கேரள வழக்கில், சமூக ஊடகங்களில் ஒரு காணொளியைப் பதிவிடுவது தற்கொலைக்குத் தூண்டுதலாக அமைந்ததா மற்றும் அந்தச் செயல் அவதூறானதாக இருந்தாலும்கூட, இறந்தவரைத் தற்கொலைக்குத் தூண்டும் நேரடியான மற்றும் தீவிரமான நோக்கம் அதில் இருந்ததா என்பதை நீதிமன்றம் இறுதியில் தீர்மானிக்க வேண்டும்.
செவ்வாய்க்கிழமை, கேரளாவின் குன்னமங்கலத்தில் உள்ள நீதிமன்றம், 42 வயது மதிக்கத்தக்க ஒருவரைத் தற்கொலைக்கு தூண்டியதாக குற்றம் சாட்டப்பட்ட 35 வயது பெண் சிம்ஜிதா முஸ்தபாவுக்கு ஜாமீன் மறுத்துவிட்டது.
ஜனவரி 16-ம் தேதி, பொதுப் பேருந்தில் அந்த நபர் தன்னைத் தகாத முறையில் தொடும் காணொளியை சிம்ஜிதா முஸ்தபா பதிவு செய்தார். அந்த காணொளிகளை அவர் சமூக ஊடகங்களில் வெளியிட்டார். அந்த காணொளிகள் இணையத்தில் பரவலாகப் பகிரப்பட்டன. காணொளிகள் பதிவிடப்பட்ட இரண்டு நாட்களுக்குப் பிறகு அந்த நபர் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது.
இந்த வழக்கு பொது அவமானம் மற்றும் சட்டப் பொறுப்புணர்வு குறித்து இந்தச் சம்பவம் ஒரு பொது விவாதத்தைத் தூண்டியுள்ளது.
இறந்தவரின் தாயார் கே.கன்யகா, ஜனவரி 19 அன்று கோழிக்கோட்டில் ஒரு காவல் நிலையத்தில் "அவதூறான காணொளி" (defamatory video) காரணமாக தனது மகன் இறந்துவிட்டதாகக் குற்றம் சாட்டி புகார் அளித்துள்ளார். இந்தப் புகாரின் அடிப்படையில், காவல்துறை முதல் தகவல் அறிக்கையைப் (First Information Report (FIR)) பதிவு செய்தது.
தற்கொலைக்குத் தூண்டுதல் (abetment of suicide) என்றால் என்ன?
தற்கொலைக்கு தூண்டுதல் மற்றும் இந்தக் குற்றத்திற்கான தண்டனை ஆகிய இரண்டையும் பாரதிய நியாய சன்ஹிதாவின் பிரிவு-108 பரிந்துரைக்கிறது. ஒருவர் தற்கொலை செய்து கொண்டால், அத்தகைய தற்கொலைக்கு தூண்டுபவருக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும் என்று கூறுகிறது.
தற்கொலைக்குத் தூண்டுதல் ஒரு ”அங்கீகரிக்கப்பட்ட” (cognizable) குற்றம் ஆகும். இதன் பொருள், காவல்துறையினர் குற்றம் சாட்டப்பட்டவரை பிடியாணை (warrant) இல்லாமல் கைது செய்யலாம். இது ஒரு "பிணையில் வெளிவர முடியாத" (non-bailable) குற்றமும் ஆகும். இதன் பொருள் சிறிய குற்றங்களைப் போல பிணை (bail) என்பது குற்றம் சாட்டப்பட்டவரின் சட்டப்பூர்வ உரிமை அல்ல. பிணை வழங்கப்பட வேண்டுமா என்பதை நீதிமன்றம் தீர்மானிக்கும். இந்த வழக்கில், நீதிமன்றம் செவ்வாயன்று பிணையை மறுத்தது. இந்தக் குற்றம் "சமரசம் செய்ய முடியாதது" (non-compoundable), அதாவது புகார்தாரரால் அதைத் தீர்க்கவோ அல்லது திரும்பப் பெறவோ முடியாது.
தற்கொலைக்குத் தூண்டியதாக வழக்குத் தொடர, குற்றம் சாட்டப்பட்டவரால் ஏற்பட்ட மன அழுத்தம் அல்லது துன்புறுத்தலைவிட மேலானதை அரசுத் தரப்பு நிரூபிக்க வேண்டும். சட்டம் மூன்று குறிப்பிட்ட கூறுகளைக் கோருகிறது. அவை, முதலாவது ”தூண்டுதல்” (instigation) குற்றம் சாட்டப்பட்டவர் இறந்தவரைத் தற்கொலை செய்துகொள்ளும்படி தீவிரமாகத் தூண்டியிருக்க வேண்டும், அல்லது ஊக்குவித்திருக்க வேண்டும். இரண்டாவது ”சதித்திட்டம்” (conspiracy) குற்றம் சாட்டப்பட்டவர் தற்கொலையை நிகழ்த்துவதற்காக மற்றவர்களுடன் சேர்ந்து செயல்பட்டிருக்க வேண்டும். மற்றும் மூன்றாவது ”வேண்டுமென்றே உதவி செய்தல்” (intentional aid) குற்றம் சாட்டப்பட்டவர் ஒரு செயலைச் செய்வதன் மூலமாகவோ அல்லது அவ்வாறு செய்ய சட்டப்பூர்வ கடமை இருந்தபோது வேண்டுமென்றே செயல்படத் தவறியதன் மூலமாகவோ தற்கொலை நடக்க உதவியிருக்க வேண்டும்.
நீதிமன்றங்கள் ஆராயும் மிக முக்கியமான காரணி குற்ற மனப்பான்மை அல்லது குற்ற எண்ணம் ஆகும். ஒரு செயலைத் தூண்டுவதற்கு, அந்த நபரை தற்கொலைக்குத் தூண்டியதற்கான தெளிவான நோக்கம் குற்றம் சாட்டப்பட்டவரின் தரப்பில் இருக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் பலமுறை கூறியுள்ளது.
'இயந்திரத்தனமான' பயன்பாட்டிற்கு எதிரான பாதுகாப்பு வழிமுறைகள்
தூண்டுதல் குற்றச்சாட்டுகளை அலட்சியமாகப் பயன்படுத்த வேண்டாம் என்று நீதித்துறை காவல்துறைக்கு அடிக்கடி எச்சரிக்கை விடுத்துள்ளது. 2011-ம் ஆண்டு ஒரு தீர்ப்பில், உச்சநீதிமன்றம் ஒரு உயர் தடையை விதித்து, தூண்டுதல் என்பது ஒரு நபரை ஒரு காரியத்தைச் செய்யத் தூண்டுவது அல்லது வேண்டுமென்றே ஒரு நபருக்கு உதவுவது போன்ற ஒரு மனரீதியான செயல்முறையை உள்ளடக்கியது என்று தீர்ப்பளித்தது. குற்றம் சாட்டப்பட்டவரால் ஒரு "செயலூக்கமான அல்லது நேரடியான செயல்" இருக்க வேண்டும், இதனால் இறந்தவர் தற்கொலை செய்து கொள்வதைத் தவிர வேறு வழியில்லை. இந்தச் செயல், "இறந்தவரை தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்குத் தள்ளும் நோக்கம் கொண்டதாக இருக்க வேண்டும்" என்று நீதிமன்றம் கூறியது.
ஜனவரி 2025-ல், நீதிபதிகள் அபய் எஸ் ஓகா மற்றும் கே வி விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய உச்சநீதிமன்ற அமர்வு, "இயந்திரத்தனமாக" குற்றத்திற்குத் தூண்டுதல் குற்றச்சாட்டுகளைப் பயன்படுத்தக்கூடாது என்று குறிப்பிட்டது. இறந்தவரின் துயரத்தில் இருக்கும் குடும்பத்தினரின் உடனடி உணர்வுகளைத் தணிப்பதற்காக மட்டுமே இந்தச் சட்டப் பிரிவை மக்களுக்கு எதிராகப் பயன்படுத்தக்கூடாது என்று அந்த அமர்வு எச்சரித்தது.
இந்தக் கண்ணோட்டம் பல ஆண்டுகளாகப் பின்பற்றப்படும் ஒரு தொடர்ச்சியான நீதித்துறைச் சிந்தனையின் ஒரு பகுதியாகும். 2002-ம் ஆண்டில், அவசரமாகவோ அல்லது கோபமாகவோ கூறப்படும் ஒரு கருத்து அல்லது அறிக்கை தற்கொலைக்குத் தூண்டியதாகாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.
2019-ல் நீதிமன்றம் இந்த நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியது. மற்றொரு அமர்வு, தற்கொலைக்குத் தூண்டிய நேரடி அல்லது மறைமுகச் செயல்களுக்கு ஆதாரம் இருக்க வேண்டும் என்று கூறியது. குற்றம் சாட்டப்பட்டவர் தனது செயல்களாலும், அவரது தொடர்ச்சியான நடத்தையாலும் இறந்தவர் தற்கொலை செய்வதைத் தவிர வேறு வழியில்லை என்பதை உணர வைக்கும் சூழ்நிலையை உருவாக்கினால், அந்த வழக்கு தற்கொலைக்குத் தூண்டிய குற்றத்தின் வரம்பிற்குள் வரும் என்று குறிப்பிட்டது.
நீதிமன்றம் உள்நாட்டு உறவுகளுக்கும், தொழில்முறை அல்லது பொது தொடர்புகளுக்கும் இடையில் வேறுபாட்டைக் காட்டியுள்ளது.
அக்டோபர் 2024-ல், விற்பனையாளரைத் துன்புறுத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்ட மூத்த அதிகாரிகள் மீதான வழக்கை ரத்து செய்த உச்சநீதிமன்றம், பின்னர் தற்கொலை செய்து கொண்ட விற்பனையாளருக்கு எதிராக, "உணர்ச்சிபூர்வமான உறவுகள்" (sentimental ties) மற்றும் "அதிகாரப்பூர்வ திறனில்" (official capacity) எடுக்கப்பட்ட நடவடிக்கைகளுக்கும் இடையே நீதிமன்றம் வேறுபாட்டைக் காட்டியது.
நெருங்கிய குடும்ப உறவுகள் சம்பந்தப்பட்ட வழக்குகளில், ஒரு சாதாரண சண்டைகூட உளவியல் சமநிலையின்மையை ஏற்படுத்தி, தற்கொலைக்கு வழிவகுக்கும் என்று நீதிமன்றம் குறிப்பிட்டது. இருப்பினும், தொழில்முறை அல்லது பொதுச் சூழல்களில், ஆதாரத்திற்கான தடை அதிகமாக உள்ளது. குற்றம் சாட்டப்பட்டவரின் "நேரடி மற்றும் அச்சமூட்டும் தூண்டுதல்" அல்லது தூண்டுதலுக்கான ஆதாரங்கள் இருக்க வேண்டும்.
கேரள வழக்கில், சமூக ஊடகங்களில் ஒரு காணொளியைப் பதிவிட்டது ஒரு அவதூறாக இருந்தாலும்கூட, இறந்தவரை தனது வாழ்க்கையை முடித்துக் கொள்ள கட்டாயப்படுத்தும் நேரடியாக, அந்தச் செயலில் உள்ள நோக்கமா அல்லது அது மன உளைச்சலை ஏற்படுத்திய செயல்களின் வகையின் கீழ் வருகிறதா என்பதையும் தற்கொலைக்குத் தூண்டியதை நிரூபிக்கத் தேவையான குறிப்பிட்ட குற்ற நோக்கத்தைக் கொண்டிருக்கவில்லையா என்பதை நீதிமன்றம் இறுதியில் தீர்மானிக்க வேண்டும்.
Original Article : Kerala viral video suicide case: As court denies bail to woman, what is the law on abetment of suicide? -Vineet Bhalla