2027-ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பில், பொதுமக்கள் தாங்களாகவே முன்வந்து விவரங்களைப் பதிவு செய்யும் சுய-விவரப்பதிவு (Self-enumeration) வசதியைத் தேர்ந்தெடுப்பவர்கள், மொத்தம் 16 மொழிகளில் படிவத்தைப் பூர்த்தி செய்து சமர்ப்பிக்கும் வகையில் வசதி செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு இணையதளம் வழியாக விவரங்களைப் பதிவு செய்த பிறகு அவர்களுக்கு ஒரு குறிப்பு எண் (Reference ID) வழங்கப்படும். தங்கள் பகுதிக்கு வரும் கணக்கெடுப்பு அலுவலரிடம் (Enumerator) அந்த எண்ணைப் பகிர வேண்டும் என்று 'தி இந்தியன் எக்ஸ்பிரஸ்' நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
முக்கிய அம்சங்கள்:
— ஜனவரி மாதம் 23-ஆம் தேதி புது டெல்லியில் நடைபெற்ற தலைமைச் செயலாளர்கள், மாநில ஒருங்கிணைப்பு அதிகாரிகள் மற்றும் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு இயக்குநர்களின் மாநாட்டில் மத்திய அதிகாரிகள் இந்த விவரங்களைப் பகிர்ந்து கொண்டதாக தெரிவிக்கின்றனர்.
— இந்த சுய விவரப் பதிவு (Self-Enumeration (SE)) இணையதளம் தமிழ் உட்பட 16 மொழிகளில் சேவை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அஸ்ஸாமி, பெங்காலி, ஆங்கிலம், குஜராத்தி, இந்தி, கன்னடம், கொங்கனி, மலையாளம், மணிப்புரி, மராத்தி, நேபாளி, ஒடியா, பஞ்சாபி, தெலுங்கு மற்றும் உருது ஆகிய மொழிகளில் மக்கள் தங்களைப் பற்றிய தகவல்களைப் பதிவு செய்யலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
— பொதுமக்கள் தாங்களாகவே கணக்கெடுப்பு படிவத்தைப் பூர்த்தி செய்யும் வசதியை அறிமுகப்படுத்த, ஒன்றிய அரசு மார்ச் மாதம் 2022-ஆம் ஆண்டில், 'மக்கள் தொகை கணக்கெடுப்பு விதிகள் 1990'-ஆம் ஆண்டில் திருத்தம் செய்தது. இந்த மாற்றப்பட்ட விதிகளின்படி, தனிநபர்கள் கணக்கெடுப்புப் படிவத்தை தாங்களாகவே இணையம் வழியாக நிரப்பி சமர்ப்பிக்கும் வகையில் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
— இந்த இணையதளத்தைப் பயன்படுத்த கைபேசி எண் (Mobile Number) கட்டாயம் என்றும் பொதுமக்கள் தங்களின் கைபேசி எண் மற்றும் இதர விவரங்களைப் பயன்படுத்தி இணையதளத்தில் நுழைய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், அனைத்து கேள்விகளுக்கும் பதிலளித்த பிறகு, ஒரு அடையாள எண் (Reference ID) உருவாக்கப்படும். அந்த எண் பதிவு செய்யப்பட்ட கைபேசி எண்ணிற்கு குறுஞ்செய்தியாக அனுப்பி வைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
— இந்தியா 1872-ஆம் ஆண்டு முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்தி வருகிறது. 2027-ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் கணக்கெடுப்பு, ஒட்டுமொத்த வரிசையில் 16-வது கணக்கெடுப்பாகவும், சுதந்திரத்திற்குப் பிறகு நடைபெறும் 8-வது கணக்கெடுப்பாகவும் அமையும் என்று கூறப்படுகிறது. 'வீடுகள் பட்டியல் மற்றும் வீட்டுவசதி கணக்கெடுப்பு' எனப்படும் முதல் கட்டப் பணி, இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 1-ஆம் தேதி தொடங்கும் என்றும் மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் இரண்டாம் கட்டப் பணி 2027-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
— ஒரு மாநிலம் அல்லது யூனியன் பிரதேசத்தில் கணக்கெடுப்பு பணிகள் தொடங்குவதற்கு 15 நாட்களுக்கு முன்பே, பொதுமக்கள் தாங்களாகவே விவரங்களை பதிவு செய்யும் சுய-விவரப்பதிவு (Self-enumeration) இணையதள வசதி தொடங்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
— வீடுகளைப் பட்டியலிடும்போது சேகரிக்கப்பட வேண்டிய தகவல்கள் குறித்த அறிவிப்பை ஒன்றிய உள்துறை அமைச்சகத்தின்கீழ் இயங்கும் இந்தியத் தலைமைப் பதிவாளர் (Registrar General of India (RGI)), கடந்த வாரம் வெளியிட்டார். இதில் கட்டிடங்கள் மற்றும் வீட்டுச் சொத்துக்கள் உட்பட 33 வகையான தகவல்கள் சேகரிக்கப்படும் என்றும் தெரிவிக்கின்றனர். மேலும், 2027-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பிற்காக ஒன்றிய அரசு ₹11,718.24 கோடி ஒதுக்கீடு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
— 2027-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகளை நிர்வகிக்கவும், கண்காணிக்கவும் இந்தியத் தலைமைப் பதிவாளர் (RGI) நிர்வாகத்தின்கீழ் இயங்கும் ஒரு இணையதள முறையை உருவாக்கியுள்ளனர். இது கணக்கெடுப்பு பணியாளர்களை நியமிக்கவும், விவரங்கள் சேகரிக்கப்படுவதை உடனுக்குடன் கண்காணிக்கவும் உதவும் என்றும் தெரிவித்துள்ளனர்.
உங்களுக்குத் தெரியுமா?
— மக்கள் தொகை கணக்கெடுப்பு என்பது மத்திய அரசின் அதிகாரத்திற்கு உட்பட்டது. இது இந்திய அரசியலமைப்பின் ஏழாவது அட்டவணையில் (Seventh Schedule) 69-வது பதிவாக இடம்பெற்றுள்ளது.
— கடந்த ஆண்டு ஜூன் மாதம் 16-ஆம் தேதி, 2027-ஆம் ஆண்டில் மக்கள்தொகைக் கணக்கெடுப்பை நடத்தப்போவதாக ஒன்றிய அரசு ஒரு அறிவிப்பை வெளியிட்டது. மக்கள்தொகைக் கணக்கெடுப்பு நடத்த ஒன்றிய அரசுக்கு அதிகாரம் அளிக்கும் '1948-ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பு சட்டத்தின்கீழ்' இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.
— மக்கள் தொகை கணக்கெடுப்புச் சட்டத்தின் பிரிவு 3-ன் படி, ஒன்றிய அரசு எப்போதெல்லாம் அவசியம் அல்லது தேவையெனக் கருதுகிறதோ, அப்போதெல்லாம் நாட்டின் முழுப்பகுதியிலோ அல்லது ஒரு சில பகுதியிலோ மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்போவதாக அரசு இதழில் (Official Gazette) அறிவிக்கலாம் என்றும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. அந்த அறிவிப்பு வெளியான பிறகு, மக்கள்தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Original Article : What are the powers and functions of RGI? -Khushboo Kumari, Roshni Yadav