அனைத்துத் தனிநபர் சட்டங்களிலும் உள்ள பெண்களுக்கான மிகச்சிறந்த மற்றும் சாதகமான அம்சங்களை உள்ளடக்கிய ஒரு சட்டமே பயனுள்ள பொது சிவில் சட்டம் (Uniform Civil Code (UCC)) ஆகும்.
பொது சிவில் சட்டம் (UCC) மீண்டும் ஒருமுறை பொது விவாதத்திற்குரிய முக்கியப் பொருளாக மாறியுள்ளது. இம்முறை அரசாங்கத்தைவிட உச்சநீதிமன்றமே இதற்கு முக்கியக் காரணமாக அமைந்துள்ளது. அரசியலமைப்புச் சட்டத்தின் 44-வது பிரிவு (Article 44) இதனை ஒரு கொள்கை முடிவாகக் கருதினாலும், நீதிமன்றம் இதில் கவனம் செலுத்தியுள்ளது. வாரிசுரிமை மற்றும் சொத்துரிமை போன்ற விவகாரங்களில் முஸ்லீம் தனிநபர் சட்டத்தைப் பின்பற்ற அனுமதிக்கும் 1937-ஆம் ஆண்டின் முஸ்லீம் ஷரியத் (பயன்பாடு) சட்டத்தை (Muslim Shariat (Application) Act, 1937) ரத்து செய்யக் கோரி அண்மையில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. தலைமை நீதிபதி சூர்யா காந்த் தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு, முஸ்லீம் தனிநபர் சட்டத்தில் உள்ள பாகுபாடான நடைமுறைகளை நீக்க பொது சிவில் சட்டத்துக்கு ஆதரவான சில முக்கிய கருத்துக்களைப் பதிவு செய்தது. அதே நேரத்தில், அதிகப்படியான சீர்திருத்தங்கள் தற்போதுள்ள பயன்களை இழக்கச் செய்துவிடக்கூடும் என்றும் நீதிமன்றம் எச்சரித்துள்ளது.
ஜாமியத் உலமா-இ-ஹிந்த் (Jamiat Ulama-i-Hind - JUH) அமைப்பு, புதிதாக இயற்றப்பட்ட குஜராத் பொது சிவில் சட்டத்தில் உள்ள வாரிசுரிமை சட்டத்தில் செய்யபட்டுள்ள மாற்றங்களை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. ஒரு நபர் தனது சொத்து முழுவதையும் யாருக்கு வேண்டுமானாலும் உயில் எழுதி வைப்பதற்குச் சட்டம் முழு சுதந்திரம் அளிக்கும் பட்சத்தில், மகன் மற்றும் மகளுக்குச் சமமான பங்குகளை வழங்குவது மட்டும் உண்மையான சமநிலையை உறுதி செய்யாது என்றும் வாதிடப்படுகிறது. இந்து வாரிசுரிமைச் சட்டம், 1956 (Hindu Succession Act-1956), இந்திய வாரிசுரிமைச் சட்டம், 1925 (Indian Succession Act - 1925) அல்லது உத்தரகண்ட் பொது சிவில் சட்டம், 2024 (Uttarakhand Uniform Civil Code -2024) என எதுவுமே ஒருவரின் உயில் எழுதும் அதிகாரத்திற்கு இதுபோன்ற கட்டுப்பாடுகளை விதிக்கவில்லை என்றும் குறிப்பிடப்படுகிறது.
இதற்கு நேர்மாறாக, ஷரியத் சட்டம் (Shariat Act) மற்றும் இஸ்லாமியத் தனிநபர் சட்டத்தின்கீழ் (Muslim Personal Law (MPL)), ஒரு இஸ்லாமிய நபர் தனது சொத்தில் மூன்றில் ஒரு பங்குக்கு மேல் உயில் (Will) எழுதி வைக்க முடியாது. மேலும், மற்ற வாரிசுகளின் சம்மதம் இன்றி ஒரு வாரிசுக்கு மட்டும் ஆதரவாக உயில் எழுத முடியாது. இத்தகைய கட்டுப்பாடுகளைக் கொண்டிருக்காத எந்தவொரு பொது சிவில் சட்டமும் (UCC), சொத்துரிமை விவகாரங்களில் இஸ்லாமியப் பெண்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்கின்றனர்.
1937-ஆம் ஆண்டு ஷரியத் சட்டம் (Shariat Act) இயற்றப்பட்டதற்குக் காரணம், பல இஸ்லாமியச் சமூகங்கள் வழக்கங்கள் என்ற பெயரில் மகள்களுக்கு அவர்களின் தந்தையின் சொத்தில் உரிய பங்கினை வழங்க மறுத்து வந்ததே ஆகும். இந்தச் சட்டத்தின் பிரிவு-2, சம்பந்தப்பட்ட நபர்கள் இஸ்லாமியர்களாக இருக்கும் பட்சத்தில், சில தனிப்பட்ட விவகாரங்களில் இஸ்லாமியத் தனிநபர் சட்டம் (Muslim Personal Law (MPL)) பொருந்தும் என்று கூறுகிறது. பொதுவாக இஸ்லாமியத் தனிநபர் சட்டம் என்பது முற்றிலும் மரபுவழிச் சட்டம் என்று தவறாகக் கருதப்படுகிறது. ஆனால் உண்மையில், இது 1937-ஆம் ஆண்டு சட்டம் போன்ற ஒரு மதச்சார்பற்ற சட்டமன்றத்தால் உருவாக்கப்பட்ட சட்டங்களின் மூலம் ஓரளவிற்கு முறைப்படுத்தப்பட்ட சட்டம் ஆகும். மேலும், நீதிமன்றத் தீர்ப்புகளும் இஸ்லாமியத் தனிநபர் சட்டடத்தின் ஒரு பகுதியாக விளங்குகின்றன. எனவே, இது அறிஞர்களின் கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டு சட்ட வல்லுநர்களால் உருவாக்கப்பட்ட சட்டங்களாகவே கருதப்படுகிறது.
ஷயாரா பானு (2017) (Shayara Bano (2017) case) வழக்கில், உடனடி முத்தலாக் நடைமுறை குர்ஆனில் குறிப்பிடப்படாத காரணத்தால், அது செல்லாது என்று உச்சநீதிமன்றம் அறிவித்தது. இருப்பினும், சொத்துரிமை விவகாரங்களில் பாகப்பிரிவினை பற்றி குர்ஆனில் மிகத் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளதால், அத்தகைய விதிகளை அந்த மதத்தின் அத்தியாவசியமான மத நடைமுறை (Essential Religious Practice (ERP)) அல்ல என்று வாதிடுவது கடினமான ஒன்றாகும். உதாரணமாக, சபரிமலை மறுஆய்வுத் தீர்ப்பு, ஒரு மதம் சார்ந்த நடைமுறை அந்த மதத்திற்கு எவ்வளவு அவசியமானது என்பதைத் தீர்மானிக்கும் இந்த 'அவசியத் தன்மை சோதனையையே' மீண்டும் பரிசீலிக்க வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கின்றனர்.
ஷரியத் சட்டம் (Shariat Act) வேளாண் நிலங்களுக்குப் பொருந்தாது என்பதால், அத்தகைய சொத்துக்களில் இஸ்லாமியப் பெண்களுக்குப் பங்கு கிடைப்பதில்லை. சில மாநில நிலச் சட்டங்கள் இன்னும் கடுமையான கட்டுப்பாடுகளைக் கொண்டுள்ளன. இஸ்லாமியத் தனிநபர் சட்டத்தின்படி (MPL) மகன்களுக்குக் கிடைக்கும் பங்கில் பாதி மகள்களுக்கு வழங்கப்படுகிறது. ஆனால், சில நிலச் சட்டங்கள் மகன்கள் இருக்கும்போது மகள்களை முற்றிலும் புறக்கணிக்கின்றன. உத்தரப்பிரதேச வருவாய் குறியீடு (Uttar Pradesh Revenue Code), 2006, திருமணமாகாத மகள்களுக்குப் பங்கு வழங்குவதன் மூலம் சில முன்னேற்றங்களைக் கொண்டு வந்தது. இருப்பினும், திருமணமான மற்றும் திருமணமாகாத மகள்களை வேறுபடுத்திப் பார்ப்பது அநீதியானது மற்றும் இந்திய அரசியலமைப்பின் 14-வது பிரிவை (Right to Equality) மீறுவதாகும். சில அம்சங்களில், இந்து சட்டத் தொகுப்பு அல்லது உத்தராகண்ட் பொது சிவில் சட்டத்தைவிட இஸ்லாமியத் தனிநபர் சட்டமே பெண்களுக்கு அதிக ஆதரவாக உள்ளது. எனவே, பொது சிவில் சட்டம் மட்டுமே இஸ்லாமியப் பெண்களின் அனைத்துப் பிரச்சனைகளுக்கும் முழுமையான தீர்வு என்று கருதுபவர்கள், இந்தியத் தலைமை நீதிபதியின் கருத்துக்களைப் பரிசீலிக்க வேண்டும் என்றும் கூறப்படுகிறது.
இஸ்லாமியத் தனிநபர் சட்டத்தின்கீழ், ஒரு திருமணத்திற்கு மணப்பெண்ணின் சம்மதம் மிகவும் அவசியமானது; இதில் 'கன்னிகாதானம்' போன்ற கருத்துருக்கள் எதுவும் கிடையாது. மணப்பெண் தனது திருமண ஒப்பந்தத்தில் (நிக்காநாமா - Nikahnama) தனக்கு விருப்பமான எந்தவொரு நிபந்தனையையும் சேர்த்துக்கொள்ளலாம். வரதட்சணை முறையைப் போலன்றி, கணவன் மனைவிக்கு வழங்கும் மஹர் (Mehar) என்ற மணக்கொடை ஒரு முறையான திருமணத்திற்கு மிக அவசியமானது. இஸ்லாமிய முறைப்படி, திருமணம் என்பது ஒரு மதச்சடங்கு அல்ல, அது ஒரு சட்ட ரீதியான ஒப்பந்தம் (Civil Contract) ஆகும். மேலும், ஷரியத் சட்டத்தின்படி (Shariat Act), ஒரு பெண் பல வழிகளில் விவாகரத்து பெற அதிகாரம் பெற்றுள்ளார். உதாரணமாக, குலா (Khula) என்பது ஒரு முஸ்லிம் மனைவி தனக்கு விருப்பமில்லாத பட்சத்தில் பெறக்கூடிய 'குற்றச்சாட்டு இல்லாத' விவாகரத்து முறையாகும். ஷரியத் சட்டம் வந்த இரண்டு ஆண்டுகளுக்குள், ஒரு முற்போக்கான சீர்திருத்தமாக 1939-ஆம் ஆண்டு இஸ்லாமியத் திருமணங்கள் கலைப்புச் சட்டம் (Dissolution of Muslim Marriages Act, 1939) இயற்றப்பட்டது. இந்தச் சட்டத்தின்கீழ், கணவன் தனது கடமைகளைச் செய்யத் தவறுதல், மனநலப் பாதிப்பு அல்லது நோய், மற்றும் கணவன் இரண்டாவது திருமணம் செய்துகொள்வது உள்ளிட்ட கொடுமைகள் ஆகிய காரணங்களை முன்வைத்து ஒரு பெண் நீதிமன்றம் மூலம் விவாகரத்து (பஸ்க் - Faskh) கோர முடியும் என்பதையும் சுட்டிக்காட்டுகின்றனர்.
ஒரு பொது சிவில் சட்டத்தை ஒரேடியாகக் கொண்டு வராமல், படிப்படியாக அறிமுகப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர். "ஒரே மாதிரியான" சட்டத்தைவிட, அனைவருக்கும் "சமமான நீதி" என்கிற ஒரு சட்டத்தை உருவாக்குவதே முக்கியம் என்கின்றனர். ஏற்கனவே இந்து சட்டத் தொகுப்பு (Hindu Code), இஸ்லாமியச் சட்டத்திலிருந்து பல கொள்கைகளை ஏற்றுக்கொண்டுள்ளது. நாகரிக வளர்ச்சியை நோக்கிய பயணத்தில், இதுபோன்ற நல்ல அம்சங்களைப் பகிர்ந்துகொள்வதை நாம் மதிக்க வேண்டுமே தவிர, நிராகரிக்கக் கூடாது. உண்மையிலேயே ஒரு சிறந்த பொது சிவில் சட்டம் என்பது, அனைத்து தனிநபர் சட்டங்களிலும் உள்ள பெண்களுக்கு ஆதரவான மிகச்சிறந்த அம்சங்களை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் என்றும் சுட்டிக்காட்டுகின்றனர்.
ஃபைசான் முஸ்தபா, பீகார் மாநிலம் பாட்னாவிலுள்ள சாணக்யா தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஆவார்.
Original article : Uniform Civil Code may leave Muslim women worse off -Faizan Mustafa