ஒரு நீதிபதி வழக்கை விசாரிக்க மறுக்கலாமா? நீதிபதிகள் ஏன் விலகிக்கொள்கிறார்கள்? 'நலன் சார்ந்த முரண்' (Conflict of Interest) என எதை வரையறுப்பது? இந்தியாவில் இதற்கென முறையான ஒரு நடைமுறை உள்ளதா?
தற்போதைய செய்தி :
டெல்லியின் முன்னாள் முதலமைச்சரும், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் 5 நபர்கள் தாக்கல் செய்த மனுக்களை நிராகரித்த டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி ஸ்வரண காந்த சர்மா, திங்களன்று மதுபான கொள்கை (excise policy case) தொடர்பான வழக்கை விசாரிப்பதிலிருந்து தன்னை விலக்கிக்கொள்ள மறுத்துவிட்டார். நீதிபதி ஷர்மா மீது சுமத்தப்பட்ட “அவதூறுகள், மறைமுகக் குற்றச்சாட்டுகள் மற்றும் சந்தேகங்களுடனேயே” இந்த விலகல் கோரிக்கைகள் ஆதாரங்களுடன் வந்துள்ளன என்று அவர் குறிப்பிட்டார். நீதிபதிகளின் விலகல் (recusal of judges) என்றால் என்ன? நீதிபதிகள் எவ்வாறு, ஏன் வழக்குகளிலிருந்து தங்களை விலக்கிக் கொள்கிறார்கள்?
முக்கிய அம்சங்கள்:
1. நலன் சார்ந்த முரண்பாடு ஏற்படும்போது, ஒரு வழக்கிற்குத் தீர்ப்பளிக்கும்போது அவர் ஒருதலைபட்சமாக நடந்துகொண்டார் என்ற எண்ணம் உருவாவதைத் தடுப்பதற்காக, ஒரு நீதிபதி அந்த வழக்கை விசாரிப்பதிலிருந்து விலகிக்கொள்ளலாம்.
2. நலன் சார்ந்த முரண்பாடு (conflict of interest) என்பது, வழக்காடும் ஒரு நிறுவனத்தில் பங்குகளை வைத்திருப்பது முதல், வழக்கில் சம்பந்தப்பட்ட ஒரு தரப்பினருடன் முன் அனுபவமோ அல்லது தனிப்பட்ட தொடர்போ கொண்டிருப்பதுவரை பல வழிகளில் ஏற்படலாம்.
3. யாரும் தங்களுக்குச் சொந்தமான வழக்கில் தாங்களே நீதிபதியாக இருக்க முடியாது என்ற சட்டத்தின் அடிப்படை விதியிலிருந்துதான் இந்த நடைமுறை உருவாகிறது. ஒரு நீதிபதி நேர்மையாகச் செயல்பட வேண்டிய கடமை அவருக்கு இருப்பதால், எந்தவொரு சிறு முரண்பாடும் அவர் அந்த வழக்கிலிருந்து விலகுவதற்கு ஒரு காரணமாக அமையலாம்.
4. ஒரு நீதிபதி உயர்நீதிமன்றத்தில் பணியாற்றியபோது வழங்கிய தீர்ப்பிற்கு எதிராக, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும்போது, அதே நீதிபதி அந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரிக்க முடியாது. இது ஒரு நீதிபதி வழக்கில் இருந்து விலகுவதற்கான மற்றொரு சூழல் ஆகும்.
இயற்கை நீதிக் கோட்பாடு மற்றும் தனது சொந்த வழக்கில் எவரும் நீதிபதியாக இருக்கக்கூடாது (Nemo Judex In Causa Sua) என்ற கோட்பாடு
இயற்கை நீதி என்பது பொதுவான சட்டத்தின் ஒரு முக்கியக் கருத்தாகும். இது, ஒரு தனிநபரின் உரிமைகளைப் பாதிக்கும் எந்தவொரு முடிவையும் எடுக்கும்போது நீதிமன்றமும், நீதித்துறை சார்ந்த மற்றும் நிர்வாக அமைப்பும் பின்பற்ற வேண்டிய நடைமுறைக் கோட்பாடுகளைக் குறிக்கிறது. இயற்கை நீதி என்பது நேர்மை, சமத்துவம் மற்றும் நீதியை உள்ளடக்கியது. நீதித்துறை அல்லது நிர்வாகச் செயல்பாடுகளில் இயற்கை நீதிக் கோட்பாடு பின்வரும் இரண்டு முக்கிய தூண்களை அடிப்படையாகக் கொண்டது:
1. Nemo Judex In Causa Sua: அதாவது, "எந்தவொரு நபரும் தனது சொந்த வழக்கில்தானே நீதிபதியாக இருக்கக்கூடாது". நீதி வழங்கப்படுவது மட்டுமல்லாமல், அது நேர்மையாக வழங்கப்படுவதும் வெளிப்படையாகத் தெரிய வேண்டும்.
2. இருதரப்பையும் கேட்டு விசாரித்தல் என்ற கோட்பாட்டின்படி, (Audi Alteram Partem) ஒரு நபர் மீது நீதித்துறை அல்லது நிர்வாக நடவடிக்கை எடுப்பதற்குமுன், அவருக்கு தகுந்த விளக்கமளிக்கவும், தனது தரப்பு நியாயத்தை முன்வைக்கவும் வாய்ப்பளிக்கப்பட வேண்டும்.
ஒரு வழக்கிலிருந்து நீதிபதி தன்னைத்தானே விடுவித்துக் கொள்ளும் முறை
1. நீதிபதிகள் வழக்கிலிருந்து விலகுவதைக் கட்டுப்படுத்த முறையான விதிகள் எதுவும் இல்லை. இருப்பினும், பல உச்சநீதிமன்றத் தீர்ப்புகள் இந்த செயல்முறை குறித்து ஆராய்ந்துள்ளன.
2. 1987-ஆம் ஆண்டு ரஞ்சித் தாக்கூர் vs இந்திய ஒன்றியம் வழக்கில் (Ranjit Thakur v Union of India (1987)), ஒரு நீதிபதி சார்பாகச் செயல்படுகிறாரா என்ற சந்தேகம், அந்த வழக்கில் சம்பந்தப்பட்ட தரப்பினரின் மனதில் நியாயமாகத் தோன்றுகிறதா என்பதே முக்கிய அளவுகோல் என்று உச்சநீதிமன்றம் கூறியது. ஒரு நீதிபதி, நான் சார்பாக இருக்கிறேனா? என்று தனக்குள்ளேயே கேட்டுக்கொள்வதைவிட, அந்த வழக்கில் உள்ள தரப்பினரின் மனநிலை எப்படி இருக்கிறது என்பதைப் பார்க்க வேண்டும், என்று நீதிமன்றம் குறிப்பிட்டது.
3. உச்ச நீதிமன்றத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட 'நீதித்துறை வாழ்வின் விழுமியங்களின் மறுஉறுதி' (Restatement of Values in Judicial Life - 1999) என்ற நெறிமுறை ஆவணத்தில், ஒரு நீதிபதி தான் பங்குகள் வைத்திருக்கும் ஒரு நிறுவனத்தின் வழக்கை, தனது தொடர்பை வெளிப்படுத்தாமலும், அதற்கு யாரும் எதிர்ப்பு தெரிவிக்காத பட்சத்திலும் விசாரிக்கவோ அல்லது தீர்ப்பளிக்கவோ கூடாது என்று கூறப்பட்டுள்ளது.
4. வழக்கில் இருந்து விலகிக்கொள்ளும் முடிவு நீதிபதியிடமிருந்தே வருகிறது. ஏனெனில், அது சாத்தியமான எந்தவொரு முரண்பாட்டையும் வெளிப்படுத்துவது நீதிபதியின் கடமையாகும். சில சூழ்நிலைகளில், வழக்கறிஞர்களோ அல்லது வழக்கில் உள்ள தரப்பினரோ இதனை நீதிபதியிடம் தெரிவிக்கின்றனர். ஒரு நீதிபதி விலகினால், அந்த வழக்கு புதிய அமர்வுக்கு மாற்றப்படுவதற்கு வசதியாக, தலைமை நீதிபதியின் பட்டியலுக்கு அனுப்பப்படும்.
5. குறிப்பாக, ஒரு வழக்கில் இருந்து விலகக் கோரிக்கை விடுக்கப்பட்டவுடன், விலகுவதா இல்லையா என்ற முடிவு நீதிபதியிடமே உள்ளது. சில சூழல்களில், நீதிபதிகள் தங்களுக்கு முரண்பாடு எதுவும் இல்லை என்று கருதினாலும், அச்சம் எழுந்த காரணத்தால் மட்டுமே வழக்கில் இருந்து விலகியிருக்கிறார்கள். அதே சமயம், ஒரு வழக்கிலிருந்து விலக நீதிபதிகள் மறுத்த பல சம்பவங்களும் நடந்துள்ளன.
6. இந்தச் செயல்முறையை நிர்வகிக்கும் முறையான விதிகள் எதுவும் இல்லாததால், வழக்கில் இருந்து விலகுவதற்கான காரணங்களைப் பதிவு செய்வது பெரும்பாலும் வழக்கை விசாரிக்கும் நீதிபதிகளிடமே விடப்படுகிறது. சில நீதிபதிகள் நீதிமன்றத்தில் காரணங்களை வெளிப்படையாக கூறுகின்றனர். சில சமயங்களில், காரணங்கள் வெளிப்படையாகத் தெரிகின்றன.
7. 2015-ஆம் ஆண்டில் தேசிய நீதித்துறை நியமனங்கள் ஆணையம் (National Judicial Appointments Commission) அரசியலமைப்புக்கு முரணானது என்று தீர்ப்பளித்த ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பில், நீதிபதிகள் குரியன் ஜோசப் மற்றும் மதன் லோகூர் ஆகியோர், நீதித்துறை வெளிப்படைத்தன்மையை உறுதிசெய்யவும், இந்தச் செயல்முறைக்கான விதிகளை உருவாக்கவும் நீதிபதிகள் விலகுவதற்கான காரணங்களை எழுத்துப்பூர்வமாகத் தெரிவிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினர்.
முன் ஜாமீன் (Anticipatory bail) என்றால் என்ன?
தெலங்கானா உயர் நீதிமன்றத்தால் பவன் கேராவுக்கு முன்னர் வழங்கப்பட்ட இடைக்கால முன்ஜாமீனை நீட்டிக்க உச்சநீதிமன்றம் மறுத்ததைத் தொடர்ந்து, முன்ஜாமீன் மீண்டும் கவனம் பெற்றுள்ள நிலையில், அதன் அர்த்தம் என்ன என்பதைப் புரிந்துகொள்வது அவசியமாகிறது.
1. பிளாக்ஸ் சட்ட அகராதியின் 4-வது பதிப்பு, ஒரு நபர் குறிப்பிட்ட நேரத்தில், குறிப்பிட்ட இடத்தில் நேரில் ஆஜராகி, நீதிமன்றத்தின் தீர்ப்புக்கும் அதிகார வரம்புக்கும் உட்படுவார் என்ற உறுதிமொழியின் அடிப்படையில், அந்த நபரை சட்டப்பூர்வமான காவலில் இருந்து விடுவிப்பதே ஜாமீன் (Bail) என்று இந்த சட்ட அகராதி விவரிக்கிறது.
2. கைது செய்யப்பட்ட ஒருவருக்கு வழங்கப்படும் சாதாரணப் பிணைக்கு மாறாக, ஒருவர் கைது செய்யப்படுவதற்கு முன்பே பிணையில் விடுவிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிடுவது, முன்பிணை ஆகும்.
3. பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா, 2023 (Bharatiya Nagarik Suraksha Sanhita (BNSS)), குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு-482-ல் (முன்னர் பிரிவு 438) முன்ஜாமீன் தொடர்பான விதிகள் இடம்பெற்றுள்ளன. இந்த விதி, முன்பிணை வழங்கும் அதிகாரத்தை அமர்வு நீதிமன்றத்திற்கும் (Sessions Court) உயர்நீதிமன்றத்திற்கும் மட்டுமே வழங்குகிறது.
4. அந்த விதியின் துணைப் பிரிவு (1): “பிணையில் வெளிவர முடியாத குற்றத்தைச் செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு, தாம் கைது செய்யப்படலாம் என்று நம்புவதற்கு எந்தவொரு நபருக்கும் காரணம் இருந்தால், அவர் இந்தப் பிரிவின்கீழ் ஒரு உத்தரவுக்காக உயர்நீதிமன்றத்திலோ அல்லது அமர்வு நீதிமன்றத்திலோ விண்ணப்பிக்கலாம். மேலும், நீதிமன்றம், அந்த செயல்முறை தேவையற்றது என்று கருதினால், அந்த நபர் கைது செய்யப்படும் பட்சத்தில், அவர் பிணையில் விடுவிக்கப்பட வேண்டும் என்றும் உத்தரவிடலாம்.
5. 1980-ஆம் ஆண்டு குர்பக்ஷ் சிங் சிபியா vs பஞ்சாப் மாநிலம் ( Gurbaksh Singh Sibbia vs State of Punjab (1980)) வழக்கில், அப்போதைய தலைமை நீதிபதி ஒய்.வி. சந்திரசூட் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்ற அமர்வு, முன்ஜாமீன் சட்டப்பிரிவானது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 21-ன் (உயிர்வாழ்வதற்கும் தனிமனித சுதந்திரத்திற்குமான பாதுகாப்பு) அடிப்படையில் விளக்கப்படவேண்டும் என்று உத்தரவிட்டது.
Original link:
Recusal of Judges Explained: When and why do judges step aside?