6-வது அட்டவணையின்கீழ் லடாக்கைச் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கை ஏன் தொடர்ந்து வருகிறது? - திலீப் பி சந்திரன்

லடாக்கின் மக்கள்தொகையில் 90 சதவீதத்திற்கும் அதிகமானோர் பட்டியல் பழங்குடியினர் என்பதால்,  அந்தப்பகுதியை 6-வது அட்டவணையின் கீழ் சேர்க்க வேண்டும் என்ற தொடர்ச்சியான கோரிக்கை இருந்து வருகிறது. ஆனால், 6-வது அட்டவணையின் கீழ் நிர்வகிக்கப்படும் பிராந்தியங்களின் அனுபவம், அடிப்படைச் சமூக-அரசியல் மற்றும் நிர்வாகப் பிரச்சினைகளைக் கையாள்வது எதைக் குறிக்கிறது?


சமீபத்தில், லடாக்கில் மாநில அங்கீகாரம் மற்றும் அரசியலமைப்பின் 6-வது அட்டவணையின் கீழ் பாதுகாப்புகள் கோரி எதிர்ப்புப் பேரணிகள் நடைபெற்றன. இந்தப் பிரச்சினை 2019-ஆம் ஆண்டு, சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டு, முந்தைய ஜம்மு காஷ்மீர் மாநிலம், ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டபோது தொடங்கியது.


6-வது அட்டவணையின் கீழ் லடாக்கைச் சேர்க்க வேண்டும் என்ற தொடர்ச்சியான கோரிக்கை ஏன் இருந்து வருகிறது? அரசியலமைப்பின் 6-வது அட்டவணையின் விதிகள் யாவை. மேலும், சுயாட்சி மற்றும் நிறுவன வழிமுறைகள் ஆகியவற்றின் அடிப்படையில் அது 5-வது அட்டவணையிலிருந்து எவ்வாறு வேறுபடுகிறது?


லடாக் ஏன் 6-வது அட்டவணையில் சேர்க்கப்பட வேண்டும்?


6-வது அட்டவணையில் லடாக்கைச் சேர்ப்பது தொடர்பான பிரச்சினை, ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அங்கீகாரம் வழங்கிய 370-வது சட்டப்பிரிவு 2019-ல் ரத்து செய்யப்பட்டபோது தொடங்கியது. மாநிலத்தின் நிரந்தரக் குடியிருப்பாளர்கள், அவர்களின் சிறப்பு உரிமைகள் மற்றும் சலுகைகளை வரையறுக்க ஜம்மு காஷ்மீர் சட்டமன்றத்திற்கு அதிகாரம் அளித்திருந்த 35A சட்டப்பிரிவும் ரத்து செய்யப்பட்டது.


அதனைத் தொடர்ந்து, 2019-ஆம் ஆண்டு ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்புச் (Jammu and Kashmir Reorganisation Act) சட்டம் நிறைவேற்றப்பட்டு, ஜம்மு காஷ்மீரில் சட்டமன்றத்துடன் கூடிய ஜம்மு காஷ்மீர் மற்றும் சட்டமன்றம் இல்லாத லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டது. இந்த மாற்றங்கள், ஒன்றியம்   மற்றும் மாநிலங்களுக்கிடையேயான கூட்டாட்சி  உறவுகளின் அடிப்படையை மாற்றியுள்ளன.


மக்கள் தொகை குறைவாக உள்ள இமயமலைப் பகுதியான லடாக்கில், முதலில் லே மற்றும் கார்கில் என இரண்டு மாவட்டங்கள் இருந்தன. ஆகஸ்ட் 2024-ல், ஜான்ஸ்கர், டிராஸ், ஷாம், நுப்ரா மற்றும் சாங்தாங் என ஐந்து புதிய மாவட்டங்கள் சேர்க்கப்பட்டன. லடாக் ஒரே ஒரு மக்களவைத் தொகுதியால் பிரதிநிதித்துவப்படுத்தப்படுகிறது.


லடாக் சட்டமன்றம் இல்லாத ஒரு யூனியன் பிரதேசம் என்பதால், 2019-ஆம் ஆண்டு முதல் சட்டமன்றம் இல்லாதது, சூழலியல் ரீதியாகப் பாதிக்கப்படக்கூடிய இப்பகுதிக்கு நிலம், வேலைவாய்ப்பு மற்றும் மேம்பாட்டுக் கொள்கைகள் தொடர்பான முடிவெடுக்கும் செயல்பாடுகளில்  பயனுள்ள பங்களிப்பை மறுத்துவிட்டது என்று போராட்டக்காரர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.


நிலம், வேலைவாய்ப்பு, சுற்றுச்சூழல் அமைப்பு மற்றும் கலாச்சாரம் ஆகியவற்றின் மீதான கட்டுப்பாட்டை இழந்ததாகக் கருதப்படுவதே இந்தப் போராட்டத்தின்   முக்கியக் காரணம் என்று கூறப்படுகிறது. லடாக்கின் மக்கள்தொகையில் 90 சதவீதத்திற்கும் அதிகமானோர் பட்டியல் பழங்குடியினராக இருப்பதும், 6-வது அட்டவணையின் கீழ் சேர்க்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைக்கு ஒரு காரணமாகும். இந்தக் கோரிக்கையை விரிவான அரசியலமைப்புச் சூழலிலும் புரிந்துகொள்ளப்பட வேண்டும்.


6-வது அட்டவணையின் கீழ் அரசியலமைப்புப் பாதுகாப்புகள்


அரசியலமைப்புச் சபையின் சில உறுப்பினர்கள் பழங்குடியினப் பகுதிகளுக்கு அதிக சுயாட்சி வழங்குவது குறித்து அச்சம் கொண்டிருந்தாலும், பழங்குடியினரின் அடையாளங்கள், நிலம், வளங்கள் மற்றும் பழக்கவழக்கங்களைப் பாதுகாக்கும் வகையில் அரசியலமைப்பு 6-வது அட்டவணையை வடிவமைத்தது. 6-வது அட்டவணை அரசியலமைப்பின் 244(2) மற்றும் 275(1) போன்ற பிரிவுகளின் கீழ் அமல்படுத்தப்பட்டது.


பிரிவு 244(2) அசாம், மேகாலயா, திரிபுரா மற்றும் மிசோரம் மாநிலங்களில் உள்ள பழங்குடியினர் பகுதிகளின் நிர்வாகத்தை பற்றியதாகும். பிரிவு 275(1) சில மாநிலங்களுக்கு, அந்த மாநிலத்தில் உள்ள பட்டியல் பழங்குடியினரின் நலனை மேம்படுத்துவதற்காக அல்லது அந்த மாநிலத்தில் உள்ள பட்டியல் பகுதிகளின் நிர்வாக நிலையை அந்த மாநிலத்தின் மற்ற பகுதிகளின் நிர்வாக நிலையை உயர்த்துவதற்காக ஒன்றிய அரசு மானியங்களை மானியங்களை வழங்குகிறது.


6-வது அட்டவணையானது, நான்கு வடகிழக்கு மாநிலங்களின் பழங்குடியினப் பகுதிகளில் அவர்களின் தனித்துவமான அடையாளங்கள், கலாச்சாரம், உரிமைகள் மற்றும் வளங்களைப் பாதுகாக்கும் வகையில் ஒரு தனித்துவமான நிர்வாகக் கட்டமைப்பை உருவாக்குகிறது. இந்த அரசியலமைப்புப் பாதுகாப்பு, சட்டமன்ற, நிர்வாக மற்றும் நீதித்துறைத் துறைகளில் அவர்களுக்கு  சுயாட்சியை (autonomy) வழங்குகிறது.


தன்னாட்சி மாவட்ட சபைகள் (Autonomous District Councils (ADCs))


6-வது அட்டவணையின் கீழ், ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தன்னாட்சி மாவட்ட சபைகளை (ADCs) அமைக்க மாநில ஆளுநர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு தன்னாட்சி மாவட்ட சபைகளும் 30 உறுப்பினர்களுக்கு குறையாமல் இருக்க வேண்டும். அவர்களில் நான்கு நபர்கள் ஆளுநரால் நியமிக்கப்படுவார்கள். மற்ற நபர்கள் அனைவருக்கும் வாக்குரிமை அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.


தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் ஐந்தாண்டு   காலம்  பதவி வகிக்கின்றனர். நியமன உறுப்பினர்கள் ஆளுநர்களின் விருப்பத்தின் பேரில் பதவி வகிக்கின்றனர். ஆளுநர்கள், பல்வேறு பட்டியல் பழங்குடியினர் வசிக்கும் மாவட்டங்களுக்குள் உள்ள தன்னாட்சிப் பகுதிகளுக்கு மண்டல சபைகளையும் (Regional Councils (RCs)) அமைக்கலாம். அனைத்து சபைகளுக்கும் ஒரே மாதிரியான அதிகாரங்களும் செயல்பாடுகளும் இல்லை என்றாலும், தன்னாட்சி மாவட்ட சபைகள் மற்றும் மண்டல சபைகளின் பொதுவான அதிகாரங்கள் பின்வருமாறு:


பாதுகாக்கப்பட்ட காடுகளைத் (reserved forests) தவிர, மற்ற காடுகளின் நிலம் மற்றும் மேலாண்மை தொடர்பாக சட்டங்கள் இயற்றலாம்.


ஊரகப்பகுதிகளை  நிர்வகிக்கலாம். சொத்துரிமை, திருமணம் மற்றும் சமூக மரபுகள் குறித்து சட்டங்கள் உருவாக்கலாம். நீதியை நிர்வகிப்பதற்காக கிராம சபைகளையும் நீதிமன்றங்களையும் அமைக்கலாம்.


தொடக்கப் பள்ளிகள், மருந்தகங்கள், சந்தைகள், மீன்வளங்கள், படகுத்துறைகள், சாலைகள் மற்றும் நீர்வழிகளை உருவாக்கி அதை நிர்வகிக்கப்பதுடன், தொடக்கக் கல்விக்கான பயிற்று மொழியையும் நிர்ணயிக்கலாம்.


மாவட்ட நிதி அல்லது பிராந்திய நிதியை அமைத்து நிர்வகிக்கலாம். நிலம் மற்றும் கட்டிடங்கள் மீதான வரிகளை விதிப்பதற்கும் வசூலிப்பதற்கும் வழிவகை செய்யும் விதிமுறைகளை உருவாக்கலாம்.


கனிமங்களை ஆய்வு செய்யவும் அல்லது பிரித்தெடுப்பதற்கும்   வழங்கப்படும் உரிமங்கள் அல்லது அல்லது குத்தகை (leases) செய்யும் உரிமையை  வழங்கலாம்..


பழங்குடியினர் அல்லாதோர் பணக் கடன் வழங்குவதையும் வர்த்தகம் செய்வதையும் கட்டுப்படுத்துவதற்கான விதிமுறைகளை அமைக்கலாம். இந்தக் கட்டமைப்பு 6-வது அட்டவணையின் கீழ் முன்மொழியப்பட்டுள்ள தன்னாட்சியை வலியுறுத்தினாலும், பழங்குடியினரின் நலன்களைப் பாதுகாப்பதற்காக வடிவமைக்கப்பட்ட ஒரே அரசியலமைப்பு வழிமுறை இதுவல்ல.


மாற்று வழிமுறைகள் – ஐந்தாம் அட்டவணை மற்றும் பிரிவுகள் 371(A-J)


அரசியலமைப்பின் 5-வது அட்டவணையின் கீழ் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பழங்குடி சமூகங்களின் நலன்களும் பாதுகாக்கப்படுகின்றன. பிரிவு 244(1)ன்படி, அசாம், மேகாலயா, திரிபுரா மற்றும் மிசோரம் ஆகிய மாநிலங்களைத் தவிர மற்ற எந்த மாநிலத்திலும் பட்டியல் பகுதிகள் மற்றும் பட்டியல் பழங்குடியினரின் நிர்வாகம் மற்றும் கட்டுப்பாட்டிற்கு  5-வது அட்டவணையின் விதிகள் பொருந்தும்.


இருப்பினும், 6-வது அட்டவணையுடன் ஒப்பிடுகையில், 5-வது அட்டவணையானது வரையறுக்கப்பட்ட அளவிலான சுயாட்சியை மட்டுமே வழங்குகிறது. மேலும் முடிவெடுக்கும் அதிகாரம்  மாநிலம் மற்றும் ஆளுநரிடமே இருந்து வருகிறது. கூடுதலாக, அரசியலமைப்பின் பகுதி XXI-ல் உள்ள 371(A-J) பிரிவுகளின் கீழ் சில மாநிலங்களுக்கு தற்காலிக, இடைக்கால மற்றும் சிறப்பு அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த அதிகாரங்கள் அந்தந்த மாநிலத்தின் தனித்துவமான அரசியல் மற்றும் கலாச்சார சூழல்களுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டுள்ளன.


5-வது அட்டவணை

6-வது அட்டவணை

பிரிவு 244(1) ஐந்தாவது அட்டவணையானது, அசாம், மேகாலயா, திரிபுரா மற்றும் மிசோரம் ஆகிய மாநிலங்களைத் தவிர மற்ற மாநிலங்களில் உள்ள பட்டியல் பகுதிகள் மற்றும் பட்டியல் பழங்குடியினருக்குப் பொருந்தும் என்று குறிப்பிடுகிறது.

பிரிவு244(2) ஆறாவது அட்டவணையானது அசாம்,மேகாலயா, திரிபுரா மற்றும் மிசோரம் மாநிலங்களில் உள்ள பழங்குடியினர் பகுதிகளின் நிர்வாகத்திற்குப் பொருந்தும் என்று குறிப்பிடுகிறது.

பழங்குடியினர் ஆலோசனைக்குழு (Tribal Advisory Councils (TAC))   அமைக்கப்படுகிறது.

தன்னாட்சி மாவட்ட சபைகள் (ADCs) மற்றும் மண்டல சபைகளை சுய-ஆட்சி நிறுவனங்களாக நிறுவுதல்

அரசுக் கட்டுப்பாட்டில் உள்ள நிர்வாகக் கட்டமைப்பு

பரவலாக்கப்பட்ட சுய-ஆட்சி அமைப்பு

பெரும்பாலும் நிர்வாக ரீதியான வரையறுக்கப்பட்ட அதிகாரங்கள் இதில் இடம்பெற்றுள்ளது.

சட்டமன்ற, நிர்வாக மற்றும் நீதித்துறை உள்ளிட்ட விரிவான அதிகாரங்கள் இதில் இடம்பெற்றுள்ளது.


எதிர்பார்ப்பும் அனுபவமும்


குறிப்பாக, 1971-ல் மணிப்பூரில் ஆறு தன்னாட்சி மாவட்டக் கவுன்சில்கள்  உருவாக்கப்பட்டதிலிருந்து, 6-வது அட்டவணையின் கீழ் சேர்க்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை மீண்டும் மீண்டும் எழுந்துள்ளது. லடாக்கைப் பொறுத்தவரை,   பிரதிநிதித்துவப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்தல், ஜனநாயக நிறுவனங்களை வலுப்படுத்துதல், வேலையின்மை போன்ற பொருளாதாரத் தடைகளைத் தீர்த்தல், எளிதில் பாதிப்படையக்கூடிய இமயமலைச் சூழலியலைப் பாதுகாத்தல் மற்றும் வள இறையாண்மையை உருவாக்குதல் போன்ற பல காரணங்களுக்காக இந்தக் கோரிக்கை நியாயப்படுத்தப்படுகிறது.


இதற்கு நேர்மாறாக, இந்த நடவடிக்கை குறித்து அச்சம் கொண்டவர்கள், அரசியலமைப்புச் சட்டத் தடைகள், நிர்வாகச் சாத்தியக்கூறுகள் மற்றும் பதற்றமான எல்லைப் பிராந்தியத்தில் உள்ள இராஜதந்திர மற்றும் பாதுகாப்பு பிரச்சனைகள் போன்ற கவலைகளை எழுப்புகின்றனர்.  6-வது அட்டவணையின் கீழ் உள்ள பிற பகுதிகளின் அனுபவங்கள், இந்த விவகாரத்திற்கு ஒரு முக்கியமான எடுத்துக்காட்டுகளை வழங்குகின்றன.


6-வது அட்டவணையின் கீழ் நிர்வகிக்கப்படும் பிராந்தியங்கள், அரசியலமைப்புப் பாதுகாப்பு என்பது அடிப்படையான சமூக-அரசியல் மற்றும் நிர்வாகப் பிரச்சினைகளை முழுமையாகத் தீர்த்து வைக்கப்படுவதில்லை என்பதைக் காட்டுகின்றன.  இனங்களுக்கு இடையேயான மோதல்கள், மாநில அரசுகளுக்கும் மன்றங்களுக்கும் இடையேயான பகைமை, மாநிலத்திற்குள் உள்ள பகுதி வளர்ச்சி மன்றங்களுக்கு இடையேயான நலன் தொடர்பான முரண்பாடுகள், நிதியைத் தவறாகப் பயன்படுத்துதல், வரையறுக்கப்பட்ட நிதித் திறன் மற்றும் கிராம அளவில் வரையறுக்கப்பட்ட அதிகாரப் பரவலாக்கம் போன்ற சவால்களைக் கண்டுள்ளன.


சுயாட்சி (Autonomy) மற்றும் தேசிய பாதுகாப்பு (national security)


இந்த பின்னணியில், லடாக் பகுதியில் ஆறாம் அட்டவணையின் கீழ் தன்னாட்சிக்கான கோரிக்கை, வலுவான நிறுவனம் சார்ந்தக் கட்டமைப்புகள், நிதிப் பொறுப்புடைமை, பயனுள்ள அதிகாரப் பரவலாக்கம், அரசாங்கத்தின் பல்வேறு மட்டங்களுக்கு இடையேயான ஒருங்கிணைப்பு மற்றும் நிலையான வள மேலாண்மை ஆகியவற்றுடன் சேர்ந்து இருக்க வேண்டும் என்று கூறலாம்.


மேலும், லடாக் சீனா மற்றும் பாகிஸ்தானுடன் எல்லைகளைப் பகிர்ந்து கொள்கிறது என்ற உண்மையையும் புறக்கணிக்க முடியாது. பாதுகாப்பு கண்ணோட்டத்தில், மையப்படுத்தல் பெரும்பாலும் விரைவான முடிவெடுப்பதை சாத்தியமாக்குகிறது. மேலும், தேசிய பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு உள்கட்டமைப்பு போன்ற விஷயங்களில் அரசியல் ரீதியான தலையுடுகளைகளைக் குறைக்கிறது. எனவே,  ஒன்றிய அரசு அதிக சுயாட்சிக்கான உள்ளூர் விருப்பங்களை விட, மையப்படுத்தப்பட்ட நிர்வாகக் கட்டுப்பாட்டிற்கே முன்னுரிமை அளிக்க முனைகிறது.


ஆனால், 6-வது அட்டவணையில் சேர்க்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை, அரசியல் மற்றும் நிறுவனம் சார்ந்த தன்னாட்சி (constitutional and institutional self-governance) குறித்த விரிவான தேவைகளை எடுத்துக்காட்டுகிறது. மேலும், உள்ளூர் மற்றும் நிலையான சமூகங்களை நிர்வாகத்தில் சேர்த்துக் கொள்வது, நம்பிக்கை மற்றும் பதிலளிப்பு திறனை (responsiveness) அதிகரிப்பதன் மூலம் எல்லைப்பகுதிகளில் பாதுகாப்பை வலுப்படுத்த உதவலாம்.

Original article :  Why has there been a consistent demand to include Ladakh under the Sixth Schedule? -Dileep P Chandran

Share: