சில சீர்திருத்தங்கள் இல்லாவிட்டால், நடக்கவிருக்கும் தேர்தலில் பெரிய செலவுகளை, பொதுமக்கள் தொடர்ந்து சுமக்க வேண்டியிருக்கும்.
2004ஆம் ஆண்டு, மக்களவைத் தேர்தலுக்கு முன்பு, பாஜக தலைமையிலான அரசு 'இந்தியா ஒளிர்கிறது' (India Shining) என்ற முழக்கத்துடன் பிரச்சாரத்தை துவக்கியது. இது, பொது நிதியை பயன்படுத்தியதால், மேலும், சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த பிரச்சாரத்திற்காக தோராயமாக ₹150 கோடி செலவிடப்பட்டதாக கூறப்படுகிறது. இது அந்த நேரத்தில் அரசாங்கத்தால் வழங்கப்பட்ட மிகப்பெரிய விளம்பர பிரச்சாரங்களில் ஒன்றாகும். அப்போதிருந்து, மத்திய மற்றும் மாநில அரசாங்கங்கள் இந்த போக்கைப் பின்பற்றி, கடந்த இருபது ஆண்டுகளில் மக்களவை மற்றும் மாநில சட்டமன்றத் தேர்தல்களுக்கு முன்பு விளம்பரங்களுக்காக, கணிசமான தொகையை செலவிடுகின்றனர்.
செலவு செய்வதற்கான வரம்புகள்
ஒரு ஜனநாயக நாட்டில், அரசாங்கம் அதன் திட்டங்கள் மற்றும் கொள்கைகள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். சுதந்திர இந்தியாவின் ஆரம்ப ஆண்டுகளில், இது முக்கியமாக பொதுக் கூட்டங்கள் மூலம் செய்யப்பட்டது. ஆனால், கடந்த 30 ஆண்டுகளில், பரந்த அளவிலான அச்சு மற்றும் மின்னணு ஊடகங்களில் விளம்பரங்கள் மூலம் விழிப்புணர்வு அதிகரித்துள்ளது. தற்போது, தேர்தலுக்கு முன் வரும் அரசு விளம்பரங்கள் பெரும்பாலும் ஆளும் கட்சியை ஊக்குவித்து, அதன் தலைவர்களை உருவாக்குகின்றன. 2018-19 முதல் 2022-23 வரை விளம்பரங்களுக்காக மத்திய அரசு ₹3,020 கோடி செலவிட்டுள்ளதாக தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் (Information and Broadcasting Ministry) தெரிவித்துள்ளது. 2018-19 தேர்தல் ஆண்டில், ₹408 கோடியாக இருந்த செலவினம், 2022-23ல் ₹1,179 கோடியாக உயர்ந்துள்ளது. ஏப்ரல்-மே மாதங்களில் வரவிருக்கும் பொதுத் தேர்தல்கள் காரணமாக 2023-24 இல் செலவு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், அரசு விளம்பரங்களை ஒழுங்குபடுத்துவதற்கான வழிகாட்டுதல்களை மே 2015 மற்றும் மார்ச் 2016 இல் உச்ச நீதிமன்றம் அமைத்தது. இது இருந்தபோதிலும், அதிகாரத்தில் இருக்கும் அரசாங்கங்கள், குறிப்பாக தேர்தலுக்கு முன், இன்னும் சமநிலையை சீர்குலைக்கும் விளம்பரங்களை வெளியிடுவதில் ஒரு நன்மையைக் கொண்டுள்ளன.
ஹேம்லெட்டின் (Hamlet) புகழ்பெற்ற மேற்கோளானது, சில பழக்கவழக்கங்கள் மற்றும் சட்டங்கள் கடைபிடிக்கப்படுவதற்குப் பதிலாக, அவற்றைப் பின்பற்றப்படாதபோது மிகவும் மதிக்கப்படுகின்றன என்று கூறுகிறது. இந்திய தேர்தல்களில், செலவு வரம்புகளை மீறுவது வழக்கமாகிவிட்டது. இதனால், உண்மையில், அது வெற்றி பெறுவதற்கு முக்கியமானதாகக் கருதப்படுகிறது.
மக்களவைத் தேர்தலில், வேட்பாளர்களின் செலவுக்கான வரம்பு பெரிய மாநிலங்களில் ரூ.95 லட்சமாகவும், சிறிய மாநிலங்களில் ரூ.75 லட்சமாகவும் உள்ளது. ஆனால் வாக்காளர்களுக்கு சட்டவிரோதமாக பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் விநியோகம் செய்யப்படுவதை நாம் கருத்தில் கொள்ளாவிட்டாலும், பிரதான கட்சிகளின் வேட்பாளர்கள் இந்த வரம்பை அதிக வித்தியாசத்தில் மீறுகிறார்கள் என்பது பரவலாக அறியப்படுகிறது. இந்த, ஊழல் நிறைந்த தேர்தல் நடைமுறைகளுக்கு பெயர் பெற்ற மாநிலங்களில், அதிகாரப்பூர்வ செலவுக்கான வரம்பு உண்மையான தேர்தல் செலவுகளை விட மிகவும் குறைவாக உள்ளது.
இந்தியாவில், தேர்தல்களின் போது அரசியல் கட்சிகளுக்கு செலவு செய்ய வரம்புகள் இல்லை. 2019 தேர்தலில், பாஜக ரூ.1,264 கோடியையும், காங்கிரஸ் ரூ.820 கோடியையும், தங்கள் அதிகாரப்பூர்வ செலவுகளாக அறிவித்தது. தேர்தல்களின் போது அரசியல் கட்சிகள் சுமார் ₹50,000 கோடி செலவிட்டதாக ஊடக ஆய்வு மையத்தின் (Centre for Media Studies (CMS)) அறிக்கை வெளிப்படுத்துகிறது. இந்தச் செலவில் பாஜக தோராயமாக 50%, காங்கிரஸ் 20% செலவிட்டது. 35% நிதி பிரச்சாரங்களுக்காக பயன்படுத்தப்பட்டதாகவும், 25% சட்டவிரோதமாக வாக்காளர்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. இந்த நிதியின் பெரும்பகுதி, பெருநிறுவனங்கள் மற்றும் வணிகர்களிடமிருந்து வருகிறது. இது, நன்கொடையாளர்களுக்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியாளர்களுக்கும் இடையே ஒரு சிக்கலான உறவை உருவாக்குகிறது.
அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற பெரிய ஜனநாயக நாடுகளில் தேர்தல்கள் மிகுந்த செலவுள்ளதாக மாறிவிட்டன. ஆனால், இந்தியாவில், பிரச்சனை என்னவென்றால், நன்கொடைகளில், பெரும்பாலானவைத் தெளிவாக இல்லை. மேலும், வாக்குகளுக்கு பணம் கொடுக்கும் நடைமுறை தேர்தலின் நேர்மையை குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது. சட்டப்பூர்வமாக, நன்கொடைகளில் வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கும் நோக்கில் தேர்தல் பத்திரங்கள் திட்டத்தை (electoral bonds scheme) உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது. இருப்பினும், இது புல்லட் (bullet) பட்ட காயத்தில் பேண்ட்-எய்ட் (band-aid) பயன்படுத்துவது போன்றது. ஏனெனில், நிதியின் பெரும்பகுதி இன்னும் கணக்கில் காட்டப்படாத பணமாகவே நடக்கிறது.
ஒரு சமமான போட்டியை நோக்கி
1998ஆம் ஆண்டில், இந்திரஜித் குப்தா குழு (Indrajit Gupta Committee) மற்றும் 1999ஆம் ஆண்டில், சட்ட ஆணையம் (Law Commission) தேர்தல்களுக்கு மாநில நிதியுதவியை வழங்க பரிந்துரைத்தது. அதாவது அரசியல் கட்சிகளுக்கோ அல்லது தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கோ அரசாங்கம் பணம் கொடுக்கும். தற்போதைய சூழலில், இந்த நடவடிக்கையை செயல்படுத்துவதற்கான சாத்தியக்கூறு மற்றும் வழிமுறை சந்தேகத்திற்குரியது. அனைத்து அரசியல் கட்சிகளிடையே ஒருமித்த கருத்தும், அத்தகைய மாநில நிதியுதவியின் விதிமுறைகளைப் பின்பற்றுவதில் ஒழுக்கமும் தேவை.
எவ்வாறாயினும், எதிர்மறையான விளைவுகளை இடையூறு என கருதாமல், அதிகரித்து வரும் தேர்தல் செலவை நாம் புறக்கணிக்க முடியாது. 2024 பொதுத் தேர்தலுக்கு ரூ.1 லட்சம் கோடி செலவாகும் என்று ஊடக ஆய்வு மையம் (Centre for Media Studies (CMS)) மதிப்பிட்டுள்ளது. தேர்தலை நியாயமாகவும், சமத்துவமாகவும் நடத்த, அரசியல்வாதிகள் ஒப்புக்கொண்டால் சில நடவடிக்கைகளை எடுக்க முடியும். இந்த யோசனைகள், இந்திய தேர்தல் ஆணையத்தின் 2016 ஆம் ஆண்டின் "முன்மொழியப்பட்ட தேர்தல் சீர்திருத்தங்கள்" (Proposed Electoral Reforms) அறிக்கையை அடிப்படையாகக் கொண்டவை. முதலாவதாக, தேர்தலுக்கு ஆறு மாதங்களுக்கு முன்பு, அரசு விளம்பரங்களை தடை செய்ய வேண்டும். இரண்டாவதாக, ஒரு கட்சி தனது வேட்பாளருக்கு கொடுக்கும் எந்த பணமும் அந்த வேட்பாளருக்கான செலவுகான வரம்பை மீறக்கூடாது. மூன்றாவதாக, கட்சிகளுக்கு செலவு செய்வதற்கு நிர்ணயிக்கப்பட்ட வரம்பு இருக்க வேண்டும். இறுதியாக, தேர்தல் தொடர்பான வழக்குகளை விரைவாகக் கையாள உயர் நீதிமன்றங்களில் கூடுதல் நீதிபதிகள் சேர்க்கப்படலாம். இது, விதிமுறை மீறல்களைத் தடுக்கும் வகையில் செயல்படுகிறது. இந்த சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்த, இரு கட்சி அரசியல் ஆதரவு (bipartisan political support) தேவைப்படுகிறது. அவை நடைமுறைப்படுத்தப்படாவிட்டால், தேர்தல் காட்சிகளுக்கான பெரிய செலவினங்களை பொதுமக்களே ஏற்றுக்கொள்வார்கள்.
ஆர்.இரங்கராஜன், முன்னாள் ஐ.ஏ.எஸ்., அதிகாரி, 'Polity Simplified’' என்ற புத்தகத்தின் ஆசிரியர் மற்றும் 'Officers IAS Academy’யில் சிவில் சர்வீஸ் ஆர்வலர்களுக்கு பயிற்சி அளிக்கிறார்.