சமீபத்திய ஆய்வின்படி, ஆய்வு மேற்கொள்ளப்பட்ட 11 நகரங்களில் டெல்லிதான் 2015-ஆம் ஆண்டு முதல் நவம்பர் மாதம் 2025-ஆம் ஆண்டு வரை மிக மோசமான காற்று மாசு அளவினைக் கொண்டிருந்தது. டெல்லியில் ஆண்டு சராசரி காற்று தரக் குறியீடானது (Air Quality Index (AQI)) 2016-ஆம் ஆண்டில் மிக அதிகமாக (250-க்கு மேல்) இருந்தது. 2019-ஆம் ஆண்டு முதல் கொஞ்சம் குறைந்தாலும், இன்னும் பாதுகாப்பான அளவைவிட மிகவும் மோசமாகவே உள்ளது என்று தெரிவிக்கின்றனர்.
ஒரு புதிய பகுப்பாய்வின்படி, 2015-ஆம் ஆண்டு முதல் நவம்பர் மாதம் 2025-ஆம் ஆண்டு வரை, இந்தியாவில் எந்தப் பெரிய நகரத்திலும் “பாதுகாப்பான” காற்றுத் தரம் இல்லை என்று தெரிவிக்கிறது. பெரும்பாலான ஆண்டுகளில் டெல்லியே அதிக காற்று தரக் குறியீட்டுடன் மிக மோசமான மாசுபட்ட நகரமாக இருந்தது என்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
டெல்லியை தலைமையிடமாகக் கொண்ட “கிளைமேட் ட்ரெண்ட்ஸ்” (Climate Trends) நிறுவனம் நவம்பர் மாதம் 28-ஆம் தேதி, வெள்ளிக்கிழமை “முக்கிய இந்திய நகரங்களின் காற்றுத் தர மதிப்பீடு (2015–2025)” (‘Air Quality Assessment of Major Indian Cities (2015–2025))’ என்கிற ஒரு ஆய்வறிக்கையை வெளியிட்டது. இந்த ஆய்வு 11 பெரிய நகரங்களின் ஆண்டு சராசரி காற்றுத் தரத்தை ஆராய்ந்து தரவுகளை வெளியிட்டுள்ளது. அகமதாபாத், பெங்களூரு, சண்டிகர், சென்னை, டெல்லி, கொல்கத்தா, லக்னோ, மும்பை, புனே, வாரணாசி, விசாகப்பட்டினம் போன்ற நகரங்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.
காற்று தரக் குறியீட்டின் அளவு 0 முதல் 50 வரை இருக்கும்போது, காற்றின் தரம் பொதுவாக பாதுகாப்பான அளவில் இருப்பதாகக் கருதப்படுகிறது.
தகவல்கள்
சமீபத்திய ஆய்வின்படி, ஆய்வு மேற்கொள்ளப்பட்ட 11 நகரங்களில் டெல்லிதான் 2015-ஆம் ஆண்டு முதல் நவம்பர் மாதம் 2025-ஆம் ஆண்டு வரை மிக மோசமான காற்று மாசு அளவினைக் கொண்டிருந்தது. டெல்லியில் ஆண்டு சராசரி காற்று தரக் குறியீடானது (Air Quality Index (AQI)) 2016-ஆம் ஆண்டில் மிக அதிகமாக (250-க்கு மேல்) இருந்தது. 2019-ஆம் ஆண்டு முதல் கொஞ்சம் குறைந்தாலும், இன்னும் பாதுகாப்பான அளவைவிட மிகவும் மோசமாகவே உள்ளது என்று தெரிவிக்கின்றனர். 2025-ஆம் ஆண்டில் டெல்லியின் சராசரி காற்று தரக் குறியீடு 180-ஆக உள்ளது. இது இன்னும் தீங்கு விளைவிக்கக் கூடிய அளவு என்றே குறிப்பிடுகின்றனர்.
டெல்லியைத் தொடர்ந்து லக்னோ, வாரணாசி, அகமதாபாத் மற்றும் புனே ஆகிய நகரங்கள் நீண்டகாலத்திற்கு உயர்த்தப்பட்ட காற்றின் தரக் குறியீட்டு அளவை எட்டியுள்ளன.
"லக்னோ மற்றும் வாரணாசி ஆகிய நகரங்கள் மிக உயர்ந்த அளவுகளுடன் (பெரும்பாலும் 200-க்கு மேல்) தொடங்கின. மேலும், 2019-ஆம் ஆண்டுக்குப் பிறகு இரண்டு நகரங்களும் நிலையான முன்னேற்றத்தைக் காட்டினாலும், அவற்றின் 2025 காற்று தரக் குறியீட்டு மதிப்புகள் ஆரோக்கியமான வரம்புகளைவிட அதிகமாகவே உள்ளன," என்று அந்த பகுப்பாய்வு தெரிவிக்கிறது.
2015-ஆம் ஆண்டு முதல் 20 நவம்பர் மாதம் 2025-ஆம் ஆண்டு வரையிலான ஒவ்வொரு நகரத்திற்கும் தினசரி AQI மதிப்புகளிலிருந்து பெறப்பட்ட சராசரி காற்று தரக் குறியீடு. மூலம்: மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் (Central Pollution Control Board (CPCB) & காலநிலை போக்குகள் (climate trends)
மற்ற நகரங்களை விட சென்னை, சண்டிகர், விசாகப்பட்டினம், மும்பை ஆகிய நான்கு நகரங்களில் காற்றின் தரம் சற்று சிறப்பாக இருந்தது. ஆனால் இந்த நகரங்களிலும் காற்று “ஆரோக்கியமான நிலை”யை எட்டவில்லை என்று தெரிவிக்கின்றனர். பகுப்பாய்வில் இந்த நகரங்களின் காற்று தரக் குறியீட்டு அளவு 80
முதல் 140 வரை இருந்தது தெரியவந்தது. அதாவது, மற்ற இடங்களைவிட காற்றின் தரம் நன்றாக இருந்தாலும், இவையும் முழுமையாக சுத்தமான காற்று இல்லை என்று தெரிவிக்கின்றனர்.
ஆய்வு மேற்கொள்ளப்பட்ட 11 நகரங்களில் பெங்களூருவின் காற்று தரம் ஒப்பீட்டளவில் நன்றாக இருந்தாலும், 2015-ஆம் ஆண்டு முதல் நவம்பர் மாதம் 2025-ஆம் ஆண்டு வரை ஒரு நாள்கூட "பாதுகாப்பான" (காற்று தரக் குறியீடு 0-50) அளவை எட்டவில்லை என்கின்றனர். பெரும்பாலான ஆண்டுகளில் பெங்களூருவின் காற்று தரக் குறியீட்டு (AQI) அளவானது 65 முதல் 90 வரைதான் இருந்தது என்று தெரிவிக்கின்றனர்.
காரணங்கள்
டெல்லியில் மாசுபாடு ஏற்படுவதற்கான முக்கிய காரணங்களாக வாகனங்கள் வெளியிடும் புகைகள், தொழிற்சாலை நடவடிக்கைகள், பருவகாலங்களில் பயிர்க் கழிவுகளை எரிப்பது மற்றும் புவியியல் காரணிகள் ஆகியவைதான் என்று அறிக்கை
தெரிவிக்கின்றன. தேசிய தலைநகரில் இந்த ஆண்டு குளிர்காலத்தில் வேளாண் சாகுபடி முடிந்த நிலங்களில் தீ வைப்பது குறைந்திருந்தபோதிலும், காற்று தரக் குறியீடு (AQI) அளவுகள் உயர்வாகவே இருக்கின்றன. ஏனெனில், அக்டோபர் மாதம் 1-ஆம் தேதி, 2025-ஆம் ஆண்டு முதல் நவம்பர் மாதம் 28-ஆம் தேதி, 2025-ஆம் ஆண்டு வரை டெல்லியில் மழை எதுவும் பெய்யவில்லை என்பது முக்கியக் காரணமாகக் கருதப்படுகிறது. மழை பெய்யும்பட்சத்தில் மாசு அளவு கட்டுக்குள் இருந்திருக்கும் என்றும் கருத்து தெரிவிக்கின்றனர்.
"இந்த ஆண்டு மேற்கத்திய காற்றழுத்த தாழ்வு நிலைகள் (Western Disturbances) மிகப் பலவீனமாக இருந்தன. அதனால், வட இந்தியாவில் நல்ல மழை பெய்யவில்லை என்பது காரணமாகக் கூறப்படுகிறது. மழை இல்லாததால் காற்றில் உள்ள மாசு அகற்றப்படாமல் தேங்கும் நிலை ஏற்பட்டது. இதனாலேயே இப்போதே புகைமூட்டம் நிலை ஏற்பட்டு, அது நீண்ட நாட்கள் நீடிக்கிறது" என்று Skymet Weather என்கிற நிறுவனத்தின் துணைத் தலைவர் மகேஷ் பலாவத் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், பெங்களூரு போன்ற பெருநகரங்களில், பல ஆண்டுகளாக வாகனங்கள் மற்றும் போக்குவரத்து அதிகரித்து வருவதால் காற்றின் தரம் மோசமடைந்துள்ளது என்கின்றனர்.
நாடு முழுக்க போக்குவரத்து, தொழிற்சாலைகள், வானிலை மாற்றம், வேகமான நகர வளர்ச்சி ஆகியவற்றால் காற்று மாசு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மக்கள் நலனையும் நகரங்களின் நீண்டகால எதிர்காலத்தையும் காக்க, கடுமையான சுற்றுச்சூழல் சட்டங்கள், அவற்றை சரியாக அமலாக்குவது, தூய்மையான எரிசக்திக்கு மாறுவது, ஒருங்கிணைந்த மாசுக் கட்டுப்பாடு
நடவடிக்கைகள் ஆகியவை மிக அவசியம் என்பதையே கடந்த 10 ஆண்டுகாலப் போக்கு வலியுறுத்துகிறது என்கின்றனர்.