ஒரே நேரத்தில் தேர்தல் மசோதாக்கள் அரசியலமைப்பின் அடிப்படை கட்டமைப்பைப் பாதிக்காது என்று 23வது சட்ட ஆணையம் கூறியுள்ளதாக அறியப்படுகிறது. ஆனால், இந்த அடிப்படை அமைப்பு (basic structure) என்றால் என்ன, ஒரே நேரத்தில் தேர்தல்கள் என்றால் என்ன?
தற்போதைய செய்தி?
டிசம்பர் 4-ஆம் தேதி ஒரே நேரத்தில் தேர்தல் மசோதாக்கள் குறித்த நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் முன் 23-வது சட்ட ஆணையத்தின் விளக்கவுரை திட்டமிடப்பட்டுள்ள நிலையில், கூட்டாட்சி மற்றும் வாக்காளர் உரிமையைப்
பொறுத்தவரை, மசோதாக்கள் அரசியலமைப்பின் அடிப்படைக் கட்டமைப்பில் எந்த விதமான பாதிப்பையும் ஏற்படுத்தாது என்ற தனது கருத்தை உறுதிப்படுத்தியுள்ளதாக அறியப்படுகிறது.
பிரிவு 368(2), பிரிவுகள் (a) முதல் (e) வரையிலான மாநில ஒப்புதல் தேவைப்படும் எந்தவொரு பிரிவையும் அவை மாற்றாததால், மசோதாக்களுக்கு மாநிலங்களின் ஒப்புதல் தேவையில்லை என்று ஆணையம் நம்புகிறது. ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பி பி சவுத்ரி தலைமையிலான குழுவின் கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக, மாதிரி நடத்தை விதிகளுக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் வழங்க வேண்டிய அவசியமில்லை என்று ஆணையம் கண்டறிந்துள்ளதாகவும் அறியப்படுகிறது.
முக்கிய அம்சங்கள்:
1. அடிப்படைக் கட்டமைப்பு கோட்பாடு என்பது நீதிமன்றங்களால் எந்தவொரு சட்டத்தின் சட்டபூர்வமான தன்மையையும் சோதிக்கப் பயன்படுத்தப்படும் நீதித்துறை மறுஆய்வின் (judicial review) ஒரு வடிவமாகும். அரசியலமைப்பின் அடிப்படை அம்சங்களை மாற்றுவதற்கான நாடாளுமன்றத்தின் அதிகாரத்தை இது கட்டுப்படுத்துகிறது. இந்தக் கோட்பாட்டின் தோற்றம் போருக்குப் பிந்தைய ஜெர்மன்
அரசியலமைப்புச் சட்டத்தில் (German Constitution law) காணப்படுகிறது. இது நாஜி ஆட்சிக்குப் பிறகு, சில அடிப்படைச் சட்டங்களைப் பாதுகாக்க திருத்தப்பட்டது.
2. 1973-ஆம் ஆண்டு கேசவானந்த பாரதி எதிர் கேரள மாநிலம் (Kesavananda Bharati v State of Kerala) வழக்கில் உச்சநீதிமன்றத்தால் இந்தக் கோட்பாடு உருவாக்கப்பட்டது. 7-6 என்ற தீர்ப்பில், 13 நீதிபதிகள் கொண்ட அரசியலமைப்பு அமர்வு அரசியலமைப்பின் 'அடிப்படைக் கட்டமைப்பு' மீற முடியாதது என்றும், அதைத் திருத்த முடியாது என்றும் தீர்ப்பளித்தது.
3. ஒரு சட்டம் "அரசியலமைப்பின் அடிப்படை அம்சங்களை" "சேதப்படுத்துவதாகவோ அல்லது அழிப்பதாகவோ" கண்டறியப்பட்டால், நீதிமன்றம் அதை அரசியலமைப்பிற்கு விரோதமானது என்று அறிவிக்கிறது. இந்தத் திருத்தம் அரசியலமைப்பின் அடிப்படைகளை பாதிக்காமல் இருப்பதை உறுதி செய்வதற்காக அரசியலமைப்புத் திருத்தங்களுக்கு இந்தச் சோதனை பயன்படுத்தப்படுகிறது.
அரசியலமைப்பை எவ்வாறு மாற்றலாம் என்பதற்கு தெளிவான வரம்புகளை நிர்ணயிப்பதால், நாடாளுமன்றம் அதிக அதிகாரத்தைக் கொண்டிருப்பதைத் தடுப்பதற்கான ஒரு வழியாக இந்தச் சோதனை பார்க்கப்படுகிறது.
4. 2025-ஆம் ஆண்டு அரசியலமைப்பு தினத்தை முன்னிட்டு, முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி நீதிபதி அபய் எஸ் ஓகா, தி இந்தியன் எக்ஸ்பிரஸ் உடனான பிரத்யேக உரையாடலில், அடிப்படை கட்டமைப்பு என்பது "உலகெங்கிலும் உள்ள பல ஜனநாயக நாடுகளை விட இந்தியாவில் ஜனநாயகத்தை மேன்மையாக்கும் ஒரு கோட்டபாடாக இருப்பதாக தெரிவித்தார். சட்டமன்றம்கூட அரசியலமைப்பின் அடிப்படைக் கட்டமைப்பைப் பாதுகாக்க வேண்டும் என்பதை இந்தத் தீர்ப்பு தெளிவுபடுத்துகிறது.
5. நீதிமன்றங்களுக்கும் பிரதமர் இந்திரா காந்தி அரசாங்கத்திற்கும் இடையிலான மோதல்களுக்குப் பிறகு கேசவானந்தா பாரதி வழக்கின் தீர்ப்பு வந்தது. அரசியலமைப்பின் எந்தப் பகுதியையும் நாடாளுமன்றம் மாற்ற முடியும் என்றும், நீதிமன்றங்கள் இந்த மாற்றங்களை மறுபரிசீலனை செய்யமுடியாது என்றும் கூறி அரசாங்கம் முக்கியமான சட்டங்களை இயற்றியது.
6. நாடாளுமன்றத்தின் திருத்த அதிகாரத்தின் நோக்கம் மற்றும் நில சீர்திருத்தங்களின் சட்டபூர்வமான தன்மையை ஆராய, நீதிமன்றம் 13 நீதிபதிகள் கொண்ட ஒரு அமர்வை அமைத்தது. அரசியலமைப்பைத் திருத்துவதற்கு நாடாளுமன்றத்திற்கு பரந்த அதிகாரங்கள் இருந்தாலும், சில "அடிப்படை அம்சங்களை" திருத்த முடியாது என்று அமர்வு தீர்ப்பளித்தது. அரசியலமைப்பின் சில முக்கியப் பகுதிகளை அதன் "அடிப்படை அம்சங்கள்" என்று உச்சநீதிமன்றம் பட்டியலிட்டது. ஆனால், அந்தப் பட்டியல் முழுமையானது அல்ல என்று கூறியது.
7. 'அடிப்படை கட்டமைப்பு' கோட்பாடு, அரசியலமைப்பின் மேலாதிக்கம், சட்டத்தின் ஆட்சி, நீதித்துறையின் சுதந்திரம், அதிகாரங்களைப் பிரிப்பதற்கான கோட்பாடு, கூட்டாட்சி, மதச்சார்பின்மை, இறையாண்மை கொண்ட ஜனநாயக குடியரசு, நாடாளுமன்ற அரசாங்க அமைப்பு, சுதந்திரமான மற்றும் நியாயமான
தேர்தல்களின் கொள்கை, நலன்புரி அரசு போன்றவற்றை உள்ளடக்கியதாக விளக்கப்பட்டுள்ளது.
1. 23-வது சட்ட ஆணையம் என்றால் என்ன?
காலாவதியான மற்றும் ரத்து செய்யக்கூடிய சட்டங்களை அடையாளம் காண, ஒன்றிய அரசு 23வது சட்ட ஆணையத்தை மூன்று ஆண்டுகளுக்கு (செப்டம்பர் 1, 2024 முதல் ஆகஸ்ட் 31, 2027 வரை) அமைத்துள்ளது. ஓய்வுபெற்ற நீதிபதி தினேஷ் மகேஸ்வரி ஆணையத்தின் தலைவராக உள்ளார்.
இந்த ஆணையத்தில் ஒரு முழுநேரத் தலைவர், நான்கு முழுநேர உறுப்பினர்கள், சட்ட விவகாரங்கள் மற்றும் சட்டமன்றத் துறைகளின் செயலாளர்கள் அலுவல்ரீதியான உறுப்பினர்களாகவும், ஐந்து பேர்வரை பகுதிநேர உறுப்பினர்களாகவும் இருப்பார்கள்.
02. அரசியலமைப்பு திருத்தம் (constitutional amendment) என்றால் என்ன?
அரசியலமைப்புத் திருத்தம் என்பது இந்திய அரசியலமைப்பில் வழங்கப்பட்டுள்ள விதிகளில் மாற்றங்களைச் செய்வதற்கான ஒரு முறையான செயல்முறையாகும். அரசியலமைப்பின் XX பகுதி அதன் திருத்தத்தைப் பற்றி விவாதிக்கிறது. பிரிவு 368(2)-ன்கீழ், ஒரு மசோதா இரு அவைகளிலும் பெரும்பான்மையான அனைத்து உறுப்பினர்களாலும், குறைந்தது மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களாலும் நிறைவேற்றப்பட்டு வாக்களிக்கப்பட்டால், நாடாளுமன்றத்தால் அரசியலமைப்பை மாற்ற முடியும். அதன்பிறகு மசோதா குடியரசுத்தலைவரிடம் சமர்ப்பிக்கப்படுகிறது. அவர் அதற்கு ஒப்புதல் அளிப்பார், அதன் மூலம் அரசியலமைப்பு திருத்தம் சட்டமாகிறது.
03. அரசியலமைப்பு திருத்தத்திற்கு எப்போது மாநில ஒப்புதல் தேவைப்படுகிறது?
அரசியலமைப்பில் 54, 55, 73 ஆகிய பிரிவுகள், 7-வது அட்டவணையில் உள்ள பட்டியல்கள் அல்லது நாடாளுமன்றத்தில் மாநிலங்களின் பிரதிநிதித்துவம் உள்ளிட்ட சில குறிப்பிட்ட விதிகளில் மாற்றங்களைச் செய்யமுயலும் ஒரு திருத்தம், மாநிலங்களில் பாதிக்கு குறையாத சட்டமன்றங்களால் அங்கீகரிக்கப்பட வேண்டும். ஒன்றிய மற்றும் மாநில அரசுகளுக்கு இடையிலான உறவைப் பாதிக்கும் எந்தவொரு திருத்தத்திற்கும் மாநிலங்களின் ஒப்புதல் தேவை. மேலும், பிரிவு 368-ல் ஏற்படும் மாற்றங்களுக்கு மாநில ஒப்புதல் (ratification by the states) தேவை.
04. நாடாளுமன்ற கூட்டுக் குழு (Joint Committee of Parliament) என்றால் என்ன?
ஒரு நாடாளுமன்ற கூட்டுக் குழு என்பது ஒரு முக்கியமான நோக்கத்திற்காக நாடாளுமன்றத்தால் அமைக்கப்படுகிறது. இந்த நடவடிக்கை ஒரு மசோதாவை விரிவாக ஆய்வு செய்வது போன்றது. பெயர் குறிப்பிடுவதுபோல, இது இரு அவைகளிலிருந்தும், ஆளும் கட்சிகள் மற்றும் எதிர்க்கட்சிகளிலிருந்தும் உறுப்பினர்களைக் கொண்டுள்ளது. அதன் பதவிக்காலம் முடிந்ததும் அல்லது அதன் பணி முடிந்ததும் கூட்டுக் குழு கலைக்கப்படுகிறது.
ஒரே நாடு, ஒரு தேர்தல்
1. "ஒரே நாடு, ஒரே தேர்தல்" (One Nation, One Election) என்பது ஒரே நேரத்தில் மக்களவை, அனைத்து மாநில சட்டமன்றங்கள், நகர்ப்புறங்கள் மற்றும் கிராமப்புறங்கள் உள்ளாட்சி அமைப்புகளுக்கு (நகராட்சிகள் மற்றும் பஞ்சாயத்துகள்) ஒரே நேரத்தில் தேர்தல்களை நடத்துவதாகும்.
2. முன்னாள், குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான உயர்மட்டக் குழு, ஒரே நேரத்தில் தேர்தல்களை நடத்த பரிந்துரைத்தது. அந்தக் குழு, இந்திய அரசியலமைப்பில் 15 திருத்தங்களை பரிந்துரைத்தது - புதிய விதிகள் மற்றும் ஏற்கனவே உள்ள விதிகளில் மாற்றங்கள் என இரண்டு அரசியலமைப்பு திருத்த மசோதாக்கள் மூலம் செயல்படுத்தப்பட வேண்டும்.
3. "ஒரே நேரத்தில் தேர்தல்" என்ற கருத்து இந்தியாவிற்கு புதியது அல்ல. ஒரே நேரத்தில் தேர்தல்களை நடத்தும் வரலாற்றை இந்தியா கொண்டுள்ளது. நமது ஜனநாயக பயணம் முதல் பொதுத் தேர்தலுடன் தொடங்கியது. அந்தக் காலகட்டத்தில் மக்களவை மற்றும் மாநில சட்டமன்றத் தேர்தல்கள் இரண்டும் ஒரேநேரத்தில் நடத்தப்பட்டன.
4. 1967-ஆம் ஆண்டு 4-வது பொதுத் தேர்தல்கள் வரை ஒரேநேரத்தில் தேர்தல்கள் பெரும்பாலும் நடைமுறையில் இருந்தன. இருப்பினும், அடுத்தடுத்த வந்த ஒன்றிய அரசாங்கங்கள் தங்கள் பதவிக்காலம் முடிவதற்கு முன்பே மாநில அரசாங்கங்களை கலைக்க அரசியலமைப்பு விதிகளைப் பயன்படுத்தியதாலும், மாநிலங்களிலும் ஒன்றிய அளவிலும் கூட்டணி அரசாங்கங்கள் தொடர்ந்து
தோல்வியடைந்ததாலும், நாடு ஆண்டு முழுவதும் வெவ்வேறு நேரங்களில் தேர்தல் நடைபெறத் தொடங்கியது.
5. அரசியலமைப்பு (129வது திருத்த) மசோதா, 2024 மற்றும் ஒரேநாடு ஒரேதேர்தல் மசோதாக்கள் எனப்படும் யூனியன் பிரதேச சட்டங்கள் (திருத்தம்) மீதான குழு டிசம்பர் 4-ஆம் தேதி கூட உள்ளது.