இன்றைய இந்தியாவில், ‘நகரமயமாக்கல்’ என்பது வெறும் நகரங்களைத் தாண்டி புதிய அரசியல் கருத்தியலாக மாறியுள்ளது. -அம்ரிதா ஷா

தேசிய அளவில் நகரங்களின் செல்வாக்கு அதிகரிப்பதற்கு அவற்றின் மக்கள்தொகை மட்டுமே காரணம் அல்ல. 'நகர்ப்புற வாழ்க்கை' என்பதே ஒரு சிறந்த வாழ்க்கைமுறை என்கிற எண்ணம் மக்களிடையே வளர்ந்து வருவதுதான் நகரங்களின் ஆதிக்கத்திற்கு முக்கியக் காரணமாகும்.


ஜவஹர்லால் நேரு தேசிய நகர்ப்புற புனரமைப்புத் திட்டம் (Jawaharlal Nehru National Urban Renewal Mission (JNNURM)) தொடங்கப்பட்டு கடந்த மாதத்துடன் 20 ஆண்டுகள் நிறைவடைந்தன. சமீபத்தில் நடந்த மும்பை மாநகராட்சி தேர்தலுக்குக் கிடைத்த பெரும் ஊடக வெளிச்சத்தைப் போலல்லாமல், இந்த 20-வது ஆண்டு நிறைவு என்பது பெரிய கவனிப்பு ஏதுமின்றி கடந்து சென்றது. தேர்தல்கள் என்பவை எப்போதும் பொதுமக்களின் ஆர்வத்தைத் தூண்டுபவையாக இருந்தாலும், அவை குறித்த வழக்கமான மிகைப்படுத்தப்பட்ட விளம்பரங்கள், இந்திய அரசியலை வெறும் தொடர்ச்சியான மோதல்களாக மட்டுமே சுருக்கிவிட்டதாக வேதனை தெரிவிக்கின்றனர்.


இந்தக் கட்டுரை அன்றாட அரசியல் மாற்றங்கள் மற்றும் செய்திகளின் பிடியில் இருந்து விலகி, 'அரசியல்' என்றால் என்ன என்பதைப் பற்றிய நமது புரிதலை விரிவுபடுத்த முயற்சிக்கிறது. இது ‘நகரமயமாக்கல்’ எனும் முக்கியமான செயல்பாட்டின் மீது கவனம் செலுத்துகிறது.


1980-ஆம் ஆண்டு முதல், உலகம் முன்னெப்போதும் இல்லாத வகையில் நகர்ப்புற வாழ்க்கையை நோக்கி மாறியுள்ளது. தற்போது உலக மக்கள் தொகையில் 55 சதவீதம் பேர் நகரங்களில் வசிக்கின்றனர். சர்வதேச நாணய நிதியம் (International Monetary Fund (IMF)) மற்றும் உலக வங்கியின் ஊக்கத்தினால், இந்தியாவும் தாராளமயமாக்கலுக்குப் பிறகு பல நகர்ப்புற வளர்ச்சிக் கொள்கைகளை அறிமுகப்படுத்தியது. அவை, 1993-ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட பெருநகரங்கள் திட்டம் (Megacities scheme), 2005-ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட ஜவஹர்லால் நேரு தேசிய நகர்ப்புற புனரமைப்புத் திட்டம் (Jawaharlal Nehru National Urban Renewal Mission (JNNURM)), 2015-ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட அடல் நகர்ப்புற புனரமைய்பு மற்றும் மாற்றத்திற்கான திட்டம் (Atal Mission for Rejuvenation and Urban Transformation (AMRUT)), சீர்மிகு நகரங்கள் திட்டம் (Smart Cities Mission (SCM)) ஆகியனவாகும்.


1990-ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகையில் 25 சதவீதமாக இருந்த நகர்ப்புற மக்கள் தொகையிலிருந்து, மூன்றில் ஒரு பங்காக உயர்ந்துள்ளது, மேலும் இந்தப் பத்தாண்டுகளின் இறுதிக்குள் 40 சதவீதமாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


பெரும்பாலும் வேளாண் தொழில்களைச் சார்ந்திருக்கும் ஒரு சமூகத்திற்கும், 'இந்தியா அதன் கிராமங்களில் வாழ்கிறது' என்று காந்தியடிகள் புகழ்ந்துரைத்த ஒரு நாட்டிற்கும், இது ஒரு முக்கியமான மாற்றத்தைக் குறிக்கிறது. இந்த மாற்றம் சில முக்கியமான கேள்விகளை எழுப்புகிறது: இது தேசிய சிந்தனையை எவ்வாறு வடிவமைத்துள்ளது? சமூக விழுமியங்கள், இளைஞர்கள் மற்றும் அவர்களின் லட்சியங்களில் இது என்ன தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது? பெரும்பாலும் நகர்ப்புறங்களோடு தொடர்புடையதாகக் கருதப்படும் வகுப்புவாத வன்முறை போன்ற பிரச்சனைகளில் இது எத்தகைய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது?


இந்தியாவில் நகர்ப்புற வளர்ச்சி மிக வேகமாக நடப்பதால் பல முக்கியமான கேள்விகள் எழுகின்றன. அவற்றில் சிலவற்றை மட்டும் இங்கே பார்க்கலாம், இவை கண்டிப்பாகக் கவனிக்கப்பட வேண்டியவை ஆகும்


ஆனால், இந்த மாற்றம் இன்னும் குறிப்பிடத்தக்க அரசியல் தாக்கங்களை ஏற்படுத்த வாய்ப்புள்ளதாக எச்சரிக்கின்றனர். 


இன்று, 50 கோடிக்கும் அதிகமான இந்தியர்கள் நகர்ப்புறங்களில் வசிக்கின்றனர். இருப்பினும், நகர்ப்புற மக்கள் தொகையின் வளர்ந்து வரும் செல்வாக்கு என்பது அதன் எண்ணிக்கையினால் மட்டும் உருவானது அல்ல என்றும் மாறாக, நகரம் என்பது ஒரு 'முன்னுதாரணமான இடம்' (Ideal) எனப் பார்க்கப்படுவதாலும் இந்தச் செல்வாக்கு அதிகரித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த ஆதிக்கம் என்பது வெறும் மக்களின் எண்ணிக்கையைப் பொறுத்தோ அல்லது தேர்தல் முடிவுகளைப் பொறுத்தோ மட்டும் அமைந்ததல்ல என்றும் அது கருத்துகளின் வலிமையைப் பொறுத்தது என்பதையும் தெளிவுபடுத்துகின்றனர். 


இதைப் புரிந்து கொள்ள, காலப்போக்கில் நகரங்கள் எவ்வாறு மாறியுள்ளன என்பதைக் கவனிப்பது அவசியம். முன்பு, நகரங்கள் என்பவை பொருளாதார வாய்ப்புகள், சமூக முன்னேற்றம், தொழிலாளர் மேம்பாடு மற்றும் கலாச்சார வளர்ச்சி ஆகியவற்றிற்கான இடங்களாகப் பார்க்கப்பட்டன. ஆனால் இன்று, அவை ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காக மட்டுமே செயல்படுகின்றன. இன்றைய நவீன நகரங்கள், முதலீடுகள் மூலமாகவோ அல்லது வந்து செல்லும் மக்களின் செலவினங்கள் மூலமாகவோ, உலகளாவிய மூலதனத்தை (Global Capital) ஈர்ப்பதை மட்டுமே முக்கிய குறிக்கோளாகக் கொண்டு உருவாக்கப்படுகின்றன என்று நகர்ப்புற ஆய்வாளர்கள் கூறுகின்றனர். "இதன் விளைவாக, சிறியது முதல் பெரியது வரையிலான அனைத்து நகரங்களும் இப்போது ஒரே மாதிரியான முறையையே பின்பற்றுகின்றன: மேல்தட்டு மக்களுக்கான குடியிருப்புப் பகுதிகள், பிரத்யேக வணிக வளாகங்கள், செலவு மிகுந்த அழகுபடுத்தும் திட்டங்கள், கார்களுக்கென புதிய நெடுஞ்சாலைகள் மற்றும் வசதி படைத்தவர்களுக்கான கலாச்சார நிகழ்வுகள் என நகரங்கள் மாறி வருகின்றன. அதுமட்டுமின்றி, நகரத்தில் இருப்பவர்கள் கிராமப்புற நிலங்களை வாங்குவதால், நகரத்தின் தாக்கம் இப்போது கிராமப்புறங்களுக்கும் பரவியுள்ளதைச் சுட்டிக்காட்டுகின்றனர். 


அதிகார மையங்களில் இருந்து கீழ்நோக்கிய (Top-down) இந்த வளர்ச்சி முறையானது, சமூகத்தின் பணக்காரர்கள், உலகளாவிய சிந்தனை கொண்டவர்கள் (Cosmopolitan) மற்றும் தொழில்முனைவோர் ஆகியோருக்கே முன்னுரிமை அளிக்கிறது. இது பெரும்பாலும் மற்ற பிரிவினரின் நலன்களைப் புறக்கணித்து விடுகிறது. இது ஒருவித அவசரத் தேவையால் இயக்கப்படுகிறது என்றும் மேலும் இன்றைய பொருளாதார அமைப்பில் இது போன்ற நடவடிக்கைகள் தவிர்க்க முடியாத ஒன்றாகவே பலராலும் ஏற்றுக்கொள்ளப்படுகிறது.


அணைக்கட்டுகள் மற்றும் கனரகத் தொழில்களுக்கு முக்கியத்துவம் அளித்த நேருவின் கொள்கை, பழங்குடியின மக்களையும் வேளாண் தொழிலாளர்கலையும் அவர்களின் வாழ்விடங்களிலிருந்து இடம்பெயரச் செய்தது. இன்று, தாராளமயமாக்கலுக்குப் பிந்தைய இந்தியாவில், அந்தக் கொள்கைக்குப் பதிலாகப் பெருநிறுவனங்களுக்குச் சாதகமான, கண்ணாடி மாளிகைகளும் நெடுஞ்சாலைகளும் நிறைந்த புதிய மாதிரி உருவாகியுள்ளது. இந்த நவீன வடிவம் இன்னும் அதிகமான மக்களைப் பாதிப்பதோடு, அதன் தாக்கம் இன்னும் அதிக அளவிலானது என்கின்றனர். இது மக்களின் அன்றாட வாழ்க்கைக்கு மிக நெருக்கமான புதிய சிக்கல்களை உருவாக்குகிறது.


கடந்த சில வாரங்களாக, ஆரவல்லி மலைகளை வணிகரீதியாகப் பயன்படுத்துவதற்கு எதிரான போராட்டங்கள், 'கிரேட் நிக்கோபார் தீவு மேம்பாட்டுத் திட்டம்' (Great Nicobar Island Development Project) குறித்த சிக்கல்கள் மற்றும் குறைந்த ஊதியம் மற்றும் பாதுகாப்பற்ற பணிச்சூழல் குறித்து தற்காலிக தொழிலாளர்களின் (Gig workers) புகார்கள் எனப் பல்வேறு பிரச்சனைகள் எழுந்துள்ளன.


இந்தியாவின் நகரமயமாக்கல் என்பது வெறும் உள்கட்டமைப்பு வளர்ச்சி சார்ந்தது மட்டுமல்ல என்றும் இது சந்தை சார்ந்த வளர்ச்சியை ஆதரிக்கும் ஒரு புதிய அரசியல் உடன்படிக்கையைப் பிரதிபலிப்பதாகவும் சுட்டிக்காட்டுகின்றனர். இது தற்போதைய சமூகச் சூழலில் நிலவிவரும் முன்னுரிமைகளை மாற்றியமைப்பதோடு, குடிமக்களுக்கும் அரசுக்கும் இடையிலான உறவை மறுசீரமைத்து, ஜனநாயகம் குறித்த ஒரு புதிய பார்வையை உருவாக்குகிறது. இதன் விளைவாக, நகரங்கள் அரசியலின் புதிய கருத்தியலாக மாறியுள்ளதாகவும்  எனவே, அவற்றை நாம் மிகக் கவனமாகக் கையாள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்படுகிறது. 


எழுத்தாளர், நியூயார்க் பல்கலைக்கழகத்தின் Institute for Public Knowledge அமைப்பில் உலகளாவிய நகரமயமாக்கல் குறித்து ஆராய்ச்சி செய்தவர். மேலும், இவர் Ahmedabad: A City in the World என்ற புத்தகத்தின் ஆசிரியரும் ஆவார்.


 Original Article : In India today, the urban is the new political — as an idea, beyond the city. -Amrita Shah

Share: