சுகாதாரத் துறை தொடர்பான முக்கியமான அரசுத் திட்டங்கள் யாவை? -குஷ்பூ குமாரி, ரோஷ்னி யாதவ்

கடந்த 200 ஆண்டுகளாக மருத்துவக் கொள்கைகளையும், நடைமுறைகளையும் வடிவமைத்து வரும் புகழ்பெற்ற மருத்துவ இதழான 'The Lancet’, இந்தியா தொடர்பான தனது முதல் சிறப்புக் குழு அறிக்கையை ஜனவரி மாதம் 21-ஆம் தேதி வெளியிட்டதாக விக்ரம் படேல் குறிப்பிடுகிறார். 


முக்கிய அம்சங்கள்:


— உலக மக்கள்தொகையில் ஐந்தில் ஒரு பங்கினருக்குச் சேவை செய்யும் இந்தியச் சுகாதாரத் துறையைச் சீரமைப்பது அத்தனை எளிதான ஒன்றல்ல. ஏனெனில், இது பல்வேறு சூழல்களில் இயங்குவதோடு, அரசு மற்றும் தனியார் எனப் பல பிரிவுகளாகப் பிரிந்து கிடக்கிறது. எனவே, இத்தகைய அமைப்பில் மாற்றங்களைக் கொண்டுவர வேண்டுமானால், அதனைப் பல்வேறு கோணங்களில் இருந்து ஆராய்வது அவசியமாகும்.


— கடந்த 20 ஆண்டுகளில், அனைவருக்கும் பொதுவான சுகாதாரச் சேவை கிடைப்பதை நோக்கி இந்தியா வலுவான முன்னேற்றத்தை அடைந்துள்ளது. சுகாதாரத் திட்டங்களுக்கு நிதி வழங்குபவராகவும், சேவைகளை அளிப்பவராகவும் மற்றும் அவற்றை முறைப்படுத்துபவராகவும் அரசாங்கம் ஒரு முக்கியப் பங்கை வகிக்கிறது என்பதில் அனைத்து அரசியல் கட்சிகளிடையேயும் ஒருமித்த கருத்து நிலவுகிறது.


— உலகிலேயே மிகப்பெரிய அரசாங்கத்தால் நடத்தப்படும் சுகாதாரக் கட்டமைப்பாகக் கருதப்படும் இந்தத் துறையில், 10 லட்சத்திற்கும் அதிகமான சமூக சுகாதாரப் பணியாளர்கள் (Community Health Workers) பணியாற்றி வருகின்றனர். இது, அடிப்படை மருத்துவச் சேவைகள் முதல் மிகவும் சிக்கலான நோய்களுக்குச் சிகிச்சை அளிக்கும் உயர்நிலை மருத்துவமனைகள் (Tertiary Hospitals) வரை விரிவான வசதிகளைக் கொண்டுள்ளது.


— பொது மற்றும் தனியார் மருத்துவமனைகள் மூலம் மக்கள் எளிதாகச் சிகிச்சை பெற முடிகிறது. தங்கள் சொந்தப் பணத்தைச் செலவழித்து மருத்துவம் பார்ப்பது (Out-of-pocket spending) உலகிலேயே இந்தியாவில்தான் அதிகமாக இருக்கிறது என்றாலும், கடந்த சில ஆண்டுகளில் அந்தச் செலவு குறைந்து வருகிறது.


— மருத்துவர்கள், மருந்துகள் அல்லது மருத்துவ வசதிகள் கிடைக்காமல் இருப்பது முக்கியமான பிரச்சனை அல்ல என்றும் உண்மையான பிரச்சனை என்னவென்றால், சுகாதாரப் பணியாளர்களுக்கான பயிற்சியில் தொடங்கி மருந்துகள் தயாரிப்பு மற்றும் நோயாளிகளுக்குக் கிடைக்கும் சிகிச்சை வரை ஒட்டுமொத்த மருத்துவக் கட்டமைப்பும் தரம் குறைந்ததாக இருப்பதே ஆகும்


— 2021-ஆம் ஆண்டின் பொருளாதார ஆய்வறிக்கையின்படி, இந்தியாவில் 2018-ஆம் ஆண்டில் ஏற்பட்ட சுமார் 16 லட்சம் உயிரிழப்புகளுக்குத் தரமற்ற மருத்துவ சிகிச்சையே காரணமாக அமைந்தது. மருத்துவ வசதி கிடைக்காமல் இறந்தவர்களைவிட, முறையான தரம் இல்லாத சிகிச்சையினால் இறந்தவர்களின் எண்ணிக்கையே அதிகமாக உள்ளது. 


— தரமற்ற மருத்துவ சிகிச்சை முறைகள் மரணங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கின்றன. முன்னெப்போதையும்விட இன்று அதிகமான பெண்கள் மகப்பேறு கால மருத்துவச் சேவைகளை (Antenatal services) நாடினாலும், பிரசவகால வழிகாட்டுதல்களைச் சரியாகப் பின்பற்றாததும், தாய் மற்றும் சேய்க்குத் தேவையான அவசரகால சிகிச்சை வசதிகள் இல்லாததும் தாய்-சேய் மரணங்களுக்கு முக்கியக் காரணங்களாக இருக்கின்றன.


— அரசு மற்றும் தனியார் என இருதரப்பு மருத்துவமனைகளிலும் பணிபுரியும் மருத்துவர்கள் அல்லது செவிலியர்களுக்குப் போதிய தகுதியோ, திறமையோ இல்லாதிருப்பதை பல ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன. இதனால் அவர்கள் தவறான நோய் கண்டறிதல் முறைகளைப் பின்பற்றுவதோடு, தேவையற்ற அல்லது தவறான சிகிச்சைகளையும் சோதனைகளையும் (Tests) நோயாளிகளுக்கு வழங்குகின்றனர்.


— தேவைக்கு அதிகமான மருந்துகளைப் பரிந்துரைப்பதும், அவசியமற்ற மருத்துவப் பரிசோதனைகளைச் செய்வதும், நோயாளிகளின் மருத்துவச் செலவில் மூன்றில் இரண்டு பங்கை அவர்களே நேரடியாகச் சுமக்க வழிவகை செய்கிறது. இது பொருளாதாரச் சுமையை ஏற்படுத்துவது மட்டுமல்லாமல், நோயாளிகளின் உடல்நலத்தைப் பாதிப்பதோடு, மருந்துகளுக்குக் கட்டுப்படாத கிருமி எதிர்ப்புத் திறனையும் (Antibiotic Resistance) உருவாக்குகிறது.


— சமூகத்தில் பின்தங்கிய நிலையில் உள்ளவர்களுக்கும், கிராமப்புறங்களில் அல்லது ஏழ்மையான பகுதிகளில் வசிப்பவர்களுக்கும் தரக்குறைவான மருத்துவச் சிகிச்சையே கிடைக்கிறது.


— தற்போதைய முக்கியமான சிக்கல் என்பது தேவையைப் பொறுத்தோ அல்லது விநியோகத்தைப் பொறுத்தோ அமையப்போவதில்லை என்றும் இப்போது நமது முழு கவனமும் சுகாதார சேவையின் தரத்தை மேம்படுத்துவதில்தான் இருக்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர். 


— இதற்கு சுகாதார அமைப்பின் கலாச்சாரத்தில் மாற்றம் தேவை. வெறும் இலக்குகளை எட்டுவதோடு நின்றுவிடாமல், அறிவியல்ரீதியாகவும், நோயாளிகளின் அனுபவரீதியாகவும் உயர்தரமான சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றனர். இந்த அமைப்பில் உள்ள ஒவ்வொருவரும் பொறுப்புணர்வோடும் (Accountability), நேர்மையோடும் (Integrity) செயல்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்படுகிறது. 


— கூடுதலாக, சுகாதாரத் துறைக்கான நிதி ஒதுக்கீடு மற்றும் அதன் நிர்வாகத்தில் பெரிய அளவிலான சீர்திருத்தங்கள் தேவைப்படுகின்றன. இந்த மாற்றங்கள் தங்களின் லாபத்தைப் பாதிக்கும் என சக்திவாய்ந்த நிறுவனங்கள் இந்த மாற்றங்களை எதிர்த்தாலும், அந்த மாற்றங்களைச் செய்வது அவசியமாகப் பார்க்கப்படுகிறது. 


— மாநில, மாவட்ட மற்றும் உள்ளூர் அரசாங்கங்கள் சீர்திருத்தங்களை மேற்கொள்ளவும், தங்கள் மக்களுக்குப் பொறுப்புடன் நடக்கவும் அதிகாரம் அளிக்கப்பட வேண்டும். சுகாதாரச் சேவையை உண்மையாகவே மக்களை மையமாகக் கொண்டதாக மாற்ற, குடிமக்களுக்குத் தங்களின் உரிமைகள் பற்றியும், மருத்துவச் சேவை வழங்குநர்களின் செயல்பாடு பற்றியும் விழிப்புணர்வு இருக்க வேண்டும்.


— தரவுகளைக் கொண்டு நோய் எதிர்ப்பு (antibiotic) மருந்துப் பயன்பாட்டைக் கண்காணிப்பது அல்லது ஆரம்பச் சுகாதார சேவைகள் குறித்த தகவல்களை டிஜிட்டல் முறையில் மக்களிடம் கொண்டு சேர்ப்பது போன்ற தொழில்நுட்பங்களை, நிர்வாகத்தை மேம்படுத்துவதற்கான முக்கியக் கருவிகளாக இந்த ஆணையம்  கருதுகிறது.


— இறுதியாக, சுகாதாரத் தரவுகளைத் தொடர்ந்து பயன்படுத்தவும் மற்றும் பகிர்ந்து கொள்ளவும் செய்கின்ற ஒரு 'கற்றல் சுகாதார அமைப்பை' (Learning health system) உருவாக்குமாறு இந்த ஆணையம் வலியுறுத்துகிறது. இத்தகைய அமைப்பு, மற்ற சுகாதார அமைப்புகளுடன் இணைந்து செயல்படுவதோடு, தனது செயல்பாட்டுத் திறனைத் தொடர்ந்து மேம்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும் என்றும் இந்த ஆணையம் தெரிவித்துள்ளது. 





உங்களுக்குத் தெரியுமா?


— இந்தியாவில் நகரங்களில் 60% மற்றும் கிராமப்புறங்களில் 52% என பெரும்பாலான மருத்துவச் சிகிச்சைகள் தனியார் மருத்துவமனைகளாலேயே வழங்கப்படுகின்றன. இத்தகைய சூழலில், அனைவருக்கும் குறிப்பாக ஏழை மக்களுக்கு மருத்துவக் காப்பீடு கிடைப்பதை உறுதி செய்வதற்காக 2018-ஆம் ஆண்டு 'ஆயுஷ்மான் பாரத்' காப்பீட்டுத் திட்டம் தொடங்கப்பட்டது.


— அதாவது, இந்தத் திட்டம் மக்கள் தங்கள் சேமிப்புப் பணத்தைச் செலவு செய்வதையோ அல்லது தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவதற்காகக் கடன் வாங்குவதையோ தவிர்க்க உதவுகிறது. மக்கள் தங்கள் சொந்த பணத்தைச் செலவிடுவது குறைந்துள்ள அதே வேளையில், அரசு இதற்காகச் செய்யும் செலவு அதிகரித்துள்ளது என்பதைப் புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. 


— பிரதம மந்திரி ஜன் ஆரோக்கிய திட்டம் (Pradhan Mantri Jan Arogya Yojana (PMJAY)) மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறும் வசதிகளை (Secondary and Tertiary Care) வழங்குகிறது; ஆனால் வெளிநோயாளி சிகிச்சைகளுக்கு இந்தத் திட்டம் பொருந்துவதில்லை. வெளிநோயாளி சிகிச்சைகள் 'ஆயுஷ்மான் ஆரோக்கிய மந்திர்' (AAMs) மூலம் வழங்கப்படுகின்றன (இவை முன்பு 'நலவாழ்வு மையங்கள்' என்று அழைக்கப்பட்டன). தற்போது 1,75,000-க்கும் மேற்பட்ட ஆரோக்கிய மையங்கள் இலவச மருத்துவ ஆலோசனை, 172 வகையான மருந்துகள் மற்றும் 63 வகையான பரிசோதனைகளை இலவசமாக வழங்குகின்றன.


— உலகிலேயே மிகப்பெரிய பொது மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் ஆயுஷ்மான் பாரத் பிரதம மந்திரி ஜன் ஆரோக்ய திட்டம் (Ayushman Bharat Pradhan Mantri Jan Arogya Yojana (AB PM-JAY) ஆகும். இத்திட்டம் தகுதியுள்ள குடும்பங்களுக்கு — அதாவது, பொருளாதார நிலையில் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ள சுமார் 40% குடும்பங்களுக்கு — வயது வரம்பு ஏதுமின்றி, ஆண்டிற்கு 5 லட்சம் ரூபாய் வரை இலவச மருத்துவக் காப்பீட்டை வழங்குகிறது.


 Original Article : What are the important government schemes related to the health sector? -Khushboo Kumari, Roshni Yadav

Share: