நான்கு ஆண்டுகால கடுமையான முயற்சியின் வெற்றியாக, நவம்பர் 1-ஆம் தேதி, கேரள அரசு முற்றிலும் வறுமை இல்லாத மாநிலமாகத் தன்னை அறிவிக்க உள்ளது. மாநிலம் முழுவதும் நான்கு லட்சம் கணக்கெடுப்பாளர்கள் தொடர்ந்து பணியாற்றி, மிகவும் விளிம்புநிலையில் உள்ள மக்களை அடையாளம் கண்டனர். பின்னர், உள்ளாட்சி அமைப்புகள் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஏற்றவாறு பல நலத்திட்டங்களை வகுத்தனர். இந்தத் திட்டம் 1,03,099 எண்ணிக்கையிலான மக்களை அதீத வறுமையிலிருந்து மீட்டெடுத்ததாக அரசாங்கம் கூறுகிறது. எஸ்.ஆர். பிரவீன் சில பயனாளிகளுடன் கலந்தலோசித்து இது சார்ந்த எதிர்ப்புக் குரல்களையும் கேட்டறிகிறார்.
திருவனந்தபுரத்தில் உள்ள செல்லமங்கலம் பகுதியில் உள்ள அம்பிகா தேவியின் வீட்டில் ஒரு மளிகைக் கடை அமைக்கப்பட்டுள்ளது. 57 வயதான அந்தக் கைம்பெண்ணின் உடல்நிலைக்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்டு, அவரது வாழ்வாதாரத்திற்குத் தேவையான வகையில் இந்தக் கடைக்குத் தேவையான நிதி, கேரள அரசின் அதீத வறுமை ஒழிப்புத் திட்டத்தின் (Extreme Poverty Eradication Programme (EPEP)) மூலம் வழங்கப்பட்டுள்ளது.
"ஏழு வருடங்களுக்கு முன்பு என் கணவர் நோயால் பாதிக்கப்பட்டு இறந்த பிறகு, நான் எங்கள் பாழடைந்த வீட்டில் வசித்து வந்தேன். ஆனால், அதன் ஒரு பகுதி இடிந்து விழுந்தவுடன், நான் என் சகோதரியுடன் வசிக்கத் தொடங்கினேன். அங்கு நான் இரண்டு ஆண்டுகள் தங்கினேன். கடந்த செப்டம்பரில், கேரள அரசின் அதீத வறுமை ஒழிப்புத் திட்டத்தின் மூலம் இந்த வீட்டைப் பெற்றேன்," என்று அம்பிகா தெரிவித்தார்.
"டிசம்பர் மாதத்தில், என் மளிகைக் கடையைத் தொடங்குவதற்காக கேரள அரசின் திட்டத்திலிருந்து ஆரம்ப நிதியாக ரூபாய் 50,000 வழங்கப்பட்டது," என்றார். "என்னால் அதிகமாக நடக்கவோ அல்லது கடுமையான வேலை செய்யவோ முடியாது என்பதால், மாநகராட்சி அதிகாரிகள் இந்த வாய்ப்பைப் பரிந்துரைத்தனர். இப்போது, அண்டை வீட்டிலிருந்து வரும் வழக்கமான வாடிக்கையாளர்களால், அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்யப் போதுமான அளவு சம்பாதிக்க முடிகிறது." என்றார்.
நவம்பர் 1 ஆம் தேதி, கேரள அரசு வறுமையிலிருந்து முற்றிலும் விடுபட்ட மாநிலமாக அறிவிக்க உள்ளது. அத்தகைய அறிவிப்பை வெளியிடும் முதல் மாநிலம் கேரளாதான். வறுமையிலிருந்து மீட்கப்படவுள்ள 59,277 எண்ணிக்கையிலான குடும்பங்களில் அம்பிகாவும் ஒருவராக இடம்பெறுவார் என்பது குறிப்பிடத்தக்கது. 2021ஆம் ஆண்டில் நிதி ஆயோக் (NITI Aayog) நடத்திய ஆய்வில், கேரளாவின் வறுமை விகிதம் 0.7 சதவீதமாக மதிப்பிடப்பட்டது. இது நாட்டிலேயே மிகக் குறைவான விகிதமாகும். 1970ஆம் ஆண்டுகளின் தொடக்கத்தில் இருந்த 59.8 சதவீதம் இருந்த வறுமை விகிதத்தை அடுத்தடுத்து வந்த அரசுகள், தாங்கள் செயல்படுத்திய நலத்திட்டக் கொள்கைகளின் மூலம் இந்த வெற்றியைக் கண்டுள்ளனர்.
பயன்படுத்தப்பட்ட நான்கு அளவுகோல்கள்
கேரள உள்ளாட்சி நிர்வாகத்தால் வழிநடத்தப்பட்ட பங்கேற்பு மற்றும் அடிப்படையான நடவடிக்கையின் மூலம், மிகவும் விளிம்புநிலை மக்களை அடையாளம் காண்பதற்காக மாநிலம் முழுவதும் சுமார் நான்கு இலட்சம் கணக்கெடுப்பாளர்கள் அனுப்பப்பட்டனர். ஐக்கிய நாடுகள் சபையின் நிலையான மேம்பாட்டு இலக்குகளுக்கு ஏற்ப, உணவு, ஆரோக்கியம், வருமானம் மற்றும் வீட்டுவசதி ஆகிய நான்கு அளவுகோல்களின் அடிப்படையில் மக்கள் அடையாளம் காணப்பட்டனர்.
சமூகத்திலிருந்து முற்றிலும் விலக்கப்பட்டு, ஆதரவு அமைப்புகளின் பயன்கள் கிடைப்பது குறித்து அறியாமல் வாழும் பலரைக் கணக்கெடுப்பாளர்கள் கண்டனர். அவர்களில் ஒருவர் திருவனந்தபுரத்தில் உள்ள அஞ்சுதெங்குவில் ஒரு நாட்டுப் படகில் தனியாக வசித்து வந்தார். இன்னும் சிலர் தெருக்களில் வசித்து வந்தனர். பலகட்ட நடவடிக்கைக்குப் பிறகு, மாநிலம் முழுவதும் 1,03,099 நபர்களைக் கொண்ட 64,006 மிகவும் ஏழ்மையான குடும்பங்கள் அடையாளம் காணப்பட்டன. இதில், 43,850 தனி நபர்கள், அவர்களில் சிலர் தங்குமிடங்களுக்கு மாற்றப்பட்டதாக உள்ளாட்சி அரசாங்கம் (Local Self-Governments department (LSGD)) அளித்த புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
அரசு தலைமையிலான பெரும்பாலான திட்டங்கள் தீர்மானிக்கப்பட்ட கண்டிப்பான, சீரான அணுகுமுறையைப் பின்பற்றுகின்றன. இருப்பினும், அதீத வறுமை ஒழிப்புத் திட்டத்தின் மூலம் ஒவ்வொரு குடும்பத்தின் தனிப்பட்ட தேவைகளின் அடிப்படையில் 64,006 குடும்பங்களின் நலன்சார்ந்து (இறுதி எண்ணிக்கை 59,277 ஆகும், ஏனெனில் இதில் இறப்புகள், கண்டறியப்படாமை மற்றும் தொழில்நுட்பச் சிக்கல்கள் ஏற்பட்டன) நுண் திட்டங்கள் (micro-plans) தயாரிக்கப்பட்டன. சிலருக்கு இது நல்லதொரு வாழ்வாதாரத் திட்டங்களாக இருக்கின்றன. மற்றவர்களுக்குத் தொடர்ந்து மருந்துகள் விநியோகம் தேவைப்படலாம் அல்லது உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள்கூடத் தேவைப்படலாம். மேலும், இத்திட்டத்தின் மூலம் ஏழு பேர் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளைப் பெற்றுள்ளனர்.
இடுக்கியில் உள்ள மாங்குளம் கிராமப் பஞ்சாயத்தைச் சேர்ந்த 67 வயதான தாஸ் ராஜ், தனது மனைவி மற்றும் மகன் இருவருக்கும் மனநல உதவி தேவைப்படுகிறது என்று கேட்டுள்ளார். கூடுதலாக ஒரு வீடு மற்றும் வாழ்வாதாரத்திற்கான வழியும் தேவைப்பட்டது என்றும் கேட்டிருக்கிறார். “எனக்கு இதய பிரச்சினைகள் இருப்பதால், நானும் வேலைக்கு வெளியே செல்ல முடியாது. எனவே, குடும்பஸ்ரீ (Kudumbashree) திட்டத்தின்கீழ், ஒரு வீட்டையும், மூன்று ஆடுகளை வாங்க ரூபாய் 50,000-ஐயும் பெற்றோம். அதைப் பயன்படுத்தி நாங்கள் வருமானம் ஈட்ட முடியும்” என்று தாஸ் கூறுகிறார்.
வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாத, குடும்ப அடையாள அட்டை அல்லது ஆதார் அடையாள அட்டை இல்லாத பல ஒதுக்கப்பட்ட மக்களும் இந்தப் பட்டியலில் இருந்தனர். அவர்களையும் சேர்த்து ஒவ்வொரு குடும்பத்திற்கும் உடனடி, தற்காலிக மற்றும் நீண்டகாலத் திட்டங்கள் தயாரிக்கப்பட்டன.
உள்ளூர் அரசாங்கம் (Local Self-Governments department (LSGD)) அளித்த தரவுகளின்படி, 21,263 நபர்களுக்கு அத்தியாவசிய ஆவணங்களும், 3,913 குடும்பங்களுக்கு வீடுகளும், 1,338 குடும்பங்களுக்கு நிலமும் வீடும் வழங்கப்பட்டன. 5,651 குடும்பங்களுக்கு வீடு பழுதுபார்க்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. உணவுப் பொட்டலங்கள் முதல் சமைத்த உணவு வரை தடையற்ற உணவுப் பொருட்கள் மற்றும் 5,777 நோயாளிகளுக்கு நோய்த்தடுப்பு சிகிச்சையும் மருந்துகளும் வழங்கப்பட்டன. 4,394 குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவியும் வழங்கப்பட்டது.
இடுக்கி மாவட்டத்தில் உள்ள குமாரமங்கலம் பஞ்சாயத்தில் ஒரு அறை கொண்ட கொட்டகையில் வசித்துவந்த ஷாய் வர்கீஸ் (51), அவரது மனைவி சுனிதா இருவரும் பார்வைக் குறைபாடு (visually challenged) உள்ளவர்கள் மற்றும் அவர்களது மகள் ஆகியோரும் கணக்கெடுப்புகளில் மிகவும் ஏழ்மையானவர்களாக அடையாளம் காணப்பட்டனர். வீதிகளில் பாடி பிழைப்பு நடத்தி வந்த தம்பதியினர், ஷாய்க்குச் சொந்தமான மூதாதையர் நிலத்தில், வாழ்வாதார உள்ளடக்கம் மற்றும் நிதி அதிகாரம் அளித்தல் திட்டத்தின் (Livelihood Inclusion and Financial Empowerment (LIFE))கீழ் அவரது சொந்த நிலத்தில் வீடு கட்டி வழங்கப்பட திட்டம் முன்னெடுக்கப்பட்டது. ஆனால், 27 ஆண்டுகளாக காணாமல்போன ஷாயின் சகோதரர் தாங்காச்சான் கண்டுபிடிக்கப்படாமல் இருப்பதாலும் பூர்வீக நிலம் பாகப்பிரிவினை செய்யப்படாததாலும், அத்திட்டத்தை நிறைவுசெய்ய உள்ளூர் பஞ்சாயத்தால் மேற்கொண்டு எந்த நடவடிக்கையும் எடுக்க முடியவில்லை.
சில துப்பறியும் வேலைகளும் நடந்தன
27 ஆண்டுகளுக்கு முன்பு உள்ளூர் காவல்நிலையத்தில் ஒருவரைக் காணவில்லை என்று பதிவுசெய்யப்பட்ட புகாரைக் கண்டுபிடித்தனர். மூன்றுமாத காலத் தேடலுக்குப் பிறகு, தங்கச்சன் வேளாங்கண்ணியில் கண்டுபிடிக்கப்பட்டார். அங்கு அவர் ஒரு உணவகத்தில் பணிபுரிந்து வந்ததாகத் தெரிகிறது. சொத்து பாகப் பிரிவினைக்காக வீடு திரும்பும்படி அதிகாரிகள் அவரைக் கேட்டுக் கொண்டனர். பின்னர் ஷாய் மற்றும் குடும்பத்தினர் LIFE திட்டத்தின்கீழ் ஒரு வீட்டையும், குடும்பஸ்ரீ திட்டம் மூலம் அவர்களுக்கு வாழ்வாதார நலனுக்காக ஒரு இசைப்பெட்டி மற்றும் ஒலிவாங்கிகளும் (mic) வழங்கப்பட்டது என்கிறார் கிராம விரிவாக்க அலுவலர் லசீலா.
வாழ்வாதார உள்ளடக்கம் மற்றும் நிதி அதிகாரம் அளித்தல் திட்டத்திலிருந்து (Livelihood Inclusion and Financial Empowerment (LIFE)) 4 லட்சம் ரூபாய் நிதியுதவி மற்றும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டம் (Mahatma Gandhi National Rural Employment Guarantee Scheme (MGNREGS)) மூலம் ₹30,000 மதிப்புள்ள ஒரு வீட்டை முடிக்க தேவையான சிமென்ட், மின் இணைப்பு மற்றும் குழாய்ப் பணிக்கான பொருட்களையும் வழங்கினார். இத்தகைய சமூகப் பங்களிப்பானது மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இத்திட்டத்தின் சிறப்பாக இருந்து வருகிறது.
குடும்பங்கள் மீண்டும் வறுமையில் தள்ளப்படாமல் இருக்க அவர்களுக்கு வாழ்வாதாரத்தை உறுதி செய்வதிலும் அதீத வறுமை ஒழிப்புத் திட்டம் (Extreme Poverty Eradication Programme (EPEP)) கவனம் செலுத்துகிறது. கொல்லம் மாவட்டத்தில் உள்ள சாவரா பஞ்சாயத்தைச் சேர்ந்த 28 வயதான ரெம்யா என்பவரின் கணவர் பிரசாந் கோவிட்-19 தொற்றால் உயிரிழந்த பிறகு, ரெம்யாவும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். உறவினர்கள் மற்றும் தெரிந்தவர்களின் உதவியுடன் சிகிச்சை பெற முடிந்தது என்றாலும், 3 மற்றும் 4 வயதுடைய இரண்டு குழந்தைகளுடன் அன்றாட வாழ்க்கை நடத்துவதற்கு கடினமாகவே இருந்தது.
LIFE திட்டத்தின் கீழ் அவர்களுக்கு ஒரு வீடு வழங்கப்பட்டது. பஞ்சாயத்து அதிகாரிகள் ஜன சேவன கேந்திரா உதவி மையத்தில் (Jana Sevana Kendra help desk) ஒரு வேலையையும் ரெம்யாவுக்கு வழங்கினர். இது அவர் குழந்தைகளையும் கணவரின் பெற்றோரையும் கவனித்துக் கொள்ள போதுமான பணம் சம்பாதிக்க உதவுகிறது என்கிறார் ரெம்யா.
மாநிலத்திலேயே முதன்முதலில் முற்றிலும் வறுமையிலிருந்து விடுபட்ட பஞ்சாயத்தாக கண்ணூர் மாவட்டத்தில் உள்ள குட்டியத்தூர் பஞ்சாயத்து மாறியது. அதன் தலைவர் பி.பி. ரெஜி கூறுகையில், மிகவும் ஏழ்மையானவர்களாக அடையாளம் காணப்பட்ட 16 குடும்பங்களில் ஒவ்வொன்றையும் உள்ளாட்சி அமைப்பின் அதிகாரிகள் தொடர்ந்து பார்வையிட்டு அவர்களின் அனைத்து தேவைகளையும் புரிந்துகொண்டனர். "வருடாந்திர திட்டம் அல்லது திட்டங்களுக்கு வெளியே ஆவணங்கள் அல்லது வீடுகளை வழங்குவது போன்ற பல நடவடிக்கைகள் திட்டத்தின் காரணமாக மட்டுமே சாத்தியமானது என்று அவர் கூறுகிறார்.
கூட்டு முயற்சி தரும் பலன்
கேரளத்தின் வலுவான, பரவலாக்கப்பட்ட, உள்ளூர் நிர்வாக அமைப்பு இல்லாமல் இந்தத் திட்டம் சாத்தியமில்லை என்று உள்ளாட்சித் துறை அமைச்சர் எம்.பி. ராஜேஷ் கருதுகிறார். ஏனெனில், ஆரம்பக் கணக்கெடுப்பு, நுண் திட்டங்களை (micro-plans) உருவாக்குதல் மற்றும் அவற்றை செயல்படுத்துவதில் உள்ளாட்சி அமைப்புகள் முக்கியப் பங்கு வகித்தன.
அரசு அனைத்து துறைகளின் ஒருங்கிணைப்பையும் உறுதி செய்ததாக கூறுகிறார். உதாரணமாக, குடிமைப் பொருள் வழங்கல் துறை (Civil Supplies department) முன்னுரிமை அடிப்படையில் குடும்ப அடையாள அட்டைகளை வழங்கியது. வருவாய்த் துறை (Revenue department) வீடுகள் கட்டுவதற்கான நிலங்களை அடையாளம் கண்டு அளித்தது. சுகாதாரத் துறை (Health department) சிகிச்சை மற்றும் மருந்துகளை வழங்கியது. பொதுக் கல்வி மற்றும் உயர்கல்வித் துறைகள் (General Education and Higher Education departments) இந்தக் குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளுக்கு இலவசக் கல்வியை வழங்கின. போக்குவரத்துத் துறை (Transport department) அவர்களுக்கு இலவசப் பயணத்திற்கான அட்டைகளை வழங்கியது. LIFE திட்டத்தின்கீழ் குடும்பங்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் வீடுகள் கிடைப்பதை உறுதி செய்வதற்கான உத்தரவையும் அரசாங்கம் பிறப்பித்தது. ஏனெனில், இவர்கள் திட்டத்தின் பயன்களை இதுவரையிலும் பெறாமல் வறுமையில் வாழந்த மக்களின் முன்னேற்றத்தை முதலமைச்சர் தொடர்ந்து கண்காணித்து வருவதாக அமைச்சர் ராஜேஷ் கூறுகிறார்.
நிலத்தை அடையாளம் கண்டு வீடுகள் கட்டுவது ஒரு சவாலாக உள்ளது. 2024ஆம் ஆண்டில் முண்டக்காய் (Mundakkai) மற்றும் சூரல்மலை (Chooralmala) நிலச்சரிவுகளால் இடம்பெயர்ந்த குடும்பங்களுக்கு மறுவாழ்வு அளிக்க, நுண் திட்ட அணுகுமுறையின் (micro-plan approach) செயல்திறன் அரசாங்கத்தை வழிநடத்தியது என்றும் அவர் கூறுகிறார்.
விமர்சனக் குரல்கள்
கேரள அரசின் அதீத வறுமை ஒழிப்புத் திட்டம் (Extreme Poverty Eradication Programme (EPEP)) விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. மத்திய அரசின் நிதியுதவியுடன் கூடிய திட்டங்களால் மாநிலத்தில் வறுமை ஒழிப்பு சாத்தியமானது என்று பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் ராஜீவ் சந்திரசேகர் கூறியுள்ளார். இந்தத் திட்டத்தை மாநில அரசு தனது அரசியல் பிரச்சாரத்திற்காகப் பயன்படுத்துவதாகவும் அவர் குற்றம் சாட்டுகிறார். 2014ஆம் ஆண்டில் 1.24 சதவீதமாக இருந்த அதீத வறுமையைக் படிப்படியாகக் குறைக்க மாநில அரசு அதிகக் காலம் எடுத்துக் கொண்டதாகக் கூறுகிறார்.
மத்திய அரசின் எந்தெந்த திட்டங்கள் இந்த திட்டத்திற்கு பயன்படுத்தப்பட்டன என்பதை சந்திரசேகர் குறிப்பிட வேண்டும் என்று முதலமைச்சர் பினராயி விஜயன் அவரின் விமர்சனத்திற்கு பதிலளித்தார்.
மாநிலத்தில் அதீத வறுமையில் வாடுவதாக அடையாளம் காணப்பட்ட 64,006 குடும்பங்களில் 5 சதவீதம் மட்டுமே பட்டியல் பழங்குடியினரைச் சேர்ந்தவர்கள் என்றும், வயநாட்டில் உள்ள பணியா (Paniya), அடியா (Adiya), காட்டுநாயக்கர் (Kattunaikkar) மற்றும் வெட்டகுருமான் (Vettakuruman) சமூகங்களைச் சேர்ந்த பெரும்பாலான குடும்பங்கள் இன்னும் நிலமற்றவர்களாகவும், வீடற்றவர்களாகவும் மற்றும் வேலையில்லாதவர்களாகவும் உள்ளனர் என்று ஆதிவாசி கோத்ர மகாசபா (Adivasi Gothra Mahasabha) குற்றம் சாட்டியுள்ளது.
பழங்குடி மக்களுக்கென்று சிறப்பு கவனம் செலுத்தப்படாததால், ஆரம்ப கணக்கெடுப்பின் முறையே சரியாக இல்லை என்று குற்றம் சாட்டப்படுகிறது. வயநாடு மாவட்டத்தில் ஊரகப்பகுதிகளில் வேலை வாய்ப்புகள் முடங்கியுள்ளன. மேலும், பல குடும்பங்கள் கூட்டுறவு பண்டகச் சாலைகளில் வழங்கப்படும் இலவச பொருட்களை மட்டுமே நம்பி வாழ்கின்றனர். இது நபர்கள் அதிகம் உள்ள பெரிய குடும்பங்களுக்கு போதுமான அளவில் இல்லை என்றும் விமர்சிக்கின்றனர். வயநாட்டில் உள்ள பல பழங்குடியினர் நிலமற்றவர்களாக உள்ளனர். அதே நேரத்தில் அட்டப்பாடியில் நிலம் வைத்திருக்கும் பழங்குடியினரும் ஏழைகளாகவே உள்ளனர் என்று ஆதிவாசி கோத்ர மகா சபையின் மாநில ஒருங்கிணைப்பாளர் எம். கீதானந்தன் கூறுகிறார்.
இந்திய சோசலிச ஒற்றுமை மையத்துடன் (Socialist Unity Centre of India (SUCI)) இணைந்த அங்கீகாரம்பெற்ற சமூக சுகாதார ஆர்வலர்களின் (Accredited Social Health Activists (ASHA)) ஒரு பிரிவு, அரசாங்கத்தின் கூற்றுகள் பொய்யானது என்று விமர்சித்துள்ளனர். நடிகர்கள் மோகன்லால், மம்மூட்டி மற்றும் கமல்ஹாசன் ஆகியோருக்கு ஒரு கடிதம் எழுதி அதில் முற்றிலும் வறுமை இல்லாத மாநிலம் என்கிற அறிவிப்பை வெளியிடும் விழாவில் கலந்து கொள்ள வேண்டாம் என்று இந்த அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
கேரள ஆஷா சுகாதாரப் பணியாளர்கள் சங்கத்தின் (Kerala ASHA Health Workers’ Association (KAHWA)) மாநில துணைத் தலைவர் எஸ். மினி இந்தத் திட்டம் குறித்து கூறுகையில், எங்கள் உயர்ந்த மதிப்பூதியத்தை அதிகரிக்கக் கோரி நாங்கள் போராட்டம் தொடங்கி 262 நாட்கள் ஆகின்றன என்றும் எங்களுக்கு ஒரு நாளைக்கு ₹223 மட்டுமே ஊதியம் வழங்கப்படுகிறது.
குறிப்பாக இந்தப் பெண்களில் பலர் குடும்பத்தின் வாழ்வாதாரத்திற்கான வருமானம் ஈட்டுபவர்கள் என்றும் வறுமையை வரையறுப்பதற்கான அரசாங்கத்தின் அளவுகோல் தவறானது என்றும் விமர்சித்துள்ளார். அதீத வறுமை இல்லாத மாநில அறிவிப்புக்கு முன்னதாக, வருகிற புதன்கிழமை மாதாந்திர உயர்ந்த மதிப்பூதியத்தை ரூபாய் 1,000 அதிகரிப்பதாக கேரளா அரசாங்கம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இதற்கிடையில், இந்தத் திட்டத்தின் சாதனை தொடர்ந்து நீடிப்பதையும், குடும்பங்கள் மீண்டும் கடுமையான வறுமைக்குத் தள்ளப்படுவதில்லை என்பதையும் உறுதிசெய்யும் வகையில் உள்ளூர் அரசாங்கமானது இப்போது திட்டத்தின் இரண்டாம் கட்டப் பணிகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.