத் தெரிவிக்கின்றனர்.
இந்த நடவடிக்கையை வழிநடத்திய அதிகாரிகளைவிடவும், முன்னதாகச் செய்யப்பட்ட மேம்பாடுகளும் திட்டமிடலுமே பாராட்டப்பட வேண்டும் என்று கடற்படை அதிகாரியான அன்குஷ் பானர்ஜி, இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் குறிப்பிட்டுள்ளார்.
1965 மற்றும் 1971-ஆம் ஆண்டுகளுக்கு இடையில், இந்தியா தன்னைச் சுற்றி இருந்த வளங்கள் மற்றும் அச்சுறுத்தல்களை கவனத்தில் கொண்டு, தனது கடற்படை நிலையை எப்படி பலப்படுத்துவது என்று கவனமாகத் திட்டமிட்டது. இந்த 'மௌனமான' ஆண்டுகளில், அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் உருவாக்கப்பட்டன, புதிய தளங்கள் (கப்பல்கள்/விமானங்கள் போன்றவை) வாங்கப்பட்டன, மேலும், நடைமுறை அறிவு மேலாண்மை அமைப்புகள் நிறுவப்பட்டதாகத் தெரிவிக்கின்றனர்.
உதாரணமாக, 1969 மற்றும் 1970-ஆம் ஆண்டுக்கு இடையில், இந்தியா ஐந்து பெட்யா வகை நீர்மூழ்கிக் கப்பல் எதிர்ப்புப் போர்க் கப்பல்களை (கமோர்தா (Kamorta), கத்மத் (Kadmatt), கில்டான் (Kiltan), கவரத்தி (Kavaratti), கட்சால் (Katchall), நான்கு நீர்மூழ்கிக் கப்பல்களை (கல்வேரி (Kalveri), காண்டேரி (Khanderi), கரஞ்ச் (Karanj), குர்சுரா (Kursura)), நிஸ்தார் (Nistar) என்ற நீர்மூழ்கிக் கப்பல் மீட்புக் கலத்தை, போலந்தில் கட்டப்பட்ட இரண்டு தரையிறங்கும் கப்பல்களை (கரியால் (Gharial), குல்டார் (Guldar)), மற்றும் ஐந்து ரோந்துக் கப்பல்களை (பன்வேல், புலிகாட், பனாஜி, பாம்பன், பூரி) வாங்கியது. 1970-71 ஆம் ஆண்டில், எட்டு சோவியத் ஏவுகணைக் கப்பல்கள் (நாஷக் (Nashak), நிபாட் (Nipat), நிர்பிக் (Nirbhik), வினாஷ் (Vinash), வீர் (Veer), விஜேதா (Vijeta), வித்யுத் (Vidyut)) வெவ்வேறு கட்டங்களில் ஏற்கப்பட்டு, வழங்கப்பட்டுக் கொண்டிருந்ததாகக் குறிப்பிடப்படுகின்றன.
இதன் விளைவாக, இந்த நடவடிக்கையின்போது, இந்திய தரப்புக்கு எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை. டிசம்பர் மாதம் 8-ஆம் தேதி, ஆபரேஷன் பைதான் (Operation Python) தொடங்கப்பட்டது. இதனால், ஏற்பட்ட பெரும் சேதங்கள் பாகிஸ்தான் கடற்படையின் மன உறுதியை பெரிதும் பாதித்தது என்கின்றனர். இதன் காரணமாக டிசம்பர் 9-ஆம் தேதி ஏற்படும் வெடிப்பு சேதத்தைக் குறைக்க, பாகிஸ்தான் கப்பல்களில் உள்ள வெடிமருந்துகளைக் குறைக்க உத்தரவிடப்பட்டதாகக் கூறப்படுகிறது.
original link:
Navy Day 2025: Story of Operation Trident, the 1971 Bangladesh War operation commemorated today.